கிட்டத்தட்ட ஒரு வருட காலம் "அன்பைத் தேடி" நண்பர்களை விட்டு பிரிந்து...
வேண்டுமென்று அல்ல... சூழ்நிலைகளும் சந்தர்ப்பங்களும் நம்மை அப்படி பிரித்துவிட்டன.
இந்தத் தொடரை... மிகவும் சூடான சம்பவங்களோடு.. வேறு ஒரு தளத்தில் பதிவிட நேர்ந்தது..
இங்கே.. உள்ள சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பலவற்றை எடிட் செய்துவிட்டு...அதே சமயம் ஸ்வாரசியம குறையாமல்...(பொதிகை சானலில் "அடல்ட்ஸ் ஒன்லி " படம் பார்க்கிற மாதிரி) பதிவு செய்கிறேன்.
**
முன்கதை.
அரவிந்தனும் பூரணியும் - வீட்டாரின் எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாக்கி விட்டு - அனைவரின் விருப்பத்துக்கும் மாறாக விவாக ரத்து செய்துகொண்டு - அதுவும் - காதலர் தினத்தன்று - குடும்ப நல நீதி மன்றத்திலிருந்து வெளியே வருகின்றனர். பூரணி தன்னுடன் பணி புரியும் சித்தார்த்தை மறுமணம் செய்துகொள்ளப்போவதாக கூறி அவனை அரவிந்தனுக்கு அறிமுகம் செய்து வைக்கிறாள். மனம் நிறைய வாழ்த்துக்களை தெரிவித்துவிட்டு வெளியேறி காரை ஸ்டார்ட் செய்கிறான் அரவிந்த்.
வெளியே..
காதலர் தினக் கொண்டாட்டத்தில் ஊரே கலகலத்துக் கொண்டிருந்தது.
நிதானமான சீரான வேகத்தில் சான்ட்ரோவைச் செலுத்திக்கொண்டிருந்தான் அரவிந்த். அவன் மனம் மிகவும் லேசானது போல ஒரு உணர்வு.
இனிமேல் என்ன செய்யப்போகிறோம்? அவசரப்படாமல் நிதானமாக யோசித்து தெளிவான முடிவெடுத்து நம் வாழ்க்கையை தொடரவேண்டும். இதில் யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுத்துக்கொள்ளக்கூடாது? ஏற்கெனவே ஒருமுறை மற்றவர்களுக்காக விட்டுக்கொடுத்து...நாமும் கஷ்டப்பட்டு நம்பி வந்த பூரணியையும் கஷ்டப்படுத்தி... போதும்.. இனிமேல் இது என்னுடைய வாழ்க்கை. இதில் சந்தோசம் துக்கம் எல்லாவற்றுக்குமே நான் மட்டுமே பொறுப்பாக இருக்கவேண்டும்.
டிராபிக் சிக்னலுக்காக காரைச் சற்று நிறுத்தி... சிக்னல் க்ளியர் ஆனதும் சாண்ட்ரோவின் வேகத்தை சற்று அதிகரித்தான் அரவிந்த்.
வழியில் தென்பட்ட காபி ஷாப்பின் முன்னால் சாண்ட்ரோவை நிறுத்தியவன் அதனை வசதியான இடமாகப் பார்த்து பார்க் செய்துவிட்டு காபி ஷாப்பினுள் நுழைந்து ஒரு கோல்ட் காபிக்கு ஆர்டர் செய்துவிட்டு சுவர் ஓரமாக இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான் அரவிந்த்.
சற்று அருகாமையில் இருந்த இருக்கைகளில் இருந்த இரண்டு வாலிபர்கள் இவனைக் கண்டதும் பேசியவை அவன் காதுகளில் அட்சர சுத்தமாக விழுந்தது. ஒருவேளை விழவேண்டும் என்பதற்காகவே பேசிக்கொண்டார்களோ என்னவோ?
"யாரு.. போன வாரம் கூட "வளரும் தொழிலதிபர்" என்று ......... நாளிதழ் இன்டர்வியூ வெளியாச்சே.. அதுலே கூட வெளிப்படையா "ஐ ஆம் எ கே." என்று பேட்டி கொடுத்தானே அவனா?"
"அவனேதான்!'
வாஸ்தவத்தில் அந்தப் பேட்டியில் தனது முன்னேற்றம், நிறுவனத்தின் வளர்ச்சி என்று எவ்வளவோ விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தான் அரவிந்த். அவற்றினூடே அவனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிய கேள்வி ஒன்றும் கேட்கப்பட்டது.
"இவ்வளவு புத்திசாலியாக தெளிவாக வெற்றிகரமாக உங்கள் தொழிலை வளர்த்துக்கொண்டிருக்கும் நீங்கள் திருமண வாழ்வில் மற்றும் விவாகரத்து என்று சறுக்கலை சந்திக்கக் காரணம் என்ன சார்?"
இந்தக் கேள்விக்கு நேர்மையான பதிலாக "நான் ஒரு ஓரினச் சேர்க்கையாளன்" என்று வெளிப்படையாக அறிவித்தான் அரவிந்த்.
அவனது மற்ற பதில்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த ஒரு விஷயம் மட்டுமே பரபரப்புக்காக செய்தியாக போல்ட் லெட்டர்களில் அந்த நேர்காணலுக்கான தலைப்பாகவே வெளியிடப்பட்டது.
அந்த விஷயத்தைப் பற்றித்தான் அந்த இரு இளைஞர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் பேச்சில் சுவாரஸ்யம் தட்ட மேற்கொண்டு அவர்கள் என்ன பேசப்போகிறார்கள் என்பதால் கவனம் செலுத்தினான் அரவிந்த்.
"ஆளு செமயா இருக்காண்டா. இப்படி ஒரு பேட்டி கொடுக்க செம தில் வேணும். "
"என்னடா பெரிய தில்லு. கொஞ்சம் மறை கழண்ட கேஸாக்கூட இருக்கலாம். இதை எல்லாமா ஒருத்தன் வெளிப்படையா சொல்லுவான்.?"
"அதுவும் சரிதாண்டா. எதுக்கும் நாம கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருக்கலாம். அவன் ஹோமோன்னு அவனே ஒத்துக்கிட்டான். நாமும் ஆம்பிளைங்க. படுக்க கூப்பிட்டாலும் கூப்பிட்டுடுவான்."
--
இந்த ரீதியில் சென்றது அவர்கள் பேச்சு.
இதை எல்லாம் அவன் எதிர் பார்த்தது தான். செக்ஸ் என்பது இருபாலினருக்கும் ஒரு நேரத்து வேட்கை. வாழ்வில் ஒரு சிறிய பகுதி. இரவு நேரத்து காம வேட்கையின் வெளிப்பாடு. ஆணுக்கும் பெண்ணுக்கும் எப்படியோ அதுபோலத்தான் ஓரினத்தோடு ஒன்ற நினைப்பவர்களுக்கும். இவர்கள் மட்டும் எப்போதும் எவன் கிடைப்பான் என்று அதே நினைப்போடு அலைகிற பேர்வழிகள் போலவும், மற்றவர்கள் எல்லாம் அப்படி இல்லாத மாதிரியும்...
படித்த மனிதர்களே இப்படி என்றால் பாமர மக்கள்...?
அரவிந்தின் சிந்தனை ஓட்டத்தை கோல்ட் காபி வந்து தடுத்தது. அதனைப் பருகிவிட்டு அதற்காக பேரர் கொண்டு வந்த கார்டுக்குள் பணத்தை செலுத்தி விட்டு சில்லறையை வாங்கிக்கொள்ளாமல் எழுந்து தனது காரை நோக்கி நடந்தான் அரவிந்த்.
***
வீட்டு வாசலுக்கு வந்ததும் போர்டிகோவில் ஸாண்ட்ரோவை நிறுத்தி விட்டு ஹாலுக்குள் நுழைந்தான் அரவிந்த்.
அங்கே இருந்த சோபாவில் ஒரு சூட்கேஸ் இருந்தது. அதன் எதிர் சோபாவில் ராமதுரை அமர்ந்திருந்தார். அவர் அருகே ஜானகி .. இருவர் முகமும் இறுகி வெளிறிக் கிடந்தது.
"என்னப்பா? எல்லாம் முடிஞ்சாச்சா?" என்று கேட்டார் ராமதுரை.
"நல்லபடியாவே முடிஞ்சுதுப்பா? பூரணி அவ கூட வேலை பாக்குற சித்தார்த்தை..." அரவிந்தன் முடிக்கவில்லை.
"ஓகே. இப்போ நீ என்ன செய்யறே? இந்த சூட்கேஸுலே உன்னோட டிரஸ் எல்லாமே இருக்கு. எடுத்துக்கிட்டு நம்ம அடையாறு பங்களா இருக்கே.. அங்கே போய் தங்கிக்க! இங்கே இனிமே உனக்கு இடம் கிடையாது. வயசு வந்த ஒரு பொண்ணை நான் நல்லபடியா கரை சேர்த்தாகணும். ? ஸோ. உனக்கு இங்கே இடமில்லே. அதுக்காக உன்னை நடுத்தெருவில் நிறுத்தவும் எனக்கு மனசு வரல்லே. அதனாலே.. நீ வீட்டை விட்டு வெளியே போயி .. " தீர்க்கமான குரலில் அழுத்தமாகப் பேசினார் ராமதுரை.