பாரி அடுத்த நாளே சென்னை திரும்புவதாக இருந்தது. அதற்கு மாறாக என்னோடு ஞாயிறு இரவு தான் வந்தான். எனக்கு மட்டும் முன்பே ரிசர்வ்ட் டிக்கெட் இருந்தது. ஞாயிறு கூட்டம் வேறு. எப்படியோ கண்டக்டரிடம் பேசி அவனுக்கும் என் அருகிலே இடம் பிடித்து விட்டேன். அது என்னமோ எனக்கு மட்டும் அமைந்து விடுகிறது. அத்தனை கூட்டத்திலும் டிக்கெட் கிடைத்ததில் என்னால் எதையும் சாதிக்க முடியும் என்ற கர்வம் மிளிர்ந்தது. அது என் முக ராசியா இல்லை பணிவா என்று தெரியாது.ஒரு குறு குறு சந்தோசம் இதழ் ஓரத்தில் தேங்கி நின்றது.
பஸ் கிளம்பியது. அவன் ஜன்னலோர சீட்டில் சாய்ந்து கண்களை மூடி தூங்க முயன்றான். நேரம் பதினொன்றை தாண்டி இருந்தது. டீஷர்ட் காலரை பின்னுக்கு தள்ளி ஜன்னலை அகலமாக இழுத்து விட்டு அவன் அருகில் அமர்ந்தேன். நடுவில் இருந்த கட்டையை நிமிர்த்தி விட்டு இன்னும் நெருங்கி அவன் தோளை வளைத்து அணைத்தேன். பஸ் பயணத்தில் பிரியமான யாருக்கேனும் ஜன்னல் சீட்டை விட்டுக்கொடுப்பதிலும், அவர்கள் தோளில் சாய்ந்து இளைப்பாற அனுமதிப்பதிலும் இருக்கும் ஆனந்தம் மிக அரிதாக அமையும்.
இந்த இரண்டு நாட்களில் வீட்டில் எல்லோர் மனதிலும் இடம் பிடித்து விட்டான். மாமாவிடம் அரசியலும், அத்தையிடம் சமையலும், சிஸ்டர்-இன்-லாவிடம் சினிமாவும், மச்சானிடம் கிரிக்கெட்ம், அவளிடம் என்னை பற்றியும் பேசி கவர்ந்து விட்டான். முதல் முறை பார்க்கிற எவருமே மிரண்டு அவனை விட்டு விலகத்தான் முயல்வார்கள் என்னை போலவே. அவனை எல்லோரும் விருந்தாளியாக இல்லாமல் நண்பனாக ஏற்று கொண்டதில் எனக்கு இன்னும் கர்வம் எகிறியது. ஒரு பாரம் குறைந்தது. இனி தடையில்லாமல் அவனால் எல்லோரிடமும் நெருங்க முடியும். ஆனால் இன்னும் அதிக கவனத்துடன் பிசிறில்லாமல் உறவுகளை வளர்த்து கொண்டு செல்ல வேண்டும். அவனும் எல்லோரிடம் கண்ணியமாக அதுவும் என்னிடம் அதிகம் அண்டாமல் தவிர்த்து இருந்தான். அது தான் பாரி. அவனை விழியோரம் பார்த்தேன். விளக்குகள் அணைந்து பஸ் வேகம் எடுத்தது.
அவன் விலகி என்னை நிமிர்ந்து பார்த்தான்.
"தூங்கலையா?" என்றான்.
"ம்ம்ஹும்".
அவனை நெருங்கி கழுத்தில் நுகர்ந்தேன். அந்த வாசனை என்னை இந்த ஜென்மத்திலும் இழுத்து கொண்டே வருகிறது.
"விட்ட குறையோ தொட்ட குறையோ! போன ஜென்மத்தில ரெண்டு பேரும் நிறை வேறாத காதலர்களா பிரிஞ்சு இருப்போம். எங்கெங்கோ பிறந்த நீயும் நானும் ஒன்னா சேரணும்னு விதி. என்ன இப்போ சுதந்திரமா இருக்க முடியாது.
அதனால என்ன, உன் அன்புக்கு இந்த ஆயுசு முழுக்க அடிமையா இருந்து விட்டு போறேன். "
சிலு சிலுவென்று அடித்த காற்றை அடக்க ஜன்னலை மூடினான். என் கையோடு கை கோர்த்து கொண்டான்.
"ரொம்ப தேங்க்ஸ் டா" என்றான்.
"எதுக்கு?"
"உங்க வீட்ல எத்தனை பேரு, உன் மேல இவ்வளவு பிரியமா இருக்காங்க. இவங்க எல்லோரையும் தாண்டி உன் மனசுல எனக்கு இடம் கொடுத்ததுக்கு"
"பேசாம தூங்கு"
"இப்போ தான் என் மனசு வைராக்கியமா இருக்கு. உன்னை விட்டு பிரிய கூடாது. என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் உன்னோடு நான் வருவேன். உனக்காக நான் இருப்பேன்"
"சத்தியமா?"
"நம்பிக்கை இல்லையா?" என்றான்.
அவன் கையை எடுத்து முத்தமிட்டேன்.
"நீ வேணும் டா, ரெண்டாவது தடவை நேர்ல பார்க்கும் போது மூஞ்சிய திருப்பி கிட்டு போறவங்க முன்னாடி, என்னை மதித்து என்னை விரும்பியதுக்கு ரொம்ப நன்றி"
அவனை இன்னும் நெருக்கமாக அணைத்தேன். நாங்கள் எப்போதும் எங்கள் தனிமையை வீணாக்கியதில்லை.
"உன் கிட்ட ஒரு விஷயத்தை கடந்த இருபது நாளாக சொல்லனும்னு முயற்சி செஞ்சு மறைச்சு வைத்து விட்டேன்" என்றான்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது.
"முதலில் என்னை மன்னித்து விடு" என்றான். எனக்கு தூக்கி வாரி போட்டது.
"போன முறை நீ ஊருக்கு போன போது, ஒருத்தனை மீட் பண்ணினேன். அவன் ஜானி. அவனுக்கு நம்ம ரெண்டு பேர நல்லா தெரியும். எப்பவும் ரெண்டு பேரும் ஒன்னா ட்ரைன்ல சுத்தறதை பார்த்து இருக்கான். நான் தனியா இருந்ததை பார்த்து என் கிட்ட தாம்பரம் ஸ்டேஷன்ல வந்து பேசினான்."
"ம்ம். அப்புறம்""
"இறந்து போன வாங்க அண்ணன் மாதிரி நான் இருக்கனாம். அவன்கிட்ட நட்பா இருக்க முடியுமான்னு கேட்டான்?. என்னால் முடியாதுன்னு சொல்லிவிட்டேன் டா. எனக்கு நீ மட்டும் போதும். "
பிறகு இந்த ஜானியை இருவரும் சந்தித்து அவனுக்கு தெளிவாக புரிய வைத்தோம்.
அவனுடைய வெளிப்படையான ஒப்புதல் என்னை பிரமிக்க வைத்தது. நானாக இருந்தால் ஒன்றை விட இன்னொன்று பெட்டர் என்று இருப்பேன். எனக்காக இன்னொருவனை மறுத்ததில் எனக்கு இன்னும் கர்வம் ஏறியது. எப்போதும் நாம் நேசிப்பவர்களை விட நம்மை நேசிப்பவர்கள் மிகவும் சிறந்தவர்கள். எனக்கு அந்த பாக்கியம் கிடைத்து இருக்கிறது. பஸ் திரையில் சலங்கை ஒலி படம்.
குடிகார நண்பனை இரவில் தெருமுழுக்க தேடி வருகிறான் அவன். நண்பனின் உபத்திரவம் தாங்காமல் உறவை வெட்டி போட்டு அவன் நடக்கும் போது அந்த குடிகார நண்பன் சொல்லுவது தான் இந்த கவிதை. இதை விட இரு ஆண்களுக்கு இடையில் இருக்கும் நேசத்தை இதற்கு மேலும் புரிய வைக்க முடியாது.
விலகாத நினைவு நான்
கலையாத உறவு நான்
சிதை ஏறும் போதிலும்
மறையாத பந்தம்.
விலகாது நண்பனே நமதான சிநேகம்.
இன்று. அதற்கு பிறகு வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள். ஆனாலும் இது வரை மாறாமல் இருப்பது இருவருக்கும் இடையேயான அன்பும் ஆதரவும் தான். இத்தனை ஆண்டுகளில் இன்னும் நெருக்கமாக இணைந்து இருக்கிறோம்.
புதிய வீடு. அடுத்தடுத்து கட்டப்பட இரண்டு வீடுகள். மொட்டை மாடியில் இருவரும் எதிரெதிரே கையில் கோப்பையை பற்றிக்கொண்டு இருந்தோம்.
பழைய நினைவுகள் மலர்ந்தன.
"உனக்கு நினைவிருக்கா நம்ம ரெண்டு பேரும் முதல் முதல்லா மீட் பண்ணின நாள்?" என்று கேட்டேன்.
“நீ எப்படி இருந்த தெரியுமா? அந்த மஞ்சள் வெயில் உன் மேல பட்டு தக தகன்னு தங்கம் மாதிரி மின்னி கொண்டு இருந்துச்சு. சான்சே இல்லை. உன் கிட்ட ஒருநிமிஷமாவது பேசமுடியுமானு தோணிச்சு. என்ன பேசறதுன்னு தெரியாம தவிச்சு கிட்டு இருந்தேன் தெரியுமா?. என்னை மதிச்சு ஒரு வார்த்தையாவது என்னோடுபேசுவியான்னு பயமா இருந்துச்சு"
"நீ மட்டும் அப்பொழுதே சொல்லி இருந்தால் உன்னை அள்ளி கொண்டு போய் சொர்க்கத்தை காட்டி இருப்பேன். நீ சும்மா பேசியே டைம் வேஸ்ட் பண்ணிக்கிட்டுஇருந்த. எவ்வளவு காய்ஞ்சு போயிட்டேன் தெரியுமா?. கூடவே பயம் வேறு. எங்க டா இவன் கிட்ட ஓவரா எக்ஸ்போஸ் பண்ணினா பிடிக்காமா போய்விடுவானோன்னு பயமா இருந்திச்சு. அதனால தான், நீ கேட்ட எல்லாத்துக்கும் ஓகே சொன்னேன்."
"எவ்வளவு அழகு டா நீ. உன்னை மட்டும் ஆண்டவன் ஏன் இவ்வளவு பேரழகனா படைச்சான்? ஒவ்வொரு முறை ரயிலில் நீ என் மீது மோதும் போதெல்லாம்உடம்பு அப்படியே பத்திக்கும். தடுமாறி நீ என்னை தொடும்போது தட தடன்னு என் மேல ரயில் போற மாதிரி இருந்தது. நீ சாதரணமா தான் என்னை பார்த்தாய்,நான் எப்படிநொறுங்கி போனேன் தெரியுமா? வெளிய மட்டும் தான் திடமா ரயில் கம்பியை பிடிச்சு கிட்டு இருந்தேன். ஆனா உடம்பு உள்ள ஒவ்வொரு பார்ட்டாகழண்டு விழுந்திச்சுடா. உன் ரெண்டு கண்ணும் அப்படியே தீ பந்தம் மாதிரி ஜெகஜ்ஜகன்னு எரியுது. அதில் என்ன பார்த்தேன் தெரியுமா? அதில் தாண்டா என் மீதிஆயுளையும் பார்த்தேன்..!!"
"கல் நெஞ்சக்காரன்டா நீ. நாளாக நாளாக வேதனை கூடி கொண்டே போச்சு. உனக்கு விருப்பம் இல்லையா, உனக்கு என்னை பிடிக்கலையா, இல்லை நீ என்னை வெறுக்கிறியா, எதுவுமே தெரியாமல் எப்படி என் மீதி ஆயுளையும் கழிப்பேன். எனக்கு உன்னை பிடிக்கலை என்று ஒரு வார்த்தை சொன்னால் என் தவிப்புக்கு ஒரு விடை தெரியும்."
இத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இன்னும் உயிரோடு இருக்கும் இருவருக்குமான அன்பு நினைக்கையிலே சிலிர்க்க வைக்கிறது. அவனுக்கும் குடும்பம் அமைந்தது. சின்ன சின்னதாய் நிறைய சண்டைகள். ஆனால் ஒரு போதும் ஈகோ சண்டை வந்தது கிடையாது. பரிவும் பாசமுமாய் நாட்கள் உருண்டோடி விட்டது. என் மனம் இப்போது நிறைவாக இருந்தது.
அவனை பார்த்தேன். காலம் இருவர் உருவத்திலும் வரலாறு வரைந்து இருந்தது. புறம் மாறினாலும் அகம் அன்று இருந்தது போலவே.
அவன் கைகளை பற்றி இதனை வருடங்களுக்கு பிறகு ஐ லவ் யூ என்றேன்.
"கல் நெஞ்ச காரன் டா நீ, இத்தனை நாளாய் உன் மனசைஎங்கே மறைச்சு வெச்சு இருந்தாய்? உன்னால இப்படியெல்லாம் பேச தெரியுமா? எத்தனை நாள் நீ பிரியமா பேசுவியானு ஏங்கி இருக்கேன் தெரியுமா?”
"நீ ஒரு வார்த்தை சொல்லு!. உனக்காகவே இந்த ஜென்மத்தை முடித்து கொள்கிறேன். கடைசி வரை இப்படியே உன்னோடு இருந்து விடுகிறேன். உனக்கு பிறகு தான் எனக்கு எல்லாமே!. அது ஏன் உனக்கு புரியாதா? இந்த உயிர் இந்த உடல் எல்லாமே உனக்காகத்தான் டா"
ஏனோ எனக்கு அன்று பார்த்த சலங்கை ஒலி படத்தின் இறுதி காட்சி நினைவுக்கு வந்தது. குடிகார நண்பன் இறந்து விடுவான். அவனை வீல் சேரில் வைத்து தள்ளி கொண்டு வரும்போது வெளியே மழை வரும். அவன் நனைந்து விடக்கூடாது என்று குனிந்து அவனை மறைப்பான் அந்த நண்பன்.
இது முடிவல்ல.
-- Edited by Night on Saturday 11th of October 2014 08:27:20 PM
"விட்ட குறையோ தொட்ட குறையோ! போன ஜென்மத்தில ரெண்டு பேரும் நிறை வேறாத காதலர்களா பிரிஞ்சு இருப்போம். எங்கெங்கோ பிறந்த நீயும் நானும் ஒன்னா சேரணும்னு விதி. என்ன இப்போ சுதந்திரமா இருக்க முடியாது.
அதனால என்ன, உன் அன்புக்கு இந்த ஆயுசு முழுக்க அடிமையா இருந்து விட்டு போறேன். "///
அருமை...
ரொம்ப நாளைக்கு பிறகு பதிந்தாலும்....நல்லா இருக்கு,என்ன முந்தின பகுதிய படிச்சு திரும்பவும் நினைவு படுத்திக்க வேண்டி இருந்தது...