கலப்பினம் என்பது, தற்போது சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. விலங்குகளை கலப்பினம் மூலம் உருவாக்கும் முயற்சிகள் அதிகம் நடக்கின்றன. அதுவும், சீனாக்காரர்களுக்கு, இந்த விவகாரம், கை வந்த கலை. சீனாவின் புஜாய்ன் மாகாணத்தில், ஜியாக்மென் என்ற இடத்தில், வன விலங்கு சரணாலயம் உள்ளது. கலப்பினம் குறித்த சோதனை ரீதியான நடவடிக்கைகள், இங்கு அதிகம் கையாளப்படுகின்றன. சமீபத்தில், இந்த சரணாலயத்தில் உள்ள கழுதைக்கும், வரிக் குதிரைக்கும் இடையே, உறவை ஏற்படுத்தி, கலப்பின முயற்சி மேற்கொள்ளப்பட்டது; இதற்கு, நல்ல பலன் கிடைத்தது. அனைவரும் எதிர்பார்த்தது போலவே, கழுதைக்கும் (ஆண்), வரிக் குதிரைக்கும் (பெண்) அழகான குட்டி பிறந்தது. இந்த குட்டியின் கால்கள் மட்டும், வரிக் குதிரை போல் இருந்தன. காலுக்கு மேல் உள்ள மற்ற உறுப்புகள் அனைத்தும், அசல் கழுதை போல இருந்தன. கழுதையும் அல்லாமல், குதிரையும் அல்லாமல், வித்தியாசமான தோற்றத்தில் இருந்த, இந்த குட்டியை காண்பதற்கு, வன விலங்கு சரணாலயத்தில் தற்போது கூட்டம் அலை மோதுகிறது.