மழைக்கு வேகமாக வந்து ஒதுங்கிய டீக் கடை காலி இடத்தில் எனக்கு முன்னே ஒரு நாய் இருந்ததை கவனிக்கவில்லை. அதன் உறுமலைக் கேட்டு அதிர்ச்சி கலந்த பயத்தில் திரும்பிப் பார்த்த போது, செவலை கலந்த கருப்பில் படுத்துக் கொண்டிருந்தது. அதை உறுமல் எனச் சொல்லலாமா எனத் தெரியவில்லை. அனால் அது தான் நாய்களின் முதல் எதிர்ப்பு.
இப்போது இருக்கும் தெருவில் எந்நேரமும் 20 நாய்கள் சுற்றிக்கொண்டு இருப்பதால், நாய்களைப் பார்த்தாலே கதறி வேலை செய்யும் எனது அட்ரீனல் மெதுவாகவே மழையின் குளிரில் வேலை செய்து ஓரிரு நிமிடங்களில் நின்றும் போனது. ஆனால் அந்த நாய் அப்படி அமைதி ஆவதாகத் தெரியவில்லை. அதன் சத்தம் இப்போது குரைத்தல் நிலைக்கு வந்தது. எப்படியும், இந்த கிராமத்தில் மணி, ஜிம்மி அல்லது டைகர் என்று தான் பெயர் வைத்திருப்பார்கள், எதாவது ஒன்றை முயற்சி செய்யலாம் என்று மூன்றையும் கூப்பிட்டுப் பார்த்தேன். ஆனால் குரைத்தல் அதிகமாகவே செய்ததோடு, மெதுவாக என்னை நோக்கி வர ஆரம்பித்தது.
குதிரைகளைப் போல நாய்களும் பயத்தை உணரும் என்பதால், முடிந்த வரை பயத்தை காட்டாமல், தைரியமாக இருப்பதாக காட்டிக் கொண்டு அதைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். நாய்கள் தங்களை கண்டுகொள்ளாமல் சாதரணமாக இருப்பவர்களை ஏதும் செய்வதில்லை. ஆனால் இங்கே அடுத்த நிமிடத்தில் எனக்கும் அதற்கும் மூன்று அடி மட்டுமே இருக்கும் அளவு என்னை நெருங்கி விட்டது. எனக்கு மேல கூரை கீற்றில் சொருகி இருந்த மீன் பிடிக்கும் தூண்டிலான மூங்கில் குச்சியை உருவினேன்.
இப்போது அதன் காதுகள் முழுதாக விரிந்து முகத்தை கீழ் நோக்கி வைத்து அதன் முன் பற்களை காட்டியது. frozen படத்தில் வரும் ஓநாயைப் போல் அதன் பற்கள் என் உயிர் வரை என்னை பயமுறுத்தியது . அதன் நெஞ்சில் மூங்கில் குச்சியை வைத்துத் தள்ளினேன். அவ்வளவு தான் நேராக என் மேல பாய வந்தது, நான் ஒரு வெறி பிடித்தவனைப் போல் குச்சியை சுழற்ற ஆரம்பித்தேன். பின்வாங்கினாலும் அது குரைப்பதை நிறுத்த வில்லை, நானும் நிறுத்த வில்லை. நாய்களின் பலவீனம் அதன் கால்கள் எனத் தெரிந்ததால் வளையும் மூங்கில் குச்சியால் முடிந்த வரை காலில் அடிக்கத் தொடங்கினேன். ஒரு வேகமான அடியில் வீல் எனக் கத்திக் கொண்டே மூத்திரம் பெய்துகொண்டே வெளியில் ஓடியது.
எதிர் வீட்டின் சந்துக்குள் நுழைந்து அந்த மழையில் மறைந்தது. எனக்கு அங்கிருந்து கிளம்ப வேண்டும் எனத் தோன்றினாலும், ஒரு கர்வத்துடன் மழை விடும் வரை நிற்கலாம் என்று தோன்றியது. கொஞ்ச நேரத்தில் நனைந்து கொண்டே ஒருவன் உள்ளே வந்தான். உயரமாக என்னை விட கொஞ்சம் கருப்பாக இருந்தான். கொஞ்ச நேரம் அவனைப் பார்ப்பதை தவிர்த்து வந்தேன். கொஞ்ச நேரத்தில் அடி வாங்கிய நாய்கள் கத்தும் ஒரு வித அழுகை சத்தம் கேட்டது. பக்கத்தில் அந்த நாய் இல்லை. கொஞ்ச நேரத்தில் எனக்கு இவன் தான் அந்த நாயோ என்ற சந்தேகம் வந்தது, எதையும் காட்டிக் கொள்ளாமல் மெதுவாகத் திரும்பினேன், அவன் கை, கால்களில் பிரம்பால் அடித்த வீக்கங்கள் இருந்தன.
இப்போது அட்ரீனல் முழுதாக வேலை செய்யத் தொடங்கி வியர்க்க ஆரம்பித்தது. ஒரு போர்வாளைப் போல் கையிலேயே வைத்திருந்த அந்தக் குச்சியை கீழே போட்டேன். மெதுவாக அவனிடம் பேச்சுக் கொடுக்கலாம் என
"நான் ஒன்னும் வேணும்னே அடிக்கல, நீ தான் பக்கத்துல வந்து பல்லை காட்டுன " என்றேன். "நான் என் வேலைய செஞ்சேன்" என்று என் பக்கம் திரும்பாமல் சொன்னான். "நான் பொதுவா நாய்கள் கிட்ட பாசமா தான் நடந்துக்குவேன். எந்த நாயையும் அடிக்க மாட்டேன், ஏன் இப்படி பண்ணுனேன்னு தெரியல, நீ தான் அப்படி என்னை அடிக்க வச்ச" அவன் ஏதும் சொல்லாமல் மழையைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
"உன் காது அப்போ இருந்த விதம், உன்னோட பல்லு, உன்னோட பாடி லாங்குவேஜ், அதை எப்படி சொல்றதுன்னு தெரில ஆனா நீ முழுசா என்னை கடிக்க வரது மாதிரியே இருந்துச்சு"
"எதை வச்சு அப்படி நெனச்ச?" "எனக்கு நாய்களைப் பத்தி தெரியும், இப்படியெல்லாம் பண்ணுனா கண்டிப்பா கடிக்க வந்துடும்" "உனக்கு நீ என்ன செய்யப் போறன்னே தெரியல, நீ எப்படி நான் இது தான் செய்வேன்னு நெனச்ச?
எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் "நான் முதல்லயே உன்ன எச்சரிச்சேன்" என்றேன் "நானும் அதான் செஞ்சேன் " என்றான். எனக்கு அழுகை வந்துவிடும் போல இருந்தது, ஆனால் அதை விட முக்கியம் பயம் என்னை ஆக்கிரமித்திருந்தது. அவன் அருகில் சென்று அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டே " i am sorry " என்றேன். அவன் மேல் வீசிய தெரு நாய்களின் வாசனை மழை ஈரத்தில் அதிகமாகக் குமட்டியது.
"நான் என்ன உன்னோட லவ்வரா ?" என்று கேட்டுக் கொண்டே என் பிடியில் இருந்து நழுவினான். "வேற எப்படி நான் மன்னிப்பு கேக்குறது " "உன் கையில குச்சி இருந்துச்சு, அடிச்சுட்ட, இனி மன்னிப்பு கேட்டு என்ன ஆகப் போகுது" என்றான்.
"எனக்கு கில்டியா இருக்கு, இதுக்கு என்ன தான் பரிகாரம்?" எனக் கேட்டுக் கொண்டே அவன் கால்களைப் பார்த்தேன். "அதுக்கு பதில் சொல்றது ரொம்பக் கஷ்டம்" என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்பினான்.
"இப்படி சொன்னா என்ன பண்றது?" எனக் கேட்டேன் வாசலில் நின்று என் பக்கம் திரும்பி "நீ அடி வாங்கும் போது உனக்குத் தோன்றும் பதிலுடன் என்னை வந்து பாரு" என்று சொல்லி விட்டு நனைந்து கொண்டே வெளியில் சென்றான். இந்த சனியன் புடிச்ச மழை எப்போது நிற்கும்?
ஏன்?ன்னு தெரியல... மனம் கொஞ்சம் கனமா இருக்கு.... ஒருவேளை நாய்களை எனக்கு பிடிப்பதால் அந்த கனமா?ன்னு தெரியல....
நிஜத்தில் நான் மனிதர்களைவிட, அதிகமாக நாய்களை நம்புகிறேன்....