ஏற்கெனவேதன் வாழ்வில் திருமணத்துக்கு முன்பு செய்த தவறை - நம்பி வந்த ஜமுனாவை நட்டாற்றில் விட்டுவிட்டு வந்த பாவத்தை எண்ணி எண்ணி பல நாட்கள் தூங்காமல் மனதுக்குள் மரணவேதனைப் பட்டுக்கொண்டிருந்தவர் சந்திரசேகர்.
நெருஞ்சி முள்ளாகக் குத்தும் குற்ற உணர்ச்சி வாட்டும் போதெல்லாம் தன் குடும்பத்தாருடன் வலுக்கட்டாயமாக தன்னை இன்னும் நெருக்கமாகப் பிணைத்துக்கொண்டு அவர்கள் மலர்ச்சியில் தன் மனக் குமுறலை ஓரளவு குறைத்துக்கொள்வார் அவர். அதுவும் ஓரளவுதான்.
பாரம் சற்று அதிகமானதாக உணர்ந்தால் அவருக்கு உடனே சோமசேகர் வந்தாகவேண்டும். சோமுவுக்கு போன் போட்டு அவர் எங்கிருந்தாலும் வரவழைத்து அவருடன் தன் மனக்குமுறலை பகிர்ந்துகொள்வார் அவர். அது என்னவோ தன மனைவி மக்களுடன் இருக்கும் போது கூட ஊவா முள்ளாக நெஞ்சின் ஒரு மூலையில் பிராண்டிக்கொண்டிருக்கும் அந்த குற்ற உணர்வு சோமுவுடன் இருக்கும் போது மட்டும் எங்கோ ஓடிப்போய் விடும்.
அதற்கு காரணம் .. ஆரம்ப காலம் தொட்டு தன்னுடன் ஒன்றி இருந்த உயிர் நண்பன் என்பதாலா?
இடுக்கண் வரும்போதெல்லாம் கூடவே தன் மனப் பாரத்தை சுமந்துகொண்ட ஒரு சுமைதாங்கி என்பதாலா?
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். சோமு கூட இருக்கும் போது சொல்லாமல் கொள்ளாமல் எங்கோ ஓடிப்போன குற்ற உணர்வு மறுபடி தலை தூக்கும். அப்போதெல்லாம் சோமு சொன்ன ஆறுதல், அவரது வார்த்தைகள் கொடுத்த தைரியம், அன்பான அரவணைப்பு எல்லாமே அவர் துவண்டு போகாமல் தூக்கி நிறுத்தும்.
அது தாங்கும் ஒரு மாதத்துக்கு. பிறகு.. மீண்டும் அந்த குற்ற உணர்வு தலை தூக்கத்தான் செய்யும்.
அப்படி ஏற்கெனவே குற்ற உணர்வில் சிக்கி இருந்தவருக்கு தற்போது தனது மருமகனின் கீழ் வேலைபார்ப்பது தன் மகன் தான் என்பதும், ஜமுனா இப்போது ஒரு பாலியல் தொழிலாளியாக இருக்கிறாள் என்பதும் தெரியவந்த பிறகு.. அந்த குற்ற உணர்வு இன்னும் அதிகமானதே தவிர குறைய வில்லை.
சோமசேகர் சென்னை சென்று ஜமுனாவை நேரில் சந்தித்து திரும்பிய பிறகோ அது அவரை குத்திக் குடையவே ஆரம்பித்தது.
ஜமுனா தானோ தன் மகனோ அடுத்தவர் சொத்துக்கு ஆசைப்படாதவர்கள் என்றும் தன்னாலோ தன் மகனாலோ அவருக்கோ அவரது குடும்ப கவுரவதுக்கோ எந்த ஒரு தலை குனிவும் ஏற்படாது என்று உறுதி கொடுத்திருப்பதை அறிந்ததும் ..
ரொம்பவே உடைந்து போனார் சந்திரசேகர்.
ஒருவேளை ஜமுனா தன்னைப் பழிவாங்கும் நோக்கத்தில் இருந்திருந்தால் கூட இவ்வளவு உறுத்தல் தோன்றியே இருக்காதோ?
அன்று அவர் தன்னை கடத்திவந்த தந்தையிடம் எவ்வளவு கெஞ்சினார், கதறினார் என்பது அவருக்குத் தானே தெரியும்? .
வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டு எந்த பிடிமானமும் இல்லாமல் நாட்களை கடத்தியதும், நண்பன்
சோமசேகருக்காக படிப்பை தொடர்ந்ததையும் , அதுகூட தந்தையின் செல்வாக்கால் தான் சாத்தியமானது.
மூன்று மாதங்கள் அனுபவித்த உறவுக்காக ஏங்கிய உடல் உணர்ச்சிக்கொந்தளிப்பில் தவித்தபோது..
காதலையும், கள்ளமில்லா அன்பையும் மட்டுமே தந்த ஜமுனாவின் நினைவு வந்து தாக்கியபோது..
அவளது அன்புக்காக மனமும், உறவுக்காக உடலும் ஒருசேரச் சேர்ந்து தவித்தபோதெல்லாம் ...
தன் உணர்வுகள் அத்தனைக்கும் ஒரு வடிகாலாக இருந்து சோமு மட்டும் தன்னோடு இருந்திருக்காவிட்டால்..
கண்டிப்பாக ஹாஸ்டல் அறையில் தூக்கில் தொங்கி இருந்திருப்பேனே?
இப்போது நினைத்துப் பார்த்தபோது அப்படியே செய்திருக்கலாமோ என்று கூட தோன்றியது.
மனச்சாட்சியின் குத்தல் குடைச்சல் இல்லாமல் இருந்திருக்கலாமே?
முதல்நாள் சோமுவிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரிடம் மனதில் உள்ளதை அப்படியே கொட்டித் தீர்த்தார் சந்திரசேகர்.
"சோமு..எனக்கு என் மகனைப் பார்க்கணும்டா.. அவனைப் பார்த்து அவன் வாழ்க்கைக்கு ஏதாச்சும் செய்ஞ்சே ஆகணும்டா. இல்லைன்னா என் மனசாட்சி என்னை மன்னிக்கவே மன்னிக்காதுடா." - குமுறித் தீர்த்த நண்பனை சமாதானம் செய்வதற்குள் படாத பாடு பட்டுவிட்டார் சோம சேகர்.
"அதுக்காக என் மகனை அனாதையா அலைய விடனுமுன்னு சொல்லுறியா? எந்த ஊர் நியாயம்டா இது?" - ஆவேசத்துடன் பொங்கினார் சந்திரசேகர்.
"நான் அப்படி சொல்லலே. ப்ளீஸ். அமைதியா இருடா." - என்று நண்பனைத் தேற்றினார் சோமு.
"முடியலெடா. எனான்லே முடியலே. என் இடத்துலே நீ இருந்து பாருடா.. அப்போ தெரியும். என் உணர்சிகளை எல்லாம் சரியா புரிஞ்சிக்கிட்டு எனக்கு தோள்கொடுத்து தாங்கி நிக்கிற நீயே என்னை இப்போ சும்மா இருக்கச் சொன்னா எப்படிடா. "- சொல்லும்போதே கண்கள் கலங்கி விட்டன சந்துருவுக்கு.
“ ஜமுனாவாழ்க்கையிலே தலை குனிஞ்சு நிக்கறப்போ அதுக்கு காரணமான நாம இப்போ இந்த சொசைட்டியிலே பெரிய மனுசங்களா மதிப்பு, மரியாதை கெளரவம் எட்செட்ரா எட்செட்ராவோட வலம் வந்துகிட்டு இருக்கோம். ஆனாலும் மனசாட்சின்னு ஒண்ணு இருக்கேடா? இத்தனை நாள் அது உறுத்தினப்போ எல்லாம் ஜமுனா செத்துப்போயிட்டா. அதுக்கு அப்புறம் தானே நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு என் தப்புக்கு நானே ஒரு சமாதானம் சொல்லிக்க முடிஞ்சிது. என்னை நானே தேத்திக்கக் கூட செய்தேன். ஆனா இப்போ அவ உயிரோடதான் இருக்கா.. அதுவும் கற்பனைபண்ணிப்பார்க்கவே முடியாத புதைசேத்துலே விழுந்து அதுலேயே மூழ்கிப் போயிருக்கா. அவ வயத்துலே பொறந்த ஒரே குத்ததுக்காக என் மகன் கூனிக் குறுகி அசிங்கப் பட்டு நிக்கிறான். எல்லாத்துக்கும் காரணம் எங்க அப்பாவோட ஜாதி வெறி, அதை எதிர்த்துப் போராட முடியாத என்னோட கையாலாகாத்தனம். இதுக்கெல்லாம் நான் கொடுத்த விலை இதுடா. இதை எல்லாம் நினைக்கிறப்போ படுத்தாத் தூங்க முடியாம நான் படுற அவதி இருக்கே. என் எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாதுடா." - என்று துடித்தார் சந்திரசேகர்.
"ஏதேது? நீ சொல்லறதைப் பார்த்தா உன் சொத்து மொத்தத்தையும் கதிரவன் பேருக்கே எழுதி வச்சுடுவே போல இருக்கே." - சற்று எரிச்சலுடன் கேட்டார் சோமு.
"அப்போ கூட என் மனசு ஆறாதுடா." - என்றார் சந்திரசேகர்.
"டேய். சந்துரு. கொஞ்சம் நிதானமா இருடா. நான் சொல்லறதைக் கொஞ்சம் கேளு. உன் நிலைமை எனக்கு நல்லாவே புரியுதுடா. ஆனால்... அதுக்காக பதட்டப்பட்டு அவசரத்துலே நீ செய்ய நினைக்கிற காரியம் எல்லாருக்குமே வினையாக முடிஞ்சிடும். நீ இத்தனை நாள் பாக்காத மகனோட வாழ்க்கையை பற்றி இவ்வளவு யோசிக்கிறியே. அதே சமயம் பிறந்துலே இருந்து உன் கூடவே உன் தோள்மேலும் மார்மீதும் போட்டு வளர்த்த மகளை மறந்துவிட்டு பேசுறியே. இது ஏதோ சமூகத்துலே உன் ஒருத்தனோட மதிப்பை மட்டும் சார்ந்த விஷயமா இருந்தா தொலையுதுபோ ன்னு நான் விட்டுருவேன். ஆனா இதுலே கல்பனாவோட கவுரவமும் சம்பந்தப் பட்டிருக்குடா. ஒரு பாலியல் தொழிலாளிக்கும் தன் அப்பாவுக்கும் பிறந்த ஒருத்தனை தன சகோதரனா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் அந்தப் பெண்ணின் மனசு என்ன பாடுபடும்?. எல்லா பெண்களுக்குமே அவங்க அப்பா தாண்டா ஆதர்ச ஹீரோ. அவரைப் பற்றி தன் மனசுக்குள்ளே இருக்கிற உயர்ந்த பிம்பம் நொடிப்பொழுதுலெ கலைஞ்சி போச்சுன்னா அந்தப் பெண்ணோட மனசு என்னபாடு படும்.? இதனை நாள் உன் கண்ணுக்குள்ளேயே பொத்திப் பொத்தி வளர்த்த கல்பனா உன்னைப் பார்த்து, "நீங்களா அப்பா இப்படியெல்லாம் செய்ஞ்சீங்க ன்னு ஒரு வார்த்தை ஒரே ஒரு வார்த்தை கேட்டுவிட்டா அதை உன்னாலே தாங்கமுடியுமாடா? கதிரவன் என்ன இருந்தாலும் ஒரு ஆண்மகன். அவனாலே எப்படியும் பொழைச்சுக்க முடியும். அவன் மனசுலே வைரம் பாய்ஞ்சு இருக்கு. உண்மை வெளியே தெரிஞ்சா அதுக்கப்புறம் நீ என்ன காரணம் சொன்னாலும் அவன் நம்புவானா? உன் முகத்துலே காறித்துப்பிட்டு அவன் பாட்டுக்கு போயிட்டே இருப்பான். கிடைக்கவே கிடைக்காதுன்னு ஆயிட்ட மகனோட அன்புக்காக, இருக்குற மகளோட வெறுப்பையும் சம்பாதிச்சுக்கிட்டு நீ வாழப்போகிறாயா? நோ.. என் உயிர் நண்பன்டா நீ. நீ அப்படி ஒரு நடைப்பிணமா வாழ நான் ஒருநாளும் அனுமதிக்க மாட்டேன்." - ஆவேசமாகப் பேசினார் சோமசேகர்.
என்ன செய்வதென்று புரியாமல் தவித்தார் சந்திரசேகர். அவரது நிலைமையைப் பார்க்க சோமசேகருக்கே கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.
"என்னை இப்போ என்னடா பண்ணச் சொல்லறே ."- என்று பரிதாபமாகத் தன் ஆருயிர் நண்பன் கேட்கும்போது அவனுடைய மனநிம்மதிக்காக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று தோன்றியது.
யோசிக்க ஆரம்பித்தவருக்கு ஒரு திட்டம் தோன்றியது. அதை நண்பனிடம் சொன்னார் அவர்.
அவர் சொன்னதைக் கேட்டதும் ஏதோ ஒருவகையில் ஜமுனாவுக்கு தான் செய்த பாவத்துக்கு இது ஒரு பரிகாரமாக இருக்கும் என்று தோன்றியது சந்திரசேகருக்கு.
"இது முடியுமாடா? கதிரவன் இதை ஏத்துக்குவானா?"- என்று சந்தேகத்துடன் கேட்டார் சந்திரசேகர்.
"ட்ரை பண்ணித்தான் பார்ப்போமே." என்றார் சோமசேகர்.
"சரிடா.. "என்று சமத்தித்த சந்திரசேகர் நண்பனைப் பார்த்தபடி, "டேய். சோமு. எனக்கு என் மகனைப் பார்க்கணும் போல இருக்குடா. நானும் வரேன். ரெண்டு பேருமா சேர்ந்து பேசி அவனை சம்மதிக்க வைப்போம்டா. " என்றார் சந்திரசேகர்.
"கண்டிப்பாடா. நீ உன் மகனைப் பாக்க நான் தடையா இருப்பேன்னு நினைச்சியாடா. நாளைக்கே நாம ரெண்டுபேரும் சேர்ந்துபோய்ப்ர் பார்க்கலாம்டா. " என்றார் சோமு.
வைத்தகண் வாங்காமல் தன்னையே சந்திரசேகர் பார்ப்பது கதிரவனுக்கு கொஞ்சம் சங்கோஜத்தை வரவைத்தது.
"என்ன சார் அப்படிப்பார்க்கிறீங்க?"- என்று கேட்டான் அவன்.
அவன் மனதுக்குள் என்னென்னவோ எண்ணங்கள். ஒருவேளை கல்பனா மேடம் நேராக வீட்டுலே கத்தி அழுது ஆர்ப்பாட்டம் செய்து எல்லாருக்கும் விஷயம் தெரிந்து ...என்னிடம் பேச...வந்திருக்கிறார்களோ - என்றெல்லாம் அவன் மனது நினைக்க ஆரம்பித்தது.
அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று ஒருகணம் புரியாமல் விழித்த சந்திரசேகர், "அதெல்லாம் ஒண்ணும் இல்லேப்பா. உன்னைப் பார்க்கிறப்போ என்னையே சின்ன வயசுலே பார்க்கிற மாதிரி இருக்கு. எனக்கு ஒரு மகன் இருந்தா அவனும் உன்னைப்போலத்தான் இருப்பான்." என்றார் சந்திரசேகர் நெகிழ்ச்சியுடன்.
"அதனாலே என்ன சார்? என்னையே உங்க பையன் மாதிரி நினைச்சுக்குங்களேன். " என்றான் கதிரவன் யதார்த்தமாக.
சந்திரசேகரின் கை நடுங்கியது. அதனை கதிரவன் அறியாவண்ணம் அழுத்திப் பிடித்துக்கொண்டு அவரை எச்சரித்த சோமசேகர், "அப்புறம்..என்னப்பா கதிரவா? வேலை எல்லாம் எப்படிப்போகுது? திவாகர் உன்கிட்டே சரளமா மூவ் பண்ணுறானா.?" - சரளமாகப் பேச்சைத் துவக்கினார் சோமசேகர்.
"உங்க ஆசீர்வாதத்துலே நல்லாவே இருக்கேன் சார். வேலை ரொம்ப பிடிச்சிருக்கு சார். திவாகர் சார் மூவ் பண்ணறதுக்கு கேட்கணுமா என்ன? உங்க பிள்ளையாச்சே சார். " என்று பதிலளித்தான் கதிரவன்.
"வெல் .. ஆனால் கதிரவன் ஒரு விஷயம் கொஞ்சம் உறுத்தலா இருக்கு. காமர்ஸ்லே போஸ்ட் கிராஜுவேஷன் பண்ணிட்டு இப்படி ஹோட்டல்லே வேலைக்கு வந்திருக்கியே. கஷ்டமா இல்லே?" - என்று கேட்டார் சோமசேகர்.
"அதெல்லாம் பார்த்தால் முடியுமா சார். படிச்ச படிப்புக்கு ஏத்த வேலைதான் பாக்கணுமுன்னு பொதுவா இருக்குற இளைஞர்கள் ஆசைப்படலாம். என்னை மாதிரி வாழ்க்கைச் சூழல்லே இருந்து வரவங்க கிடைச்ச வேலையை ஏத்துகிட்டு வாழணும் சார். அதுதானே வாழ்க்கை." என்றான் கதிரவன்.
"வாஸ்தவம்தான். " என்று ஆமோதித்த சோமசேகர், "கதிரவா.. உன் கிட்டே ஒரு முக்கியமான பொறுப்பை கொடுக்கலாம் என்று நினைச்சிருக்கேன். செய்வியா?" என்று பீடிகை போட்டார்.
"இவர் எதைச் சொல்ல வருகிறார்." என்று புரியாமல் ஒரு கணம் விழித்தான் கதிரவன். மறுகணம்,"என் வேலைக்கு எந்த பாதிப்பும் இல்லாம இருந்தா கண்டிப்பா செய்வேன் சார். " என்றான் பணிவுடன்.
"வேற ஒண்ணும் இல்லேப்பா. நாங்க ரெண்டு பேரும் ஒன்றாகச் சேர்ந்து எஸ். சி. எண்டர்ப்ரைசெஸ் என்ற பேரிலே ஒரு கம்பெனி நடத்திகிட்டு இருக்கோம். எங்க கம்பெனி அக்கவுண்டண்ட் சொல்லாம கொள்ளாம வேலையை விட்டு நின்னுட்டாரு. ஆடிட்டுக்குள்ளே அக்கவுண்ட்ஸ் சப்மிட் பண்ணியாகணும். என்ன பண்ணுறதுன்னு யோசிச்சப்போ உன் ஞாபகம் வந்துச்சு. நீ தான் எம். காம். ஆச்சே. அதனாலே எங்க கம்பெனி அக்கவுன்ட்சை தரோவா செக் பண்ணி தணிக்கைக்கு அனுப்ப முடிச்சுக்கொடுக்க முடியுமா? நீ சும்மா ஒண்ணும் செய்யவேண்டாம். இதுக்கு உனக்கு சம்பளம் தரோம். இதை வெற்றிகரமா முடிச்சுக்கொடுத்து விட்டால் நீ விருப்பபட்டால் எங்க கம்பெனியிலேயே அக்கவுண்ட்ஸ் மானேஜரா கூட ஜாயின் பண்ணிக்கலாம். என்ன சொல்லறே?" - என்று கேட்டார் சோமசேகர்.
முன்பிருந்த கதிரவனாக இருந்தால் உற்சாகத்தின் எல்லைக்கே சென்று, "ஒக்கே சார்." என்று சொல்லியிருப்பான்.
ஆனால் இப்போதுஅவனுக்கு திவாகரைவிட்டுப் பிரிய மனம் வரவில்லை. ஒதுங்கி இருந்தாலும் திவாகரின் பார்வை படும் தூரத்திலேயே இருக்கவேண்டும். திவாகர் வெளியே விடும் மூச்சுக்காற்றை சுவாசித்துக் கொண்டாவது இங்கேயே இருக்கவேண்டும் என்றல்லவா அவன் துடித்துக் கொண்டிருக்கிறான்.
"என்னை மன்னிச்சுக்குங்க சார். இந்த வேலையையும் திவாகர் சாரையும் விட்டு நான் எங்கேயுமே வரதாக இல்லை. "- என்றான் ஆணித்தரமாக.
"அட. உன்னை யாரப்பா வேலையை விடச்சொன்னது? இங்கேயே உங்க திவாகர் சார் கூடவே இருந்துக்க. ஆனால் வேலை நேரம் முடிந்ததும் பார்ட் டைம் ஜாப்பாக எடுத்துக்கிட்டு செய்யலாமே. முன்னுக்கு வரவேண்டிய பையன் நீ. கிடைக்கிற வாய்ப்பை அப்படியே பற்றிக்கொள்ளலாம் அல்லவா?" என்றார் சோமசேகர்.
கதிரவன் யோசனையில் ஆழ்ந்தான்.
இப்போது சந்திரசேகர் பேசினார்.
"தம்பி..என்னவோ தெரியலே உன்னைப் பற்றி நெறைய நல்லாவே சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். இப்போ உன்னை நேரிலேயும் பார்த்ததும் உனக்கு ஏதாவது உதவி செய்தே ஆகணும்னு மனசுலே தோணிக்கிட்டே இருக்குப்பா. மறுத்துப் பேசாம இந்த வேலைய ஒத்துக்கப்பா. " என்றார் சந்திரசேகர்.
அவரது வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை கதிரவனால்.
“சரி ஸார். ஆனால் எதுக்கும் திவாகர் சார் கிட்டே ஒரு வார்த்தை கேட்டுகிட்டு.." - என்று அவன் முடிக்கவில்லை.
"திவாகர் சார் எல்லாம் ஒண்ணும் சொல்லமாட்டாரு. அவன் கிட்டே நான் பேசிக்கறேன். உன்னோட டியூட்டி ஹவர்ஸ் முடிந்ததும் எங்க கம்பெனிக்கு வந்துடு. இன்னிக்கே நாள் நல்லா இருக்கு. வந்துடுறியா?" என்று கேட்டார் சோமசேகர்.
"சார். என்ன சார் இது. திடீர்னு இன்னிக்கே வந்து வேலைய எடுத்துக்க சொல்லறீங்க? நான் இருக்கறது கஸ்டமர் சர்வீஸ்லே ஸார். அதனாலே வெளியே எல்லாம் வரமுடியாது. உங்களுக்கு வேணும்னா இங்கேயே என் அறையிலே இருந்துட்டே வேலையை முடிச்சுக்கொடுக்கறேன்." என்றான் கதிரவன்.
"வெரி குட் கதிரவன். நான் ஈவினிங் அக்கவுண்ட்ஸ் டிப்பார்ட்மென்ட்டிலே இருந்து ஆளை அனுப்பி டீடைல்ஸ் எல்லாம் ஒரு பென் டிரைவிலே காப்பி பண்ணி எடுத்துட்டு வரச் சொல்லறேன். மேல ஏதாவது டீடைல்ஸ் வேணும்னா அவங்க கிட்டே கேளு. என்ன ஹெல்ப் வேணாலும் பண்ணச் சொல்லறேன். நல்லபடியா முடிச்சுக்கொடு. உனக்கு இந்த வேலைய முடிசுக் கொடுக்க இருபத்தையாயிரம் ரூபாய் கொடுக்கறேன்." என்றார் சோமசேகர்.
"என்னது? இருபத்தையாயிரமா?" தன்னையே நம்ப முடியாமல் கேட்டான் கதிரவன்.
"என்னப்பா இருபத்தையாயிரமா என்று கேட்கிறாய். இது போதாதுன்னு நினைக்கிறாயா? அப்படி என்றால் எவ்வளவு வேண்டும்னு சொல்லு." என்றார் சோமசேகர்.
"அய்யய்யோ.. அப்படி எல்லாம் இல்லே சார். நான் ஒரு ப்ரெஷ்ஷெர். என்னை நம்பி இவ்வளவு பெரிய தொகைய சம்பளமா அதுவும் ஒரு பார்ட் டைம் ஜாப்பிற்கு?" என்று நிறுத்தினான் கதிரவன்.
"அட என்னப்பா இது.. நாங்க யாருக்கு கொடுக்கறோம். உனக்குத்தானே. உன்மேல வச்சு இருக்கிற நம்பிக்க்கைக்குத்தான் இந்தச் சம்பளம். அட்வான்சா இப்பவே பத்தாயிரம் கொடுக்கறேன்" - என்ற சோம சேகர் தன் ஹான்ட்பாக்கைத் திறந்து புத்தம் புதிய நூறு ரூபாய்க் கட்டு ஒன்றை எடுத்துக் கதிரவனிடம் நீட்டினார்.
"இதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார். வேலையை முடிச்சுக் கொடுத்துவிட்டு மொத்தமா வாங்கிக்கறேன் சார்." - என்று மறுத்தான் கதிரவன். பணத்தைக் கண்டதும் அவன் மனம் லேசாகப் படபடக்க ஆரம்பித்தது.
இப்போது சந்திரசேகர் பேசினார்.
"வர லட்சுமிய வேண்டாம்னு சொல்லாதே கதிரவா. எனக்காக வாங்கிக்க. நல்ல படியா கணக்கை முடிச்சுக்கொடு. உன்னுடைய சொந்தக் கம்பெனிக் கணக்கு வழக்கை நீ எப்படிப் பார்ப்பாயோ அப்படியே நேனைச்சுக்கிட்டுப் பார்க்கணும் தம்பி." உள்ளர்த்தம் வைத்துப் பேசினார் சந்திரசேகர்.
ஆனால் அதனைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு விபரம் ஏதுமே கதிரவனுக்கு தெரியாதே?
"நீங்க இவ்வளவு தூரம் சொள்ளரதாலே சம்மதிக்கறேன் சார். ஆனால் திவாகர் சார் கிட்டே கேப்பேன். அவரும் ஒதுக்கிட்டு எனக்கு பர்மிஷன் கொடுத்தாருன்னாதான் நான் இந்த வேலைய ஏத்துக்கிட்டு முடிச்சுக் கொடுப்பேன். இல்லாவிட்டால் இந்தப் பணத்தை உங்க கிட்டேயே திருப்பிக் கொடுத்துவிடுவேன்." என்று தீர்மானமாகச் சொல்லியவனாக பணத்தை வாங்கிக்கொண்டான் கதிரவன்.
"திவாகர் கிட்டே இப்பவே பேசி நான் உனக்கு பெர்மிஷன் வாங்கிக்கொடுக்கறேன். திவாகர் அவன் ரூமிலே தானே இருப்பான். அவனியும் பார்த்துவிட்டே போகிறோம்." என்று எழுந்தார் சோமசேகர். அவருடன் எழுந்தார் சந்திரசேகர்.
"திவாகர் சார் ஆபீஸ்லே இல்லை சார். அவர் வீட்டுக்குப் போயிருக்கார். ஏதோ அர்ஜண்ட் வெளியா அவருடைய மனிவி வந்தாங்க. அவங்க கூட போயிருக்காரு." என்றான் கதிரவன் பட்டும் படாமல்.
"என்னது? திவாகர் வீட்டுக்குப் போயிருக்கிறானா? அப்போ சரி. அவன் வந்ததும் நீ பேசிடு. நானும் அவன் கிட்டே பேசிக்கறேன். இந்தா என் விசிட்டிங் கார்ட். உன் சம்மதத்தை என்னை கூப்பிட்டு சொல்லிடு. நான் ஈவினிங் ஆளை அனுப்ப சவுகரியமா இருக்கும்." என்று சொல்லிவிட்டு சந்திரசேகருடன் கிளம்பினார் சோமு.
இருவரும் அறையை விட்டு வெளியே வந்து ஹோட்டல் வாசலை அடைந்தார்கள். போர்டிகோவில் நிறுத்தி இருந்த காரில் இருவரும் ஏறிக்கொள்ள சோமசேகர் காரைக் கிளப்பினார். அந்தக் கார் வெளியே எக்சிட் கேட்டை நோக்கி நகர்ந்த அதே நேரத்தில் "இன் " கேட் வழியாக திவாகரின் கார் உள்ளே நுழைந்தது.
"அட! என்ன இது அப்பாவோட கார் போகுதே? அப்படீன்னா அப்பா இப்போ என்னைப்பார்க்க வந்திருந்தாரா?" என்ற கேள்வியுடன் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வேகமாக ஹோட்டல் அலுவலகத்தில் நுழைந்தவன் எதிர்ப்பட்ட ஸ்ரீதரை நிறுத்தி, "என்ன ஸ்ரீதர்? என் பாதர் வந்திருந்தார்ப்போல இருக்கிறதே? கார் வெளியே போனதைப் பார்த்தேன். என்னைத் தேடி வந்தாரா? ஏன் எதுக்குன்னு எதாச்சும் விவரம் சொன்னாரா?" என்று கேள்விகளை அடுக்கினான் திவாகர்.
"ஆமாம் சார். உங்க அப்பாவும், மேடமோட பாதரும் சேர்ந்துதான் வந்தாங்க. பட் உங்களைப் பார்க்க வரலே சார். கதிரவன் சாரைப் பார்த்து பேசணும் என்று வந்தாங்க." என்றான் ஸ்ரீதர்.
"முன்பின் தெரியாத கதிரவனைத் தன்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இருவரும் எதற்காகப் பார்க்கவரவேண்டும்? அப்படி என்ன அவசியம்?" என்ற கேள்வி திவாகரின் மனசுக்குள் முதல்முறையாக எழுந்தது.