காரில் வீட்டை நோக்கி விரைந்துகொண்டிருந்தான் திவாகர்.
வேலை நேரத்தில் இப்படி எல்லாம் வருபவனே அல்ல அவன்.
தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் ஏதோ உணர்ச்சி வேகத்தில் நிதானம் தவறி அவன் நடந்துகொண்டதால் - ஏற்பட்ட விளைவு இது.
அதுவும் அலுவலகத்தில் வைத்து கதிரவனிடம் அவன் நடந்துகொண்ட விதம் அவனுக்கே இப்போது நினைத்துப் பார்க்கும்போது ஒரு மாதிரியாகத்தான் இருந்தது.
சற்று நேரத்துக்கு முன்னே கூட அவன் தானே கதிரவனிடம் கத்தியபோது உங்களுக்கு சம்பளம் கொடுக்கறது செய்யுற வேலைக்குத்தானே தவிர வேலை நேரத்துலே கஸ்டமர் ரூமுக்குப் போய் கூத்தடிப்பதற்கு இல்லை." - என்கிற ரீதியில் கத்தினானே.
இப்போது அவனே இப்படி நடந்துகொண்டது...அதையும் மனைவி பார்த்துவிட்டது..
கல்பனா கண்டிப்பாக வீட்டுக்குத்தான் போயிருப்பாள் என்பதில் சந்தேகம் இல்லை.
அவளிடம் என்ன சொல்வது?
நம்மைப் பற்றி அவள் என்ன நினைத்திருப்பாள்?
என்னைப்பற்றி அவள் மிகவும் கேவலமாக அல்லவா நினைக்க ஆரம்பித்திருப்பாள்?
ஒருவர் மனதில் உயர்ந்த இடத்தில் இருப்பவர் சற்றுக் கீழே இறங்கிவிட்டால் அதன்பிறகு பழைய மதிப்பைப் பெறுவதென்பது எவ்வளவு கடினம் என்பதை அவன் நன்கு தெரிந்துவைத்திருந்தான்.
அதனால்தான் வாழ்வில் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் கவனமாகவே எடுத்துவைத்து வந்தான்.
அடுத்தகணமே அந்த நினைப்பிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டான் அவன்.
“நோ.. நான் இப்படி எல்லாம் துவண்டு போகக் கூடாது. நடந்தது நடந்ததுதான். அதை இனிமேல் மாற்ற முடியாது. ஸோ தெரிந்து செய்தேனோ அல்லது தெரியாமல் செய்தேனோ அதனால் ஏற்படும் விளைவுகளை நான் தான் எதிர்நோக்கி ஆகவேண்டும் .”–என்ற முடிவுக்கு வந்தவனாக காரை செலுத்திக்கொண்டிருந்தான் அவன்.
அவினாசி மேம்பாலத்தில் ஒரு அரைவட்டமடித்த கார் ப்ரூக்பாண்ட் ரோடில் நுழைந்தது. அருகில் இருந்த ரயில்வே ட்ராக்கில் ஏதோ ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் கோயமுத்தூர் ஜன்க்சனில் இருந்து கிளம்பி வடகோவையை நோக்கி விரைந்துகொண்டிருந்தது.
காரைச் செலுத்திக்கொண்டிருந்த திவாகரின் என்ன ஓட்டமோ ரயில்வண்டித்தொடராக நீண்டு கொண்டிருந்தது.
“அது சரி.. இதன் விளைவு எப்படி இருக்கும் என்று கணிக்கவே முடியவில்லையே. கல்பனா நம்மிடம் என்ன கேட்பாள் என்றே கணிக்க முடியவில்லையே. விடையே தெரியாத புதிராக அல்லவா இருக்கிறது .” என்று எண்ணியவன், இதைப் பற்றி நினைக்க ஆரம்பித்தால் நமக்கு மனதில் குழப்பமும், கலவரமும் தான் ஏற்படும். ஆகவே நடப்பது எதுவாக இருந்தாலும் அதை எதிர்கொள்வோம். “என்ற முடிவுடன் எண்ண ஓட்டத்தை தடை செய்துவிட்டு சாலையில் கவனத்தை செலுத்தினான் திவாகர் .
அடுத்த பதினைந்து நிமிடங்களில் கார் அவன் வீட்டை அடைந்தது.
வீட்டு வாசலில் காரை நிறுத்திவிட்டு வேகமாக உள்ளே நுழைந்தான் திவாகர்.
அவளுக்குள் ஏதோ ஒன்று நெருடியது. சற்று நேரத்துக்கு முன்தான் மருமகள் வந்தாள். அவளுடைய முகமே சரியில்லை. கேட்டால் உடம்பு சரியில்லை என்று சொல்லுகிறாள். சரிதான். வயிற்றுப்பிள்ளைக்காரி அப்படித்தான் இருக்கும் என்று நினைத்தோம். இப்பொழுதென்னடாவென்றால் மகனும் வந்திருக்கிறான். இவன் முகமும் சரியில்லையே. ஒருவேளை இவர்களுக்குள் எதாச்சும் பிரச்சினையோ?"
"அது வந்தும்மா.. லேசா தலைவலி.. அதோட பாங்க்குக்கு போகிற வேலை வேற இருந்துச்சு. அப்படியே வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு போலாம்னு வந்தேன்." என்றான் திவாகர்.
"என்னது லேசான தலைவலின்னு வீட்டுக்கு வந்திருக்கியா? 103 டிகிரி காய்ச்சல் இருந்தால்கூட லீவ் போடமாட்டேன்னு ஒடுறவனாச்சே நீ."-என்று தோன்றினாலும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல் "சரி சரி.. கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு போ. நான் வேணா குடிக்க எதாச்சும் தரட்டுமா?" என்று கேட்டால் சொர்ணா.
"அதெல்லாம் ஒண்ணும் வேணாம்மா." என்றவன் "கல்பனா வந்திருக்காளா?" என்று கேட்டான்.
"ஆமா. இப்போ தான் கொஞ்ச நேரம் முன்னாலே வந்தால். மேலுக்கு சரியில்லேன்னு லீவ் போட்டுட்டு வந்திருக்கா. அவ வரப்போறான்னு உனக்கு எப்படி தெரியும்?" - என்று கேட்டாள் சொர்ணா.
கதவை தட்ட கைவைத்தான் அவன். ஆனால் உட்பக்கம் தாழிடாததால் கைவைத்ததுமே கதவு திறந்து கொண்டது.
உள்ளே நுழைந்தான் திவாகர்.
"வாங்க திவா" - என்ற ஒற்றைச்சொல்லால் லேசான புன்னகையுடன் அவனை வரவேற்றாள் கல்பனா.
அந்தப் புன்னகை வழக்கமான புன்னகையாக இல்லாமல் அதில் ஒரு செயற்கை இழையோடுவதாகப் பட்டது திவாகருக்கு.
பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஒருகணம் தவித்த திவாகர் மறுகணமே ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாக, "வந்து.. என்ன கல்பனா? திடீர்னு ஆபீசுக்கு வந்துட்டே. வந்தவ வந்த வேகத்துலேயே திரும்பிட்டியா? நான் பதறிப்போயிட்டேன் தெரியுமா? உன் மொபைலுக்கு ட்ரை பண்ணினேன். பட் அதுவும் சுவிட்ச் ஆப் ஆயிருந்துச்சு. பாங்குக்கு போன் பண்ணினேன். நீ ஒடம்பு சரி இல்லேன்னு லீவ் போட்டுட்டு போயிட்டதா சொன்னாங்க. இங்க வந்து கேட்டா அம்மாவும் அதையே தான் சொல்லுறாங்க. என்ன பண்ணுதும்மா? டாக்டர் கிட்டே போகலாமா?" - வேகமாக இடைவெளி விடாமல் கேள்விகளை அடுக்கினான் திவாகர்.
"அப்பப்பா! இந்த ஆண்களுக்குத்தான் நிலைமையைச் சமாளிக்கவேண்டும் என்று தோன்றிவிட்டால் எப்படியெல்லாம் சரளமாகப் பொய்கள் வருகின்றன? என் மொபைல் போனை நான் சுவிட்ச் ஆப் செய்யவே இல்லையே?" - அவனது படபடப்பையும் தவிப்பையும் பார்த்த கல்பனாவுக்கு ஏனோ தெரியவில்லை அவன் மீது கோபம் வருவதற்கு பதிலாக பரிதாபம் தான் ஏற்பட்டது.
தப்பு செய்து கையும் களவுமாக மாட்டிக்கொண்ட குழந்தை அம்மாவுக்கு ஐஸ் வைக்குமே அதைப்போலத்தான் உணர்ந்தாள் கல்பனா.
"டாக்டர் கிட்டே எல்லாம் ஒண்ணும் போகவேண்டாம் திவா. இப்போ இப்படித்தான் இருக்கும். கவலைப்படவேண்டாம்." - என்று பட்டுக் கத்தரித்தார்போல பேசினாள் கல்பனா.
மேலே என்ன பேசுவது என்று புரியாமல் ஒருகணம் தடுமாறினான் திவாகர்.
அவளாகக் கேட்கட்டுமே என்று அவனும், அவனாகச் சொல்லட்டுமே என்று அவளும் மேலே பேசாமல் காத்திருந்தனர்.
நிமிடங்கள் நகர்ந்துகொண்டிருந்தன. மௌனம் அவர்களுக்கு இடையே ஆட்சி செய்துகொண்டிருந்தது.
ஏதோ ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தவனாக திவாகரே பேச்சை ஆரம்பித்தான்.
"கல்பனா உன் கிட்டே மனசு விட்டு சில விஷயங்களை நான் பேசியே ஆகணும். அதுக்காகத்தான் வந்திருக்கேன்." - என்ற பீடிகையுடன் சீரியசாகப் பேச்சை ஆரம்பித்தான் திவாகர்.
"இன்னிக்கு ஆபீசுக்கு நீ வந்தப்போ நடந்த சம்பவத்தை பற்றித்தான். ஒருவேளை இன்னிக்கு நீ வராமலே போயிருந்தால் கூட உன்கிட்டே மறைத்திருக்கலாம். அதுவும் கூட எதற்காகத் தெரியுமா?
உன் மனசுலே கீழிறங்கி இருக்கிற என்னோட இமேஜைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அல்ல. உனக்கு எந்த விதமான மனச் சங்கடமோ மனவேதனையோ ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான். என்னடா இவன் இப்படி பேசறானேன்னு நீ நினைக்கலாம். ஆனால் இட் இஸ் ட்ரூ. - என்று பேசிக்கொண்டே போன திவாகர் சற்று நிறுத்தி தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டான்.
"எஸ் கல்பனா. நான் ஒண்ணும் தப்பே செய்யாதவன் என்று என்னை சொல்லிக்கொள்பவன் அல்ல. அது உனக்கே தெரியும். அதே சமயம் அந்த தவறு வெளிப்பட்டுவிட்டால் அதை எப்பாடியாவது சமாளித்து சப்பைக்கட்டு கட்டி என்னை காப்பாற்றிக்கொள்ள நினைப்பவனும் அல்ல. அதன் தவறை ஒத்துக்கொண்டு அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ளவும் தயங்க மாட்டேன். அந்த வகையில் உன் முன்னால் நான் தவறிழைத்தவனாக நின்று கொண்டிருக்கிறேன். நீ உன் மனதில் என்ன நினைத்துக்கொண்டிருக்கிறாயோ அது இதுவரை எனக்கு தெரியாது. ஆனால் உன் முடிவைச் சொல்வதற்கு முன்னால் சில விஷயங்களை நான் உனக்கு தெளிவு படுத்தியே ஆகவேண்டும்." என்றான் திவாகர் கம்பீரமாக.
மறைத்திருந்த மேகக்கூட்டம் பளிச்சென்று விலகியபிறகு ஒளிரும் நிலவின் பிரகாசம் போல ஒரு வெளிச்சம் கல்பனாவின் மனதிற்குள் மின்னலாக வெட்டி ஒளிர்ந்தது.
"இதுதான் என் திவா. நான் தப்பா நெனைச்சுக்குவேன்னு பயப்படலை. நான் பார்த்திருக்காவிட்டால் அதை மறைக்கத்தான் செய்திருப்பேன் என்று வெளிப்படையாகப் பேசுகிறார். நான் கத்தி ஆர்ப்பாட்டம் செய்வேனோ என்று பயந்துகொண்டு என்னையும் ஏமாற்றி தன்னையும் ஏமாற்றிக்கொள்ள இவர் நினைக்கவில்லையே. போலித்தனமாக நடந்துகொண்டு என்னை ஏமாற்ற நினைக்கவில்லையே. " - என்று தோன்றியது அவளுக்கு.
"ஒரு நிமிஷம் திவா. நீங்க பேசினதுலே ஒரு சின்ன திருத்தம். என்னவோ என் மனசுலே இருந்து நீங்க கீழே இறங்கிட்டதா நான் நினைக்கிற மாதிரி நீங்க பேசுறீங்களே. இந்த நிமிஷம் வரைக்கும் நான் உங்களை என் மனசுலே இருக்குற அந்த ஒசந்த பீடத்துலே இருந்து கீழே இறக்கவே இல்லை. ஆபீஸ்லே அந்த கதிரவனை நீங்க முத்தமிட்டதைப் பார்த்ததும் ஒரு கணம் நான் அதிர்ந்து போனது நிஜம் தான். அதுக்காக உங்களை மட்டமா எடை போடவில்லை நான். எனக்கு முதலில் நான் எமாற்றப்பட்டுவிட்டேனோ என்று ஆத்திரமே வந்தது. ஆனால் நிதானமாக யோசித்துப் பார்த்தேன். கடந்த சில நாட்களாக நீங்க எதையோ மனசுலே வச்சுகிட்டு அவஸ்தைப் படுற மாதிரி எனக்கு தோன்றியது. நேற்று கூட தூக்கத்துலே நீங்க "என் கல்பனாவுக்கு என்னாலே துரோகம் செய்ய முடியாது. அதுக்கு என்னை தூண்டாதீங்க கதிரவன்" என்று கூட புலம்பினீங்க. அதையும் இன்னிக்கு நடந்த சம்பவத்தையும் நினைத்துப்பார்க்கிறப்போ தான் தப்பு உங்க மேலே முழுமையா இல்லேன்னு புரிந்தது. அதனாலே நீங்க குற்ற உணர்ச்சியிலே தலை குனிய வேண்டாம் திவா. நீங்க என் திவா. என்னோட திவா. உங்களை எந்த சந்தர்ப்பத்துலேயும் எதுக்காகவும் யார் முன்னாலேயும் ஏன் என் முன்னாலேயே கூட தலை குனிய விடமாட்டேன் நான்." - என்றால் கல்பனா அழுத்தமாக.
அப்படியே அந்தரத்தில் பறப்பது போல இருந்தது திவாகருக்கு.
"கல்பனா? நீ சொல்வதெல்லாம் நிஜமா? என் தவறை நீ மன்னித்துவிட்டாயா?" - என்றான் திவாகர் பரபரப்பாக.
"மன்னிப்பதற்கு இதுலே என்ன இருக்கு திவா. இனிமேல் எனக்கு தேவை எல்லாம் ஒண்ணே ஒண்ணுதான். ஆபீஸ்லே அந்த கதிரவன் உங்களை எனக்கு துரோகம் செய்யத் தூண்டும் அளவுக்கு என்ன நடக்கிறது? நீங்க ரெண்டு நாளா மனசு நிம்மதி இல்லாம தவிச்சீங்களே அந்த அளவுக்கு என்ன நடந்தது? அதை மட்டும் சொல்லுங்க திவா." என்று கேட்டாள் கல்பனா.
"கல்பனா..அதுவந்து.. அது.. வேண்டாம் கல்பனா. இப்போ தான் எல்லாமே தெளிவாகிருச்சே. இனியும் அதை பற்றி கேட்டு மறுபடி மறுபடி நாம குழப்பிக்கொள்ளவேண்டாம். லீவ் இட் கல்பனா." என்றான் திவாகர்.
அவன் என்னவென்று சொல்லமுடியும். அதைச் சொல்வதென்றால் தற்போது தன் மனதில் கதிரவனிடம் ஏற்பட்டிருக்கும் காதலைப் பற்றியும் அல்லவா சொல்லியாக வேண்டும்.?
அதனால் சாமர்த்தியமாக தவிர்க்கப் பார்த்தான் திவாகர்.
அவனையே ஒரு கணம் அழுத்தமாகப் பார்த்தாள் கல்பனா.
"என்ன தெளிவாகிவிட்டது? பிரச்சினை இத்தோடு முடிந்துவிட்டதா என்ன? நீங்க ஏதோ சொல்லிட்டீங்க நான் ஏதோ கேட்டுகிட்டேன் என்பதற்காக எல்லாமே முடித்துவிட்டதாக ஆகிவிடுமா திவாகர். மறுபடி இப்படி எல்லாம் நடக்காது என்பதற்கு என்ன உத்திரவாதம். ஏதோ நான் பார்த்ததால் பரவாயில்லை. தாலி கட்டிய தோஷத்திற்காக வெளியே தெரிஞ்சா அசிங்கம் என்று இருக்கலாம். ஆனால் வேறு யாராவது பார்த்திருந்தால் என்னவாகி இருக்கும் என்பதை நீங்கள் யோசித்துப் பார்க்கவில்லையா.? அதுபோல இனிமேலும் நீங்க நடந்துக்க மாட்டீங்க என்பதற்கு என்ன உத்திரவாதம் திவா?" - கல்பனாவின் குரல் உயர்ந்தது.
கல்பனா. என் தவறை நான் நன்றாக உணர்ந்துவிட்டேன். அதன் பின்விளைவுகளையும் நான் புரிந்துகொண்டுவிட்டேன். என்னால் ஒன்றை நிச்சயமாகச் சொல்லமுடியும். இனிமேல் இதுபோன்ற ஒரு சம்பவம் ஆபீசில் நடக்காது. நடக்கவே நடக்காது கல்பனா." - என்றான் திவாகர்.
"உறுதியாச் சொல்கிறீர்களா திவா?" - என்று ஆணித்தரமாகக் கேட்டாள் கல்பனா.
"ஷ்யூர் கல்பனா." என்றான் திவாகர் ஆணித்தரமாக.
"இதை நான் நம்பவேண்டும் என்றால் நீங்கள் ஒன்று செய்யவேண்டும். செய்வீர்களா. இதைக்கூட என் நம்பிக்கைக்காக நான் கேட்கவில்லை திவா. உங்கள் பெயர் எந்த விதத்திலும் கெட்டுவிடக் கூடாதே என்பதற்காகத்தான் கேட்கிறேன்." என்றாள் கல்பனா தீவிரமாக.
"என்ன செய்யவேண்டும் கல்பனா? சொல்லு செய்கிறேன். " என்று பரபரத்தான் திவாகர்.
"நிச்சயமாகச் செய்வீர்களா?" என்று மறுபடியும் கேட்டாள் கல்பனா.
கதை கொஞ்சம் த்ரில்லாகவும் வேகமாகவும் செல்கிறது....
சில விஷயங்கள் நெருடினாலும் இது கதை என்பதால் எழுத்தாளரே அதனை எப்படி சரி செய்வது என யோசிக்கட்டும்.
ஆனா ஒரு விஷயம் ரொம்ப புதுசா இருக்கு, எல்லோரும் காதல் கதைகள் சொல்லி கொண்டு இருக்க உங்கள் கதை களம் வேறு.....
ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்காக.....
கதை நகர்வு வழக்கம் போல் அருமை...ஆனால் நீங்கள் என்ன சமாதானமாக எழுதினாலும் சிவாஜி காலகட்டத்தில் உள்ள கதையில் அவரை ஞாயப்படுத்தி எடுக்கப்பட்ட காட்சிகள் போலவே திவாகர் பற்றி நீங்கள் சொல்வது இருக்கிறது....இப்பொழுது உள்ள அதுவும் வேலைக்கு செல்லும் பெண்களின் மனநிலை கல்பனாவின் எண்ணம் போல் இருக்காது...so கொஞ்சம் யதார்த்தம் குறைவுதான்....sorry if I hurt u...