‘துர்காபுரி’ என்றால் “ஊடுறுவ முடியாத அரணை உடைய தேசம்” என்று பொருள். அந்தப் பெயருக்கு மிகவே பொருத்தமாய், மிக்க பாதுகாப்பான புவியியல் அம்சங்களுடன் இருந்தது அந்த நாடு. மறையில் கூறப்பட்டுள்ள அரணின் அம்சங்கள் யாவும் அமையப் பெற்று, மூன்று புறம் மலையாலும், ஒருபுறம் கடலாலும் சூழப்பட்டிருந்தது. அந்த நாட்டினுள் செல்லும் ஒரே பாதை, “மேலவாயில்” என்று அழைக்கப்பட்ட, இரண்டு மலைகளின் ஊடேயிருந்த ஒரு கணவாய். அங்குதான் நாம் இப்பொழுது நின்றுகொண்டு இருக்கிறோம்.
பத்து தேர்கள் இணையாகப் பயணம் செய்யும் அளவுக்கு அகலம் கொண்ட இருவழிப் பாதை, அறுங்கோண வடிவ கற்கள் பதிக்கப்பட்டு, வெளிப்புறம் நோக்கி இலேசான சரிவுடன், அமைதியான நீர்ப்பரப்பைத் தோற்கடிக்கும் சமதளமாய் இருந்தது. அந்த இராஜபாட்டைக்கு கிரீடம் வைத்தாற்போல, அம்பாரியுடம் அதன்மேல் கொடியும் தாங்கிய யானைகள் கடக்கும் அளவுக்கு உயரமாய், அழகிய வேலைப்பாடுகளுடன் நின்றது அந்தத் தோரண வாயில். தோரண வாயிலின் முன்பு, வீரர்களுடன் நூறு குதிரைகளும், ஆயிரம் காலாள் வீரர்களும் கொண்ட ஒரு சிறுபடை நின்றுகொண்டிருந்தது.
அந்தப் படையின் முன்புறம் அவற்றினை தலைமை தாங்கி, மூன்று புரவிகள் நின்றன. நடுவே நின்ற வெண்புரவியின் மீது, அகன்ற மார்பின் மீது நீலக்கற்கள் கொண்ட ஒரு ஆரமும், வலிமையான புஜங்களின் மீது, பொன்னாலான ஒரு காப்பையும் அணிந்த கம்பீராமான ஒரு மத்திம வயது ஆள் இருந்தார். அவருக்கு வலப்புறத்தில் மற்றொரு வெண்புரவியில், தேவாதி தேவர்களும் பார்த்து பொறமை கொள்ளும்படியான அழகுடனும், அமைதியும் தீர்க்கமும் ஒருங்கே அமைந்த வட்ட முகத்துடனும் கூடிய ஒரு இளைஞன் அமர்ந்திருந்தான். அவனும் புஜங்களில் பொன் காப்பும், கழுத்தில் மரகதக் கற்களாலான ஒரு மாலையும் அணிந்திருந்தான். இடது ஓரத்தில் இருந்த, வெள்ளிக்காப்பும், முத்துமாலையும் அணிந்திருந்த இளைஞனை நோக்கி, “தூதுவரே.. இவர்கள் போர் வீரர்கள் அல்லவே.. எங்கள் மெய்க்காவல் படையினர்தானே.. இவர்களையும் ஆயுதங்களை ஒப்படைக்கச் சொல்வது எதற்காக?” என்று கேட்டான்.
மத்தியில் இருக்கும் அந்த நபர், “மகனே.. பதற்றப்படாதே. இது இவர்களின் சம்பிரதாயம். நாம் இதை மீறலாகாது. தூதுவரே.. நீங்கள் வாயில்பிரதானியிடம் சென்று ஆயுதங்களை வரன்முறைப்படுத்தி ஒப்படைக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
“நன்றி வேந்தே!” என்று கூறிவிட்டு, அருகிலிருந்த வாயிற்கோட்டையை நோக்கிச் சென்றார் அந்தத் தூதுவர்.
அவர் கண்ணிலிருந்து மறைந்ததும், “தந்தையே, எல்லா ஆயுதங்களையும் ஒப்படைப்பது சரியா? இதற்குப் பின் ஏதும் சூழ்ச்சி இருக்குமோ?” என்றான் அந்த இளைஞன்.
“இல்லை மகனே.. இந்தத் தோரணவாயிலை ஆயுதத்துடன் கடக்கலாகாது. இது புனிதமானது. மீறிக் கடப்பவர்கள், மாய்ந்துபோவார்கள் என்பது ஐதீகம்”
“இது மூடநம்பிக்கையாகத் தெரிகிறது அப்பா”
“மூடநம்பிக்கையா இல்லை உண்மையா என்பதை நீயே விரைவில் அறிந்து கொள்வாய். அதுவும் போக, நம் வீரர்களுக்குத் தேவையான ஆயுதங்களை தோரண வாயில் தாண்டியதும் தரிவிக்க ஏற்பாடு செய்திருக்கிறேன்”
இதற்குள் தூதுவர் திரும்பிவிட, அவர்கள் அமைதியாகினர். தூதுவன், “அரசே, ஆயுதங்களை ஒப்படைக்க ஏற்பாடு செய்தாயிற்று” என்றார். அரசரும், இளவரசரும் முன்னே செல்ல, அந்த மெய்க்காவலர் படை வீரர்கள் அவர்களைத் தொடர்ந்து வாயிற்கோட்டை நோக்கிச் சென்றனர். வாயிற்கோட்டையில், அரசர் உட்பட அனைவரின் ஆயுதங்களும் வகையும் எண்ணமும் குறிக்கப்பட்டு ஒரு அறையில் வைத்து இரண்டு பூட்டுகள் கொண்டு பூட்டப்பட்டது. வாயிற்பிரதானி ஒரு சாவியை அரசரிடம் ஒப்படைத்துவிட்டு, மற்றொரு சாவியை தன்வசம் வைத்துக்கொண்டார்.
வெளியேறிய பின், இளவரசன் தன் தந்தையைப் பார்த்து, “இந்த வாயில்பிரதானி, அண்டை நாட்டின் அரசன் என்று கூட பாராமல் உங்கள் ஆயுதங்களையும் பறிமுதல் செய்துவிட்டாரே? துர்காபுரியின் முதன்மை மந்திரி, உங்கள் ஆயுதத்தையாவது விட்டுவைக்க உத்தரவிட்டு இருக்கலாம்” என்றான்.
“அவர் எங்கே பறிமுதல் செய்தார்? நானாகத் தானே ஒப்படைத்தேன்.. இந்த விதியில் யாருக்கும் விலக்கில்லை. அதுபோக வாயிற்பிரதானிக்கு உத்தரவிடும் உரிமை இந்நாட்டு மன்னருக்கே கிடையாது. அவரின் அனுமதி இல்லாமல் மன்னரே ஆயினும் எதையும் இந்த வாயிலைத் தாண்டி கொண்டுசெல்ல முடியாது.”
“என்னவோ.. எல்லாம் விசித்திரமாயிருக்கிறது”
“பொறு மகனே.. இது இப்போது தான் துவங்கி இருக்கிறது”
இன்னும் துர்காபுரி இளவரசனுக்கும் நமக்குமாய் ஒளித்துவைத்திருக்கும் விசித்திரங்களைக் காண நாமும் அவர்களுடன் அந்த வாயிலைக் கடந்து பின் தொடர்வோம்.. நீங்களும் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பின்னே வாருங்கள். நான் முன்னே அவர்களுடன் செல்கிறேன்…
யோவ் ஜீனி... உணவு பாதுகாப்பு மசோதாவுக்கும் உங்க கதைக்கும் எனி கனெக்ஷன்????? ராஜதந்திரங்களை கரைத்துக் குடித்திருப்பீர் என்றேத் தோன்றுகிறது... பை தி வே இளஞ்சாமை, செவ்வரகெல்லாம் என்னன்னு சொல்லுங்க... ப்ளீஸ்..
இது மாதிரி covert operations மூலமா ஒரு நாட்ட பிடிக்கிற idea is கடைந்தெடுத்த சாணக்கியத்தனம்....! I hate that "King Dad"... Seems... he is misleading his son...
(Man.. This sellinam is damn sexy... am just wondering... how come I missed it.. in spite of seeing Mr Muthu Nedumaran's interview, a couple of times in our local Tamil channel.. Whole-hearted thanks to you)
-- Edited by Rotheiss on Monday 12th of August 2013 10:07:31 PM
கதையை மேற்கொண்டு தொடரும் முன்னர், சில அறிமுகங்கள் தேவைப்படுகின்றன. அந்த வெண்புரவியில் வந்த இருவரைத் தான் சொல்கிறேன். அந்த வயதான இளைஞர், ‘சுபர்ணராஷ்டிரம்’ தேசத்தின் அரசர், விதுரசேனன். சிறந்த மதியூகி, மிகச் சிறந்த வீரர். இரண்டாமவர், அவரது ஒரே புதல்வன், இளவரசர் அமரகீர்த்தி. தந்தையின் வீரத்தை முழுதாகவும் விவேகத்தை ஓரளவும் பெற்றவர். அவர்கள் இருவரும் ஒரு முக்கியமான இராஜாங்க விஷயத்தை விவாதிக்க அவர்களின் அண்டை நாடான துர்காபுரிக்கு வந்துள்ளனர்.
தோரண வாயிலைத் தாண்டி, ஒரு காத தூரம் வந்ததும், ஸ்ரீதுவார் என்ற ஒரு அழகிய, பிரம்மாண்டமான நகரம் இருக்கிறது. பெயருக்கேற்றார் போல, ஒவ்வொரு அங்குலமும் செல்வத்தால் நிரம்பி வழியும் செல்வநகரம் அது. அங்குதான் நம் அரச விருந்தினர் இருக்கின்றனர். காட்டு வழியில் நீண்ட பிரயாணம் செய்த களைப்பு நீங்க, அன்று ஒரு நாள் அங்கு தங்கி இளைப்பறிவிட்டு, பின் பயணத்தைத் தொடங்கத் திட்டமிடப்பட்டு இருந்தது.
அரசரும் இளவரசனும் மதியம் உணவருந்த அமர்ந்திருந்தனர். துர்காபுரியில் மட்டுமே காணக்கூடிய, இராஜாலம் மரத்தின் வட்ட வடிவ இலைகளில் விருந்து பரிமாறப்பட்டது. இராஜ விருந்தை உண்ட பின், ஓய்வறைக்கு இருவரும் வந்தனர்.
“நமக்காகவேண்டி, நம் நாட்டில் விளையும் இளஞ்சாமை தானியத்தைத் தருவித்து சமைத்திருக்கிறார்கள். அருமையான விருந்தோம்பல்” என்றான் இளவரசன். மன்னர் விதுரசேனர் கிண்டலாகப் புன்னகைத்தார்.
“என்ன அப்பா.. உங்கள் புன்னகையே சரியில்லையே.. உண்மை என்ன?”
“நமக்காக எதுவும் தருவிக்கப்படவில்லை அமரகீர்த்தி.. இந்த நாட்டில் கடந்த 10 ஆண்டுகளாக எல்லாரும் இளஞ்சாமை உணவைத்தான் உண்ணுகிறார்கள்”
“என்ன சொல்கிறீர்கள் தந்தையே.. துர்காபுரியின் செவ்வரகு தானியம் சுபர்ணாஷ்டிரத்தில் கூட பிரசித்தி பெற்றதாயிற்றே.. இவர்களின் பாரம்பரிய உணவை விடுத்து இவர்கள் ஏன் வேறொரு தானியத்திற்கு மாறினர்?”
“நாம் இங்கு எதற்காக வந்திருக்கிறோம் என்று உனக்குத் தெரியுமல்லவா?”
“நாம் ஏற்றுமதி செய்யும் இளஞ்சாமையில் விலை குறித்து ஒப்பந்தம் செய்வதற்கு”
“மன்னரே நெரடியாக வந்து ஒப்பந்தம் குறித்து விவாதிக்க வந்திருப்பது உனக்கு வேடிக்கையாய் இல்லையா?”
“நீங்கள் எதைச் செய்தாலும் ஒரு காரணம் இருக்கும் என்று நினைத்தேன்”
“எல்லாம் காரணமாகத் தான். சொல்கிறேன். பொறுமையாக்க் கேள். இது இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. இருபது வருடங்களாக இதைத் திட்டமிட்டு வருகிறேன். இருபது வருடங்களுக்கு முன்பு வரை, இவர்கள் இளஞ்சாமையைப் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். செவ்வரகு ஏற்றுமதியை இவர்கள் துவக்கும் வரை.
நான் தான் செவ்வரகை இங்குள்ள உள்ளூர் வணிகர்களிடம் இருந்து சந்தை விலையைப் போல இரண்டு மடங்கு அதிக விலை கொடுத்து வாங்க ஏற்பாடு செய்தேன். செவ்வரகு நம் நாட்டுக்கு பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டதால் உள்நாட்டு சந்தையில் அதன் விலை படிப்படியாக உயர்ந்து வந்தது. அதற்கு மாற்றாக, இளஞ்சாமையை அதைவிட குறைவான விலைக்கு இங்கு இறக்குமதி செய்யப்பட்டது. மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இளஞ்சாமைக்கு மாற ஆரம்பித்தனர். அதோடு வருடாவருடம் செவ்வரகு வாங்கும் விலையை ஏற்றி, இளஞ்சாமை விற்கும் விலையை குறைத்துக்கொண்டே வந்தேன். இப்போது இன்னாட்டில் மிகப்பெரிய செல்வந்தர்கள் மட்டுமே செவ்வரகை உண்ணுகின்றனர். சாதாரண மக்களின் உணவு இளஞ்சாமை தான்.
இந்த வருடம் இளஞ்சாமையின் விலை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டது. அதனால்தான் ஒப்பந்தம் செய்ய அழைத்திருக்கிறார்கள்”
“ஆனால் இதெல்லாம் எதற்காக?”
“எதற்காக என்றா கேட்கிறாய்? இந்த நாட்டைக் கைப்பற்றத்தான்”
“அதற்கேன் தந்தையே இந்தப் பகீரத பிரயத்தனம்? நேரடியாகப் படையெடுத்து வந்திருக்கலாமே.. நம்மிடம் இல்லாத படைபலமா? இங்குள்ள வீரர்களின் விரல்களின் எண்ணிக்கையை விட, நம் வீரர்களின் தலைகளின் எண்ணிக்கை அதிகமாயிற்றே.. கால்விரல்களையும் சேர்த்தால் கூட…”
“நான் தான் ஏற்கனவே கூறினேனே.. துர்காபுரிக்குள் ஆயுதத்துடன் நுழைவது சாத்தியமில்லை என்று”
“ஒரு மூட நம்பிக்கைகாகவா இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறீர்கள்?”
“அது மூட நம்பிக்கையா இல்லை உண்மையா என்பதை இன்று மாலை தெரிந்துகொள்வாய் அமரகீர்த்தி”
“சரி. அப்படியே வைத்துக்கொண்டாலும், நாம் தானிய விலையை உயர்த்துவதால் அவர்கள் பணிந்து விடுவார்களா? நம்மைவிட குறைவான விலைக்கு விற்கும் தேசத்திடம் வாங்க முற்பட்டால்?”
“இப்போதைக்கு துர்காபுரியுடன் வாணிகத்தில் ஈடுபடும் ஒரே நாடு நாம்தான். அவர்களுக்கு இருக்கும் ஒரே அண்டை நாடும் நாம்தான். நம்மை விட்டு வேறொரு நாட்டிடம் வாங்க முயன்றாலும் அதை நம் நாட்டின் வழியேதான் கொண்டுவர வேண்டும். அதை நான் அனுமதிப்பேன் என்றா நினைக்கிறாய்?”
“சரி. அவர்கள் மீண்டும் செவ்வரகுக்கே மாறிவிட்டால்? அதுதான் அவர்கள் நாட்டிலேயே போதுமான அளவு விளைகிறதே.. நம்மிடம் அதை விற்கத் தடை செய்துவிட்டால்? அப்போது அவர்களுக்கு உள்ளூர் சந்தையில் குறைந்த் விலைக்கு அது கிடைக்குமே..”
“செவ்வரகு கடினமான தானியம். எளிதில் செரிமானம் ஆகாது. நீண்ட காலமாக இளஞ்சாமை போன்ற மெலிதான தனியத்தை உண்ட அவர்களால் எளிதாக செவ்வரகுக்கு மாற முடியாது”
“இது மிகவும் சிக்கலான தீர்வாக இருக்கிறது தந்தையே”
“இதில் ஒரு சிக்கலும் இல்லை மகனே.. படையெடுப்பின் முதல் படி என்ன?”
“முற்றுகை”
“அதைத்தான் நாம் செய்துகொண்டு இருக்கிறோம். துர்காபுரி நாடும் ஒரு வலிமையான கோட்டையைப் போலத்தான். அதைகைப்பற்ற முற்றுகை இட்டிருக்கிறோம். முற்றுகையிடப்பட்ட கோட்டை எதனால் வீழும்?”
“கோட்டைப்பாதுகாப்பு தகர்ந்தாலோ அல்லது உள்ளிருக்கும் குடிகளின் வாழ்வாதாரம் அழிந்து, மக்கள் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டாலோ மட்டுமே கோட்டை வீழும்”
“அதேதான். துர்காபுரியின் பாதுகாப்பு தகர்க்க முடியாதது. அதனால்தான் நாம் இரண்டாவது வழிமுறையைப் பின்பற்றுகிறோம்”
“அப்படியானால் ஒரு யுத்தத்தைத் துவங்கிவைக்கத்தான் நாம் இங்கு வந்திருக்கிறோமா?”
“இல்லை மகனே.. இருபது ஆண்டுகளாக நடக்கும் நிழல் யுத்தத்தை முடித்து வைக்கத்தான் உன்னை அழைத்து வந்திருக்கிறேன். நீ சென்று சிறிது ஓய்வெடு. மாலை உனக்கான ஆச்சரியம் காத்திருக்கிறது.”
குழப்பம் அறிவை முற்றுகையட, இளவரசன் அவ்விடம் விட்டு அகன்றான். இளவரசனைக் கொண்டு எளிதாய் இந்த நாட்டை அடைய விதுரசேனன் கணக்கிட்டிருக்க, விதி வேறுவிதமாய் இவற்றை முடிவுக்குக் கொண்டுவர கணக்கிட்டிருந்தது. இப்போதைக்கு நம் இளவரசன் மாலையின் ஆச்சரியத்திற்காகக் காத்திருக்கிறான். அவனுடன் நாமும் சிறிது காத்திருப்போம்.
ரொம்ப வித்தியாசமான போர் முறை..... வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகளில் நோயை பரப்பி மருந்து விற்று பணம் ஈட்டுவதை போல..... நீங்க சொன்ன அந்த திணை பயிர்கள் எல்லாம் நிஜமாகவே உள்ளதா? அல்லது, கற்பனையா?....
போர் புரிந்து அடக்க முடிந்த நாட்டில் ஏன் பொருளாதார தடை?... இளவரசனை போல எனக்கும் அதே கேள்வி தான்... இன்னொரு சந்தேகம்....
சில வருட உணவு பழக்கம் மனித சீரண சக்தியை மாற்றிவிடுமா என்ன?....
ஆயுதம் கொண்டு நான் வரணும்னு இல்ல... சுண்டு விரல் நகத்தாலே கழுத்தை பதம் பார்க்கும் வித்தை எங்களுக்கு தெரியுமப்பா... எங்கள் தலை சுஜாதா "நைலான் கயிற்றால்" பல கொலைகளை நடத்தி காட்டியவர்.... அவர் வழிதோன்றல்களுக்கு ஆயுதம் வேண்டுமா என்ன?... ஹ ஹ ஹா ஹா.... (வில்லன் சிரிப்பு)
-- Edited by msvijay on Tuesday 13th of August 2013 11:48:18 AM
@rotheiss
இங்க சர்வதேச பாலிடிக்ஸ் பத்தி பீசிட்டு இருக்கும்போது நீங்க ஏன் இன்டர்னல் பாலிடிக்ஸ்ல கோர்த்து விடுறீங்க? பை-த-சேம்-பை அந்த தானியம் எல்லாம் கற்பனை தான்..
@justforfun
நன்றி நண்பா..
@FRIDGER
இது சரித்திரக் கதை இல்லை நண்பரே.. கற்பனைக் கதை.. Fantasy.. இனிமேதான் Fantasy elements எல்லாம் வரப்போகின்றன...
உங்க வாழ்த்துக்கு ரொம்ப நன்றி நண்பரே..
@msvijay
//போர் புரிந்து அடக்க முடிந்த நாட்டில் ஏன் பொருளாதார தடை?... இளவரசனை போல எனக்கும் அதே கேள்வி தான்...//
உங்க கேள்விக்கு இந்த பதிவில் விடை கிடைக்கும்னு நினைக்கறேன்..
//சில வருட உணவு பழக்கம் மனித சீரண சக்தியை மாற்றிவிடுமா என்ன?...//
டாக்டர் சார்.. இப்படியெல்லாம் கேட்டா நாங்க எங்க போறது.. கொஞ்சம் நம்புங்க பாஸ்.. (நீங்க அரிசிச் சாதம் சாப்பிடுற அளவுக்கு செவ்வரிசி, வரகரிசி, குதிரைவாலி சாதம் எல்லாம் சாப்பிட முடியுதான்னு பாருங்க. அப்ப தெரியும். அதுவும் நாம சாப்பிட்டு வந்த தானியங்கள் தானே..)
@shivam
காத்திருப்புக்கு நன்றி நண்பா. இதோ அடுத்த பதிப்பு....
@rajkutty kathalan
நான் சொல்ல வந்த கருத்த நீங்கதான் சரியா புரிஞ்சுக்கிட்டு இருக்கீங்க.. மிக்க மகிழ்ச்சி.
அந்த மரம் கற்பனையானது தான்.
வாழ்த்துக்கு நன்றி நண்பா..
சூரியன் ஸ்ரீதுவாரிடம் பிரிவுபச்சாரம் நடத்திக்கொண்டிருந்த நேரத்தில், விதுரசேனனும், அமரகீர்த்தியும் ஒரு சிறிய பரிவாரத்துடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அரச அடையாளங்கள் எதுவும் இல்லாமல், முக்கிய மெய்க்காவல் வீரர்கள் மட்டும் பின்தொடர, அந்த செல்வநகரின் ஆடம்பரமான வீதிகளின் அழகையும் பிரம்மாண்டத்தையும் இரசித்தவாறே சென்றனர்.
அவர்கள் சென்ற வீதி, அதைவிட அகலமான ஒரு இராஜவீதியில் சென்று முடிந்தது. அந்தத் திருப்பத்தில் இடதுபுறம் திரும்பி நிமிர்ந்து பார்த்த அமரகீர்த்தி, தான் கண்ட காட்சியால் ஒரு நிமிடம் உறைந்து நின்றுவிட்டான்.
அவன் முன்னே, ஒரு நூறடி தூரத்தில், அவன் இதுநாள் வரை கதைகளில் மட்டுமே கேட்டறிந்த யாழிக் கோயில் இருந்தது. செவிவழிக் கதைகளாக இதுவரை இக்கோயிலைப் பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கிறான். அவற்றை எல்லாம் கட்டுக்கதை என்று நம்பிவந்தான். ஆனால், கதைகளில் கேட்டதைவிட இந்தக் கோயில் பன்மடங்கு அழகாக இருந்தது.
அதை நேரில் பார்க்க இயலாத வாசகர்களுக்காக, அதைப்பற்றி நான் கூறுகிறேன். அது ஒரு வட்ட வடிவமான கோயில். வட்டத்தின் விளிம்பில், சீரான இடைவெளியில், பன்னிரண்டு தூண்கள் இருந்தன. ஒவ்வொன்றும் பன்னிரண்டு அடி உயரமுள்ள தங்கத் தூண்கள். அந்தத் தூண்கள் முழுவதும், மிக நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளாலும், விலையுயர்ந்த இரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கலையம்சம் பொருந்திய மொட்டைத் தூண்கள். ஆம். அந்தக் கோயிலுக்குக் கூரை இல்லை.
அந்த வட்டவடிவ தரை முழுதும் பொன்னாலும் மணிகளாலும் வேயப்பட்டிருந்தது. ஒரு அரைவட்டப் பகுதி சமதளமாய், வழிபடுப்வர்கள் நிற்பதற்கேற்ப அமைந்திருந்தது. மற்றோரு பகுதி, பன்னிரு படிகள் கொண்ட உயர்த்தப்பட்ட மேடையாக இருந்தது. சிறிதும் பெரிதுமான நூற்றுக்கணக்கான சுடர் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, மண்ணில் இறங்கி வந்த தேவலோகம் போல காட்சியளித்தது.
“அப்பா.. நான் காண்பது உண்மைதானா? இது யாழிக்கோயிலா? அப்படியானால்..” என்று அமரகீர்த்தி கேட்டுக்கொண்டிருக்கும்போதே இடைமறித்த விதுரசேனன், “அடடா.. பூஜை நேரமாகிவிட்டது போல இருக்கிறதே.. வேகமாக நட.. போகலாம்” என்று சொல்லிக்கொண்டே ஓடாத குறையாக நடக்கத் தொடங்கினார். அவரைத் தொடர வேண்டி இளவரசனும் விரைந்து செல்ல வேண்டியிருந்தது.
இருவரும் அந்தத் தங்கத் தூண்களைத் தாண்டி கோவிலின் உள்ளே நுழைந்தனர். கோயிலினுள் மிகக் குறைந்த கூட்டமே இருந்தது. அவர்களைப் பொறுத்தவரை, இது ஆயிரம் வருடங்களாக நடைபெறும் வழக்கமான ஒரு சடங்கு. ஆனால் இளவரசன் இவற்றை எல்லாம் அதிசயமாகப் பார்த்தான். அவன் இதுவரை கட்டுக்கதை என்று நம்பிவந்தது இப்போது அவன் கண்முன்னே நிஜமாகிக் கொண்டிருக்கிறது.
சூரியன் மெல்ல தொடுவானத்தில் இறங்கிக்கொண்டிருந்தது. பீடத்தில் நின்றிருந்த தலைமை அறங்காவலர், மேற்கு திசையை நோக்கி, எதையோ எதிர்நோக்கிக் காத்திருப்பவர் போல இருந்தது. எனவே இளவரசனும் அந்த திசையை நோக்கலானான். அங்கே, ஒரு வளர்ந்த யானையை விடப் பெரிய உடலையும், அதற்கேற்ற சிறகுகளும் உடையதாய், வானை ஆக்கிரமித்தபடி பறந்துவந்தது அந்தப் பறவை. அந்தக் கோயிலை நோக்கிவந்து, அந்த பீடத்தில் நின்றது. பதினாறு அடி மதிக்கத்தக்க உயரமும், சிங்கம் போன்ற உடலமைப்பும், முதுகில் மிகப்பெரிய சிறகுகளும் கொண்ட, ஒரு யாழி!
அதை வரவேற்பவரைப்போல, அந்தத் தலைமை அறங்காவலர் சிரம் தாழ்த்த, அந்த யாழியும் பதிலுக்கும் சிரம் தாழ்த்தியது. பிறகு, தலைமை அறங்காவலர், கட்டியம் கூறுபவர் போல பெரிய குரலெடுத்து, “துர்காபுரி தேசத்தின் அறத்தையும் தர்மத்தையும் கண்காணிக்கும் நான், இந்நாட்டு மக்கள் யாவரும் அமைதியும் வளமும் பெற்று வாழ எல்லா பிரயத்தனமும் செய்யப்படுவதாயும், இவ்விடம் வாழ இயலாதாகி எல்லைவிட்டு வெளியேறிய ஜீவன் ஏதுமில்லை என்றும் உறுதியளிக்கிறேன். மகா சரபேஸ்வரமூர்த்தியின் ஆணைப்படி, இத்தேச எல்லையை அத்துமீறிக் கடந்தவன் எவனோ, அவன் உடலை உடனே ஒப்படைக்கவேண்டி, யாழிகளின் பிரதிநிதியாக வந்திருக்கும் உங்களிடம் கோருகிறேன்.” என்று, காலம் காலமாக உச்சரிக்கப்படும் அந்த வாக்கியங்களைக் கூறினார்.
சில கணங்கள் அமைதிக்குப்பின், ஒரு அழகிய மலர்மாலையை அந்த யாழிக்கு சூட்டி, “மகா சரபேஸ்வர மூர்த்தியின் திருவருளால், துர்காபுரியின் அமைதி மீண்டும் காக்கப்பட்டது. நன்றி” என்று கூறவும், அந்த யாழி ஒரு பெருந்தாவலில் வானை மீண்டும் ஆக்கிரமித்து, அந்தக் கோயிலை ஒருமுறை வட்டமிட்டு, பின் தான் வந்த திசையிலேயே சென்றது.
அமரகீர்த்தி அந்த யாழி சென்ற திசையை மெய்மறந்து நோக்கிக் கொண்டிருந்தான். அவன் முகம் அப்போதுதான் எதிர்பாராமல் அறையப்பட்டவன் போல அதிர்ச்சியுடன் இருந்தது. “என்ன மகனே.. உன் சந்தேகம் எல்லாம் தீர்ந்ததா?” என்ற விதுரசேனனின் குரல்தான் அவனை இந்த உலகத்துக்கு இழுத்துவந்தது. “இல்லை அப்பா.. இந்த.. ” என்று எதோ சொல்லவந்த அமரகீர்த்தியை, கையமர்த்தி, “எதுவாகினும், நம் உறைவிடம் சென்று பேசலாம்.. இப்போது அமைதியாக இரு” என்று கூறினார். இருவரும் அவர்கள் தங்கியிருந்த அரசினர் மாளிகைக்கு சென்றனர்.
ஓய்வறையில் நுழைந்தும் “தந்தையே.. நான் கண்டது உண்மைதானா? உண்மையிலேயே ஒரு யாழி இருக்கிறதா?” என்று கேட்டான்.
“ஒரு யாழி இல்லை.. துர்காபுரியின் மேற்கே உள்ள வனத்தில் நூற்றுக்கணக்கான யாழிகள் இருப்பதாகக் கூறுவர்” என்றார் விதுரசேனன்.
“நாம் அந்தக் காட்டைக் கடந்து தானே வந்தோம்? அங்கு இவ்வளவி பெரிய பட்சிகள் இருப்பதற்கான அறிகுறியேதும் காணப்படவில்லையே?”
“இவை தெய்வீக சக்தி கொண்ட உயிரினங்கள்.. துர்காபுரி மக்களே இந்த பூஜை தவிர்த்து மற்ற சமயங்களில் இவற்றைப் பார்த்த்தில்லை. இவை அஷ்டமா சித்திகளும் அமையப்பெற்றவை. அவற்றால் கண்ணில் படாமல் மறையவோ, உருமாறவோ முடியும். மின்னல் வேகத்தில் பறக்க முடியும். கண்ணால் பார்த்தே மனிதர்களைக் கொல்ல முடியும்.. அவற்றின் ஆற்றல் அளப்பரியது”
“இவை ஏன் துர்காபுரியைக் காவல் காக்கின்றன? நிஜமாகவே சரபேஸ்வரர் அளித்த வரத்தால்தானா?”
“அப்படித்தான் தெரிகிறது. தெளிவான காரணத்தைக் கூற துர்காபுரி மக்களால் கூட முடியவில்லை. ஆயிரம் ஆண்டுகள் முந்தைய நிகழ்வல்லவா?”
“அப்படி என்னதான் வரம் கொடுத்தாராம்?”
“இன்னாட்டுப் பிரஜை ஒருவன் வாழ வழியின்றி வெளியாறதபடி இவர்கள் பார்த்துக்கொள்ளும்வரை, அந்நியன் எவனும் அத்துமீறி நுழையாமல் யாழிகள் பார்த்துக்கொள்ளும். அவ்வளவே. இப்போது சொல் மகனே, நம்மிடம் இருக்கும் இருபத்தி நான்கு இலட்சம் வீரர்களும் இந்த யாழிகளுக்கு ஈடாகுமா?”
“ஆனால் இவ்வளவு பிரயத்தனம் செய்து இந்த நாட்டைக் கைப்பற்ற வேண்டிய அவசியம் என்ன தந்தையே?”
“இந்நாட்டின் அமைவிடம் மிக சிறப்பானது. மிகப் பாதுகாப்பான புவியியல் அம்சங்களுடம், கடல்வாணிக வழித்தடத்தில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. ஆனால் இன்னாட்டு மக்கள் நாட்டின் எல்லையைத் தாண்டுவது பாவம் என்று கருதுவதால், துறைமுகம், கப்பல் போக்குவரத்து என எதற்கும் அனுமதிக்கவில்லை. இந்த நாடு மட்டும் நம்வசம் வந்தால், நம் நாட்டின் வளமும் பாதுகாப்பும் பன்மடங்கு உயரும்”
“என்னவோ அப்பா.. எனக்கு இன்னும் குழப்பமாகத்தான் இருக்கிறது”
“ஒரு குழப்பமும் வேண்டாம் மகனே.. நீ சென்று உணவருந்திவிட்டு நிம்மதியாகத் தூங்கு. நாளை மீண்டும் பிரயாணத்தைத் துவங்க வேண்டுமல்லவா?”
மறுநாள் துர்காபுரியின் தலைநகருக்கு பயணப்பட வேண்டிய ஆயத்தங்களைச் செய்ய, இளவரசன் வெளியேறினான். அந்தப் பயணம் துவங்கும்வரை நாமும் சிறிது காத்திருப்போம்.
fantasy கதைகளில் லாஜிக் பார்க்கக்கூடாது என்ற ஒரு லாஜிக்கால் நான் அந்த சீரண விஷயத்தை கண்டுக்கல....
ஒன்னு மட்டும் நிச்சயம், உன்ன எந்த இயக்குனரும் கதை எழுத கூப்பிட மாட்டாங்க..... எடுத்தா விண்வெளிக்கு போற, இல்லைனா டைனோசர் மாதிரி ஒரு பறவையை பறக்க விடுற.... செத்தான் தயாரிப்பாளர்...
நிச்சயமா வித்தியாசமான பயணம்.... கடவுள் அருள் இருக்கும் அந்த துர்காபுரியை, தன் சாணக்கியத்தனத்தால் வெல்வாரா மன்னர்?னு பார்க்கலாம்....
நன்றி நண்பா.. என் வேலையை மிச்சப்படுத்தி விட்டீர்கள்.. நீங்கள் கூறியபடியே, சரபேஸ்வரர், இரணியன் வதத்திற்குப் பிறகு நரசிம்மரை சாந்தப்படுத்த சிவபெருமான் யாழியாக அவதாரம் எடுத்ததாக பல சமய நூல்கள் கூறுகின்றன. சரபேஸ்வரர் அடக்க முயன்ற போது அதனால் கோபம் அதிகமான நரசிம்மர், கண்டபேரண்டம் என்ற இருதலை கொண்ட மாபெரும் பறவையாக மாறி சரபேஸ்வரருடன் கொடும்போர் புரிந்ததாக சிவபுராணமும் விஷ்ணுபுராணமும் சொல்கின்றனவாம். (ஆனால் முடிவில் சிவன் வென்றதாக சிவபுராணமும் நரசிம்மர் வென்றதாக விஷ்ணுபுராணமும் கூறுகிறதாம்!)
இந்த யாழி-கண்டபேரண்டம் கதைதான் சீனாவின் டிராகன் கதைகளின் முன்னோடி என்றும் கூறுவர்.
[படத்தில்: கண்டபேரண்டம் பறவை - கர்நாடகாவின் ஒரு கோவிலில் உள்ள சிற்பம் ]
யாழியும் கண்டபேரண்டமும் இந்து இதிகாசங்களில் அதிகம் வருபவை. பண்டைய மைசூர் சமஸ்தானத்திற்கும், தற்போதைய கர்நாடக மாநில அரசுக்கும் இந்த கண்டபேரண்டமும் யாழியும்தான் சின்னமாக இருக்கின்றன. சமீபத்தில் இந்த சின்னம் அதன் 500 ஆம் பிறந்த நாளைக் கொண்டாடியிருக்கிறது.
[ படத்தில்: கர்நாடக மாநில அரசின் முத்திரை ]
யாளி - யாழி என்ற இரண்டு பயன்பாடுகளையும் நான் பார்த்திருக்கிறேன். ஆனால் யாளி என்ற பதம்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. இது ஒருவேளை இந்து இதிகாசங்களில் சமஸ்கிருதத்தின் ஆதிக்கம் அதிகம் இருந்ததால் இருக்கலாம். சமஸ்கிருதத்தில் ல-ள-ழ என்று தனித்தனி பதங்கள் இல்லை.
திருத்தம்:
தேவநாகரி வரிவடிவங்களில் ஹிந்தியைத் தவிர மற்ற பெரும்பாலான மொழிகள் ல-ள என்ற தனித்தனி எழுத்துருக்களைக் கொண்டுள்ளன என்று ஒரு நண்பர் தெளிவுபடுத்தினார். ஆனாலும் ழகரம் தேவநாகரி வரிவடிவத்தில் இல்லை. 'யாழி' என்ற பயன்பாடு குறித்த தகவல்கள் ஏதும் தெரிந்தால் நண்பர்கள் தந்து உதவவும்.
(படங்கள் விக்கிபீடியாவிலிருந்து)
-- Edited by ArvinMackenzie on Friday 16th of August 2013 11:27:43 AM
துர்காபுரியின் மிகப் பரபரப்பான அந்த நெடுஞ்சாலையில் அரச விருந்தினரின் பட்டாளம் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. இளவரசன் அமரகீர்த்தியால் அந்த சாலையின் நேர்த்தியான வடிவமைப்பைக் கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இரதமும், புரவியும் விரைந்து செல்வதற்கேற்ற கற்தளம் அமைக்கப்பட்ட சாலை, இரண்டு காதத்திற்கு ஒரு பயணியர் சத்திரம், ஐந்து காதத்திற்கு ஒரு சோதனைச்சாவடி, ஆங்காங்கே காவலர்கள் என மிக பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கு என்று திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டிருந்தது. இரவு நேரப் பயணிகளின் வசதிக்காக என சீரான இடைவெளியில் விளக்குத் தூண்கள் அமைக்கப்பட்டு, உள்ளூர் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தன.
துர்காபுரியின் தலைநகர் நோக்கிய இரண்டு நாள் பயணம் விதுரசேனனுக்கும் அமரகீர்த்திக்கும் எவ்வித சிரமமும் இன்றி இருந்தது. ஒரு சிறிய பட்டாளத்துடன் பிரயாணிப்பதால் இத்தனை தாமதம். இல்லையேல் ஒரு பகலில் கூட இந்த தூரத்தைக் கடந்திருக்கலாம். இன்னும் ஒரு நாழிகையில் பத்மாபூருக்குள் நுழைந்துவிடலாம்.
பத்மாபூர் – துர்காபுரியின் தலைநகர். தாமரை போன்ற இதழமைப்புடைய கோட்டைச்சுவரும், அடுக்கடுக்கான கோட்டையின் உட்பிரிவுகளும் கொண்டதால் இந்தப் பெயர் பெற்றது இந்த ஊர். மூன்று அடுக்குகள் கொண்ட அந்தக் கட்ட்மைப்பின் வெளி அடுக்கில் சுற்றுச்சுவரைப் பாதுகாக்கும் படைவீரர்களின் இல்லங்களும், குதிரை, யானை உள்ளிட்ட படை விலங்குகளும், அதைப் பராமரிக்கும் பணியாளர்களின் இல்லங்களும் இருந்தன. மிகப்பெரியதான நடு அடுக்கில் அரச மாளிகை உட்பட மற்ற அனைவரின் உறைவிடம், அங்காடிகள் எல்லாம் இருந்தன. இவற்றின் மையத்தில் இருந்த உள்ளடுக்கில் மிகப் பிரம்மாண்டமான சரபேஸ்வரர் கோயிலும், போர்க்கால உறைவிடம், தானியக் கிடங்கு, ஆயுதக் கிடங்கு, கருவூலம் ஆகியவையும் இருந்தன. ஒவ்வொரு அடுக்கும் வலிமையான சுற்றுச் சுவர் மற்றும் பலமான கதவுகளுடன் முந்தைய அடுக்கை விட உயரத்திலும் இருந்தது. ஒருவேளை ஒரு வெளி அடுக்கை தாக்கும் படைகள் கைப்பற்றிவிட்டால்கூட, உள்ளடுக்குக்குப் பின்வாங்கி, அங்கிருந்து அம்பு உள்ளிட்ட எய்தல் வகை ஆயுதங்களால் தாக்கவும், நிலைகளைக் கண்காணிக்கவும் முடியும்.
கோட்டை வாயிலை அடைந்த அமரகீர்த்தி அதன் பிரம்மாண்டத்தைக் கண்டு வியந்தான். வீரசேனனைப் பார்த்து, “தந்தையே.. யாழிகளின் பாதுகாப்பு இல்லாவிடினும்கூட இந்தக் கோட்டையைக் கைப்பற்றுவது மிக கடினமான காரியமாயிருக்கும்போல இருக்கிறதே” என்றான். அவர் சிறிதாய் ஒரு புன்னகையை மட்டும் உதிர்த்துவிட்டு முன்னேறினார்.
கோட்டை வாயிலில் இவர்களை வரவேற்க ஒரு சிறிய பட்டாளம் நின்றுகொண்டு இருந்தது. முன் வரிசையில் ஒரு வீரன் தாம்பாளத்தில் பரிவட்டத் துண்டையும் மலர் மாலையையும் வைத்திருந்தான். அவன் அருகில், கழுத்தில் இரத்தின ஆரமும், இடையில் உடைவாளும் தரித்த ஒரு யுவன் நின்றுகொண்டிருந்தான். அந்த யுவன் துர்காபுரியின் தலைமைத் தளபதி, திவ்யாங்கன். கற்சிலைக்கு உயிர்வந்தாற்போல கட்டான உடல், வீரத்தை வெளிப்படுத்தும் மிடுக்குடன், புன்னகை சிந்தும் முகத்துடன் இருந்தான். ஆனால் புன்னகை சிந்தியது அவன் இதழ்கள் இல்லை. கண்களால் புன்னகைத்தான்.
விதுரசேனனும், அமரகீர்த்தியும் குதிரையில் இருந்து இறங்கி திவ்யாங்கனை நோக்கி வந்தனர். திவ்யாங்கன் அந்தப் பரிவட்டத்தை எடுத்து விதுரசேனனின் தலையில் அணிவித்தான். பின்பு அந்த மலர் மாலையை எடுத்து அமரகீர்த்தியின் கழுத்தில் சூட்டினான். அவ்வளவு நெருக்கத்தில் புன்னகைக்கும் அந்தக் கண்களின் பிரகாசம் தாங்காமல், அமரகீர்த்தி சட்டென குனிந்துகொள்ள, திவ்யாங்கனின் முகம் ஒரு கணம் வாடியது. இருந்தும் சமாளித்துக்கொண்டு, “பத்மாபூரிற்கு வருகை தந்தமைக்கு நன்றி வேந்தே.. உங்கள் வருகை இரு தேசத்திற்கும் நல்வரவாகுக.. உங்களுக்கான ஜாகை தயாராக உள்ளது. தாங்கள் தயைகூர்ந்து என்னைப் பின்தொடர்ந்து வரவும்” என்று சொல்லிவிட்டு, கோட்டையின் உள்ளே செல்லலானான்.
விதுரசேனர் மீண்டும் குதிரையில் ஏறினார். ஆனால் அமரகீர்த்தி நின்ற இடத்திலேயே உறைந்து சிலையாகி இருந்தான். விதுரசேனர் அழைக்கவும், கனவில் இருந்து விழித்தவன் போல சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, தன் குதிரையில் ஏறினான். அவன் என்ன கனாக் கண்டானோ?
விருந்தினர் அவர்களின் மாளிகைக்குச் சென்றடைந்ததும், திவ்யாங்கன், “வேந்தே.. உங்களுக்குத் தேவையான எல்லா வசதிகளும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இன்று ஏற்கனவே பொழுது சாய்ந்துவிட்டதால், தாங்கள் இளைப்பறுங்கள். நீங்கள் விரும்பினால், நாளை காலை மகாமந்திரியாரைச் சந்திக்க ஏற்பாடு செய்கிறேன்” என்றான்.
“மிக்க மகிழ்ச்சி தளபதியாரே.. ஆனால் நான் நாளை சரபேஸ்வரர் பூசையைக் காண விழைகிறேன். அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா? மந்திரியாருக்கு சம்மதமானால், அவரை நாளை மாலை சந்திப்பதாகக் கூறவும்” என்றார் வீரசேனன்.
“அப்படியே ஆகட்டும் வேந்தே.. தங்கள் விருப்பப்படியே ஏற்பாடு செய்கிறேன். அதோடு, மன்னர் என்னை திவ்யாங்கன் என்று பெயரிட்டே அழைக்கலாம்”
“இல்லை தளபதியாரே.. தங்கள் பதவிக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறதல்லவா..”
“எப்படியோ.. தங்கள் சித்தம் வேந்தே.. இப்போது தாங்கள் அனுமதித்தால் நான் வெளியேறுகிறேன்”
“நல்லது தளபதியாரே.. சென்று வாருங்கள்”
செல்லும் முன் அமரசேனனைப் பார்த்து, “நான் சென்று வருகிறேன் இளவரசே..” என்று சொல்லி புன்னகைத்தான். பின்பு வாயிலை நோக்கிச் சென்றான்.
இளவரசனின் மனம் ஏனோ “திவ்யாங்கா.. போகாதே..” என்று அலறியது. ஆனால் அவன் வாயிலிருந்து ஒலி ஏதும் எழ மாட்டேன் என்றது.. வாயிலை அடைந்த திவ்யாங்கன், இளவரசனின் மனவொலியைக் கேட்டவன் போல, பின்னால் திரும்பி அவனைப் பார்த்து மீண்டும் ஒரு புன்னகையைச் சிந்திவிட்டு, பதிலாக அமரகீர்த்தியின் தூக்கத்தை அள்ளிக்கொண்டு சென்றான்.
-- Edited by ArvinMackenzie on Tuesday 20th of August 2013 07:04:28 PM
@Rotheiss
நன்றி அண்ணா... ஒரு கொசுறு தகவல்.. விதுர சேனனின் தேசம் 'சுபர்ணராஷ்டிரம்' என்று சொன்னேன் அல்லவா.. 'சுபர்ணா' என்றால் கழுகு என்று ஒரு பொருள் உண்டு...
@Prabhujp
மிக்க நன்றி மாம்ஸ்..
@msvijay
உங்க கருணைக்கு நன்றி..
//ஒன்னு மட்டும் நிச்சயம், உன்ன எந்த இயக்குனரும் கதை எழுத கூப்பிட மாட்டாங்க..... எடுத்தா விண்வெளிக்கு போற, இல்லைனா டைனோசர் மாதிரி ஒரு பறவையை பறக்க விடுற.... செத்தான் தயாரிப்பாளர்... //
நான் பரவாயில்லை. நீங்க ஹீரோவில இருந்து, ஹீரோவோட பாட்டி வரைக்கும் எல்லாத்தையும் கொன்னுடுவீங்க.
பத்மாபூர் பற்றிய விவரணை மிகவும் அருமை... துர்காபுரியின் உள் கட்டமைப்பு வசதிகளின் செய்நேர்த்தியும் அருமை...
இவ்வளவெல்லாம் பார்த்து பார்த்து செய்யும் அந்நாட்டு மக்களுக்கு விருந்தோம்பல் பற்றிய விவரங்கள் சரிவரத் தெரியவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது..
தோரணவாயிலில் விதுரசேனரையும் அமரகீர்த்தியையும்வரவேற்கக்கூட அவர்களது மன்னருக்கு நேரமில்லாதது இந்நேரம் நினைவுக்கு வருகிறது.. அங்கு நடந்த ஆயுத ஒப்படைப்பு விஷயங்களுக்கு தாங்கள் விளக்கமளித்திருந்தாலும்.. திரு அப்துல் கலாம் அவர்களுக்கு இருமுறை அமெரிக்காவில் நடத்தப்பட்ட frisking, திரு ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ் அவர்களுக்கு நடத்தப்பட்ட strip searching ஆகியவை அந்நேரம் ஏற்படுத்தியிருந்த கொந்தளிப்பு தான் ஞாபகம் வருகிறது..
சரி... அங்கு தான் அப்படி என்றால்... கோட்டை வாயிலில் கூட இவர்களை வரவேற்க தளபதியார் தான் வர வேண்டுமா..??
துர்காபுரியின் Royal Etiquette and their Protocols in receiving dignitaries is highly disappointing :(
ஆனாலும் ஆறுதலான விஷயம்... திவ்யாங்கனின் திவ்யமான அறிமுகம்..!! ;)
துர்காபுரியின் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்ற உள்ளும் புறமுமாக சதிவலைகள் பின்னப்படுகின்றன..
திவ்யாங்கன் பெரிய அப்பாடக்கரா இருப்பான் போலயே... இளவரசன், இளவரசி எல்லாம் போட்டி போட்டுக்கிட்டு டாவடிக்கறாங்க.. ;)
யோவ் ஜீனி... மகாராணி பேர் நீலாம்பாள்னு சொன்னீங்க சரி.. அந்த புள்ள இளவரசி பேரையும் சொல்லியிருக்கலாம்ல.. தேவ கன்னிகை மண்ணில் வந்தாற்போல்.. மடியில் வந்தாற்போல்னு பில்டப் பீடிகை எல்லாம் பலமா இருந்துச்சு.. :(
வெல்லப் போவது.. அயல் நாட்டு சதியா.. இல்ல உள்நாட்டு சதியான்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கு.. தொடர்ந்து கதைங்க.. :)
பத்மாபூரின் சரபேஸ்வரர் ஆலயத்தில் விசேஷ பூஜைகள் நடந்துகொண்டிருந்தன. விதுரசேனரும், அமரகீர்த்தியும் மட்டும் அர்த்தமண்டபத்தில் நின்றிருக்க, திவ்யாங்கனும், மற்ற வீரர்களும் ஆஸ்தான மண்டபத்தில் நின்று காவல் காத்துக் கொண்டிருந்தனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் யாவரும் வழக்கம்போல ஆஸ்தான மண்டபத்தில் நின்று தரிசனம் செய்துகொண்டிருந்தனர். விதுரசேனர் உள்ளிருந்த கருவறையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, அமரகீர்த்தியின் கவனமோ, வெளியே இருந்தது.
அந்நேரத்தில் இருவர் கவனத்தையும் கவரும்படிக்கு இராஜ அடையாளங்கள் தரித்த இரண்டு பெண்கள் அர்த்த மண்டபத்துக்குள் நுழைந்தனர். தேவ கன்னிகை மண்ணில் வந்தாற்போல அழகான யுவதியும், அவளின் தாயும். அவர்களின் பின்னே உள்ளே வந்த திவ்யாங்கன், “வேந்தே, துர்காபுரியின் மகாராணியாரும், இளவரசியும் வந்துள்ளனர்” என்று விளக்கினான். விதுரசேனர் மரியாதை நிமித்தம் புன்னகைக்க, மகாராணியாரும், புன்னகையோ என்று சந்தேகிக்கும்படி ஒரு பாவனை செய்துவிட்டு, கருவறை நோக்கித் திரும்பிக்கொண்டார்.
விதுரசேனர் தரிசனம் செய்து முடித்துவிட்டபடியால், “மகனே.. வெளியேறலாமா?” என்றார். அதற்குத்தான் காத்திருந்தவனாய் உடனே “சரி தந்தையே..” என்று கூறிவிட்டு வெளியே வந்தான். இருவரும் பிரகாரத்தை சுற்றிவிட்டு, மகா மண்டபத்தில் வந்து அமர்ந்தனர். அவர்களுக்கு சிறிது தூரத்தில் திவ்யாங்கனும் அவன் வீரர்களும் நின்று காவல்புரிந்தனர். விதுரசேனர் நுண்ணிய சிற்ப வேலைப்பாடுகளும் வண்ண ஓவியங்களும் நிறைந்த அந்த மண்டபத்தின் அழகை இரசித்துக்கொண்டிருக்க, இளவரசர் இரசனை வேறு விதமாய் இருந்தது.
அந்நேரத்தில், துர்காபுரியின் மகாராணியாரும், இளவரசியும் அவர்களை நோக்கி வர, இருவரும் எழுந்து நின்றனர். மகாராணி நீலாம்பாள் விதுரசேனரிடம் வந்து, “வேந்தர் எம்மை மன்னிக்க வேண்டும். தாங்கள் இங்கு தரிசிக்க இருப்பதை நாங்கள் அறியவில்லை. தினமும் சரபேஸ்வர மூர்த்தியை தரிசிப்பது எங்கள் வழக்கம். அதன்படியே இங்கு வந்தோம். சன்னிதியில் வைத்து ஒருவருக்கு மரியாதை செய்வது தெய்வநிந்தனை. ஆதலால்தான் என்னால் ஏதும் கூறவில்லை. தாங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்” என்றார்.
“அதனால் என்ன மகாராணியாரே.. நாங்கள் ஏதும் தவறாக நினைக்கவில்லை.” என்றார் விதுரசேனர்.
“நல்லது வேந்தே.. உங்கள் உறைவிடம் சௌகர்யமாக இருக்கிறதா?”
“சௌகர்யத்திற்கு என்ன குறைச்சல் மகாராணியாரே.. துர்காபுரியின் விருந்தோம்பல் பற்றி உலகமே அறியுமே..”
“அது எங்கள் பாக்கியம் அரசே.. நாங்கள் இப்போது விடைபெறுகிறோம்”
அந்தப் பெண்டிர் இருவரும் வாயிலை நோக்கிச் சென்றனர். செல்லும்போது இளவரசி தன் மிரட்சியான கயல் விழிகளினால் திவ்யாங்கனை ஓரப்பார்வை ஒன்று பார்த்து சிரித்துவிட்டுச் சென்றாள். திவ்யாங்கன் அதை கவனிக்கவில்லை. ஆனால் அமரகீர்த்தி கவனித்துவிட்டான். அவன் உள்ளம் கொதித்தது. இளவரசியின் மீது வேறுப்படைந்தான்.
அவர்கள் இருவரும் கண்ணைவிட்டு மறைந்ததும், “ஏன் தந்தையே.. நாம் இங்கு தரிசிக்க வருவதுகூட தெரியாது என்று கூறுகின்றனரே.. இந்த தேசத்தின் மகாராணிக்குத் தெரியாமலா ஏற்பாடு செய்திருப்பார்கள்?” என்றான் அமரகீர்த்தி.
“அவர் பெயரளவுக்குதான் மகாராணி.. அவரிடம் எந்த அதிகாரமும் பொறுப்பும் இல்லை. மன்னர் இறந்த பிறகு ஆட்சிப் பொறுப்பு முழுதும் மகாமந்திரியாரிடம்தான் இருக்கிறது. காலஞ்சென்ற மன்னருக்கு ஆண்வாரிசு இல்லையாதலால் இளவரசிக்குத் திருமணம் ஆகும்வரை ஆட்சி, அதிகாரம் முழுதும் மகாமந்திரியார் வசம்தான்.” என்று கூறியவர், இரகசியமான குரலில், “அவர் மகாராணியை மதிப்பதில்லை என்றும், எந்த விவகாரத்திலும் மகாராணியின் கருத்தைக் கேட்கவோ ஆலோசிக்கவோ மாட்டார் என்றும் கூறுகிறார்கள்” என்றார்.
“அவ்வளவு செருக்குள்ள மனிதரா அவர்?” என்று இளவரசன் கோவத்துடன் கேட்க, அவனை அமைதியாயிருக்க சைகை காட்டிய மன்னர், சன்னமான குரலில், “தனயன் முன்பாகவே தகப்பனைப் பற்றிக் குறைவாய்ப் பேசினால் அவன் என்ன நினைப்பான்? அமைதியாய்ப் பேசு மகனே” என்றார்.
இளவரசன் குழப்பமாய்ப் பார்க்கவும், “ஆம் மகனே.. மகாமந்திரியாரின் புதல்வன்தான் தளபதி திவ்யாங்கன்” என்றார்.
சிறிது நேர மௌனத்திற்குப்பிறகு, “இளவரசியைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய் மகனே?” என்று கேட்டார் விதுரசேனர்.
“அடக்கமான பெண். நல்ல குணவதியாய்த் தெரிகிறாள். புத்திசாலியாகவும் இருப்பாள் என்று தோன்றுகிறது”
“அவளை அடையப்போகும் வாலிபன் மிகுந்த பாக்கியம் செய்திருக்க வேண்டும் இல்லையா?”
“கண்டிப்பாக தந்தையே.. “ என்று கூறியவன், சில கணங்களுக்குப் பின்தான் தன் தந்தையின் மனதிலிருந்த கணக்கைப் புரிந்துகொண்டான். “யுத்தத்தை இப்படியா முடிக்கத் திட்டமிட்டிருக்கிறீர்கள்?” என்று நினைத்து அதிர்ச்சியுடன் அவன் நின்றிருக்க, “சரி மகனே.. கிளம்பலாம்.. “ என்று சொல்லி அவர் முன்னே செல்லலானார்.
துர்காபுரிக்கோ, எங்கள் மகாராணியாருக்கோ, எங்கள் இளைய தளபதிக்கோ(?) ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் விதுரசேனனின் தலை எங்கள் நாட்டு மண்ணுக்கு உரமாக்கப்படும் என்பதை கதாசிரியருக்கு கர்ம சிரத்தையோடு தெரிவித்துக்கொள்கிறோம்.... இதனையும் மீறி எதுவும் ஆபத்து உண்டாகுமெனில், கதாசிரியரின் கைகள் எங்கள் ஊர் மணிக்கூண்டின் முள்ளாக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்....
இப்படிக்கு,
துர்காபுரி இளைஞர் புரட்சிப்படை....
மேலே சொன்னது என் கருத்து இல்லப்பா, ஏதோ புரட்சிப்படை உருவாகியிருக்காம், அவங்க கருத்து.... என்னோட கருத்து "கதை நல்லா போகுது... மேற்கொண்டு சொல்லுங்க" என்பது மட்டும்தான்.....
@Rotheiss
எங்க திவ்யாங்கன என்னன்னு நினைச்சீங்க? அவன் அழகுக்கும் திறமைக்கும் இன்னும் ஆயிரம் இளவரசிகள் வந்து போட்டி போட்டாலும் தகும்.
பக்தர்கள் நின்று வழிபடும் இடம்தான் ஆஸ்தான மண்டபம்.. அதையும் கருவறையையும் இணைக்கும்படி நடுவில் இருப்பது அர்த்த மண்டபம். திருவிழாக்காலங்களில், உற்சவர் எழுந்தருளி, திருக்கல்யாணம், ஊஞ்சல், கொலு போன்றவை நடக்குமிடம் மகா மண்டபம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்..
@msvijay
அங்க ஒரு அழகான இளவரசி இருக்கும்போது அவளைப் பற்றிகூட கவலைப்படாமல் மகாராணியாருக்காக குரல் கொடுக்கும் உங்கள் ஆன்டி-செண்டிமென்ட் எனக்கு புரியலையே..
பத்மாபூரில் அந்தப் பிற்பகல் வேளையில், வானம் களேபரத்தை நிகழ்த்திக் காட்டிக் கொண்டிருந்தது. அஸ்தமன இருளைப் போல கரும் மேகக் கூட்டங்கள் வானைச் சூழ்ந்திருக்க, அதில், ஒளிக்கீற்றாய் மின்னல்கள் அவ்வப்போது தோன்றி மறைந்தன. இடியோசை பூமியையே அதிரச் செய்ய, மழை மட்டும் பெய்தபாடில்லை. காலையில் தெளிந்திருந்த வானம், பகலில் இருந்த வெயிலின் உக்கிரத்தால் மாலைக்குள் இப்படி ஆகியிருந்தது.
வெளியே இருக்கும் சூழலை அமரகீர்த்தியின் மனமும் பிரதிபலித்தது. காலையில் தெளிவாய், குதூகலமாய் இருந்த மனம், பின்னர் நடந்த சம்பவங்களால், மிகவும் குழம்பிப் போயிருந்தது. அவன் உள்ளத்தில் மின்னலாய்க் கேள்விகள் தோன்றி, இடியாய் அவனைக் கலங்கடித்தன. “இளவரசி திவ்யாங்கனை விரும்புகிறாளோ?” “திவ்யாங்கனும் இளவரசியை நேசிக்கிறானா?” “தந்தையார் இளவரசியை எனக்கு மணமுடிக்க எண்ணுகிறாரா?” “என் மனதிலுள்ள எண்ணத்தை தெரியப்படுத்தினால் தந்தை அதற்கு ஒப்புக்கொள்வாரா?” “ஒப்புக்கொள்ளாவிட்டால் என்ன செய்வது?” இப்படி ஆயிரம் ஆயிரம் கேள்விகள். கேள்வியின் சுழலில் சிக்கி அவனுக்கு மூச்சு முட்டியது.
“மகனே.. அமரகீர்த்தி”
அவன் திரும்பவில்லை. அவன் மனம் அங்கு இல்லையே.. விதுரசேனன் வந்து அவன் தோளைப் பற்றி உலுக்கியபின் தான் திரும்பினான்.
“மாலை மகாமந்திரியார் வருகிறார் அல்லவா.. அவரை சந்திக்க தயார்செய்துகொள்”
“இல்லை தந்தையே.. எனக்கு உடல்நிலை சௌகர்யமாய் இல்லை. அவரை நான் சந்திக்கவில்லை.. எனக்கு இலேசாக தலைவலிப்பது போல் உள்ளது.”
“சரி மகனே.. நீ கொஞ்சம் ஓய்வெடுத்துக்கொள்.. நான் பார்த்துக் கொள்கிறேன்”
“இல்லை அப்பா.. நான் கொஞ்சம் வெளியே சென்று உலாத்திவிட்டு வரலாம் என நினைக்கிறேன்.”
“மழை நேரம் வெளியே செல்வது நல்லதல்ல மகனே..”
“நான் பார்த்துக் கொள்கிறேன் அப்பா”
உடன் வந்த மெய்காவல் வீரர்களையும் திருப்பி அனுப்பிவிட்டு, அந்தப் பரந்த நகரின் வீதிகளில் தனியே செல்லலானான். மனம் இருந்த குழப்பமான நிலையில், எங்கு செல்கிறோம் என்று தெரியாமல், கால்போன போக்கிலே நடந்தான். எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் எதுவும் தெரியாமல் நடந்துகொண்டிருந்தான்.
“இளவரசே” என்று ஒரு குரல் அவனை மீண்டும் இவ்வுலகத்துக்குக் கொண்டுவந்தது. அவன் கேட்கத் துடிக்கும் ஒரு குரல். திரும்பிப் பார்க்கும் முன்னரே, அழைத்தது திவ்யாங்கன்தான் என்று அவன் அறிவான். குரல் வந்த திக்கில் திரும்பிப் பார்த்தபோது, திவ்யாங்கன் ஓடாத குறையாக அவனை நோக்கி விரைந்து வந்துகொண்டிருந்ததைக் கண்டான்.
“என்ன இளவரசே.. தனியாக வந்துகொண்டிருக்கிறீர்கள்”
“நான் உங்கள் பிராயத்தினந்தானே.. என்னை நீங்கள் பெயர் சொல்லியே ஒருமையிலேயே அழைக்கலாம்.. இந்த சம்பிரதாய மரியாதை எல்லாம் தேவையில்லை”
“நீங்களும் என்னை அவ்வாறே அழைப்பதானால் எனக்கும் ஒரு பிரச்சினையும் இல்லை”
“நல்லது”
“உனக்குப் பிரச்சினையில்லை என்றால் நான் உன்னோடு துணையாக வரவா?”
“நீ எனக்குத் துணையாக வரவேண்டித் தானடா நான் ஏங்கிக் கொண்டிருக்கிறேன்” என்று மனதில் நினைத்துக்கொண்டு, “வந்தால் மகிழ்ச்சிதான்” என்றான்.
“ஆனால் அதன் அழகில் உன் மனம் ஈடுபடவில்லை போலிருக்கிறதே..”
“புரியவில்லை திவ்யாங்கா.. என்ன சொல்கிறாய்?”
“உன்னைப் பார்த்தால் ஏதோ தீவிரமான சிந்தனையில், கவலையில் இருப்பதுபோல் தெரிகிறதே?”
அமரகீர்த்திக்கு அதிர்ச்சி.. “கள்ளன்.. மனதைத் திறந்து படித்துப்பார்த்தவன் போல் சொல்கிறானே” என்று நினைத்தான்.
“சொல்ல விரும்பாவிட்டால் சொல்ல வேண்டாம்” என்றான் திவ்யாங்கன்.
“எல்லாம் காதல் குழப்பம்தான் திவ்யாங்கா..”
“காதல் குழப்பமா?”
“நான் ஒருவனைக் காதலிக்கிறேன்.. ஆனால் அவன் என்னை விரும்புகிறான என்று அறிந்துகொள்ள முடியவில்லை. இதற்கிடையே, வேறொரு பெண் வேறு அவனை விரும்புவது போல் தெரிகிறது. அவர்கள் இருவரும் ஏற்கனவே காதலித்து வருகிறார்களோ என்று அச்சமாயிருக்கிறது..”
“உன் மனம் கவர்ந்த அந்தக் கள்வனிடம் நேரடியாகக் கேட்டுவிட வேண்டியது தானே”
“இல்லை திவ்யாங்கா.. எனக்கு அவ்வளவு துணிவு இல்லை.. ஒருவேளை நான் கேட்டு அவன் மறுத்துவிட்டால், என்னால் அதைத் தாங்கிக்கொள்ள இயலாது”
“அப்படியானால் கொஞ்சம் கஷ்டம்தான்” என்று திவ்யாங்கன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, மழை தூற ஆரம்பித்தது.
“புதுமழையில் நனைவது உடலுக்கு நல்லதல்ல.. மழை விடும் வரை, அங்கு இருக்கலாம்” என்று ஒரு சிறிய கட்டிடத்தைக் காட்டினான் திவ்யாங்கன். இருவரும் அந்தக் கட்டிடத்தினுள் சென்றனர்.
அந்தக் கட்டிடத்தில் மிகவும் தீவிரமான காவல் போடப்பட்டிருந்தது. பாதையின் இருபுறமும் ஐந்தடிக்கு ஒரு வீரன் ஆயுதத்துடன் நின்றுகொண்டிருந்தான். சிறிய கட்டிடமானாலும், வலிமையான கருங்கற் சுவர்களால் கட்டப்பட்டிருந்தது.
“இது என்ன இடம்? இங்கு ஏன் இவ்வளவு காவல் போட்டிருக்கிறது?” என்று கேட்டான் அமரகீர்த்தி.
“இது பொக்கிஷக் கருவூலம். அதனால்தான் இவ்வளவு காவல்”
“என்ன? பொக்கிஷக் கருவூலமா? இவ்வளவு சிறிய கட்டிடத்திலா?”
“பொக்கிஷம் இந்தக் கட்டிடத்தில் இல்லை.. இதன் அடியில் இருக்கும் பாதாள அறைகளில் இருக்கிறது.”
“அவ்வளவு பெரிய பாதாள அறைகளா? என்னால் கற்பனை செய்துகூட பார்க்க இயலவில்லை.”
“அவற்றைப் பார்க்க விரும்புகிறாயா?” என்று கேட்டவன், அவனை அழைத்துக்கொண்டு, அருகிலிருந்த அறையில் நுழைந்தான்.
அந்த அறையில், நரைத்த மீசையும், தலைப்பாகையும் அணிந்த முதியவர் ஒருவர் அமர்ந்து ஏதோ குறிப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்று, “தனாதிகாரியாரே.. இவர் நம்முடைய அரச விருந்தினரான இளவரசர் அமரகீர்த்தி.. பொக்கிஷ நிலவறைகளைப் பார்க்க விரும்புகிறார். அதற்குத் தாங்கள் அனுமதிக்க வேண்டும்” என்றான்.
அவர் இருவரையும் ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மௌனமாக எழுந்து வேறொரு வாயில் வழியாக வெளியேறினார். திவ்யாங்கன் அமரகீர்த்தியை அழைத்துக்கொண்டு, அவர் பின்னே சென்றான். அவர் நேராக எதிரே இருந்த அறைக்குள் சென்று, இவர்கள் இருவரும் உள்ளே வரவும் கதவை உள்பக்கமாகத் தாளிட்டார். அந்த அறையில், கதவுக்கு மேலே இருந்த சிறிய பலகணியைத் தவிர வேறு சாளரமோ துவாரங்களோ ஏதுமில்லை. அறையின் ஒரு மூலையில் ஒரு தீவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. அது அந்த அறையையே கோரமாகக் காட்டியது.
தனாதிகாரி எதிரே இருந்த இரும்புக் கதவின் அருகில் சென்றார். அந்தக் கதவில், நாதாங்கியோ, சாவித் துவாரமோ இல்லை. ஒரு அழகிய கைப்பிடியுடனும் கதவு முழுவதும் அழகான பூவேலைப்பாட்டுடனும் இருந்தது. தனாதிகாரி தன் கழுத்தில் இருந்த வட்ட வடிவ பதக்கத்தைக் கழற்றினார். அந்தப் பதக்கதில் வித்தியாசமான, மிகவும் நுட்பமான ஒரு மலரின் வடிவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பதக்கத்தை கதவின் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வைத்து அழுத்த, அது திறந்துகொண்டது.
அமரகீர்த்தி அந்தக் கதவின் நுட்பமான பொறியியலில் வியந்துபோனான். உறைந்துபோய் நின்றிருந்த அவனை இழுத்துக்கொண்டு அந்தக் கதவைத்தாண்டி உள்ளே சென்றான். தனாதிகாரி அருகிலிருந்த ஒரு கைவிளக்கை ஒளியூட்டி, திவ்யாங்கன் கையில் கொடுத்துவிட்டு வெளியே சென்று கதவைப் பூட்டி விட்டார்.
“இதென்ன? நம்மை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டுப் போய்விட்டாரே..” என்று கேட்டான் அமரகீர்த்தி.
“வருத்தப்படாதே.. என்னால் இதை உள்ளிருந்து திறக்க முடியும். வா… இப்போது பாதாள அறைக்குச் சென்று பார்க்கலாம்”
இருவரும், அங்கிருந்து கீழே சென்ற படிக்கட்டுகளில் இறங்கி பாதாள அறைக்குச் சென்றனர். அங்கு, தங்கக்கட்டிகள், நாணயங்கள், வெள்ளிக்காசுகள் என குவியல் குவியலாக அடுக்கப்பட்டிருந்தது. ஆனால், இளவரசனை அவை ஆச்சரியப்படுத்தவில்லை. அவன் நாட்டுக் கருவூலத்துடன் ஒப்பிட்டால், இங்குள்ள தங்கத்தின் அளவு தூசுக்குச் சமானம்.. அவனை வியக்கச் செய்தது, தரைக்கடியில் இவ்வளவு பெரிய அறையைக் கச்சிதமாகக் கட்டிய அவர்கள் கட்டிட வல்லமையே..
அவன் ஆச்சரியத்தில் நின்றிருக்க, “கீழுள்ள அடுத்த தளத்திற்குச் செல்லலாமா?” என்று கேட்டான் திவ்யாங்கன்.
“என்ன? இதற்குக் கீழ் இன்னொரு தளமும் இருக்கிறதா?”
“இருக்கின்றனவா என்று கேட்க வேண்டும் இளவரசர் அவர்களே..” என்று கிண்டலுடன் கூறினான் திவ்யாங்கன். பின் அவனை அழைத்துக்கொண்டு அதன் கீழிருந்த இரண்டாம் தளத்திற்கு அழைத்துச் சென்றான். அங்கு அழகிய வேலைப்பாடுள்ள கலைப் பொருட்களும், இரத்தினங்களும் இருந்தன. அதைச் சுற்றிப் பார்த்த பின், இறுதியாக அதற்குக் கீழே இருந்த மூன்றாம் தளத்திற்குச் சென்றனர். அங்கு அவன் கண்டவை புத்தகங்கள்!
செப்பேடுகள், காகிதச் சுருள்கள், ஓலைச் சுவடிகள் எனப் பலவிதமான வடிவங்களில் அங்கு புத்தகங்கள் இருந்தன. அத்தனையும், வரிசையாக வகைவாரியாக அலமாரிகளில் அடுக்கப்பட்டு, குறியிடப்பட்டிருந்தன.
“இவைதான் நாங்கள் மிகவும் போற்றிப் பாதுகாக்கும் பொக்கிஷங்கள்.. வரலாறு, இலக்கியம், அறிவியல் எனப் பல்வேறு வகையான புத்தகங்களின் மூலப் பிரதிகள் இங்கு இருக்கின்றன. இவற்றில் இருந்து பிரதியெடுக்கப்பட்ட புத்தகங்களை நாடெங்கிலும் இருக்கும் நூலகங்களில் வைத்துள்ளோம்.” என்றான் திவ்யாங்கன்.
துர்காபுரியினரின் இந்தக் கொள்கை, புத்தகங்கள் மீது அவர்களுக்கு இருக்கும் பக்தி எல்லாம் அமரகீர்த்தியை மிகவும் வியக்கச் செய்தன. சிறிய நாடாக இருந்தாலும் அவர்கள் இவ்வளவு முன்னேறியிருப்பது இதனால்தான் என்று நினைத்துக்கொண்டான்.
சிறிது நேரம் அங்கிருந்த புத்தகங்களை பார்வையிட்ட பின் இருவரும் திரும்பலாம் என்று எண்ணினர். படிக்கட்டுகளில் ஏறி, ஒரு திருப்பத்தில் திரும்பியபோது, அங்கு நின்றுகொண்டிருந்தது, எட்டடி நீளத்தில், பளபளப்பாக, ஒரு பாம்பு!
ஹ்ம்ம்.... நல்ல திருப்பங்களுடன் தான் கதை செல்கிறது.... "ஒருவனை காதலிக்கிறேன்" என்று சொன்னதற்கு, இன்னொருவன் லேசான ஆச்சரியம் கூட காட்டவில்லை... ஒருபால் ஈர்ப்பு அங்க சாதாரணமான ஒன்றா?.... யாளியை, ரகசிய அறைகளை நம்பும் நான் இதை நம்ப மறுக்க கூடாதுதான்.... இருந்தாலும் ஒரு சந்தேகம், அவ்வளவுதான்...
எட்டடியில் பாம்பு நின்றுகொண்டு இருந்ததா?.... இதுவும் "பேண்டஸி" வகை பாம்பா?
திவ்யாங்கன் எந்த நம்பிக்கைல அமரகீர்த்திகிட்ட தங்களது நாட்டு பொக்கிஷ சாலைய காட்டினான்? அவனுக்கும் இளவரசன் மேல ஒரு கண்ணோ??
சரி.. அப்புறம்.. என்ன ஆச்சு.... எட்டு அங்குலம் பாம்பு... சீச்சீ.. டங் ஸ்லிப்... எட்டடி பாம்பு.. நின்னுட்டிருந்துச்சாக்கும்...
(ஃபோரம்க்கு அடுத்த வெண்ணிற ஆடை மூர்த்தி கிடைச்சாச்சுடோய்.. :D)
சீக்கிரம் பாம்பு கதைய சொல்லிடுங்க.. msvijay .. அது என்ன வகை பாம்புன்னு தெரிஞ்சிக்க ரொம்ப ஆர்வமா இருக்கார்... !!! ;)
@ரோத்திஸ்...
அண்ணாச்சி, ஆயிரம் பேர் வந்தாலும் நம்ம தளத்தின் நிரந்தர "வெண்ணிற ஆடை மூர்த்தி" நீங்க மட்டும்தான்... இப்பவும் என்னால அந்த லாலிபாப் விஷயத்த மறக்க முடியாது.....
வேணும்னா நம்ம அரவிந்த்'க்கு "செந்நிற ஆடை மூர்த்தி"னு பட்டம் கொடுக்கலாம்.... பலபேர் அந்த எட்டடி பாம்பு எங்க இருக்கு?னு மெசேஜ் தட்டிய வண்ணம் இருக்காங்க..... அப்டி மெசேஜ் அனுப்பிய நபர்களில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து நம்ம அரவிந்த் அவர்கள் மூன்று பேரை "ஆப்ரிக்கா காடுகளுக்கு" சுற்றுப்பயணம் அழைத்து சென்று எட்டடி பாம்பினை, அதுவும் நிற்கும் பாம்பினை காட்டிவர போகிறாராம்..... அதனால உடனே முந்துங்கள், அரவிந்த் இன்பாக்சை நிரப்புங்கள்....
////அப்டி மெசேஜ் அனுப்பிய நபர்களில், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து நம்ம அரவிந்த் அவர்கள் மூன்று பேரை "ஆப்ரிக்கா காடுகளுக்கு" சுற்றுப்பயணம் அழைத்து சென்று எட்டடி பாம்பினை, அதுவும் நிற்கும் பாம்பினை காட்டிவர போகிறாராம்..... அதனால உடனே முந்துங்கள், /////