Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 2


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
இசைச் சக்கரவர்த்தி திரு. ஜி. ராமநாதன் - 2
Permalink   
 


2. அன்னையும் தந்தையும் தானே. பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்" - பாபநாசம் சிவன்.

"பிச்சாண்டார் கோவில்" - திருச்சிக்கும் லால்குடிக்கும் இடையில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறிய கிராமம்.

இங்கு கோபால அய்யர் என்ற சிறிய நிலச்சுவாந்தாரின் இரண்டாவது மகனாக 1910 -ஆம் ஆண்டு ஜி. ராமநாதன் பிறந்தார்.

 

ராமநாதனை விட பத்து வயது மூத்தவனான அண்ணன் சுந்தரத்துக்கு தம்பியின் மீது அளவிட முடியாத பாசம் இருந்தது. அவர்களுக்கு ஒரு தங்கையும் உண்டு. அவர்களுக்கு அண்ணனாக மட்டும் அல்ல - அன்னை தந்தையாகவும் அவரே இருக்கவேண்டிய சூழலும் ஏற்பட்டது.

ஆம். விதி வசத்தால் ராமனாதனின் சிறு வயதிலேயே அவரது அன்னை, தந்தை இருவரும் ஒருவர் பின் ஒருவராக கால கதி அடைந்துவிட்டனர்.

ஆகவே சகோதர சகோதரிகளை வளர்த்து ஆளாக்கவேண்டிய பொறுப்பு அண்ணன் சுந்தரத்தை சேர்ந்தது.

அதை அவர் ஒரு சுமையாக நினைக்கவில்லை. சந்தோஷமாகவே ஏற்றுக்கொண்டார்.

குடும்பத்துக்கு பெயர் சொல்லும் அளவுக்கு சொத்து பத்து எதுவும் கிடையாது. தனது திறமையையும், தன்னம்பிக்கையையும் மட்டுமே பெரிய சொத்தாக கொண்டு முன்னேற்றப் பாதையில் கவனம் செலுத்தினார் சுந்தரம்.

அந்தக் காலத்தில் பிராமண சமூகத்துக்கு வேத பாடசாலையில் கற்று தேர்ந்து முன்னேறுவது தான் முக்கியமான கல்வியாக இருந்தது.

அங்கொருவரும் இங்கொருவரும் மட்டுமே அற்ப சொற்பமாக ஆங்கிலவழி கல்வி கற்று வெள்ளைக்காரன் கம்பெனியில் வேலைக்கு சேர்ந்தனர். அதன் பிறகு மெல்ல மெல்ல இந்த சதவிகிதம் அதிகரித்தது.

ராமனாதனின் அண்ணன் சுந்தரம் வேதத்தோடு அல்லாமல் சங்கீதமும் கற்று தேறி இருந்தார். புராண இதிகாசங்களையும் கற்றுத் தேர்ந்திருந்தார். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்திருந்த "ஹரி-கதா" காலட்சேபம் செய்வதில் அவர் மெல்ல மெல்ல பிரபலம் ஆகத் தொடங்கியதால் சுந்தர பாகவதர் என்றே பரவலாக அழைக்கப் பட்டார்.

பட்டுக்கோட்டைக்கு அருகில் உள்ள ராஜா மடத்துக்கு தம்பி தங்கைகளுடன் குடி பெயர்ந்தார் அவர். நாளாவட்டத்தில் ஹரி கதை செய்வதில் "ராஜா மடம் சுந்தர பாகவதர்" என்று மிகவும் பிரபலம் அடைந்தார் அவர்.

சிறுவன் ராமநாதனுக்கு ஐந்து வயதிலேயே சங்கீத சிட்சை ஆரம்பமாகிவிட்டது. அவர் யாரிடம் இசை பயின்றார் என்பது போன்ற விவரங்கள் எதுவும் பதிவாகவில்லை. பிற்காலத்தில் ராமநாதன் அளித்த பேட்டிகளில் கூட தனது கடந்த காலம் தொடர்பாக எதையும் குறிப்பிட்டிருக்கவில்லை என்றே தோன்றுகிறது.

இசை மீது கொண்ட ஆர்வம் காரணமாக தீவிரமாக பயிற்சியை மேற்கொண்டு கடுமையாக உழைத்தார் அவர்.

தினமும் ஐந்து ஆறு மைல் தூரம் நடந்தே சென்று இசையை கற்று வந்ததோடு தினமும் விடியற்காலையில் கழுத்தளவு தண்ணீரில் இருந்துகொண்டு சாதகம் செய்தார்.

வாய்ப்பாட்டை போலவே ராமநாதனுக்கு ஒரு வாத்தியத்தின் மீதும் தீவிரமாக காதல் இருந்தது. அது தான் ஹார்மோனியம்.

ஹார்மோனியம் வாசிப்பதில் அசுரத்தனமான இல்லை இல்லை ராட்சசத்தனமான பயிற்சியை மேற்கொண்டார் அவர்.

அதன் கட்டைகளை தரையில் கரிக்கட்டையால் வரைந்து அந்தக் கட்டங்களை படு வேகமாக விரல்களால் மாறி மாறி தொட்டு பயிற்சி மேற்கொண்டு அந்த வாத்தியத்தை தன் வசப்படுத்திக்கொள்ள முயன்றார் ஜி.ராமநாதன். தன் முயற்சியில் வெற்றியும் பெற்றார் அவர்.

ஹார்மோனியத்தில் தேர்ந்ததும் தன் தமையனாரின் ஹரி-கதைகளுக்கு ஹார்மோனியம் வாசித்துக்கொண்டு பின்பாட்டு பாடுபவாரக தனது கலை உலக வாழ்க்கைக்கு பிள்ளையார் சுழி போட ஆரம்பித்தார் ராமநாதன்.

அவரது கலை உலக வாழ்க்கைக்கு சரியான அஸ்திவாரமாக அவரது அண்ணாவின் ஹரிகதா காலட்சேபங்கள் அமைந்தன.

கடந்த நூற்றாண்டின் மத்தியம காலம் வரை ஹரிகதை என்ற அருங்கலை போற்றிப் பாதுகாக்கப் பட்டு வந்தது. இன்றைய தலை முறையினர் நினைப்பது மாதிரி அது ஒன்றும் வெறும் "திமிகிட திமிகிட வாத்ய மிருதங்கம்" அல்ல.

பதினேழாம் நூற்றாண்டில் மராத்திய மன்னர்கள் தமிழகத்தை ஆண்டபொழுது தான் ஹரிகதா காலட்சேபங்கள் "பஜனை சம்பிரதாயத்தோடு" தமிழ் மண்ணுக்கு அறிமுகமாயின.

இந்த ஹரிகதை என்பது இயல், இசை, நாடகம் ஆகிய மூன்றும் கலந்த கலவை. பக்தி மார்க்கத்தை பரப்புவதில் முன்னிலை வகித்தது.

"அட. இது என்ன சார். உபன்யாசங்கள் - இன்னும் சரியா சொல்லப்போனா ஆன்மீக சொற்பொழிவுகள் தானே" என்று நினைக்கிறவர்களுக்கு.. சாதாரணமான சொற்பொழிவுகளுக்கும், ஹரிகதைக்கும் வித்யாசம் உண்டு.

உபன்யாசம் செய்பவர் உரைநடையில் பேசுவதில் மட்டும் வல்லுனராக இருந்தால் போதும். ஆனால் ஹரிகதா காலட்சேபம் செய்பவரோ பேசுவதில் மட்டும் அல்ல.. பாடுவதிலும், பாவனைகளை வெளிப்படுத்தி நடிப்பதிலும், சமயத்தில் நடன முத்திரைகளை அபிநயிப்பதிலும் கூட வல்லுனாராக இருக்கவேண்டும். பன்மொழி வித்தகராக இருக்கவேண்டும். வேதங்கள், ஸ்லோகங்கள், கீர்த்தனைகள், ராக ஆலாபனைகள், தமிழ், தெலுங்கு பாடல்கள், மராத்திய அபங்கங்கள், ஹிந்தி பஜன்கள் என்று அனைத்தையும் அறிந்தவராக இருப்பதோடு மட்டும் அல்ல. அவற்றை அளவோடு பயன்படுத்துவதில் சமர்த்தராகவும் இருக்கவேண்டும். இதிகாசங்கள், அவற்றின் கிளைக்கதைகள், உபகதைகள் ஆகியவற்றோடு கூட பொது அறிவிலும் அன்றைய நாட்டு நடப்புகளை கதையோடு அழகாக சொல்ல வல்லவராகவும் இருக்கவேண்டும்.

"ஹரி கதை கேட்கவரும் மக்கள் பல தரப்பட்ட ரசனைகள் உடையவர்களாக இருப்பார்கள். அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்வதில் ஹரி கதை நிகழ்த்துபவர் வல்லவராக இருக்கவேண்டும்." - என்று கல்யாணபுரம் ஆராவமுதாச்சாரியார் குறிப்பிடுகிறார்.

ஒருவரே பல வேடங்களையும் ஏற்று நடித்துக்காட்டவேண்டும். கிட்டத்தட்ட ஒரு "ஓரங்க நாடகம்" போன்றது அது. காட்டுக்கு ராமனை அனுப்ப வரம் கேட்கும் கைகேயியும் அவரே. வரம் கொடுத்துவிட்டு தவிக்கும் தசரதனும் அவரே. அன்றலர்ந்த தாமரையை வென்று கானகம் புறப்படும் ராமனும் அவரே. நின் பிரிவினும் சுடும் பெருங்காடும் உள்ளதா என்று கேட்டு ராமனைப் பின்தொடரும் சீதையாகவும் லக்ஷ்மணனாகவும் அவரே மாறி மாறி அபிநயிக்கவும் வேண்டும்.

இப்படி எல்லாம் ஒரு ஹரி கதை வித்தகர் உணர்ச்சிபூர்வமாக நவரசங்களையும் வெளிப்படுத்துகிறார் என்றால் அப்போது பக்க வாத்தியங்கள் "பக்கா"வாக இருந்தால்தானே
நிகழ்ச்சி சோபிக்கும்?

பெரும்பாலும் ஹரிகதைக்கு பக்க வாத்தியங்களாக  மிருதங்கமும், ஹார்மோனியமும் மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்தன. பின்னாளில் ஹார்மோனியத்தின் இடத்தில் வயலினும் சுருதி பெட்டியும் ஆக்கிரமித்துவிட்டாலும் ஹார்மோனியம் காட்சிக்கேற்ற உணர்ச்சிகளை மனத்தில் பரவ விடுவதில் முன்னோடியாக விளங்கியது.

அண்ணன் சுந்தர பாகவதர் நிகழ்த்தும் ஹரிகதை நிகழ்ச்சிகளுக்கு தனது ஹார்மோனிய வாசிப்பினால் உயிரூட்டினார் ஜி. ராமநாதன் என்றால் அது மிகை அல்ல.

பிற்காலத்தில் காட்சி அமைப்புகளுக்கு ஏற்ற ராகங்களை சட்டென்று தேர்ந்தெடுத்து இசை அமைக்கும் அவரது இசைப் புலமைக்கு இது சரியான அஸ்திவாரமாக அமைந்தது.
கிட்டத்தட்ட அதே சமயத்தில் மேடை நாடகங்களும் பரவலாக அமைந்து மக்களின் இசை ரசனைக்கு சரியான தீனி போட்டன.

காலட்சேபங்களில் "ஹார்மோனிய" வாசிப்பில் ராமநாதன் காட்டிய திறமை அவரை நாடக மேடைக்கும் அழைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்புகளை இளைஞர் ராமநாதன் சரியாகப் பயன் படுத்திக்கொண்டார். நாடகங்களுக்கு வாசிப்பதில் வருமானமும் அதிகம். பிராபல்யமும் அதிகம்.

அந்தக் காலத்தில் இரண்டு வகை ஹார்மோனியங்கள் பயன்படுத்தப் பட்டு வந்தன. ஒன்று.. இடது கையால் துருத்தியை முன்பின்னாக இயக்கி வலது கை விரல்களால் ஸ்வர ஸ்தானங்களை இசைக்கும் சாதாரண ஹார்மோனியம். இரண்டாவது வகை.. கால்களால் துருத்தியை இயக்கி இரண்டு கைகளாலும் ஸ்வர ஸ்தானங்களை இசைக்கும் "கால்" ஹார்மோனியம். இரண்டிலும் அபாரமாக வாசிக்கும் திறமையை கைவரப் பெற்றிருந்தார் ராமநாதன்.

சாதானரனமாக நாடகங்களில் இடைவேளைகளிலும், நடிகர்கள் ஆடை மாற்றும் நேரத்திலும் மக்களுக்கு சலிப்பு தட்டாமல் இருக்க ராஜபார்ட் வேடம் ஏற்கும் நடிகர் மேடையில் பாடுவார். அவருக்கும் ஹார்மோனியக் கலைஞருக்கும் இடையில் போட்டி நடக்கும். நாடக விளம்பரத்திலேயே "இன்னார்.. பாட்டு.. ஜி. ராமநாதன் ஹார்மோனியம். வெற்றி யாருக்கு என்பதை காண வாருங்கள்." - என்று விளம்பரப் படுத்தப் படும் அளவுக்கு ராமனாதனின் புகழ் வளர்ந்தது.

ஹார்மோனியக் கட்டைகளில் மீது அவர் விரல்கள் பரவும் லாகவமும், வேகமும் அவருக்கு "FAST FINGER " ராமநாதன் என்று பட்டப்பெயரை வாங்கிக் கொடுத்தன.

இப்படி பெயரும் புகழும் பெற்று சுந்தர பாகவதரும், அவரது தம்பி ஜி. ராமநாதனும் வெற்றி நடை போட்டுக்கொண்டிருந்த போதுதான்....

மக்களின் கவனத்தை தன பக்கம் திருப்பிக் கொள்ள ஒரு புதிய பொழுது போக்கு சாதனம் வந்தது.

அதுதான் 'பேசும் சினிமா".

சிகரம் தொடுவோம



__________________
Jo


முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 786
Date:
Permalink   
 

///அதன் கட்டைகளை தரையில் கரிக்கட்டையால் வரைந்து அந்தக் கட்டங்களை படு வேகமாக விரல்களால் மாறி மாறி தொட்டு பயிற்சி மேற்கொண்டு அந்த வாத்தியத்தை தன் வசப்படுத்திக்கொள்ள முயன்றார் ஜி.ராமநாதன்./// avaroda aarvam epdiyellam irunthuruku....... great..... waiting for the next part.....

__________________
உன் தேடலோ.. காதல் தேடல்தான்.. என் தேடலோ.. கடவுள் தேடும் பக்தன் போல.. j@
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

//உபன்யாசம் செய்பவர் உரைநடையில் பேசுவதில் மட்டும் வல்லுனராக இருந்தால் போதும். ஆனால் ஹரிகதா காலட்சேபம் செய்பவரோ பேசுவதில் மட்டும் அல்ல.. பாடுவதிலும், பாவனைகளை வெளிப்படுத்தி நடிப்பதிலும், சமயத்தில் நடன முத்திரைகளை அபிநயிப்பதிலும் கூட வல்லுனாராக இருக்கவேண்டும்.//

/*nice but i think it is very difficult to pronounce these words*/

wel try....

**ALL THE BEST**


__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

//அன்னையும் தந்தையும் தானே. பாரில் அண்ட சராசரம் கண்கண்ட தெய்வம்//

*Very True*



__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard