மாலை நேரம் வழக்கத்துக்கு மாறாக இருள் அதிகமாயிருந்தது. வெற்றிச் செல்வனின் வீட்டுக் கூடத்தில் எட்வர்ட் அமர்ந்திருந்தான். அகிலன் அவனைச் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தான். வெற்றிச் செல்வன் ஏதோ வேலையாய் உள்ளுக்கும் வெளிக்குமாய் நடந்து கொண்டிருந்தான். எட்வர்ட் கொஞ்சம் பதற்றத்துடன் இருந்தான். அவ்வப்போது தன் கைக்கடிகாரத்தையும், கைபேசியையும் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் பத்து நிமிடங்கள் கழிந்தன. லேசாக தூரல் போட ஆரம்பித்திருந்த சமயம், எட்வர்டின் கைபேசி ஒலித்தது.
“சொல்லு ஜெனிஃபர்…” எட்வர்ட் பேசினான்.
“நாங்க வந்தாச்சு… இங்க கீழ தான் இருக்கோம்… இன்னும் ரெண்டு நிமிஷத்துல வந்துடுவோம்….” அவள் சொன்னாள்.
“ஜேம்ஸ் எப்படி இருக்கான்…?” எட்வர்ட் கவலையுடன் கேட்டான்.
“அமைதியா இருக்கான். எந்த டென்ஷனும் இல்லாம தான் இருக்கான்….” அவள் சொன்னாள்.
“சரி வாங்க….” அவன் சொல்லிவிட்டு தொடர்பை துண்டித்தான்.
அகிலனை தன்னருகே இழுத்து தன்னுடன் வைத்துக் கொண்டான். அவன் இதயம் இரு மடங்கு வேகமாய் துடித்தது போய் இப்போது இருநூறு மடங்கு வேகமாய் துடிக்கத் துவங்கியது.
அழைப்பு மணி ஒலித்தது.
வெற்றிச் செல்வன் கூடத்துகு வந்தான். கதவைப் பார்த்தான். ஏனோ தெரியவில்லை அவன் கைகள் உதறின. அவனுக்கு படபடப்பாய் இருந்தது.
“எட்… நீங்க கதவ திறங்களேன்…” அவன் சொன்னான்.
“வெற்றி… பதட்டப்படாத… போய் கதவ திற… நீதான் திறக்கணும்…” எட்வர்ட் அவனை அமைதிப்படுத்தினான்.
“எனக்குத் தெரியும் எட்… என் ஜேம்ஸ் வந்திருக்கான்… எனக்குத் தெரியும்…” வெற்றிச் செல்வனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “என் மனசு சொல்லுது…. அவன் வாசனை வருது…. அவன் தான் வந்திருக்கான்…” வெற்றிச் செல்வன் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. அவன் கால்கள் வலுவிழந்துவிட்டன. அவன் எட்வர்டைப் பார்த்தான். அந்தப் பார்வையில் கெஞ்சல் இருந்தது.
“வெற்றி… எழுந்து போ…. நீ இத்தன வருஷம் காத்திருந்தியே, அந்த ஜேம்ஸ் வந்திருக்கான்… போ வெற்றி…” எட்வர்ட் அமைதியாய்ச் சொன்னான். ஆனால் அவன் இருந்த நிலையில் இருந்து கொஞ்சம் கூட அசையவில்லை.
வெற்றிச் செல்வனின் கால்கள் முற்றிலும் செயலிழந்து விட்டன. அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. எப்படியோ அருகிலிருந்த சுவற்றைப் பிடித்து எழுந்து நின்றான். அவனுக்கு நெஞ்சு படபடத்தது. கதவு வரை சுவரைப் பிடித்துக் கொண்டே நடந்தான். கதவின் தாழ்ப்பாளை மெல்லத் திறந்தான். கதவு மெதுவாக திறந்து கொண்டது. அவன் கண்களை அகலவிரித்துப் பார்த்தான். ஜேம்ஸ்…. அவனுடைய ஜேம்ஸ்… அவனும் வலுவிழந்த கால்களுடன் தள்ளாடி நின்றிருந்தான். வெற்றிச் செல்வன் தன் வலது கையை நீட்டினான். ஜேம்ஸ் அந்தக் கையை பற்றிக் கொண்டான். வெற்றிச் செல்வன் ஜேம்ஸை இழுத்து அணைத்துக் கொண்டான். ஜேம்ஸ் வெற்றியின் மார்பில் முகம் புதைத்தான். கண்களை இறுக மூடிக் கொண்டான்.
நமக்கெல்லாம் கண்களை மூடியவுடன் என்ன தோன்றும்….? இருட்டாய் இருக்குமல்லவா…? ஆனால், ஜேம்ஸுக்கு இருட்டாய் இருக்கவில்லை… எங்கும் பேரொளி… ஒளிவெள்ளம்…. அவனைச் சுற்றி இருக்கும் உலகின் எந்த ஒரு இயல்பும் அவனை வந்தடையவில்லை. அவன் புலன்கள், பஞ்சபூதங்கள் என எல்லாம் மங்கிப் போயின. அவனுக்கு எதுவும் தெரியவில்லை. பேரொளி…. வெற்றியின் குரல் மட்டுமே காதுகளில் ஒலித்தது. அவனைச் சுற்றி குளிர்ச்சியான கரங்களின் அணைப்பு இருந்தது. அவன் உடலோ, உள்ளமோ வலியில் இருக்கவில்லை… உணர்ச்சிகளின் மறுபக்கத்தை அடைந்துவிட்ட நிலை. வெற்றிச் செல்வனின் தேகமும் அப்படித்தான். இருவரும் இன்னும் எத்துணை யுகங்களுக்கு இப்படி இருந்தார்களோ தெரியாது….
வெற்றிச் செல்வன் மட்டும் தன்னிலை பெற்றான். சுற்றும் முற்றும் பார்த்தான். இன்னும் கதவு வழியிலேயே நிற்பதை அறிந்தான். மெதுவாக ஜேம்ஸை அணைத்துக் கொண்டு கூடத்திற்கு வந்தான். ஜெனிஃபர் பைகளை சுமந்து கொண்டு உள்ளே வந்தாள். எட்வர்டை கட்டி அணைத்துக் கொண்டாள். அகிலனுக்கு முத்தம் கொடுத்தாள். அகிலன் சற்று பயம் கலந்த பார்வையுடன் தன் தந்தை யாரோ இன்னொரு ஆண்மகனைக் கட்டியணைத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தான்.
வெற்றிச் செல்வன் ஜேம்ஸை இறுக்கமாகக் கட்டிக் கொண்டான். ஜேம்ஸ் யாரையும் கண்டு கொள்ளவேயில்லை. அவன் வெற்றிச் செல்வனின் அணைப்பை விடவில்லை.
எட்வர்ட் அகிலனிடம் கேட்டான்.
“அகிலன்… நீ இன்னைக்கு என்கூடவும் இந்த ஆண்ட்டி கூடவும் வந்துடுறியா…?”
அகிலன் உற்சாகமாகத் தலையை அசைத்தான். எட்வர்ட் நேரம் கடத்தாமல், அகிலனைத் தூக்கிக் கொண்டு, ஜெனிஃபரையும் அழைத்துக் கொண்டு வெற்றிச் செல்வனிடம் சைகை செய்துவிட்டு அறையை விட்டு வெளியேறினான்.
இப்போது வெற்றிச் செல்வனும் ஜேம்ஸும் மட்டும் தனியாக… ஐந்து ஆண்டுகள் கழித்து. வெளியே கடும் மழை, இடி மின்னல் என அல்லோலகல்லோலப் பட்டது.
வெற்றிச் செல்வன் மெதுவாய் அழைத்தான்.
“ஜேம்ஸ்….”
ஜேம்ஸின் உடல் முழுதும் உணர்ச்சிகள் பரவின. அவன் மயிர்க்கூச்சமெறிந்தான். ஐந்து ஆண்டுகளாக கேட்கக் காத்திருந்த அந்த வார்த்தை. அந்தக் குரல். அந்த நபர்… ஜேம்ஸின் மேனி முழுதும் பூரித்தது. அவன் காதுகளில் தேன் வந்து பாய்ந்த உணர்ச்சி. அந்த சொல்லின் ஆழம், அந்தக் குரலின் மென்மை அவன் காது வழியாக மூளையை அடைந்த அந்த நொடியில், அவன் இறுக்கமான மனமும் சற்று தளர்ந்து, அவன் கனத்த கண்கள் கார்மேகம் போல் மாறி, கண்ணீர் மழையைப் பொழிந்தன.
“ஜேம்ஸ்…” இன்னுமொரு முறை அழைத்தான் வெற்றி.
ஜேம்ஸ் தன் முகத்தை தூக்கி, வெற்றிச் செல்வனைப் பார்த்தான். ஐந்தாண்டுகளாய் காணத்தவித்த முகம். வெற்றிச் செல்வன் ஜேம்ஸின் நெற்றியில் முத்தமிட்டான். ஜேம்ஸின் பிறப்பு பரிபூரணமடைந்த உணர்ச்சி.
“வெற்றி…” ஜேம்ஸ் அழைத்தான்.
இப்போது வெற்றியின் உணர்ச்சிகள் கரையைக் கடக்கும் நேரம். அவன் உருகினான். குரலின் அலைகள் பரவிய சூட்டில் அவன் மெழுகு போல் உருகினான். தன்னை வெற்றி வெற்றி என ஜேம்ஸ் அழைப்பான எனக் காத்திருந்த அந்த பொழுதுகளின் தவங்கள் பலித்து வரம் கிடைத்தாற் போல அவன் மகிழ்ந்தான்.
இருவரின் கண்களும் கலந்தன. பார்வையின் பரிமாற்றங்கள் வார்த்தைகளை தேவையற்றதாய் மாற்றின. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ என்ற கம்பனின் கேள்வி இங்கு எழுந்தது.
இவர்கள் என்ன ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஓரிரு ஆண்டுகள் காதலராய் இருந்தனரா என்ன…? இல்லையில்லை… ஐந்தாறு பிறப்புகளாய் காதலர்கள். பிறவி பிறழ்ந்து மீண்டும் இச்சையில் கரைந்து காதலில் கலந்து சந்திக்கும் உணர்ச்சி. ஒரு குழந்தை திருவிழாக் கூட்டத்தில் சில நிமிடங்கள் தாயை தவறவிட்டுவிட்டு பின் அவளைப் பார்த்ததும் எப்படி ஓடி வந்து அவள் புடவையில் ஒளிந்து கொண்டு இந்த புற உலகை தவிர்க்குமோ அவ்வாறு ஜேம்ஸ் எனும் குழந்தை உள்ளம் கொண்ட இவனும் தன் தாய் போல் அன்பு செலுத்தும் வெற்றியைக் கண்டு கொண்டான்.
இரவு உணவைப் பற்றி இருவரும் கவலைப் படவில்லை. வெற்றி, ஜேம்ஸை தன் மார்பு மீது சாய்த்துக் கொண்டான். எவ்வளவு இரவுகள் இதற்காக ஏங்கிக் கொண்டிருந்தான். இருவரும் ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்டு, மெல்லிய குரலில் நிறைய பேசினர். ஐந்தாண்டு கதைகளைப் பேச வேண்டுமல்லவா…
“வெற்றி… நீ எனக்காக எல்லாரையும் விட்டுட்டு வந்துட்டியா…? சித்தும்மாவும் எனக்காக எல்லாரையும் விட்டுட்டு வந்துட்டாங்களா…? சே… எதையுமே நான் புரிஞ்சிக்காம தெரிஞ்சிக்காம போயிட்டேனெ… எனக்கு கிடச்ச அம்மாவயும் நான் மிஸ் பண்ணிட்டேன்… உன்னோட வாழ்க்கையிலயும் அஞ்சு வருஷத்த வேஸ்ட் பண்ணிட்டேன் வெற்றி…” ஜேம்ஸ் சொன்னான்.
“இல்ல… ஜேம்ஸ்… நான் எல்லா மனுஷங்களயும் புரிஞ்சுகிட்டேன்… எனக்கு அகிலன் கிடச்சான். உன் மேல எனக்கு எவ்ளோ காதல் இருக்குன்னு நானே அப்ப தான் தெரிஞ்சிகிட்டேன்… எவ்ளோ காதல் தெரியுமா ஜேம்ஸ்… இந்த உலகத்துல அளவிட முடியாத விஷயங்கள்ல நம்ம காதலும் ஒண்ணு… நாம ரெண்டு பேரும் இந்த பிரபஞ்சத்துல ஒரு சின்ன புள்ளி தான். ரொம்ப ரொம்ப சின்ன புள்ளி… ஆனா, நம்மள சுத்தி இருக்குற காதல் ஒரு பெரிய வெளிச்சம்… ரொம்ப பெரிய வெளிச்சம்… இந்த பிரபஞ்சமே பார்க்க முடியாம கண்கூசுற அளவுக்கு பெரிய வெளிச்சம்…
நீ தினமும் என்ன வெற்றி வெற்றினு கூப்பிடுறது என் காதுல எப்பவும் கேட்டுகிட்டே இருக்கும்… உன்னோட இந்த சுகந்தமான வாசன, எப்பவும் எனக்கு வரும்…. ஆனா, இந்த நெஞ்சு தான் காலியா இருக்குறா மாதிரி தோணும்… உன்னோட இந்த மெத்துனு இருக்குற கன்னம் வச்சு நீ தூங்குனா தான் எனக்கு தூக்கமே வரும்… நாம ரெண்டு பேரும் காரணமே இல்லாம அஞ்சு வருஷ தூக்கத்த தொலச்சிட்டோம் இல்ல ஜேம்ஸ்…?” வெற்றி இன்னும் இன்னும் பேசிக் கொண்டே போனான்.
அவர்கள் இரவு முடிய முடிய பொழுது விடிய விடிய பேசிக்கொண்டே இருந்தனர். காலங்களைக் கடந்து பேசினர். அந்த நான்கு சுவர்களும் தங்களை இந்த இன்பத்தில் வெள்ளையடித்துக் கொண்டன. ஏனோ வெளியே பெய்த மழை நிற்கவேயில்லை…. பூமி நனைய நனைய மழை பெய்து கொண்டே இருந்தது. ஜேம்ஸ் கொஞ்சம் கொஞ்சமாய் இறுக்கம் தளர்ந்தான். இருவரும் சகஜமாகினர். வெளியுலகை, அவர்களை விரும்பும் மனிதர்களைச் சந்திக்க நேரம் வந்துவிட்டது.
வெற்றியும் ஜேம்ஸும் எழுந்து குளிக்கச் சென்றனர். ஜேம்ஸின் முதுகு எங்கும் தழும்புகள். வெற்றி அவற்றை பார்த்த மாத்திரத்தில் கதற் அழுதான். அவனை சமாதானப் படுத்துவதற்குள் ஜேம்ஸுக்கு போதும் போதுமென்றாகி விட்டது.
”வெற்றி… உன்ன காதலிச்சதுக்காக எனக்கு கிடச்ச பரிசு இது… உன் மேல இருக்குற லவ்வுக்காக இன்னும் எத்தனை தழும்பு வந்தாலும் எனக்கு பெரிசுல்ல… எனக்கு அன்னைக்கு அடி வாங்கும் போது வலிச்சது தான். ஆனா, என் வெற்றிக்காக அடி வாங்குறேன்னு நினச்ச போது வலிக்கவே இல்லை… உன் கை வந்து என்ன தழுவும் போது அந்த வலியெல்லாம் மறந்துடும்னு எனக்குத் தெரியும்… இந்த தழும்பு ஒண்ணொன்னும் நம்ம காதல் எவ்ளோ ஆழமானதுன்னு சொல்லுது…”
குளியல் முடிச்சு, இருவரும் கூடத்தில் வந்து அமர்ந்திருந்தனர். வெற்றியின் வீட்டு தொலைபேசி அழைத்தது.
“ஹலோ.. வெற்றி ஹியர்…”
“…..”
“சொல்லுங்க ஃபாதர்….”
“…..”
“ஓ… மை காட்… அப்படியா…? எப்ப ஃபாதர்…?”
“…..”
“ஃபாதர்… ஜேம்ஸ் வந்துட்டான் ஃபாதர்… நேத்து தான் வந்தான்…”
“…..”
“சரிங்க ஃபாதர்… நான் அவனை கட்டாயம் கூட்டிட்டு வந்துடுறேன்…”
“….”
“தாங்க்யூ ஃபாதர்…”
இணைப்பு துண்டிக்கப்பட்டது.
“என்னாச்சு வெற்றி…? யாரு பேசினா…? ஜேக்கப் ஃபாதரா பேசினாரு…?” ஜேம்ஸ் ஆவலுடன் கேட்டான்.
“யெஸ் ஜேம்ஸ்… அவருதான்… அகிலனோட பாட்டி மணிமேகலைனு ஒரு அம்மா இருந்தாங்க… அவங்க நேத்து ராத்திரி தவறிட்டாங்களாம்… நாம உடனே சென்னை போகணும்… நீ கண்டிப்பா என் கூட வரணும் ஜேம்ஸ்…” வெற்றிச் செல்வன் சொன்னான். அவன் மனசு வலித்தது. ஜேம்ஸின் தாயார் இறந்துவிட்டாள். இப்போது அதை அவனிடத்தில் சொல்ல முடியாத நிலை.
வெற்றிச் செல்வன் எட்வர்டை அழைத்தான். ஜேம்ஸுக்குத் தெரியாமல் அவனிடத்தில் விஷயத்தை சொன்னான். எல்லாருமாய் சேர்ந்து அடுத்த விமானத்தில் சென்னை சென்றனர்.
“ஜேம்ஸ்… நீ திரும்ப வந்துட்டதுல எனக்கு பரம சந்தோஷம்… ஆனா, இப்ப அந்த சந்தோஷத்த முழுசா அனுபவிக்க முடியாத நிலைல இருக்கேன்… இந்த அம்மா இந்த ஆசிரமத்துல சேர்ந்து எவ்ளோ சேவை செஞ்சிருக்காங்க.. அவங்க இறந்து போனதுல எனக்கு துக்கம் அதிகம்…” ஜேக்கப் பாதிரியார் ஜேம்ஸிடத்தில் சொன்னார்.
ஜேம்ஸ் மவுனமாக இருந்தான். வெற்றிச் செல்வன் அவனை தோளில் தட்டினான்.
“வெற்றி… என்னானு தெரியல எனக்கு இந்த அம்மாவோட இறப்பு ரொம்ப துக்கத்த கொடுக்குது…” ஜேம்ஸ் சொன்னான். அவன் மனம் கொஞ்சம் கலங்கியிருந்தது.
“ஜேம்ஸ் நான் உன்னை ஒரு ஹெல்ப் கேக்கணும்…” பாதிரியார் சொன்னார்.
“என்ன ஃபாதர்... இப்படியெல்லாம் கேக்குறீங்க…” ஜேம்ஸ் அவர் கையைப் பிடித்துக் கொண்டான்.
“ஜேம்ஸ்… இந்தம்மா மணிமேகலை ஒரு ஹிந்து. அவங்க மத வழக்கப்படி அவங்கள எரிக்கணும். அதுவும் அவங்க தலைப் பிள்ளைதான் கொள்ளி போடணும். ஆனா, அவங்க குழந்தைய பிறந்தவுடனயே குப்பைத் தொட்டியில போட்டுட்டாங்க… இங்க இந்த ஹோம்ல ரொம்ப நாளா இருக்காங்க… இங்க இருக்குற பிள்ளைங்கள தன் பிள்ளை போல பாத்துகிட்டாங்க… இப்ப அவங்களுக்கு கொள்ளி போட ஒரு பிள்ளை வேணும். நீ தான் இப்ப இந்த ஹோம்ல தலைப்பிள்ளை. நீ அவங்களக்கு கொள்ளி போடுவியா…?” பாதிரியார் அமைதியாகக் கேட்டார்.
ஜேம்ஸுக்கு திகைப்பு கூடியது. பாதிரியார் கேட்டதை அவனால் மறுக்கவும் முடியவில்லை. ஆனால், ஏற்றுக் கொள்ளவும் ஏதோ தடுத்தது. அவன் திரும்பி வெற்றியைப் பார்த்தான்.
“ஒத்துக்கோ ஜேம்ஸ்… உனக்கு ஒரு அம்மா இருந்தா செஞ்சிருக்க மாட்டியா…? அது மாதிரி நினச்சு செய்…” வெற்றிச் செல்வன் சொன்னான்.
ஜேம்ஸ் தலையாட்டினான்.
ஜேம்ஸை வைத்து எல்லா சடங்குகளும் செய்யப்பட்டது. பாதிரியார் அவனை மிகுந்த நன்றியோடு பார்த்தார்.
“ஜேம்ஸ்… இந்த அம்மா, வாழ்ந்த காலத்துல பல கஷ்டங்கள அனுபவிச்சாங்க… சரியான வாழ்க்கை வாழல இவங்க… தன் பிள்ளையையும் கடைசிவரைக்கும் பார்க்க முடியல… இவங்களுக்கு எதுவுமே ஒழுங்கா நடக்கல… இப்ப இந்த ஈமச்சடங்காவது ஒழுங்கா நடக்குதே… அந்த அம்மா ஆன்மா சாந்தியடஞ்சிடும்… அதுவும் உன்னால தான்…” அவர் சொன்னார்.
ஜேம்ஸுக்கு அழுகை வந்தது. மணிமேகலையின் முகத்தை உற்று பார்த்தான். எங்கோ பார்த்த முகமாகத் தோன்றியது. அவளுக்கு ஒரு பிள்ளை இருக்கிறான். எங்கோ ஒரு மூலையில் இந்த உலகில். அவன் இன்று தான் உண்மையிலேயே அநாதை ஆகிறான் என்று ஜேம்ஸ் நினைத்துக் கொண்டான். ஒரு வேளை தன் தாயும் கூட இப்படித்தான் யாரோ ஒருவரின் கொள்ளிக்காக காத்திருப்பாளோ என்று நினைத்தான். அவனுக்கு அழுகை அதிகமாய் வந்தது. ஒருவேளை இவளே தன் தாயாக இருந்தால்….? என்று நினைத்தான். அவனால் சோகத்தை பொறுக்க இயலவில்லை. வெற்றியின் தோள்களில் சாய்ந்து கொண்டு குலுங்கி குலுங்கி அழுதான். அவன் உள்ளம் அவனுக்கே தெரியாமல், அவனைப் பெற்றவளுக்காக அழுதது. தான் அநாதையான உணர்வு இப்போது அவனுக்கு இல்லை. ஏனெனில், வெற்றி இருக்கிறான். அகிலன் இருக்கிறான். எட்வர்ட் இருக்கிறான். அழகிய குடும்பம் ஜேம்ஸுக்கு இருக்கிறது. இருந்தாலும், இந்த தாயை நினைத்து அழுதான். அவன் மூட்டிய தீயில் சிதை கொழுந்து விட்டு எரிந்தது. ஒரு மகன் தன் தாய்க்கு கொள்ளி வைக்கிறான். அவளைத் தாய் என்று தெரிந்து கொள்ளாமலேயே… ஒரு தாயின் நெஞ்சு வேகிறது. தன் மகன் தான் தனக்கு கடைசி கடனைச் செய்தான் என்று அறியாமலேயே… சுடுகாட்டின் தெளிவான வானத்தில், சிதையின் தீப் புகையின் சுருள்கள் மறைந்து கொண்டிருந்தன. ஜேம்ஸ் மேல் நோக்கி வானத்தைப் பார்த்தான். ஏனோ அவன் மனம் அமைதி அடைந்தது.
தன் வாழ்வின் இன்பங்களை அவன் அடைந்து விட்ட உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அவன் திரும்பிப் பார்க்காமல் வெற்றியின் கைகளைக் கோர்த்துக் கொண்டு சுடுகாட்டை விட்டு சென்றான். அவர்கள் இந்தக் கைகளை விட்டுவிடாமல் வாழ்க்கை பயணம் முழுவதும் செல்வார்கள். அவர்கள் ஒருவரையொருவர் பிரியமாட்டார்கள். அவனின்றி இவனில்லை. இவனின்றி அவனில்லை…..
நீயின்றி நானில்லை....nice ending....no words...the true love always suceed...in most of the stories they prove it with tragedy end nd I dont like that....bcaz it discourage the real lovers...so please write more with happy ending...I enjoyed the story very much....
//“எனக்குத் தெரியும் எட்… என் ஜேம்ஸ் வந்திருக்கான்… எனக்குத் தெரியும்…” வெற்றிச் செல்வனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “என் மனசு சொல்லுது…. அவன் வாசனை வருது…. அவன் தான் வந்திருக்கான்…”// உண்மையான அன்பின் வலிமையை அழகாக கூறியிருக்கிறீர்கள்.. பாராட்ட வார்த்தைகளே இல்லை..
எனக்குத் தெரியும் எட்… என் ஜேம்ஸ் வந்திருக்கான்… எனக்குத் தெரியும்…” வெற்றிச் செல்வனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. “என் மனசு சொல்லுது…. அவன் வாசனை வருது…. அவன் தான் வந்திருக்கான்…” வெற்றிச் செல்வன் அப்படியே தரையில் அமர்ந்துவிட்டான். அவனால் எழுந்திருக்கவே முடியவில்லை. அவன் கால்கள் வலுவிழந்துவிட்டன.