Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: என் மனம் உனக்காக - 4


எழுத்தரசர்

Status: Offline
Posts: 196
Date:
என் மனம் உனக்காக - 4
Permalink   
 


ஒரு கணம்.  ஒரே ஒரு கணம்தான் அந்த அதிர்ச்சி அரவிந்தனை தாக்கியது.  அடுத்த கணம் சுதாரித்துக்கொண்டான் அவன்.  
 
"இதெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தது தானே?  நடக்காமல் இருந்தால் தானே ஆச்சரியம்? "
 
அம்மாவின் புலம்பல்கள், அப்பாவின் குமுறல்கள் எல்லாமே அவனுக்கு புதிதல்ல.  
 
இருந்தாலும் அது வீட்டை விட்டே வெளியேறச் சொல்லும் அளவுக்கு போகும் என்பது ...
 
"என்னடா மரம் மாதிரி நிக்குறே?  அதிர்ச்சியா இருக்கா?  உனக்கே இப்படி இருந்தா எங்களுக்கெல்லாம் எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தியா நீ?"  -  ராமதுரையின் குரல் உச்ச பட்ச அதிர்வில் ஒலித்தது.
 
நிதானமாகவே பதிலளித்தான் அரவிந்த்.
 
"எல்லாத்தையும் நினைச்சு பார்க்காமலா நான் முடிவெடுப்பேன்னு நினைக்கிறீங்க?" -
 
"என்னடா நினைச்சிருக்கே?  ஒவ்வொரு மனுஷனுக்கும் ஏதாவது ஒரு பலவீனம் இருக்கத்தான் செய்யும்.  அதை சரி பண்ணிக்கணும்.  முடியாவிட்டால் அட்லீஸ்ட் அதை மறைச்சுகிட்டாவது வாழப் பாக்கணும்.  இப்படி எடுத்தேன் கவுத்தேன்னு பகிரங்கமா  அதை வெளிப்படுத்திக்கிட்டா  இந்த சொசைட்டியில் அவன் அப்புறம் தலை நிமிர்ந்து நடக்க முடியுமா?"  என்று படபடப்புடன் பேசிக்கொண்டு வந்த ராமதுரை சட்டென்று குரலில் கனிவை கொண்டுவந்தார்.
 
அதுதான் அரவிந்தனின் பலம்.  அவன் முகத்தை பார்த்து நேருக்கு நேர் யார் பேசினாலும் கோபப்படவே முடியாது.  அப்படியே கோபப்பட்டாலும் அந்தக் கோபத்தை ரொம்ப நேரம் அவர்களால் வைத்துக்கொள்ள முடியாது.  அப்படி ஒரு முகராசி அவனுக்கு.
 
"அரவிந்த்.  உன்னை என்னாலே கோவிச்சுக்க முடியலே.  உனக்கே தெரியும்.  நீ எனக்கு எவ்வளவு செல்லம் என்பது.  அப்படி இருக்குறப்போ எங்களுடைய அன்பை கொஞ்சம் கூட பொருட்படுத்தாம நீ கண்டபடி பேட்டி கொடுக்குறதும்..  விவாகரத்து வாங்கிகொள்ளுறதும்.   எங்களுக்கு எல்லாம் எவ்வளவு மனவருத்தத்தை கொடுக்கும் என்று கொஞ்சம் கூட நினைச்சே பார்க்கவில்லையா நீ?"  ராமதுரையின் குரல் கனிந்து கரகரத்தது.
 
"டாட்.  நீங்க என்னை அவ்வளவு நேர்மையா வளர்த்து இருக்கீங்க.  உள்ளே ஒண்ணு வச்சுக்கிட்டு வெளியே வேஷம் போடத்தெரியாதவனா என்னை வளர்த்து வச்சு இருக்கீங்க. "உங்க மகனுடைய வெளிப்படையான குணம் தான் அவனை இந்த அளவுக்கு ஜெயிக்க வைக்குதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பீங்களே.  அந்த நேர்மையை எல்லா விஷயத்துலேயும் கடைப்பிடிக்கணும் என்று நான் நினைக்கிறேன்.  அதை பத்தி நீங்க பெருமைப்படுவீங்கன்னு நெனைச்சா.." - அரவிந்த் முடிக்கவில்லை.
 
"இந்த விஷயத்துல நான் எப்படிடா பெருமைப் போடமுடியும்?  என் மகன்  ஆண்மையே இல்லாதவன்னு சொன்னாக்கூட தாங்கிக்க முடியும்.  ஆனா..  ஆண்களோட உறவு வச்சுக்கிறவன் என்று சொல்லுறதை எப்படிடா பெருமையா நினைக்க முடியும்?  உன்னாலே எங்க உணர்வுகளை புரிஞ்சுக்க முடியாது அரவிந்த்.  ஏனென்றால் நீ இப்போ வரைக்கும் ஒரு மகனாகத்தான் இருந்துகிட்டு இருக்கே.  ஒரு தகப்பனா ஆகவே இல்லை.  அப்படி ஒரு நிலைமை வந்தால் தான் எங்களை போல பெற்றவர்களோட மனநிலையை நீ உணர்ந்துகொள்ள முடியும்.  எங்கே?  அதுக்கெல்லாம்தான் சந்தர்ப்பமே இல்லாம போயிடுச்சே."  -  மனக்குமுறல்களை வார்த்தைக் கணைகளாக்கி வீசினார் ராமதுரை.
 
ஆனால் - அந்தக் கணைகள் எதுவுமே அரவிந்தனைக் காயப்படுத்தவில்லை.
 
"அப்பா.. உங்க உணர்ச்சிகளை என்னாலே நன்றாக புரிஞ்சிக்க முடியுது.  நீங்களும் அம்மாவும் இந்த ஒரு விஷயத்துல படுற வேதனைகளை என்னாலே நல்லாவே புரிந்து கொள்ள முடியுது.  ஆனால்.  புரிந்துகொள்ளத்தான் முடியுதே தவிர  என்னை மாற்றிக்க முடியவில்லை.  சரிப்படுத்த முடியாத விஷயங்களை சகித்துக் கொள்ளத்தான் வேண்டுமே தவிர அதோட மல்லுக்கட்டி நிக்கிறதாலே ..."   முடிக்காமல் நிறுத்தினான் அரவிந்த்.
 
ராமதுரையால் எதுவுமே பேச முடியவில்லை.  ஜானகிக்கோ கண்ணீர் விடுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.
 
கனத்த மவுனம் அங்கு நிலவியது.
 
அந்த மவுனத்தைக் கலைத்தான் அரவிந்த்.
 
"அப்பா.  நீங்க சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நான் தனியாகப் போகிறதாகத்தான் இருந்தேன்.  நீங்களே அடையாறு பங்களாவில் போய் இருந்துக்கச் சொல்லிட்டீங்க.  அப்படியே நான் செய்துக்கிறேன் டாட்."  என்றான் அரவிந்த்.
 
"டேய் அரவிந்த்.  என்னடா இது?  பெரிய இவனா ஆயிட்டியோ?  அதெல்லாம் ஒன்னும் வேணாம்.  அப்பா ஏதோ கோவத்துல சொல்லிட்டாரு.  அவரை நான் சமாதானம் செய்துக்கிறேன்.  உள்ளே போடா." - அதுவரை பேசாமல் இருந்த ஜானகி அழுத்தம் திருத்தமாகப் பேசினாள்.
 
"இல்லே அம்மா. அது வந்து.." என்று ஏதோ பேச வந்த மகனை "நீ எதுவும் பேசவேண்டாம்.  என் பேச்சுக்கு கட்டுப்படுறதா இருந்தா உள்ளே போ." என்றாள் ஜானகி.
 
"ஜானு..  என்ன பேசறே நீ?  அவன் இங்கே எப்படி..."  என்று ஆரம்பித்த ராமதுரையிடம்.."என்னங்க பேசறீங்க?  விரலில் ஏதாச்சும் காயம் பட்டுச்சுன்னா  விரலையே எடுத்து எறிந்துவிட முடியுமா?  அரவிந்த் நம்ம பையன்க.  அவனோட உணர்வுகளுக்கு நாமே மதிப்பு கொடுக்காவிட்டால் வேற யாருங்க கொடுக்க முடியும்?"  - என்றாள் ஜானகி.
 
ராமதுரை எதுவும் பேசவில்லை.
 
ஜானகியை தொடர்ந்தாள்:
 
"இதோ பாருங்க.  குறையே இல்லாத மனிதர்கள் என்று யாரையுமே சொல்ல முடியாது.   சரி தவறு எல்லாமே அவரவர் பார்வையைப் பொறுத்தது.  நமக்கு குறையாகத் தெரிவது அடுத்தவங்களுக்கு நிறைவாகத் தெரியலாம்.  பணம் நிறைய இருக்குற நமக்கு பணமே இல்லாதவர்களை பார்த்தால் ஒரு படி குறைவாகத் தெரியலாம்.  ஆனால்  அவங்களிலேயும் கூட அதைக்கூட ஒரு குறைபாடாக நினைக்காம நிம்மதியா ஏத்துக்கிட்டு ஆசைகளை குறுக்கிக்கிட்டு நிறைவான வாழ்க்கை வாழுறவங்களா எத்தனை பேரை நாம பார்த்துக்கிட்டே இருக்கோம்?  அது மாதிரி அரவிந்த் கிட்டே குறைவாக நமக்கு தெரியுற இந்த விஷயத்தைக் கூட ஒரு நிறைவாக ஏத்துக்கிட்டு தன்னளவுலே சந்தோஷமா வாழ நினைக்கிறான் அவன்.  அவனை நாம ஏங்க ஒதுக்கி வைக்கணும்? ஒரு தாயாக என்னாலே என் மகனை புரிஞ்சுக்க முடியுது.  ஆனாலும் எனக்குள்ளே அது ஒரு உறுத்தலைக் கொடுக்குறது என்னமோ நிஜம் தான்.  அதுக்காக  நம்ம மகனை நாமே விட்டுக்கொடுக்க முடியுமா?  உங்களாலே முடியுமோ என்னவோ என்னாலே அது முடியாதுங்க.. கண்டிப்பா என் உயிர் இருக்குற வரைக்கும் என் மகனை என்னாலே விட்டுக்கொடுக்க முடியாதுங்க.  ஊரு ஒலகத்துலே ஒருத்தரை ஒருத்தர் மறைச்சு எத்தனையோ தப்புகளை பண்ணுறவங்க, பொண்டாட்டிக்கு தெரியாம சின்ன வீடு வச்சுக்குறவங்க, புருசனுக்கு தெரியாம கள்ளத் தொடர்பு வச்சுக்குறவங்களை எல்லாம் அவங்க சொந்த பந்தங்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டேங்குறாங்க.  அப்படி என்னங்க என் மகன் செய்யக்கூடாத குத்தத்தை செய்துவிட்டான்.  நேர்மையா ஒழுக்கமா கம்பீரமா வளர்ந்து நிக்கிறவன் அவன்.  அவனைப் போய் தலை குனிந்து வாழ வச்சுடாதீங்க."  படபடவெனப் பொரிந்து தள்ளினாள் ஜானகி.
 
ஒரு நிமிடம் தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டு ஜானகி அரவிந்தனை கூர்மையாகப் பார்த்தாள்.
 
"என்னுடைய கவலை கேள்வி எல்லாமே ஒண்ணே ஒண்ணுதான் அரவிந்த்.  இனிமேல் என்ன செய்வதாக முடிவெடுத்து இருக்கே?  பூரணையோட விவாகரத்தும் ஆகிடுச்சு.  இனிமேல் உன் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்வதாக இருக்கே அரவிந்த்?"  கேள்விக்கணைகளை வீசினாள் ஜானகி.
 
"அது வந்து..அம்மா..  அதை பற்றி உங்க கிட்டேயே  எப்படி ..." என்று மென்று விழுங்கினான் அரவிந்த்.
 
"அந்த அளவுக்காச்சும் கூச்சம் நாச்சம் எல்லாம் வச்சுக்கிட்டு இருக்கியே.  தேங்க்ஸ் அரவிந்த்." - என்றாள் ஜானகி.
 
"அப்படி எல்லாம் இல்லை அம்மா.  ஆயிரம் தான் இருந்தாலும் நீங்க ஒரு பெண்.  உங்க கிட்டே எதை பேசணும் எதை பேசக்கூடாதுன்னு..."- அரவிந்த் முடிக்கவில்லை.
 
"அதெல்லாம் உலக வழக்கப்படி நடக்குறவங்களுக்கு பொருந்தும்.  நம்ம குடும்பத்துலே அப்படியா.?  சரி.. நீ சொல்ல தயங்குறதுலே இருந்தே உன்னை புரிஞ்சிக்க முடியுது.  எதுவா இருந்தாலும் என்னுடைய மனப்பூர்வமான சம்மதமும் வாழ்த்துக்களும் உனக்கு உண்டு அரவிந்த்.." - அழுத்தம் திருத்தமாக வார்த்தைகள் ஜானகியிடம் வெளிவந்தன.
 
"தாங்க்ஸ் அம்மா.  என்னை ரொம்ப சரியா புரிஞ்சிக்கிட்டிருக்கீங்க.  இப்போதைக்கு நான் தனிக்கட்டை தான்.  பிசினஸ்ஸிலே தான் கவனம் செலுத்தப்போகிறேன்.  அதுக்காக சந்நியாசி இல்லே.இவ்வளவு தூரம் வெளிப்படையா நீங்க பேசியதால் நானும் வெளிப்படையாவே பேசறேன்.  எனக்கு ஏற்ற கே பார்ட்னரைத் தேர்ந்தெடுத்து அவனோட சேர்ந்து வாழப் போறேன்." என்றான் அரவிந்த்.
 
இவ்வளவு நேரம் பேசாமல் இருந்த ராமதுரை.. இப்போது பேச ஆரம்பித்தார்.
 
"அரவிந்த்.  உன்னுடைய வாழ்க்கையை உன் கையிலே தான் கொடுத்து இருக்கோம்.  ஏற்கெனவே நாங்க பண்ணிய தப்பை சரிப்பண்ணை நீ கோர்ட் படி ஏறவேண்டியதா போயிருச்சு.  நீ சொன்ன படி ஒரு "கே" யா நீ வாழனும் என்றால் அது இந்த வீட்டுலே சரிப்படாது.  ஏன்னா வயசு வந்த உன் தங்கச்சி இருக்கா.  அதனாலே நான் கோவத்துல சொல்லலே.. நிதானமா யோசிச்சு தான் சொல்லுறேன்..நீ அடையாறு பங்களாவில் தங்கிக்க.  அதுக்காக ஒரேயடியா எங்களை விட்டு பிரியுறதா அர்த்தம் இல்லே.  அப்போ அப்போ வந்து பார்த்துக்க.. நாங்களும் வந்து போய்க்கிட்டு இருப்போம்.  இப்படித்தான் வாழனும் என்று ஆகிவிட்டால் அதுக்கு தகுந்த மாதிரி மாறிக்கொள்வதுதான் யதார்த்தம்.  " என்றார் அவர் .  சொல்லி முடிக்கும் போது கண்களில் துளிர்த்த கண்ணீரை யாரும் அறியாமல் திரும்பி நின்று துடைத்துக்கொண்டார் அவர்.
 
ஒரு கணம் யோசித்த அரவிந்த் ஜானகியைப் பார்த்தான்.   
 
சூழ்நிலையை உணர்ந்த அமைதி அவளிடம் குடிகொண்டிருந்தது.
 
"அம்மா!  அப்பா சொல்லுறது எனக்கு சரின்னு படுது.  நீங்களும் அதை ஏத்துக்குவீங்கன்னு நினைக்கிறேன்.." என்ற அரவிந்த் தாயை நெருங்கி வந்து குனிந்து அவள் கால்களைத் தொட்டு மார்பில் ஒற்றிக்கொண்டவனாக "நான் வரேன் மாம்." என்று சொல்லிவிட்டு அங்கிருந்த தனது ரோலர் சூட்கேஸைத் தள்ளிக்கொண்டு தனது சாண்ட்ரோவை நோக்கி நகர்ந்தான்.
 
காரில் ஏறிக்கொண்டு அதை ஸ்டார்ட் செய்த அரவிந்தனுக்கு முன்னால் பறந்து விரிந்த சாலை தெரிந்தது.  
 
"என்னைப் புரிந்துகொண்ட ஒத்த கருத்தோடு என் வாழ்க்கையில் பயணிக்க நான் எதிர்பார்க்கும் கே-பார்ட்னர் கிடைப்பானா?"  
 
அரவிந்தனின் மனதுள் எழுந்த இந்தக் கேள்வி அவனது எதிர்காலத்தை பற்றி இருக்க.. அவனது மனமோ அவனது கடந்த காலத்தை ரீவைண்ட் செய்து பார்க்க ஆரம்பித்தது.
 
 
((தொடரும்..)


__________________
Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard