இத்தனை பேர் கூடி இருக்கிற ஒரு கூட்டத்தில் என்னை உறவுக்கு தைரியமாக அழைக்கிறார்கள் என்றால் என்னை என்னவென்று இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?
கதிரவனின் மனம் படபடத்தது.
மேலே அவனை யோசிக்கவிடாமல் தடுத்தது மேடையில் இருந்த ராமின் பேச்சு.
"நண்பர்களே.. நாங்கள் பேசியதை அதிலும் குறிப்பிட்டு ஒருவரை அதுவும் இங்கு பணிபுரியும் ஒரு பணியாளரை சுட்டிக்காட்டி பேசியது அவருக்குள் எப்படிப்பட்ட பாதிப்பை உருவாக்கி இருக்கும் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் நாங்கள் கூறியதன் கருத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். எங்கள் இருவருக்கும் மூன்றாவது நபரிடம் ஈடுபாடு ஏற்பட்டால் அதை இருவருமே பரந்த மனதுடன் ஏற்றுக்கொள்வோம் என்றே கூற வந்தோம். இப்படி திடீரென்று ஒரு மனிதரிடம் அவரது சம்மதம் சிறிதும் இல்லாமல் லாரன்ஸ் இப்படி ஒரு அறிவிப்பை விடுத்ததற்கு உண்மையிலேயே மனம் வருந்துகிறேன். அந்த நண்பர் எங்களை மன்னிக்க வேண்டும்." - என்றான் ராம்.
அனைவரும் கதிரவனைப் பார்த்தனர்.
தர்ம சங்கடத்துடன் நின்று கொண்டிருந்த கதிரவன் ஒரு தீர்மானமான முடிவுக்கு வந்தவனாக பரபரவென்று மேடையை நோக்கிச் சென்றான்.
அவன் தங்களை நோக்கி வருவதைக் கண்ட ராம் இன்முகத்துடன் அவனை வரவேற்றான்.
ராம் சந்தரை நெருங்கிய கதிரவன், "நான் கொஞ்சம் பேசலாமா?" என்று அவனிடம் அனுமதி கேட்டான்.
"ஷ்யூர்" - என்றபடி ஒலிபெருக்கியை அவன் கையில் கொடுத்தான் ராம்.
"அனைவருக்கும் வணக்கம். என் பெயர் கதிரவன். முதலில் நான் இந்த மாதிரி மற்றவர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கருத்தரங்கில் எங்கள் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் கலந்துகொள்ளக்கூடாது. எனக்கு இங்கு நடக்கும் நடவடிக்கைகளை மேற்பார்வை இட்டு கலந்து கொள்ளும் அங்கத்தினர்களுக்கு எந்தக் குறையும் இல்லாமல் கவனித்துக்கொள்வது மட்டுமே வேலை. அதை விடுத்து சம்பந்தம் இல்லாமல் இங்கு பேசியவர் என்னை ஈடுபடுத்தி பேசியதால் நானும் கலந்துகொண்டு பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. "- என்று கூறி ஒரு கணம் நிறுத்தினான்.
அங்கு பலத்த அமைதி நிலவியது.
கண நேர மௌனத்துக்குப் பிறகு கதிரவன் தொடர்ந்தான்:
"இங்கு நீங்கள் பேசுகிற விஷயங்கள் எல்லாம் எனக்கு புதிதாக இருக்கிறது. இன்பாக்ட் வியப்பாகவும் இருக்கிறது. இந்த "கே" உறவு என்பது முழுக்க கேள்விப்படாத ஒன்று. நான் சம்மதித்தால் என்னுடன் இந்த இரவை இன்பமாகக் கழிக்கத் தயார் என்று பேசிய நண்பருக்கு - அவரது துணிவையும், தைரியத்தையும் கண்டு முதலில் நான் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். என் மனம் என் வசம் இல்லை. அது இன்னொருவர் வசம் இருக்கிறது. அவரைத் தவிர யாரும் என்னுடன் உறவு வைத்துக்கொள்வதை நான் விரும்பவில்லை. அந்த நபர் ஆணா பெண்ணா என்பதைக்கூட நான் இங்கு வெளிப்படுத்த விரும்பவில்லை. ஏனென்றால் அது முழுக்க முழுக்க என்னுடைய அந்தரங்கமான விஷயம். அதனை மற்றவருடன் பகிர்ந்துகொள்ள இயலாத நிலைமையில் நான் இருக்கிறேன். என்னை புரிந்துகொள்வீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்." - படபடவென்று ஒரே மூச்சாக சொல்லி முடித்தான் கதிரவன். அப்போது அவன் மனக்கண் முன் திவாகரின் முகம் முழுக்க வியாபித்திருந்தது.
அவன் சொல்லி முடித்ததும் அங்கு பலத்த கைதட்டல் எழுந்தது.
அவன் முதுகைத் தட்டிக்கொடுத்த ராம் சந்தர்,"வெல்டன் மிஸ்டர். உங்கள் மனம் கவர்ந்த அந்த நபர் கண்டிப்பாக இங்கு இருக்கமாட்டார் என்று நம்புகிறேன். எங்களுக்கு சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கிறது.. என்றாலும் வி வில் டேக் எவரிதிங் ஸ்போர்ட்டிவ். உங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்."என்று கதிரவனின் கரம் பற்றி குலுக்கினான் ராம்சந்தர்.
"நன்றி சார்." என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்தான் கதிரவன். அவன் மனம் சற்று அடங்கியது போல இருந்தது.
மேடையில் கேள்விபதில்களை எதிர் கொண்டிருந்தனர் ராமும், லாரன்சும்.
"நீங்கள் இருவரும் தம்பதிகள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். அப்படி இருக்க மூன்றாவது நபர் ஒருவருடன் உறவு கொள்வது என்பது எப்படி சரியாக இருக்க முடியும்.?" -
"ஏன் இப்படிக் கேட்கிறீர்கள்?" - என்றான் ராம்.
"ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது தானே நமது பண்பாடு. கலாச்சாரம் எல்லாம். நீங்கள் இந்தியர்களாக இருந்துகொண்டு நமது கலாசார எல்லையை மீறினால் எப்படி சரியாகும்?" -
"நண்பர்களே . நாங்கள் இந்தியர்கள் என்பதை மறக்கவே இல்லை. இந்த தேசத்தை நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கிறோம். இந்த நாட்டின் பண்பாடு கலாசாரம் ஆகியவற்றை நாங்களும் போற்றுகிறோம். அதே சமயம் போற்றுவது என்பது வேறு. ஏற்றுக்கொண்டு அதன் வழி நடப்பது என்பது வேறு. அப்படி நீங்கள் சொல்கிற அளவுகோல் படி பார்த்தால் நாங்க ரெண்டுபேரும் திருமணம் புரிந்துகொண்ட வாழ்வது தவறானது தான். ஏனென்றால் நமது நாட்டில் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தான் திருமணமே நடக்க முடியும். அப்படிப் பார்த்தால் ஏற்கெனவே நாங்கள் இந்த நாட்டின் கலாசாரத்தை மீறியவர்களாகத்தான் இருக்கிறோம். நாங்கள் மட்டும் என்று இல்லை இங்கு ஒருபாலீர்ப்பு கொண்டவர்களாக இருக்கும் நாம் அனைவருமே இந்த கலாசார வேலிக்கு அப்பால் தான் நின்றுகொண்டிருக்கிறோம். நம்மைப் பார்த்து மற்றவர்கள் கேட்கும் முதல் கேள்வியே இதுதான்." என்று சொல்லி ஒருகணம் நிறுத்தினான் ராம்.
கூட்டத்தில் பயங்கர நிசப்தம் நிலவியது.
மேற்கொண்டு அவன் என்ன பேசப்போகிறான் என்பதையே அனைவரும் ஆவலாக எதிர்நோக்கினர்.
ஒரு கணம் நிதானித்த ராம் தொடர்ந்தான்.
"டியர் ப்ரெண்ட்ஸ். பாலுணர்வு என்பது இயற்கையில் அனைவருக்கும் பொது. அது யாருக்கும் யாரிடமும் ஏற்படலாம். இங்கு பிரபல பாலிவுட் நடிகர்கள் வந்திருக்கின்றனர். உங்கள் தமிழ் நாட்டின் முன்னணி நட்சத்திரங்களும் வந்திருக்கின்றனர். இங்கு வந்திருக்கும் பாலிவுட் நடிகர் தன் கட்டான உடலமைப்பால் அனைவரையும் கவர்ந்தவர். அவரது கட்டுடலைப் பார்க்கும் போது நமக்கே ஒரு கணம் இன்னதென்று சொல்லமுடியாத கிளர்ச்சி தோன்றும். அந்த கிளர்ச்சி தவறென்று சொல்லமுடியாது. அது அனைவருக்கும் பொதுவான ஒன்று. ஏன்.. நம்மில் பலர் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் நமது அபிமான நடிகர்களின் படத்தையோ, ஆனழகர்களின் படங்களையோ ஹாஸ்டல் அறையில் சுவர்களில் ஒட்டிவைத்துக் கொண்டிருப்போம். நீங்கள் கூறலாம் அது ஹீரோ வொர்ஷிப் என்று. இன்னும் சில பேர் அவர்களைப் போல உடற்கட்டைப் பேணவேண்டும் என்பதற்காகத்தான் அப்படி படங்களை சுவரில் ஒட்டிவைத்துக்கொள்வதாக கூறலாம். அதே சமயம் அடுத்தவர் அறியாமல் அவர்களது ஆண்மை நிறைந்த உடற்கட்டை ஒவ்வொருவரும் மறைமுகமாக ரசித்துக் கொண்டிருப்போம். அது இல்லை என்றால் அவர்கள் பொய் சொல்வதாகத்தான் நான் கூறுவேன். அனைவரும் இப்படி ஏதோ ஒரு விதத்தில் ஆண்களை ரசிக்கவே செய்கிறார்கள். ஆனால் சிலருக்கு வெறும் ரசனையை மீறிய ஏதோ ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்த ஈர்ப்பு அவர்களிடம் பாலுணர்வைத் தூண்டி விடுகிறது. அந்த உணர்வுக்கு ஒரு வடிகால் தேவைப்படும் போது எப்படி அதை தீர்த்துக்கொள்ள முடியும்? சக ரூம் மேட்டுடனோ அல்லது நெருக்கமான நண்பருடனோ கலக்க முற்படுகிறோம்.
இப்படி ஏற்படும் ஒருபாலின உணர்வு சிலருக்கு ஒரே ஒரு நண்பருடன் நின்றுவிடுகிறது. இன்னும் சிலருக்கு அவர்களை ஈர்க்கும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் தொடர்கிறது.
பொதுவாக நம்மில் ஒரு பழக்கம். நம்முடன் இணையும் ஆண்களிடம் பொதுவாக கேட்கும் ஒரு கேள்வி "உங்களுக்கு எப்படி கே செக்ஸ்லே ஈடுபாடு வந்துச்சு?" என்பதுதான். என்னமோ நமக்கு அதில் சுத்தமாக தொடர்பே இல்லாதது போல அவரிடம் கேட்டுக்கொண்டு இருப்போம். இப்படி ஒரு கேள்வியைக் கேட்காத ஒருபாலீர்ப்பாலரே கிடையாது. அப்படிக் கேட்டதும் அவர் சொல்லுவார் "அதுவந்து .. ஸ்கூல் டேஸ்லே கூடப் படிக்கற க்ளாஸ்மேட் அல்லது காலேஜ் ஹாஸ்டல்லே ரூம் மேட் பழக்கி விட்டான். என்பார். என்னமோ அந்த கிளாஸ் மேட்டுக்கோ அல்லது ரூம் மேட்டுக்கோ இதைத் தவிர வேறு வேலையே இல்லை என்பதுபோல. அதாவது இவன் ஒன்றுமே தெரியாத புத்தன் என்பது போலவும் அந்த நண்பன் தான் இதை அறிமுகப் படுத்தியது போலவும் பேசுவார்கள். இதை விட பெரிய அபத்தம் வேறு இருக்கவே முடியாது. யாரவது எஸ். ஐ ஹாவ் காட் அட்ராக்டேட் வித் மென். என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்வார்களா என்றால் நாட் ஈவென் எ சிங்கிள் பெர்சன் வுட் டூ இட். ஏனென்றால் இது கலாசாரத்துக்கு மாற்றானது என்ற பயம். அதே சமயம் இப்படி அவர் சொல்லக் கேட்கும் மற்றவருக்கோ "அட நம்ம மாதிரிதான் இவனும். படிக்கற காலத்துலே இருந்தே இப்படித்தானாமே . அப்போ இது நமக்கு மட்டும் தான் என்று இல்லே. நெறைய பேர் இப்படித்தான் என்று ஒருவிதமான ஆறுதல் அடைவார். நான் கேட்கிறேன் வொய் திஸ் ஹிப்பாக்ரசி? நண்பர்களே.. இப்படி ஈர்ப்பு ஏற்படுவது ஒன்றும் தவறல்ல. பெண்கள் மட்டும் தான் ரசனைக்குரியவர்களா என்ன? ஆண்களும் அப்படித்தானே. அழகு என்பது இருபாலினருக்கும் பொதுதானே ? இவர்கள் தான் ரசனைக்குரியவர்கள் என்று வரையறை ஏதாவது இருக்கிறதா என்ன? அந்த வகையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்களுடன் நமக்கு ஈடுபாடு ஏற்படுகிறது என்றால் அந்தக் கிளர்ச்சியை அவரும் ஏற்றுக்கொண்டார் என்றால் இருவரும் ஒன்றுபடுவது தவறல்ல." - என்று ஒரே மூச்சில் பேசி முடித்தான் ராம்.
கதிரவனுக்கு வியப்பாக இருந்தது. ராமின் ஒவ்வொரு வாதமும் அவனுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது.
"ஏன் சார். அப்படியானால் ஒருவன் ஒருத்தி என்பதெல்லாம் இந்த கே செக்ஸ் உறவுக்கு பொருந்தாதா?" - கூட்டத்தில் ஒருவர் கேட்டார்.
"நண்பர்களே. நமது திருமண பந்தப்படி ஒருவனுக்கு ஒருத்தி என்று தான் இருக்கிறது. ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் தான் கற்புநெறி என்ற ஒன்றை வைத்தார்கள். ஒருவனுக்கு ஒருவன் என்று எங்குமே குறிப்பிடவில்லை" என்றான் லாரன்ஸ்.
"இதை நான் கண்டிப்பாக மறுக்கிறேன்."- கூட்டத்தில் இருந்து குமார் என்பவன் எழுந்தான்.
மேடைக்கு வந்து மைக்கை வாங்கிக் கொண்டவன் பேச ஆரம்பித்தான்.
"நண்பர்களே. நமது கலாசாரம்-சட்டம் என்பது ஓரினச் சேர்க்கையை முறையானதாக ஏற்றுக்கொண்டு அங்கீகரிக்கவே இல்லை. ஒரு விஷயத்தை ஏற்றுக்கொண்டால் தானே அதை ஒரு ஒழுங்குமுரைக்குள் கொண்டுவர கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள் எல்லாம் கொண்டுவர முடியும்.? அதனால் தான் இந்த ஒருபாலீர்ப்பு விஷயத்தில் இன்னதுதான் சரி.. இது தவறு என்று ஒரு வரையறை வகுக்க முடியாமல் நாம் இருந்துகொண்டு இருக்கிறோம். இந்தவகையில் வரையறை வகுத்துக்கொள்வதோ இல்லாமல் இருப்பதோ அவர் அவர் மனதைப் பொறுத்த ஒரு விஷயம் என்று வேண்டுமானால் சொல்லுங்கள். அதை விடுத்து இதையும் நம் பண்பாட்டையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் என்பது எனது தாழ்மையான கருத்து" என்றான் அவன்.
நேரம் நகர்ந்துகொண்டே இருந்தது. ஒருவழியாக கருத்தரங்கம் முடிவுக்கு வந்தது. அனைவருக்கும் லஞ்சுக்கும் ஏற்பாடு செய்திருந்தது.
அனைத்தையும் ஓடியாடி மேற்பார்வை இட்டுக்கொண்டிருந்தான் கதிரவன்.
"பபே" சிஸ்டம். அனைவரும் அவர்களுக்கு தேவையான உணவை எடுத்துப் போட்டுக்கொண்டு சாப்பிட ஆரம்பித்தனர்.
அனைத்தையும் மேற்ப்பார்வை இட்டுக்கொண்டிருந்த கதிரவனை நெருங்கினான் ராம்சந்தர். பை தி வே உங்கள் பெயரைத் தெரிந்துகொள்ளலாமா?" என்று புன்னகையுடன் கேட்டான் அவன்.
"மிஸ்டர் கதிரவன். உங்கள் வெளிப்படியான பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உங்கள் மனம் போல் பார்ட்னர் கிடைத்தால் விட்டுவிடாதீர்கள். அவரையே திருமணமும் செய்துகொள்ளுங்கள். அடுத்த முறை உங்களை சந்திக்கும்போது தம்பதிகளாகத்தான் நான் சந்திக்கவேண்டும்." - என்றான் ராம்.
""என்ன சார் இது.. நீங்க வாழ்த்து எல்லாம் சொல்லறீங்க? இன்னும் நான் என் ஆளுகிட்டே இதுபத்தி ப்ரொபோஸ் பண்ணவே இல்லை. " - நாணத்துடன் சொன்னான் கதிரவன்.
"இஸ் இட்? இதில் எல்லாம் தள்ளியே போடக்கூடாது. நாளைக்கே சொல்லிவிடுங்கள். எத்தனை நாள் தான் மனசுக்குள்ளேயே போட்டு வச்சுகிட்டு இருப்பீங்க?" என்று உண்மையான அக்கறையுடன் பேசினான் ராம்.
மனம் முழுக்க திவாகரின் கம்பீரமான முகம் வியாபித்திருக்க - சந்தோஷப்பூக்கள் கண்களில் மலர புன்னகையுடன் "சரி"-என்று தலையாட்டினான் கதிரவன்.