பசுபிக் சமுத்திர தீவுகளில் ஒன்றான Tanna தீவில் வாழும் மக்கள், குறைந்தது ஆயிரம் வருட காலமாவது, வெளியுலக தொடர்பின்றி தனிமைப் பட்டு வாழ்ந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் எதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை.
இரண்டாம் உலகப்போரில் அமெரிக்கப் படையினர் தன்னா தீவில் வந்திறங்கினார்கள். விமானங்களில் வந்திறங்கி தளம் அமைத்த அமெரிக்கப் படையினரை கண்ட தீவுவாசிகள், அவர்களை கடவுளின் தேவ தூதர்கள் என்று நம்பினார்கள். அவர்கள் தேவ லோகத்தில் இருந்து விமானங்கள், கப்பல்களில் வந்திறங்கியதாக நம்பினார்கள். கார்கோ கப்பல்களில் வந்திறங்கிய கொக்கோ கோலா, மற்றும் டின்னில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களையும், தீவு மக்களும் உண்டு களித்தனர். அதை எல்லாம், கடவுள் தமக்காக அனுப்பி வைத்ததாக நம்பினார்கள்.
உலகப்போர் முடிந்து அமெரிக்கப் படையினரும் தீவை விட்டு வெளியேறினார்கள். அதற்குப் பின்னர், தேவதூதர்கள் மீண்டும் வருவார்கள் என்ற நம்பிக்கையில், தீவு மக்கள் ஒரு மதத்தை உருவாக்கினார்கள். அதற்குப் பெயர் "கார்கோ மதம்". விமானம் போன்ற வைக்கோல் உருவப் பொம்மைகளை செய்து வழிபட ஆரம்பித்தார்கள். அமெரிக்கர்கள் விட்டுச் சென்ற பாவனைப் பொருட்களும், புனிதத்திற்கு உரியனவாகின. இன்று வெளியுலக தொடர்புகள் அதிகரித்து, மக்களுக்கும் உண்மை தெரிய வந்து விட்டது. அதனால், பெருமளவு நம்பிக்கையாளர்கள் அந்த மதத்தை விட்டு விலகி விட்டனர். இருந்தாலும், இப்போதும் சிலர் கார்கோ மத சடங்குகளை பின்பற்றி வருகின்றனர்.
அந்த தீவு மக்களின் அறியாமையை நாம் புரிந்து கொள்ள முடியும். ஆனால், நமது நாடுகளில் வாழும், நாகரீகமடைந்த புதிய தலைமுறை இளைஞர்கள், அமெரிக்க கலாச்சாரத்தை ஒரு மத நம்பிக்கை போன்று பின்பற்றி வருகின்றனர். பீட்சா, பேர்கர், ஐபோன் என்று அமெரிக்கப் பொருட்களை வழிபட்டு வருகின்றனர். அமெரிக்கர்களின் நடை உடை பாவனைகளை பின்பற்றுகின்றனர்.
அமெரிக்க விசுவாசிகளான இன்றைய இளைஞர்களுக்கும், கார்கோ மத நம்பிக்கையாளர்களான தன்னா தீவுவாசிகளுக்கும் இடையில் அடிப்படையில் என்ன வேறுபாடு? —