ஓரினச்சேர்க்கையாளர் ஜோடி: தோழியின் பிரிவால் இளம்பெண் தற்கொலை
ஓரினச் சேர்க்கை தோழியாக தன்னுடன் இணை பிரியாமல் வாழ்ந்து வந்த தோழியின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியாத சோகத்தில் இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த நந்தினி(20) மற்றும் கார்த்திகா ஆகியோர் சிறுவயது முதல் நெருங்கிய தோழிகளாக பழகி வந்தனர்.
பருவ வயதை அடைந்தவுடன் அவர்களின் நெருக்கம் மேலும் அதிகரித்தது. பாலியல் ரீதியான ஈர்ப்பும் இருவருக்கிடையிலும் ஏற்பட்டது. தனிமை கிடைக்கும் போதெல்லாம் இவர்கள் கணவன் - மனைவி போல் இருந்துள்ளனர்.
இந்த தகாத சேர்க்கையை கண்ட இருவரின் பெற்றோரும் நந்தினியையும், கார்த்திகாவையும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
தங்களது அன்னியோன்ய வாழ்க்கைக்கும், தாம்பத்ய உறவுக்கும் பெற்றோர் தடைக்கற்களாக இருப்பதாக உணர்ந்த இந்த ஜோடி கடந்த 4ம் திகதி மதுரையில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நந்தினியின் பெற்றோர் காணாமல் போன தங்களின் மகளை தேடி கண்டுபிடித்து தரும்படி பொலிசில் புகார் அளித்தனர். மேலும், இதே கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுவையும் தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் தேடப்பட்டு வந்த ஓரினச் சேர்க்கை ஜோடியை பொலிசார் சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல் அருகே கைது செய்தனர்.
நந்தினி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவளை வெளியே போக அனுமதிக்காமலும், கார்த்திகாவை சந்திக்க விடாமலும் பெற்றோர் தடுத்துள்ளனர்.
இதனால் மனுமுடைந்த நந்தினி தனது அறையில் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
என்னை இந்த சமூகம் கேவலப்படுத்தி விட்டது. எனது உயிர் தோழியை என்னால் மறக்க முடியவில்லை. எனவே, இந்த உலகை விட்டு செல்கிறேன் என்று நந்தினி தனது தற்கொலை கடிதத்தில் எழுதி வைத்துள்ளார்.
கடிதத்தையும், பிணத்தையும் கைப்பற்றிய மதுரை பொலிசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.