சாலையில் கவனத்தை செலுத்தியபடியே ஒட்டிக்கொண்டிருந்த சோம சேகர் பாதையிலிருந்து பார்வையை எடுக்காமலேயே,"என்னடா இப்போ திருப்திதானே?" - என்று சந்துருவை நோக்கிக் கேட்டார்.
"என்னடா இது? நீ சொன்ன மாதிரியே கதிரவனுக்கு ஏதோ ஒருவகையிலே உதவி பண்ணி இருக்கோமே. அதுலே திருப்தி இல்லையா உனக்கு?" - என்று கேட்டார் சோம சேகர்.
"ப்ச். போடா. என்னுடைய சொத்துக்கெல்லாம் வாரிசா இருக்கவேண்டியவனை இப்படி இருபத்தையாயிரம் ரூபாய் கொடுத்து வேலை செய்யுற சம்பளக்காரனா ஆக்கி வச்சிருக்கோம். எல்லாம் சரியா இருந்திருந்தா இந்த கம்பெனிக்கே முதலாளியா வரவேண்டியவண்டா அவன். அவனை அதே கம்பெனியிலே ஒரு வோர்க்கரா ஆக்கிட்டு திருப்திதானேன்னு வேற கேட்கிறாயேடா?" - எரிச்சலுடன் கேட்டார் சந்திரசேகர்.
"அப்போ ஒண்ணு செய்வோமா? நாளைக்கே - நாளைக்கு என்ன நாளைக்கு - இன்னிக்கு ஈவினிங்கே ஒரு போர்டு மீட்டிங்குக்கு ஏற்பாடு பண்ணறேன். கல்பனா, உன் மனைவி, திவாகர், என் மனைவி அப்புறம் நம்ம முக்கியமான கிளையண்ட்ஸ், ஆடிட்டர், அட்வகேட், லயன்ஸ் க்ளப் மெம்பெர்ஸ் இன்னும் சொசைட்டியிலே இருக்கற முக்கியமான பெரிய மனிதர்கள் என்று எல்லாரையும் அர்ஜெண்டா வரவழைப்போம். கதிரவனையும் வரச்சொல்லுவோம். அங்கே வச்சு எல்லாருக்கு முன்னாலேயும் கதிரவனை உன்னோட மகன் என்று பகிரங்கமா தெரியப்படுத்தி எல்லா விஷயத்தையும் சொல்லுவோம். அவன் பேருக்கு உன்னோட சோத்துலே சரிபாதியை உயில் எழுதறதுக்கும் ஏற்பாடு பண்ணிடுவோமா?" என்று கேட்டார் சோம சேகர்.
"அது அது.. அது எப்படிடா முடியும்? கல்பனா தான் என்ன நினைப்பா? என் மாப்பிளைக்கு அதுக்கப்புறம் என் கிட்டே மரியாதை இருக்குமா?" என்றார் சந்துரு.
"டேய்..என்னடா மூட் அவுட் ஆகிட்டியா.? இதோ பாருடா சந்துரு. வீணாக வேண்டாததை எல்லாம் நெனைச்சுக்கிட்டு உன் மனசையும் உடம்பையும் நீயே கெடுத்துக்காதே. இப்போ வரைக்கும் கதிரவன் கிட்டே ஜமுனா உன்னைப் பற்றி எதையும் சொல்லவே இல்லே. அவனுக்கு நீ தான் அப்பான்னு தெரியாது. அது தெரியாம இருக்கிறவரைக்கும் தான் எல்லாருக்கும் நல்லது. தெரிஞ்சு போய்விட்டால் அப்புறம் கதிரவன் உன் முகத்துலே காரித்துப்பிட்டு போய்க்கிட்டே இருப்பான். அவனை அடுத்தவங்க சொத்துக்கு ஆசைப்படாதவனா, தன்னம்பிக்கையோட சாதிக்க ஆசைப்படுறவனாத்தான் ஜமுனா வளர்த்திருக்கா. அவன் போக்கிலே அவன் முன்னேறி வரட்டும். அதை பார்த்து அதுவும் தூரத்துலே இருந்து பார்த்து சந்தோஷப் படத்தான் நீ செய்யணுமே தவிர உரிமை கொண்டாடி அவன் வாழ்க்கையிலே நிம்மதி இல்லாம பண்ணக்கூடாது. நீ சந்தோஷமா இருக்கணும்டா . மறுபடி மறுபடி சொல்லறேன். எனக்கு நீ தாண்டா முக்கியம். நீ மட்டும் தான் முக்கியம். உனக்காக என்னையே கொடுத்தவண்டா நான். அதனாலே நீ நிம்மதி இல்லாம தவிச்சா அதை என்னாலே தாங்கவே முடியாதுடா." - பேசப்பேச சோம சேகரின் குரல் கரகரத்தது.
"சோமு. ஆண்டவனுக்கு என் மேல கருணை அதிகம்டா. அதனாலே தான் உன்னை எனக்கு நண்பனா கொடுத்திருக்கான். நீ இவ்வளவு தூரம் என் நிம்மதியையும், சந்தோஷத்தையும் மட்டுமே பெரிசா நெனைக்கிறே. உன் சந்தோசம் அதுலேதான் என்றால் நான் இனிமேல் எதுக்காகவும் என் மனசை வருத்திக்க மாட்டேண்டா. கதிரவன் விஷயமா உனக்கு என்ன செய்யணும் என்று தோணுதோ அதை நீயே செய்துக்கடா. ஆனால் ஒண்ணு கதிரவன் என் மகன் தான் என்ற விஷயம் மட்டும் எந்தக் காலத்துலேயும் உன்னையும் என்னையும் தவிர வேற யாருக்குமே தெரியக்கூடாதுடா. முக்கியமா கல்பனாவுக்கோ மாப்பிள்ளைக்கோ கண்டிப்பா தெரியக் கூடாதுடா. " - என்றார் சந்திரசேகர்.
"அந்தக் கவலை உனக்கு வேண்டாம்டா. சத்தியமா என்ன ஆனாலும் சரி நீ தான் கதிரவனுடைய பிறப்புக்கும் அவன் அம்மாவுடைய வாழ்க்கை தடம் புரண்டதற்கும் காரணம் என்கிற உண்மையை என் உயிர் இருக்கிற வரைக்கும் எந்தச் சந்தர்ப்பத்திலேயும் நான் சொல்லவே மாட்டேண்டா. " - என்றார் சோம சேகர்.
"சோமு. இது போதும்டா எனக்கு. ரொம்ப தாங்க்ஸ்டா. " - என்று நெகிழ்ந்தார் சந்துரு.
அப்போது சோமசேகரின் மொபைல் ஒலித்தது.
எடுத்து எண்ணைப் பார்த்தார் .. மறுமுனையில் அழைத்தது திவாகர்.
"கல்பனா எல்லாம் நல்லாத்தான் இருக்கா. நீங்க ஏன் ஹோட்டலுக்கு வந்தீங்க? அதுவும் கதிரவனைப் பார்க்க வந்தீங்களாமே?" - திவாகர் இப்படி எடுத்த எடுப்பிலேயே விஷயத்துக்கு வருவான் என்று சோம சேகர் எதிர்பார்க்கவில்லை. பதில் சொல்ல முடியாமல் ஒரு கணம் தடுமாறினார் அவர்.
"அது வந்து..திவாகர். வேற ஒண்ணும் பெரிசா இல்லேப்பா. நீ அந்தப் பயனைப் பத்தி சொன்னியே அதைப் பேச்சோட பேச்சா உன் மாமனார் கிட்டே சொன்னேன். அவர்தான் எப்படியாச்சும் அவனுக்கு உதவனும்னு சொன்னாரு..அதான்.." சோம சேகர் முடிக்கவில்லை.
"வாட்? கல்பனா அப்பாகிட்டே கதிரவனைப் பத்திப் பேசினீங்களா? நான் உங்க கிட்டே அவனைப் பற்றி சொன்னதே தப்பு. அவனுடைய பெர்சனல் மேட்டரை ஊரெல்லாம் டாம் டாம் அடிச்சுட்டு இருக்கீங்களா? கதிரவனுக்கு தெரிஞ்சா என்னைப் பத்தி என்ன நினைப்பான்? ச்சே. என்ன டாட் நீங்க?" - மறுமுனையில் திவாகர் படபடத்தான்.
"ஹேய். திவா! என்னடா இது இப்படிப் பேசறே? ஏதோ பாவம் முன்னுக்கு வரவேண்டிய பையனை நல்லா வளர்த்துவிட நம்மால ஆன நல்லதைச் செய்வோம்னு நான் ஸ்டெப் எடுத்தா அதைப் போய் தப்பா நினைச்சுட்டு பேசறே!" - என்றார் சோம சேகர்.
"நீங்க ஒண்ணும் ண்ணவேண்டாம். கதிரவன் என் ஸ்டா ஃப். அவனுக்கு என்ன பண்ணணுமோ அதைப் பண்ண எனக்குத் தெரியும். இதுலே நீங்க ஒண்ணும் தலையிடவேண்டாம்." - என்று அழுத்தமாகப் பேசிவிட்டு இணைப்பைச் சட்டென்று துண்டித்தான் திவாகர்.
"என்னடா? மாப்பிள்ளை என்ன சொல்லறாரு?" - என்று கேட்டார் சந்திரசேகர்.
என்னதான் திவாகர் அவருக்கு சிறுவயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன் என்றாலும் எப்போது தன் மகளுக்கு மணமுடித்துக் கொடுத்து விட்டாரோ அப்போது முதல் மாப்பிள்ளை என்ற ஸ்தானத்துக்குரிய மரியாதையை கொடுக்கத் தவறவில்லை அவர்.
"அதுவா? அவனுக்கு என் மேல கோவம்டா. நீங்க எப்படி எனக்குத் தெரியாம வந்து கதிரவனைச் சந்திக்கலாம் என்று கத்தறாண்டா " என்றார் சோம சேகர்.
"அய்யய்யோ. அப்படியா. இப்போ என்னடா பண்ணுறது?" குரலில் கவலை தோய கேட்டார் சந்திர சேகர்.
"நீ ஒண்ணும் கவலைப் படாதேடா. திவாகர் என் மகன். நான் சொன்னா புரிஞ்சுக்குவான். ஈவினிங் வீட்டுலே போய் பேசிக்கறேன்." என்றார் சோம சேகர்.
"பாவம்டா நீ. என்னாலே உனக்குத் தான் எவ்வளவு கஷ்டம்." என்றார் சந்திரசேகர் நிஜமான கவலையோடு.
"இதுலே என்னடா இருக்கு. நான் யாருக்காக செய்யறேன். என் சந்துருவுக்காகத்தானே? இங்கே பாருடா. உனக்கு ஒரு கஷ்டம் வரணும் என்றால் அது என்னைத் தாண்டித்தாண்டா உன் கிட்டே வரமுடியும். " - என்றார் சோம சேகர்.
"ரொம்ப தாங்க்ஸ்டா." - சந்துருவின் குரல் தழதழத்தது.
"டேய். என்னடா? இதுக்கெல்லாம் போய் ஃபீல் பண்ணிக்கிட்டு." - என்ற சோம சேகர் ஸ்டியரிங்கின் மீதிருந்த தனது இடது கையை எடுத்து சந்துருவின் தொடை மீது வைத்து அழுத்தினார்.
நண்பனின் அந்த ஸ்பரிசம் சந்துருவுக்கு புது தெம்பைக் கொடுத்தது.
**********************
தனது அறையில் வேலையில் ஆழ்ந்திருந்த திவாகர், " மே ஐ கம் இன் திவாகர்" - என்ற குரலால் தலை நிமிர்ந்தான்.
கதவருகே கதிரவன் நின்றிருந்தான்.
"உள்ளே வாங்க" என்பது போல தலையசைத்தான் திவாகர்.
அவன் முன்னே வந்து அங்கிருந்த நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்த கதிரவன், "உங்க கிட்டே ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும் திவா." என்றான்.
கம்பீரமாக அமர்ந்த நிலையில் நன்றாக விரிந்து பரந்த அவனது கட்டான மார்பழகில் தன்னை ஒரு கணம் மறந்த கதிரவன் ஒருவாறாகச் சமாளித்துக்கொண்டு பேச ஆரம்பித்தான்.
"திவாகர். இன்னிக்கு காலையிலே நீங்க வீட்டுக்குப் போன கொஞ்ச நேரத்துக்கெல்லாம் உங்க அப்பாவும் மாமனாரும் வந்திருந்தாங்க." என்று ஆரம்பித்த கதிரவன் நடந்தவை அனைத்தையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தான்.
திவாகருக்கு பிரமிப்பாக இருந்தது.
கதிரவன் வணிகவியலில் முதுநிலைப் பட்டதாரி என்ற விஷயம் அவனுக்கு மட்டும் தான் தெரியும். தன் வீட்டில் யாருக்குமே இதுவரை தெரியாதே. அப்படி இருக்க அப்பா எப்படி அதனைத் தெரிந்து கொண்டு அதுவும் தான் இல்லாத நேரத்தில் வந்து கதிரவனிடம் இப்படி ஒரு பொறுப்பை கொடுக்கவிருப்பதை பற்றி பேசி இருக்கிறாரே!
"கதிரவன். இதுக்கு முன்னாலே என் அப்பா உங்களை மீட் பண்ணி இருக்காரா?" என்று கேட்டான் திவாகர்.
"ஆமாம் திவா. அன்னிக்கு ஒரு நாளைக்கு உங்களைப் பார்த்துவிட்டு போகிறபோது என்னையும் வந்து பார்த்துவிட்டுப் போனார்." - என்றான் கதிரவன்.
"அப்படியா? அப்போ நீங்க உங்க க்வாலிபிகேஷனைப் பற்றி அவர் கிட்டே எதாச்சும் சொன்னீங்களா?'
"இல்லையே திவாகர். நான் அப்படி எதுவும் சொல்லவே இல்லையே." என்றான் கதிரவன் எதார்த்தமாக.
சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்த திவாகர்,"ஓகே மிஸ்டர் கதிரவன். இன்பாக்ட் இதைப் பற்றி அவர் என் கிட்டே தான் முதலில் பேசி இருக்கணும். மற்றபடி அலுவலக வேலை நேரத்துக்கு அப்புறம் நீங்க பார்ட் டைம் வொர்க் பண்ணுவதில் எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. உங்களுக்கு இதனாலே ஒரு அடிஷனல் இன்கம் வருவதை நான் கெடுக்க மாட்டேன். பட் ஒன் திங். நீங்க கஸ்டமர் கேர்லே இருக்கீங்க. அதனாலே அப்பப்போ வர கால்ஸை நெக்லெக்ட் பண்ணாதீங்க. அவங்க கொடுக்கற வேலையை நல்ல படியா முடிச்சுக் கொடுங்க." - என்றான் திவாகர்.
"தேங்க்ஸ் திவா." என்று எழுந்த கதிரவன் சற்று தயக்கத்துடன், "அப்புறம் திவா.. வந்து..." என்று இழுத்தான்.
"என்ன?" என்பதைப்போல அவனைப் பார்த்தான் திவாகர்.
"வந்து.. உங்க மனைவி கோவிச்சுகிட்டு போனாங்களே. அந்த ப்ராப்ளம் சால்வ் ஆகிடுச்சா?" தயக்கத்துடன் கேட்டான் கதிரவன்.
"ஹ்ம்ம். நத்திங். பை காட்ஸ் கிரேஸ் எல்லாம் சரியாயிடுச்சு." என்றான் திவாகர் புன்னகையுடன்.
"அதான் எனக்கு வேணும். தேங்க்ஸ் திவாகர்." என்றபடி அறையை விட்டு வெளியேறினான் கதிரவன்.
அவன் வெளியேறியதும் திவாகரின் மனசுக்குள் பலவிதமான கேள்விகள் தலை தூக்க ஆரம்பித்தன.
அன்று அப்பா தன்னைப் பார்க்க ஹோட்டலுக்கு வந்ததும் கதிரவனைப் பார்க்கமுடியுமா என்று கேட்டதும் தான் இப்போது வேண்டாம் என்று மறுத்ததையும் நினைத்துப் பார்த்தான் அவன்.
அன்று தான் வேண்டாம் என்று சொல்லியும் கேட்காமல் கதிரவனைச் சந்தித்திருக்கிறார்.
அதன் பிறகு ஒரு வாரகாலமாக பிசினெஸ் விஷயமாக பெங்களூருக்கு போனவர் நேற்று தான் திரும்பி இருக்கிறார். வந்தவர் இன்று கல்பனாவின் அப்பாவுடன் வந்து கதிரவனைச் சந்தித்து அவனுக்கு கூடுதல் வருமானத்துக்கு வழி செய்து கொடுத்திருக்கிறார்.
எல்லாம் சரி. கதிரவனின் கல்வித்தகுதி அவருக்கு எப்படித் தெரிந்தது?
யோசிக்க யோசிக்க குழப்பமே தலை தூக்கி நின்றது அவனுக்கு.
அப்போது அவனது மொபைல் ஒலித்தது.
சரவணன். அவனது கல்லூரி நண்பன். சென்னையில் சொந்தமாக ஒரு விளம்பர நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி வருபவன்.
"ஹை. சரவணா. வாட் எ சர்ப்ரைஸ்? எப்படிடா இருக்கே?."என்று கேட்டான் திவாகர்.
"நல்லாத்தான் இருக்கேன். உன் மேல எனக்கு செம கோபம்டா "எடுத்த எடுப்பிலேயே குற்றம் சாட்ட ஆரம்பித்தான் சரவணன்.
"என்னடா மாப்ளே. நான் என்னடா தப்பு பண்ணினேன்?" என்று கேட்டான் திவாகர்.
"பின்னே என்னடா? உங்க அப்பாவோட நிறுவனத்துக்கு விளம்பரப் படம் எடுக்கணும் என்றால் என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? அதை விட்டுட்டு அவர் இங்கே வந்து அலையனுமா?" என்றான் சரவணன்.
"உங்க அப்பாவை நான் ரெண்டு நாளைக்கு முன்னாலே சென்னையிலே பார்த்தேண்டா. அதுவும் எங்கே தெரியுமா? அவரை மாதிரி பெரிய மனுசங்க தகுதுக்கு எல்லாம் வரவே கூடாத - எக்ஸ்ட்ரா நடிகைகள் சப்ளை பண்ணற ஏரியாவிலே பார்த்தேண்டா. ஒருவேளை அவரோட பிசினெஸ் ப்ராடெக்டுக்கு விளம்பரப் படம் எடுக்கறதுக்காக ஆள் தேடி வந்திருக்காரோன்னு நினைச்சுத்தான் உன்னைக் கூப்பிட்டேன்.' என்றான் சரவணன்.
"மாப்ளே. சொன்னா கோவிச்சுக்க மாட்டியே. சென்னையிலே வெய்யில் ரொம்ப அதிகமா? முதல்லே ஒரு நல்ல டாக்டரா பார்த்து உன்னைச் செக் அப் பண்ணிக்க. இல்லாவிட்டா நாலு எலுமிச்சம்பழத்தை வாங்கி தலைக்கு தேய்ச்சு குளிடா." என்றான் திவாகர் கிண்டலாக.
"என்னடா எனக்கு பயித்தியம்னா சொல்லறே ?"- என்றான் சரவணன்.
"பின்னே என்னடா மாப்ளே. என் அப்பா சென்னைக்கே வரலே. பிசினெஸ் விஷயமா பெங்களூருக்கு போயிருந்தாரு. அவரை சென்னையிலே அதுவும் எக்ஸ்ட்ராஸ் வசிக்கற இடத்துலே நீ பார்த்ததா சொன்னா வேற என்னடா சொல்ல முடியும்?" - என்றான் திவாகர்.
"டேய். உங்க அப்பாவை எனக்கு தெரியாதா ? நான் எத்தனை தடவை உங்க வீட்டுக்கு வந்திருக்கேன். அவர் கூட பேசியுமே இருக்கேனே. ஆமாடா. வேற யாரையோ பார்த்ததுக்கா நான் இப்படி வேலை மெனக்கெட்டு உனக்கு போன் போட்டு சொல்லிட்டிருப்பேன்? உடனேயே கேக்கணும்னுதான் நெனைச்சேன். பட் எங்கேடா முடியுது. செம டைட் வொர்க். இப்போ தான் நினைவுக்கு வந்தது. சத்தியமா உங்க அப்பாவைத்தாண்டா சென்னையிலே பார்த்தேன்." - என்றான் சரவணன் அழுத்தம் திருத்தமாக.
"போடா முட்டாள்" - என்று இரைந்தான் திவாகர் கோபமாக.
"நானாடா முட்டாள்?. உங்க கார் நம்பர் சொல்லட்டுமா? அப்பவாச்சும் நம்புவியா?" - என்று சோம சேகரின் கார் நம்பரை சரவணன் சொன்னதும் தீக்குள் விரலை வைத்தவனைப் போலப் பதறிப்போனான் திவாகர்.
"டேய். இது எங்க கார் நம்பர்தாண்டா. ஆனால் அப்பா எங்ககிட்டே பெங்களூருக்குப் போகிறதாத்தானே சொல்லிட்டுப் போனார் என்றான் திவாகர் பதைபதைப்புடன்.
"சரிதான். அப்போ. விஷயம் அப்படிப்போவுதா? பெரிய இடத்து சமாச்சாரம். கண்டுக்காதேடா. உங்க அப்பாவா இருந்தா என்ன வேற யாரா இருந்தா என்ன? சபலம் யாரை விட்டுச்சு. ஸாரிடா மச்சான். நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன். இதை பெரிசு படுத்திக்காதேடா." - என்று சொல்லிவிட்டு இணைப்பை துண்டித்தான் சரவணன்.
கூடை நிறைய நெருப்பை அள்ளித் தலையில் கொட்டியதைப் போலிருந்தது திவாகருக்கு.
சூப்பர்...கதையில் எந்த வழியிலோ தன் அப்பாவின் ஆதரவு கதிரவனுக்கு கிடைப்பது சந்தோசமாக இருக்கு...ஆனால் சோமசேகர் தான் கொஞ்சம் பயப்பட வைக்கிறார்...அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்....