‘காதல்’ – இதைவிட என் பிராயத்திலுள்ள மக்களுக்கு அதிக உத்வேகத்தையும், அதிக குழப்பத்தையும் தரக்கூடிய ஒன்று எதுவுமில்லை. எல்லா வலிமைகளையும் தரக்கூடியதும் அதுவே; எல்லா நம்பிக்கைகளையும் தகர்க்கக்கூடியதும் அதுவே. சமீபமாக, என்னைச் சுற்றி காதலாலும், காதல் என்ற பெயராலும் நிகழ்ந்த சில சம்பவங்களை இங்கு பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்…
சம்பவம் – 1:
என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவன், என் வகுப்பிலிருந்த இன்னொரு பெண்ணை காதலித்து வந்தான். ஒருதலைக்காதல்.. அவளுக்கு ஒருவாறாக அவன் காதல் தெரிந்திருந்தும், கடைசி வரை அவன் இவளிடம் தன் காதலை சொல்லவே இல்லை. அவ்வளவு ஏன், இருவரும் ஒருமுறை கூட பேசிக்கொண்டது இல்லை. இப்பொழுது படிப்பு முடிந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு திசை போன பின்னும், அவன் இன்னும் அவளையும் தன் காதலையும் மறக்க முடியாமல் இருக்கிறான்..
கடந்த வாரத்தில் ஒரு நாள் இரவு, குறுந்தகவல் மூலம் உரையாடிக்கொண்டிருந்தபோது, அவன் பணிபுரியும் இடத்திலும், தங்கியிருக்கும் இடத்திலும் பல கஷ்டங்கள் இருப்பதாகக் கூறினான்.. பிரதானமாகப் பணக்கஷ்டம். என்னால் இயன்ற தேற்றுதலைக் கூறி சமாதானம் செய்ய முயன்ற போது, அவன் சொன்ன வார்த்தைகள் : “ஏதாவது ஒரு கஷ்டம் வந்தா, அவள நினைச்சுக்குவேன் டா.. அவள நினைச்சுக்கிட்டா, எதையும் தாங்கிக்குற சக்தி வந்திடும்.. அவ நினைப்பு தான் என்னை வாழ வெச்சுட்டு இருக்குது”
- - -
சம்பவம் – 2:
இந்த சம்பவம் உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும்.. கடந்த மாத இறுதியில், ‘கே’ சமூகத்தில் நன்கு அறியப்பட்டிருந்த ஒரு காதல் ஜோடியில், ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். அது ’கே’ தளங்களில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளியில், மற்றவரும் தன்னை மாய்த்துக்கொண்டார். மரிப்பதற்கு முந்திய நாள், அவர் பதிந்த இடுகையை வாசித்துவிட்டு, ஒரு துளி கண்ணீரேனும் சிந்தாதிருந்தவர், கண்டிப்பாக மனித ஜாதியை சேர்ந்தவராயிருக்க மாட்டார்.
- - -
சம்பவம் – 3:
கல்லூரிகளையும் காதல் கதைகளையும் எந்தக் காலத்திலும் பிரிக்க முடியாது. இந்த சம்பவம் எங்கள் கல்லூரியின் இன்னொரு காதல் ஜோடியின் கதை. ஒருவகையில், எங்கள் கல்லூரி வாழ்வின் ஆதிக் காதல் இவர்களுடையது தான். கல்லூரி ஆரம்பித்து ஒரு மாதம் முடியும் முன்னரே, இவர்கள் காதல் துளிர்விட ஆரம்பித்துவிட்டது. அந்த இளைஞன், என்னுடைய நெருங்கிய நண்பனாயிருந்த காரணத்தினால், அவர்கள் விவகாரம் முழுதும் எனக்கு கொஞ்சம் நன்றாகவே தெரியும்.
எல்லா காதல் கதைகளையும் போல, இந்தக் காதலிலும் பூதாகரமான பிரச்சினைகள் வந்தன. அந்த இளைஞனின், அதாவது என் நண்பனின் தந்தை, என்னை தனிமையில் சந்தித்து, எப்படியாவது தன் மகனை இதிலிருந்து மீட்க உதவச்சொல்லிக் கேட்டுக்கொண்டார். இவர்கள் சேட்டைகள் குறித்து நான் அவரிடம் சொல்லப்போக, நண்பனிடம் ‘துரோகி’ என்ற பட்டம், சகவாஷ தோஷத்தினால் கல்லூரிப் பேராசிரியரிடம் கெட்ட பெயர் எனப் பல அனுகூலங்கள் எனக்கும் பரிசாகக் கிடைத்தன.
கல்லூரியின் நான்கு வருடங்களில், இவர்கள்தான் மிகப் பிரபலமான காதல் ஜோடி. இந்தப் பெண்ணுக்காக, அந்த இளைஞன் அவன் வீட்டைப் பகைத்துக்கொண்டு, மதிப்பையும் பாசத்தையும் இழந்து பரிதாபமான நிலைக்கு வந்தான். அவளுக்காக அவன் இழந்ததும், அவளுக்கு இவன் செய்தவையும் கொஞ்சமல்ல. அவளால் கிட்டத்தட்ட தன் மொத்தத்தையும் இழந்தான்.
இவற்றுக்கிடையே, ஓரிரு நாட்களுக்கு முன்னர் அந்தப் பெண்ணிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது: “எனக்கு வீட்டில் திருமணம் செய்ய வரன் பார்த்துவிட்டார்கள். (வேறு ஒரு பையனைத்தான்!) வீட்டின் கட்டாயத்தால் என்னால் மறுக்க முடியவில்லை. ஜனவரியில் நிச்சயதார்த்தம் இருக்கும். தேதி நிச்சயமானதும் சொல்கிறேன்”
- - -
முதல் சம்பவத்தில் குறிப்பிட்ட அந்த நண்பனைப் பற்றி நினைக்கும்போது, வாழ்வில் ஒரு நம்பிக்கையும் காதலின் மீது ஒரு மரியாதையும் வந்தது. அவனைப் போன்ற ஒருவன் எனக்கு நண்பனாயிருப்பதே பெருமை என்று எண்ணுகிறேன். இரண்டாவது சம்பவத்தில், அவர்கள் எடுத்த முடிவு வருந்தத்தக்கதாய் இருந்தாலும், அவர்கள் காதலின் வலிமை என்னை சிலிர்க்க வைத்தது. ‘கே’ என்றால் வெறுமனே உடல் சுகத்திற்காய் அலைபவன் என்ற பிம்பத்தை சுக்கு நூறாக்கியவர்கள் அவர்கள்; அமரர்கள். மூன்றாவது சம்பவம்? என் வாயால் நான் ஏதும் சொல்ல விரும்பவில்லை.
காதல் என்பது இருவரின் குறை நிறையோடு ஏற்றுக்கொள்ளும் அன்பாக இருந்தால் அவர் நம்மோடு இருந்தாலும் இல்லாவிட்டாலும் நம்மை வாழவைக்கும்...அதற்கு கொஞ்சம் பொறுமையும் நிறைய வலிமையான மனதும் வேண்டும்...அது இருந்தால் எந்த நிலையிலும் யோசிக்கும் தன்மை நமக்கு வரும்....நாம் என்பது நம் கடமையும் சேர்த்தது so இருவரும் சேர்த்து எடுக்கும் முடிவு இருவரின் வாழ்வும் உயர்ந்து அடுத்த உயர்நிலை செல்வது போல் இருக்க வேண்டும்...நீங்கள் சொன்ன காதல்களில் இரண்டாவது காதல் தவிர மற்ற இரண்டும் கொஞ்சம் யாதார்த்தம் மீறிய கற்பனை உலகு காதல் (that is celloid love in cinema) என்றே தோன்றுகிறது...இரண்டு கையும் இணைந்தால் தானே ஓசை...அவர்கள் வாழ்வில் ஜெயிக்க இது தடைக்கல்லாக நினைத்து தாண்ட வேண்டும் வாழ்வில் தான் டம்மி பீஸ் இல்லன்னு நிருபிக்கணும் அவள் வந்தாலும் போடீன்னு சொல்லணும்....நாமும் நேசிக்கணும் நம்மையும் அவர்கள் நேசிக்கணும் அது தான் காதல்....இரண்டாவது நம் நண்பர்களின் காதல் உயர்ந்தது உன்னதமானது ஆனால் நாம் இல்லாமல் நம்மவர் என்ன ஆவார் என்று யோசித்தால் கண்டிப்பாக தற்கொலைவரை யாரும் போக மாட்டோம்....ஓகே அவர் இல்லை நாம் அவன் கனவுகளையும் சேர்த்து நினைவாக்குவோம் என்று இவராவது வாழ்ந்திருக்கலாம்...ஆனால் அவர்கள் சூழ்நிலை சரியாக தெரியாமல் என்னால் இதற்கு மேல் சொல்ல முடியவில்லை....வாழ்வில் சேர்ந்து இருப்பது மட்டும் காதல் இல்லை....இணை கோடுகளாய் தண்டவாளம் போல் சிறு தொலைவில் வாழ்க்கை முழுவதும் வருவதும் காதல் தான்...