நான் கண் விழித்த போது அவன் குளித்து வேறு உடை மாற்றி இருந்தான். தரையில் அமர்ந்து அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்தான். நேரம் காலை ஒன்பதை நெருங்கி கொண்டு இருந்தது.
"ஓ, எழுந்திட்டியா? டீயா, காபியா?" என்று கேட்டான்.
"உனக்கு ஏழு மணிக்கு தாம்பரம் சைட்ல வேலை இருக்குனு சொன்னியே?"
"நீ நல்லா தூங்கி கொண்டு இருந்ததால், உன்னை டிஸ்டர்ப் பண்ணலை"
"நீ போகலையா? என்னை எழுப்பி இருக்கலாம் இல்லை?"
"போன்ல பேசி முடிச்சிட்டேன். நைட் தூங்கும்போது மணி என்ன தெரியுமா?. மூன்று! உனக்கு இன்றைக்கு லீவ் இல்லையா, அதனால் தான் உன்னை எழுப்ப வில்லை, நல்லா தூங்கட்டும் என்று விட்டு விட்டேன்." என்று அவன் சொல்லி விட்டு கிட்சன் உள்ளே சென்றான்.
நான் போர்வையை விலக்கி தரையில் கிடந்த பாக்ஸருக்குள் இரண்டு கால்களையும் நுழைத்தேன். கிட்சன் பக்கம் எட்டி பார்த்தேன். பால் காய்ச்சி கொண்டிருந்தான்.
"டீத்தூள், காபித்தூள் ரெண்டும் இருந்ததால் நீ எது குடிப்பாய் என்று தெரியவில்லை, டீயா, காபியா?" என்று திரும்பவும் கேட்டான். நான் டீ என்று சொல்லிவிட்டு பாத்ரூம் உள்ளே போனேன்.
திரும்பி வந்த போது சுட சுட டீ கப்பை நீட்டினான். அவனை பார்த்து கொண்டே பருகினேன்.
"எனக்கு பசிக்கிறது. என்ன டிபன் செய்யட்டும்? ரவை இருக்கிறதை பார்த்தேன், உப்புமா செய்யட்டுமா? இல்லை, பொங்கல், பூரி? என்ன வேண்டும்?" என்று கேட்டான்.
"வேண்டாம். ஹோட்டல் போகலாம்" என்றேன்.
"அதெல்லாம் வேண்டாம். நான் சமைக்கிறேன். கோதுமை மாவு இருக்கே, பூரி செய்யட்டுமா? இல்லை சப்பாத்தி? சீக்கிரம் சொல்லு, எனக்கு பசிக்கிறது" என்றான்.
உப்புமா செய்வது ரொம்ப சுலபம். நேரமும் குறைவு. அவனுக்கு வேறு பசி. அதனால் அதையே செய்ய சம்மதம் சொன்னேன்.. எதுவாக இருந்தாலும் நான் குறைவாகத்தான் காலை சிற்றுண்டி சாப்பிடுவேன். எனக்கு இன்னும் தூக்கம் மீதி இருந்தது. கால்கள் துவண்டு மீண்டும் படுக்கையில் விழுந்தேன்.
என்னோடு எப்போதும் தோழமையான ஓர் உருவம் தொடர்ந்து வரும். இடறி கீழே விழுந்தால் கை தூக்கி விடும். கலங்கி நின்றால் கை குலுக்கி உற்சாகம் தரும். என் பயணங்களில் பக்கத்துக்கு சீட்டில் துணையாக வரும். குழப்பமான தருணங்களில் என்னோடு நிறைய பேசி தெளிவான முடிவை தரும். அது என் மனதின் குரல். நான் நினைப்பதை எதிரொலிக்கும். சமயங்களில் எதிர்த்து பேசி முரண்டு பிடிக்கும்.. அந்த உருவத்திற்கு முகம் இல்லை உடல் இல்லை. என்னிடம் இல்லாத நல்ல குணங்களை தேடி பிடித்து அதில் அந்த உருவத்தை வார்த்தெடுத்தேன். என்னை கவர்ந்த சில நல்ல ஆண்களின் மேன்மையான குணங்களை அதற்கு ஓட்ட வைத்தேன். சைக்கிள் கற்று கொடுத்த கிருஷ்ணா அண்ணனின் வேகம், ஒரு பிறந்த நாளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்த ரகு மச்சானின் தெளிவு, தப்பிக்க சொல்லி கொடுத்த ஜான்சனின் விவேகம், என்னை ஆளாக்கிய மாமாவின் பொறுமை, துரோகம் செய்த அருனின் கருணை, நான் மிகவும் வெறுக்கும் சின்னுவின் மௌனம். இவை எல்லாவற்றையும் கொண்டு எனக்கு பிடித்தமாக அந்த உருவத்தை வரைந்து கொண்டு வந்தேன். திடிரென்று அந்த உருவத்திற்கு கை கால் முளைத்தது. அதற்கு முகமும் கிடைத்தது, எதிர்பாராத நேரத்தில் அந்த உருவத்திற்கு உயிரும் வந்தது.இதோ என் எதிரில் உயிரும் உணர்வுமாய் பாரியின் வடிவில்.
கண்களை மூடினேன். அசதி இமைகளை அழுத்தியது. ஆனால் வெளிச்சம் இமைகளை பிரித்தது. வெகு தொலைவில் உறக்கம் கை அசைத்து சென்றது. உடல் முழுதும் உலர்ந்து போனாலும் மனம் முழுதும் மலர்ந்து கிடந்தது. நேற்றைய இரவு அதீத நிறைவை கொடுத்தது.
பாரி சமைத்து கொண்டிருந்தான். திரும்பி பார்த்து இன்னும் சில நிமிடங்கள் தான் என்றான். பாய்ந்து சென்று அவன் முதுகில் படர்ந்து அவனை அணைக்க வேண்டும் போல் தோன்றியது. கழுத்தை வளைத்து அவன் மீசையை திருகி இதழ்களை கவ்வி இழுக்க வேண்டும் போல் எண்ணம் பறந்தது. நான் கதவில் சாய்ந்து நின்று கொண்டிருந்தேன். தோன்றும் எண்ணங்களை சட்டென்று வெளிப்படுத்த தயக்கம் தடையாக இருந்தது. ஆசை தளும்பி கொண்டிருந்தது. ஆனாலும் நிறைகுடமாக கதவில் சாய்ந்து நின்றிருந்தேன். காமத்தை பகீரென்று துகிலுரித்து காட்டத் தெரிந்த எனக்கு காதலை அவனிடம் பகிர தெரியவில்லை. அது தயக்கம் இல்லை. எனக்கு அவசரமும் இல்லை. ஏனெனில் எனக்கு இப்போது சொல்ல பயமாக இருக்கிறது. இது நிஜமாக தொடராமல் போய்விட்டால் இன்று சொல்வதில் அர்த்தமில்லாமல் போய்விடுமே. இன்றைக்கு இப்போது காதலை சொல்லுவதை விட இதே நாள் அடுத்த வருடம் இவன் என்னோடு இருக்கும் போது சொல்லவேண்டும். அதுவரை ஏதும் நேராமல் காதல் உயிரோடு இருக்க வேண்டும். அப்போது அந்த காதலில் உண்மையான ஜீவன் இருக்கும். அவசரம் இருக்காது. பக்குவம் இருக்கும் பயம் இருக்காது.
அடுத்த வருடம் இதே நாள்.
"இன்றைக்கு என்ன நாள் தெரியுமா?" என்று கேட்டேன்.
"என்ன விசேஷம்? உன் பர்த்டேயா? இன்னும் மூணு மாசம் இருக்கே!" என்றான்.
"போன வருஷம் இதே நாள் தான் நீயும் நானும் என்னோட வீட்ல ஒன்றாக ஆரம்பித்தோம்"
"அதுக்குள்ளே ஒரு வருஷம் ஆச்சா?"
எனக்கு அப்போதும் சொல்ல தயக்கம். அது தயக்கம் இல்லை. பேராசை. அடுத்த வருடம் வரை இவன் இருப்பானா?. அப்போது சொல்கிறேனே! பேராசையும் அச்சமும் தொடர்ந்து வந்தது.
அன்று மாலை அவன் வீட்டிற்கு அழைத்து சென்றான். அவன் அத்தை அவன் தங்கை அனைவரையும் அறிமுகப்படுத்தினான். அவன் வீட்டில் அன்றிரவு உணவை முடித்து விட்டு வந்தேன், அவன் வாசல் வரை வந்து வழி அனுப்பினான். நான் தனியாக நடந்து ரயில் நிலையம் வந்தேன். ஏனோ மனதில் வெறுமை. எல்லோரும் விலகி செல்வது போல் ஒரு பிரமை. அவரவர் எல்லைக்குள் எல்லோருமே கைதியாகி நிற்பது தான் நிதர்சனம். மீண்டும் இந்த உலகத்தில் நான் மட்டும் ஒற்றை ஆளாக நிற்பது போல் ஓர் உணர்வு என் கண்ணை மறைத்தது. நான் வீட்டிற்கு வந்து தம் அடித்து தூங்க முயன்றேன். நேற்று அவன் இருந்தான் அருகில். இன்று நான் மட்டும் தனியாக. கடவுளே இது தான் எனக்கு விதிக்கப்பட்ட விதியா? கண்களை மூடி தூங்க முயன்றேன். தூங்கி விட்டேன். பாதி இரவில் கதவை தட்டும் சத்தம். வாசலில் பாரி.
நல்ல வேளை. நான் ஆசீர்வதிக்க பட்டிருக்கிறேன். கடவுளுக்கு என் மீது கருணை இருக்கிறது, எனக்கான சட்டையை பத்திரமாக பாதுகாக்கும் பக்குவம் என்னிடம் இருக்கிறது. அது கருப்போ சிவப்போ, முரடோ மென்மையோ அது என்னுடைய சட்டை. அது என்னுடைய பொக்கிஷம்.
"உன்னை தனியா அனுப்ப முடியவில்லை. டா. திரும்பி திரும்பி நீ பார்த்து கொண்டு போனதை நான் உணர்ந்தேன். அது தான் வந்து விட்டேன். உனக்கு நான் இருக்கேன் டா. எப்போதும் நான் இருப்பேன் டா" அவனை வாரி அணைத்து கொண்டேன். அன்றைய இரவும் வசந்தமானது.
அன்று மட்டும் இல்லை. தொடர்ந்து நாற்பது நாட்கள் ஒன்றாக இணைந்து இருந்தோம். நடுவே ஒரு முறை ஊருக்கு சென்று வந்தேன். அப்போது அவன் என்னோடு பயணம் செய்து வந்தான்.
"நீ தனியா போறியே, நானும் வரட்டா? உங்க ஊருல வந்து உன்னை விட்டு விட்டு காலைல பஸ் பிடிச்சு உடனே சென்னை வந்து விடுறேன். நீ தனியா போகாதே. நான் இருக்கேன், நானும் வர்றேன். உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன். என்னை நம்பு!" என்றான்.
முதல் முறை அவன் திரும்பி வந்து விட்டான், அடுத்து முறை வந்த போது அவனே எதிர்பார்க்கவில்லை அவனை மாமா வீட்டிக்கு அழைத்து சென்றேன்.
"நீங்க தான் பாரியா? உங்களை பத்தி அவர் நிறைய சொல்லி இருக்கிறார்"
-- Edited by Night on Wednesday 2nd of October 2013 12:37:06 AM
காமத்தை பகீரென்று துகிலுரித்து காட்டத் தெரிந்த எனக்கு காதலை அவனிடம் பகிர தெரியவில்லை. அது தயக்கம் இல்லை. எனக்கு அவசரமும் இல்லை. ஏனெனில் எனக்கு இப்போது சொல்ல பயமாக இருக்கிறது. இது நிஜமாக தொடராமல் போய்விட்டால் ....காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வித்தியாசத்தை நல்லா சொல்லிருகீங்க ....