"இல்லே திவா. நீங்க இப்படி பதறிப்போய் நான் பார்த்ததே இல்லை. சொல்லுங்க என்ன பிரச்சினை." - என்று கவலை தோய்ந்த முகத்துடன் கேட்டாள் கல்பனா.
"அதான் ஒண்ணும் இல்லைன்னு சொல்லறேனே கல்பனா. ஆபீஸ்லே ஒரு சின்ன ப்ராப்ளம். சட்டுன்னு அது நினைப்புக்கு வந்துடுச்சு. வேற ஒண்ணும் இல்லை டியர்." - என்றான் திவாகர்.
"என்ன திவா இது? புதுசா இருக்கு. நீங்க எப்பவும் ஆபீசை விட்டு கிளம்பினதுமே அந்த நினைப்பையே மறந்துடுவீங்களே. அப்போ இருக்கறப்போ எப்படி..." கல்பனா முடிக்கவில்லை.
"யெஸ் . யெஸ். நீ சொல்லுவதும் சரிதான் கல்பனா. ஆபீஸை விட்டு வெளியே வந்தா நான் அதை பத்தி நினைக்கவே மாட்டேன். ஆனால் சமயத்துலே இந்த ஹோட்டல் நிர்வாகத்துலே வருகிற பிரச்சினைகள் இருக்கே. அதெல்லாம் நினைப்புக்கு வந்துடத்தானே செய்யுது! அன்னிக்கு ஒரு நாள் அப்படித்தானே அந்த கதிரவன் எம்.பி.யோட பையனை அடிச்சிட்டான்னு ஒரு பிரச்சினை வந்துச்சு. அதை சரிக்கட்ட இரவு நேரத்திலேயும் விழுந்தடிச்சுகிட்டு நான் ஓடவில்லையா? அதே மாதிரி இன்னிக்கு ஒரு கான்பெரென்ஸ் ஏற்பாடாகி இருக்கு. அதை அந்த கதிரவனை ஹாண்டில் பண்ண விட்டு இருக்கேன். அவன் மறுபடி சொதப்பிடுவானோன்னு திடீர்னு தோணிடுச்சு. அதான் கல்பனா என்னையே மறந்து கத்திட்டேன்." - என்ற திவாகர் எழுந்து சென்று ப்ரிட்ஜைத் திறந்து ஐஸ் வாட்டரை எடுத்து ஒரு மடக்கு குடித்து தன்னை முழுவதுமாக
ஆசுவாசப்படுத்திக் கொண்டான்.
அவனையே பார்த்துக்கொண்டிருந்த கல்பனா," நான் சொல்கிறேனே என்று தப்பா நினைக்காதீங்க திவா. உங்க ஆபீஸ் விஷயத்துலே நான் தலையிடக்கூடாது தான். இருந்தாலும் உங்க மனைவி என்கிற முறையிலே சொல்லவேண்டியது என் கடமைன்னு நெனைக்கிறேன். நீங்க அந்த கதிரவனுக்கு அளவுக்கு மீறி சலுகைகள் கொடுக்கிற மாதிரி எனக்கு படுது . ஐ தின்க் யு ஆர் கிவிங் டூ மச் ஆப் இம்பார்ட்டன்ஸ் டு கதிரவன். எனக்கென்னவோ அவனுடைய பாமிலி பாக்கிரவுண்டைப் பத்தி அன்னிக்கு நீங்க சொன்னீங்களே அதுலே இருந்து அவன் கிட்டே ஒரு நல்ல அபிப்பிராயமே வரவில்லை. அவன் கிட்டே முக்கியமான பொறுப்புகளைக் கொடுக்காதீங்கன்னு உங்களை முன்னாடியே வார்ன் பண்ணனும் என்று நினைச்சுட்டு இருந்தேன். அவனுடைய பின்னணி தெரிந்தும் நீங்க அவன் கிட்டே ஏன் இத்தனை கேர் எடுத்துக்கிறீங்கன்னு எனக்கு புரியலே." - என்றாள் கல்பனா. அவள் குரலில் லேசான வெறுப்பு தொனித்தது.
"அப்படி சொல்லாதே கல்பனா. பாவம் அவன். நல்லா முன்னுக்கு வரவேண்டியவன். அப்படிப்பட்ட ஒரு குடும்பச் சூழ்நிலையிலே இருந்தும் கூட கண்டபடி கெட்டுப்போகாம ஒழுங்காப் படிச்சு நல்லபடியா முன்னுக்கு வரத் துடிச்சுக் கிட்டு இருக்கிறவன். அவன் நினைச்சு இருந்தா அவன் அம்மாவைப் பற்றிய உண்மையை அப்படியே மறைச்சு இருக்கலாம். அப்படி எல்லாம் செய்யாம உண்மையை வெளிப்படையாகச் சொன்னானே. அதுலே இருந்தே அவனுடைய நேர்மையான குணம் தெரியவில்லையா? அப்படிப்பட்ட ஒருத்தன் வாழ்க்கையிலே ஜெயிக்கணும். அதுக்கு நம்மாலே முடிந்ததை நாம் செய்யணும். அதுதான் மனிதாபிமானம் கல்பனா."- என்றான் திவாகர் வேகமாக.
அவனையே ஒரு முறை கூர்மையாகப் பார்த்தாள் கல்பனா.
"ம்ம் .. எனக்கென்னவோ அவன் கிட்டே ஒருநல்ல அபிப்ராயமே வரமாட்டேங்குது . சரி. உங்க ஆபீஸ் மாட்டர்லே நான் ஏன் தலையிடணும் என்று தான் இத்தனை நாள் வரைக்கும் பேசாம இருந்தேன். பட் இப்போ நீங்க இப்படி அவஸ்தைப் படுறதை பார்க்கும் போது இதெல்லாம் தேவைதானான்னு தோணுது திவா. எதுக்கும் அவன் கிட்டே கொஞ்சம் ஜாக்கிரதையாவே இருங்க." - என்று எச்சரித்தாள் கல்பனா.
“ஆகட்டும் மகாராணி . நீங்க சொல்லறது போலவே கேக்குறேன். இப்போ தூங்கலாமா? எனக்கு தூக்கம் வருது." - விளையாட்டாக பணிவு காட்டிப் பேசினான் திவாகர்.
"அப்பாடா! எனக்கு இப்போ தான் நிம்மதியாச்சு. அய்யா நல்ல மூடுக்கு வந்துட்டீங்க. தூங்குங்க.. மற்றதை காலையிலே பேசிக்கலாம்.. குட் நைட்."- என்றபடி விளக்கை அணைத்தாள் கல்பனா.
சற்று நேரத்தில் ஆழ்ந்து உறங்க ஆரம்பித்தாள் அவள்.
ஆனால் திவாகர்?
என்னதான் முயற்சித்தாலும் அவனுக்கு தூக்கம் வரவில்லை.
கண்களை மூடினால் கதிரவன் வந்து நின்றான்.
பரிதாபமான முகத்துடன்,"என்ன திவா? என் காதலை ஏத்துக்கக் கூடாதா? நான் என்ன உங்களை உங்க குடும்பத்தை விட்டுட்டு என் கூடவேவா வந்து இருக்கச் சொல்கிறேன்? அப்படி எல்லாம் உங்க குடும்ப வாழ்க்கையிலே நான் குறுக்கிடவே மாட்டேன். ஆனால் எனக்கு நீங்க வேணும் திவா. உங்க அன்பு வேணும். காதல் வேணும். அணைப்பு வேணும். கட்டாயமா வேணும் திவா." - என்று கலங்கிய கண்களுடன் கேட்டு ஹிம்சிக்க ஆரம்பித்தான்.
கண்களைத் திறந்தால் அருகில் கல்பனாவின் பளிங்கு முகம்.
வெகு நேரம் உறக்கம் வராமல் தவித்தான் அவன்.
வலுக்கட்டாயமாக தூங்க முயற்சித்தான் அவன். ஆனால் அவன் முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போயின.
அன்று மதியம் முதலில் கண்கள் கலங்க நின்ற கதிரவன் பிறகு தன் காதலைச் சொல்லி அழுததும், பிறகு தெளிந்து நின்று "நீங்க வருவீங்க திவா, நிச்சயம் வருவீங்க." என்ற நம்பிக்கையுடன் சென்றது எல்லாம் மீண்டும் மீண்டும் அவன் கண்களுக்குள் வந்து வந்து நின்றன.
"இல்லே கதிரவன். ஐ கான்ட். என்னாலே முடியாது. அப்படி செய்தால் அது என் கல்பனாவுக்கு நான் செய்கிற துரோகம். நான் செய்யமாட்டேன். ப்ளீஸ் என்னை கம்பெல் பண்ணாதீங்க." - என்று தன்னை மறந்து புலம்ப ஆரம்பித்தான் திவாகர்.
வயிற்றில் கரு உருவாகி இருக்கும் நேரத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கே ஏற்படும் ஒருவிதமான பய உணர்ச்சியின் காரணமாக உறக்கம் கலைந்து திடீரென்று விழித்த கல்பனாவின் செவிகளின் திவாகரின் அந்த புலம்பல் துல்லியமாக, மிக மிகத் தெளிவாக அட்சரம் பிசகாமல் வந்து விழுந்தது.
"என்ன சொல்கிறார் இவர்? எனக்கு துரோகமா? அதைச் செய்ய அந்தக் கதிரவன் நிர்ப்பந்திக்கிறானா ? அப்படியென்றால் என்ன அர்த்தம்? என்ன நடக்கிறது ஆபீசில்?" - விடை தெரியாத கேள்விகள் சங்கிலித் தொடராக அந்தப் பேதைப்பெண்ணின் மனசை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.
*************************************************
மறுநாள் காலை.
வெரைட்டி ஹால் ரோட்டில் இருந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கி.
கேஷ் கவுண்ட்டரில் தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு பணப்பட்டுவாடாவில் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தாள் கல்பனா.
அவளது கரங்கள்தான் இயந்திரத்தனமாக வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனவே தவிர மனம் முதல் நாள் இரவு நடந்த சம்பவங்களையே அசைபோட்டுக்கொண்டிருந்தது .
முதல் நாளிரவு திவாகர் படுக்கையில் புலம்பிய வார்த்தைகளைக் கேட்டதும் மின்சாரத்தால் தாக்குண்டது போல அதிர்ந்துபோனாள் கல்பனா.
ஒரு நிமிடம் அவனை உலுக்கி எழுப்பி "என்ன ஏது ?"என்று கேட்கலாமா என்று நினைத்தவள் மறுகணம் தன் முடிவை மாற்றிக்கொண்டாள் .
"வேண்டாம்.. இப்பொழுது எதுவும் கேட்கவேண்டாம். அப்படியே கேட்டாலும் நடந்ததை நடந்தபடியே சொல்லிவிடவா போகிறார்? நான் கவலைப்படக்கூடாது என்று எதையாவது சொல்லி சமாளித்து உண்மையை மறைக்கத்தான் பார்ப்பார். அதனால் இப்போது எதுவும் கேட்கவேண்டாம். பிறகு பார்த்துக்கொள்வோம்."- என்ற முடிவுக்கு வந்தவள் தூக்கத்தில் கையைப்போடுவது போல திவாகரின் பரந்த மார்பைச் சுற்றி கையைப் போட்டு அணைத்துக்கொண்டு அவனுடைய வலுவான புஜத்தில் கன்னத்தை வைத்துக்கொண்டு கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள்.
அவளுடைய அந்த நெருக்கம் அப்போதைக்கு திவாகருக்கு மிகவும் தேவையாக இருந்திருக்க வேண்டும்.
அவனும் அப்படியே அவளுடைய முதுகைச் சுற்றி இறுக்கி அணைத்துகொண்டான். அப்படியே எவ்வளவு நேரம் இருந்தானோ தெரியாது. தன்னை மறந்து உறங்கிப்போனான் அவன்.
அப்போதும் கூட அவளுக்கு திவாகரின் மீது இம்மியளவு கூட சந்தேகமே தோன்றவில்லை. "பாவம் இவர். எல்லாருக்கும் நல்லதையே செய்ய நினைக்கிறவர். இவருடைய இந்த குணத்தை அந்தக் கதிரவன் தவறாகப் பயன்படுத்திக் கொள்ள ஏதோ முயற்சி செய்கிறான் போல இருக்கு. அது என்னவாக இருக்கும்? அந்தச் சதிகாரனின் சதிவலையில் இவரை விழவைக்காமல் காப்பாற்றியே ஆகவேண்டும். எப்படி? என்ன செய்வது?- என்ற யோசனையே அவளிடம் மேலோங்கி நின்றது.
"மேடம். நான் இரண்டாயிரத்து அறுநூறு ரூபாய்க்கு வித்ட்ராவல் ஸ்லிப் கொடுத்திருக்கேன். பட் நீங்க இரண்டாயிரத்து நானூறு தான் கொடுத்து இருக்கீங்க." என்ற வாடிக்கையாளரின் குரலால் சிந்தனை கலைந்து நிதானத்துக்கு வந்தாள் கல்பனா.
அவர் நீட்டிய பணத்தை மறுபடி வாங்கிக்கொண்டு சரிபார்த்தவள்,"ஸாரி சார். எக்ஸ்ட்ரீம்லி ஸாரி ." என்று சொல்லிவிட்டு அவருக்கு சரியான தொகையை பட்டுவாடா செய்தாள் கல்பனா.
"இல்லை.. இது சரியில்லை. நமது மனசு இப்போது ஒரு நிலையில் இல்லை. ஆகவே கேஷ் கவுண்ட்டரை நாம் கவனித்துக்கொள்ளக்கூடாது." என்று தோன்றவே அங்கிருந்து விலகிச் சென்றவள் ரேகாவை அழைத்து "ரேகா. ஐ ஆம் நாட் பீலிங் வெல். மார்னிங் ஸிக்நெஸ் கொஞ்சம் அதிகமா இருக்கு. நீ கொஞ்சம் கேஷ் கவுண்ட்டரை கவனித்துக்கொள்ளேன். நான் வேணுமானால் மானேஜரிடம் பேசட்டுமா?" என்று கேட்டுக்கொண்டாள் கல்பனா.
ரேகா அவளுடைய உயிர்த்தோழி. மணமாகி ஏற்கெனவே ஒரு பெண்குழந்தைக்கு தாயாகி இருந்தவள். அதனால் அவளால் கல்பனாவின் நிலைமையைப் புரிந்துகொள்ள முடிந்தது.
"டோன்ட் வொர்ரி கல்பனா. நான் கவனிச்சுக்கறேன். நீ வேண்டுமானால் லீவ் போட்டுவிட்டு வீட்டுக்குப் போய் ரெஸ்ட் எடுத்துக்கொள்ளேன்." என்று சொல்லிவிட்டு கேஷ் கவுண்ட்டரை நோக்கிச் சென்றாள் ரேகா.
மேலதிகாரியிடம் சென்று தன் நிலைமையைச் சொல்லி அன்று ஒரு நாள் லீவ் எழுதிக்கொடுத்துவிட்டு வங்கியை விட்டு வெளியே வந்தாள் கல்பனா.
இரண்டடி நடந்து அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்டை அடைந்தவள் ஒரு ஆட்டோவில் ஏறிக்கொண்டு திவாகரின் ஹோட்டலை நோக்கி விடச்சொன்னாள் கல்பனா.
ஆட்டோ ஒரு அரைவட்டமடித்து மத்திய தபால் நிலையத்தின் வழியாக பயணித்து குட்ஷெட் ரோட்டின் இடதுபுறம் திரும்பி அவினாசி மேம்பாலத்தின் வழியாக சீறிக்கொண்டு விரைந்தது.