19ஆவது - அத்தியாயத்திற்கு வந்திருக்கும் வாசக நண்பர்களின் கருத்துக்களை படித்தேன்.
அப்பப்பா... பாராட்டு மழைகளுக்கு இடையில் கண்டனக் கடிதங்களும் - குறிப்பாக அருமை நண்பர் திரு. ராஜ்குட்டிகாதலன் அவர்கள் என் தலையில் வைத்த குட்டுக்கள் .. இப்போது கூட வலிக்கிறது.. (என்ன இருந்தாலும் மோதிரக்கை அல்லவா?) [நல்லவேளை. திரு. விஜய் விக்கி அவர்கள் வரவில்லை. வந்திருந்தால் அவரிடம் வேறு குட்டு வாங்க வேண்டி இருக்குமே]
நண்பர்களுக்காக சில விஷயங்களை இங்கு சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன்.
இவற்றை என்னுடைய தன்னிலை விளக்கம் என்றே கூட நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்....
ArvinMackenzie-அவர்கள் கேள்வியை எழுப்பிவிட்டு அவரே கதையின் போக்குக்காக இப்படி எழுதி இருப்பார் என்று சொல்லி இருக்கிறார்.
அருமை நண்பரே. இன்று ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பவர்கள் எல்லாருமே இளைய தலைமுறையினர் என்று சொல்லிவிட முடியாது. சென்ற அத்தியாயத்தில் நான் ராம்சந்தர்-லாரன்ஸ் ஆகியோரின் வயது 35க்கு மேல் என்று குறிப்பிட்டு இருந்தேன்.
நீங்கள் சொல்லும் கணக்குப்படி பார்த்தோமானால் திருமணம் என்று ஒன்று ஆகிவிட்டால் அதற்கு பிறகு அவர்கள் கே' / 'பை' ஆக இருக்கவே கூடாது என்று ஆகிவிடுகிறது. அது நியாயம் தான். பொதுவான தர்மமும் அதுதான். ஆனால் அப்படியே எல்லாரும் இருக்கிறார்களா என்றால் அது கேள்விக்குறிதான்.
"நீங்கள் உங்களுக்கு சமையல் செய்து, துணிதுவைத்துப் போடும் ஒரு இயந்திரத்தை திருமணம் செய்யவில்லை. உயிரும் உணர்வும் உள்ள ஒரு மனுஷியை. " - என்று வேகமாக, ஆவேசமாக சொல்லி இருக்கிறீர்கள். அப்படி என்று பார்த்தால் இன்று இருக்கும் "கே" இணைய தளங்களில் (பிளானெட் ரோமியோ, இந்தியன் ப்ரெண்ட் பைண்டெர் .. இன்ன பிற..தளங்களில்) - முப்பத்தைந்து வயதுக்கு மேற்பட்டவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்.
அப்படியே இருக்கும் இளையவர்களும் - கல்யாணத்துக்கு முன்னாலே இப்படி அப்படி இருக்கறது சகஜம் தான் என்று தங்களுக்கு சமாதானம் சொல்லிக்கொள்வார்களே தவிர - குற்ற உணர்வே தோன்றாது. அப்படி இருக்க கவுன்சிலிங் என்றோ நியாயப் படுத்துதல் என்றோ நாம் சொல்லிக்கொள்ளவேண்டிய அவசியமே இல்லை.
ஓரினச் சேர்க்கை நியாமானது தான் என்றோ அதற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் வேண்டும் என்றோ கோருவதற்கு இடமே இல்லையே.
ஒருவனுக்கு ஒருத்தி - அல்லது ஒருவனுக்கு ஒருவன் - என்பது பொதுவான தர்மம். அந்த தர்மத்தை - கட்டாயம் நாம் அனுசரிக்க வேண்டியது தான். மீறுவது எந்த வகையிலும் மன்னிக்கவே முடியாதது.
அதே நேரம் - தற்போதைய சமூகச் சூழலில் விதி மீறல்கள் என்பது எல்லா இடங்களிலும் மலிந்தே விட்டிருக்கிறது.
போக்குவரத்து விதிகளை சகஜமாக மீறுவது போலவே - பெரும்பாலோர் மீறிக்கொண்டிருக்கின்றனர் . இப்படிப்பட்ட சூழலில் எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளப் பழகியவர்கள் தான் மனதுக்கு சங்கடம் இல்லாமல் வாழ முடிகிறது.
இதை நாம் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இன்றைய சூழலில் இது ஒரு கசப்பான உண்மை என்பதை நாம் புரிந்துகொண்டாகவேண்டும்.
அப்படிப்பட்ட மனிதர்களின் பிரதிநிதிகளாக ராம்சந்தர்- லாரன்ஸ் ஆகிய கதாபாத்திரங்கள் படைக்கப் பட்டிருக்கின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் திரு. ராம்சந்தர் கற்பனைக் கதாபாத்திரமல்ல. ரத்தமும் சதையுமாக நடமாடும் ஒரு உண்மை கதாபாத்திரம்.
எனக்கு இதுவரை நேரில் பார்த்துப் பழகவில்லையே தவிர மிகவும் நெருக்கமான ஒரு நண்பர். சமூகத்தில் சாதனைகள் பல புரிந்துவரும் ஒரு முன்னணி ஆர்கிடெக்ட் நிறுவனத்தை உலகளாவிய அளவில் வெற்றிகரமாக நடத்திவரும் ஒரு நபர்.
எதையும், யாரையும் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடனேயே அணுகுவது என்பது என்னுடைய பழக்கம்.
"கே"க்களுக்கான இணையதளத்தில் - அறிமுகமாகி வெறும் ஹலோவுடன் ஆரம்பித்த எங்கள் நட்பு இப்போது அவரது சாதனைகள், வெற்றிகள் எதுவாக இருந்தாலும் உடனே அதை என்னிடம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு நெருக்கமாகி விட்டிருக்கிறது. (எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு புரிதல், நல்ல பகிர்தல் இருக்கிறது.. ஒரு நல்ல நண்பர் என்ற அளவில் இருவரும் இருந்துவருகிறோம்.)
அந்த நண்பர் என்னிடம் மனம் திறந்து பகிர்ந்து கொண்ட சில விஷயங்கள் இந்தத் தொடருக்கு - அதுவும் கதையை மேலே நகர்த்த உதவியாக இருக்கும் என்று கருதியதால் தான் அவர்கள் இருவரையும் கதாபாத்திரங்களாக ஆக்கி வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
நண்பர் திரு ராஜ்குட்டி அவர்கள் சொல்லியது போல யாரையும் அல்லது யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தவேண்டும் என்பது என்னுடைய நோக்கமும் அல்ல.
இனி.. திரு .. ராஜ்குட்டி அவர்களுடைய கண்டனக் கணைகளுக்கு - மிகவும் கூர்மையான கணைவீச்சுக்கள் ..( சரித்திர கதாசிரியர் அல்லவா?)
நண்பா.. உங்கள் வயது இருபத்து மூன்று என்று நினைக்கிறேன்.
ஓரின உணர்வு என்பது இப்போதைய காலகட்டத்தில் அறிவியல் சாதனங்கள் பெருகி விட்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் உங்களை போன்ற இளைய தலைமுறைக்கு தகுந்த நண்பன் (நண்பர்கள்) தேர்ந்தெடுத்துக்கொண்டு மனரீதியாக அவர்களுடன் நெருங்கவும், உடல் ரீதியாக அந்த நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்.
ஆனால் - இதற்கு முந்தைய காலகட்டங்களில் - எல்லாம் வாய்ப்புகள் குறைவு. அந்த உணர்வுகள் - அதாவது ஒருபாலீர்ப்பு உணர்வுகள் ஏற்பட்ட ஒரு நபர் அவர் தேர்ந்தெடுக்கும் நண்பருக்கும் அந்த ஈர்ப்பு இருக்குமா இருக்காதா என்ற தயக்கத்திலும் பயத்திலுமே தன்னுடைய உணர்வுகளை வெளிப்படுத்திக்கொள்ள முடியாமல் உள்ளேயே புதைத்து வைத்து மருகியவர்கள் அநேகம் பேர் உண்டு.
அப்படியே தப்பித்தவறி அவர் அதை வெளிப்படுத்திவிட்டார் என்றால் அதை மற்றவர் ஏற்றுக் கொண்டால் அது அவர் அதிர்ஷ்டம். இல்லாவிட்டால் அந்த நட்பே அங்கு மரணித்துவிடும்.
அவரது நட்பையே முறித்துக் கொண்ட நண்பர் அதோடு நிற்காமல் - தெரிந்த மற்றவர்களிடம் எல்லாம் கூட "அவன் ஒரு மாதிரிடா.. ஜாக்கிரதையா இருந்துக்க." - என்று அவரைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தை பரப்பி விடவும் செய்வார். அப்படிச் செய்து அதனால் மனமுடைந்து தற்கொலை வரை சென்ற நபர்களையும் எனக்கு தெரியும்.
அப்படி தனக்கு ஒரு வடிகாலே இல்லாமல் அதே நேரம் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு கற்பனையிலேயே ஓரின உணர்வுடனும், அதே சமயம் நிஜ வாழ்க்கையில் மணவாழ்வில் ஈடுபட்டும் இரட்டை வாழக்கை வாழ்ந்துகொண்டிருக்கும் மனிதர்கள் எத்தனை பேர்?
ஆணும் ஆணும் - நட்பாக நெருக்கமான நண்பர்களாக பழகுவது சகஜமான ஒன்று தானே. இதற்கு ஓரின நண்பர்கள் என்று பெயர் வைப்பது ஏன்? - நட்பையும் மீறி அவர்களுக்குள் உடல் ரீதியான உறவுப் பரிமாற்றம் என்ற ஒன்றும் நிகழ்வதால் தானே ஓரின நண்பர்கள் என்றே குறிப்பிடுகிறோம்.
அந்த உடல் ரீதியான பரிமாற்றம் என்பது ஒருவரோடு மட்டும் தான் ஏற்படும் என்று சொல்லமுடியாதே.
ஒவ்வொரு கட்டத்திலும் நம் மனதுக்கு நெருக்கமான நண்பர்கள் வாழ்வில் வரத்தான் செய்வார்கள்.
பள்ளியில் படிக்கும் பொது ஏற்படும் நட்பு என்பது வேறு. கல்லூரியில் மலரும் நட்பு என்பது வேறு. பணிபுரியும் காலத்தில் ஏற்படும் நட்பு என்பது ஓய்வு பெறும் காலம் வரை தொடர்கிறது. அது வேறு.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் நமக்கு கிடைக்கும் நட்பு எல்லாமே அந்தந்த வேளையில் உடல் ரீதியான உறவில் முடியவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது தான். ஆனால் அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் அந்த உறவும் தவிர்க்க முடியாத ஒன்றுதானே.
அதற்காக அவர்களை இந்த சமுதாயத்தை வைத்தா ஒதுக்கிவிட முடியும்?
நீங்க இப்போது ராஜராஜ சோழன் காலகட்டத்தை பற்றி எழுதுகிறீர்கள். அந்த ராஜராஜனின் அந்தப்புர அரசியர், ஆசை நாயகியர் என்றெல்லாம் பார்த்தால் நாம் அவனைக் கொண்டாடவே முடியாது. பொற்கால ஆட்சிக்காலத்து மன்னன் என்றும், பெரியகோயில் திருவுடையார் என்றும் அவரை காலம் கடந்து நாம் பாராட்டிக்கொண்டிருக்க மாட்டோம்.
காரணம் அதெல்லாம் ஒருவனது "அந்தரங்க", "தனிப்பட்ட": விஷயங்கள். அவற்றை விடுத்து அவனது சாதனைகளை மட்டுமே வரலாறு கணக்கில் எடுத்துக்கொள்கிறது.
ஆகவே - ஒன்றி வாழும் இருவர் - ஒருவன் - ஒருவனாகவோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவருடனோ உறவு கொள்வது என்பதை அவரவர் தனிப்பட்ட விஷயமாக வைத்துக்கொள்வோம். அதனால் அவர்களது வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பு இல்லை. நமது அவரது புறவாழ்வில் காணும் சாதனைகளே முக்கியம்.
ஒருபாலீர்ப்பு கொண்ட நண்பர்களும் சமூகத்தில் பிறருக்கு சமமாக - ஏன் இன்னும் ஒருபடி மேலே போய் சாதனையாளராக வெற்றிச்சிகரம் தொடமுடியும் என்பதை மையமாக வைத்து நான் எழுதிவரும் இந்தக் கதையில் அப்படி அந்த கதாபாத்திரம் சந்திக்க நேரும் தடைகளையும், அவற்றை அவன் எப்படி நேர்கொள்கிறான் என்பதையும் மட்டுமே நாம் பார்க்கவேண்டும்.
அந்தப்பாதையில் மலர்களும் இருக்கும். முட்களும் இருக்கும். சேறும் இருக்கும்.. சந்தனமும் மணக்கும்.
உங்கள் மனதுக்கு தேவையானதை மட்டுமே எடுத்துக்கொள்ளுங்கள்.
அதையும் - இன்னபிறவற்றையும் - சேர்த்துக் குழப்பிக் கொள்ளவேண்டாமே.
நிற்க.. யாருடைய உணர்வுகளையும் புண்படுத்தவேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல.
அதே சமயம் இந்த ஓரின உலகத்தில் இருக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளில் சிலவற்றுக்காவது ஒரு தெளிவு ஏற்படுத்தும் வகையில் எனது படைப்பு இருக்கவேண்டும் என்று எண்ணுகிறேன் நான்.
//குறைந்த பட்சம் இங்குள்ளவர்களின் உணர்வுகளுக்காவது மதிப்பளித்தால் நன்றாக இருக்கும்.........// - என்று முடித்திருக்கிறீர்கள் நண்பா.
நிச்சயம் அனைவரின் உணர்வுகளையும் நான் மதிக்கிறேன். இங்குள்ள அனைவரின் உணர்வுகளை மட்டும் அல்ல. வெளியே சொல்லமுடியாமல் தவிக்கும் சில பல நண்பர்களின் உணர்வுகளையும் கூட நான் மதிக்கிறேன்.
ஆகவே தான் இந்த அத்தியாயத்தில் ராம் சந்தரின் கேள்வியாக "திருமணத்துக்கு முன்னால் செய்தால் என்ன? பின்னால் செய்தால் என்ன? தப்பு என்றால் எப்போது செய்தாலும் தப்புதான்." - என்ற வாதத்தை எழுப்பினேன். (கோவையில் வழக்கறிஞர் ஒருவர் என்னிடம் எழுப்பிய கேள்வி அது. )
கடைசியாக ஒன்று. யாருடைய மனதையும் புண்படுத்தவேண்டும் என்பது என்னுடைய நோக்கம் அல்ல. நான் இங்கு வந்திருப்பதும் - அன்பைத்தேடித்தானே தவிர - வெறுப்பை சம்பாதித்துக்கொள்ள அல்ல என்பதை உறுதிபடச் சொல்லிக்கொள்கிறேன்.
முதற்கண் எங்கள் கருத்துக்களை மதித்து இவ்வளவு நீண்ட ஒரு விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி..
உங்கள் பதிலைப் படிக்கும்போது, நான் கூற வந்ததைத் தெளிவாகக் கூறவில்லையோ என்று தோன்றுகிறது. 'கே'/'பை' ஆக இருப்பது தவறு என்ற அர்த்தத்தில் நான் கூறவில்லை. சொல்லப்போனால், என்னைச் சுற்றி இருப்பவர்கள் அப்படிப்பேசினால் கூட நான் அதை அனுமதித்ததில்லை. அதே நேரம் அந்த அடையாளங்கள் வெறுமனே காம உணர்வுகளுக்கு மட்டுமே உரியவையாக அடையாளப்படுத்துவதும் சரியாக இருக்காது என்று எண்ணுகிறேன். அவை உடல் சார்ந்ததல்ல, உணர்வு சார்ந்தது என்பது என் கருத்து.
தகாத பாலுறவு கூடாது என்று சொன்னால் அவரின் அடையாளத்தையே மறுப்பது என்று ஆகிவிடுமா? அப்படியானால் பாலுறவைத் தவிர 'கே/பை' அடையாளங்களுக்கு வேறு அர்த்தமே இல்லை என்று ஆகிவிடும்.
திருமணத்திற்குப்பின் வேறொரு ஆடவனுடன் பாலுறவு கொள்வது தவறு என நான் கூறியது தன்பாலீர்ப்பு தவறு என்ற அர்த்தத்தில் அல்ல. அதனால் ஒரு பெண்ணின் வாழ்வை, நிம்மதியை சீரழிப்பது எப்படி சரியாகும்? அவர் செய்த தவறு என்ன? அவர் எதற்காக பாதிக்கப்படுகிறார்?
நீங்கள் கூறும் PR உள்ளிட்ட தளங்களில் எனக்கும் பயனர் கணக்கு உண்டு. அங்கே என் தந்தையை விட வயதில் மூத்தவர்களை எல்லாம் நானும் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட நபர்கள் யாரும் இல்லை என்று சொல்லவே இல்லையே.. ஆனால் சமூகத்தில் மலிந்து காணப்படுவதால் எல்லாமே சரி என்று ஆகிவிடாது. சில காலம் முன்பு ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நபர், சமூகத்தில் லஞ்சம் சகஜமாகிவிட்டது. அதை ஒழிக்க முடியாது. எனவே லஞ்சத்தை சட்டப்பூர்வமாக்கிவிடலாம் என்று கூறினாராம். அதைப்போலத்தான் தாங்கள் கூறுவதும் இருக்கிறது.
இன்னும் ஊடே சில இடங்களில் மிக மிக அற்புதமான சில சிந்தனைகளை உதிர்த்து இருக்கிறீர்கள். அவற்றைப் பற்றி கருத்துக்கூற கூட நான் விரும்பவில்லை. ஆனால், மீண்டும் மீண்டும் 'கே' அடையாளம் என்பதை வெறுமனே பாலுறவைத் தேடி அலையும் காம உந்துதலாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்.
இராஜ இராஜ சொழனும், அவன் போன்ற மற்ற மன்னர் பெருமக்களும் திருட்டுத்தனமாய் இருளில் காம இச்சைகளைத் தீர்த்துக்கொண்டு பகலில் இராம வேடம் போடவில்லை. தைரியமிருந்தால் 'வடிகால்' தேடும் அந்த நபர்களை தன் மனைவியிடம் சொல்லிவிட்டு வெளிப்படையாய்ச் சென்று அவர்கள் இச்சைகளைத் தீர்த்துக்கொள்ளச் சொல்லுங்கள். இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது.
கடைசியாக ஒரே ஒரு கேள்வி. ஒரு தன்பாலீர்ப்பு கொண்ட ஆண், நீங்கள் கூறிய வடிகாலைத் தன் மனைவிக்கு சரிவரத் தர முடியாத போது, அந்தப் பெண் தற்காலிகமாக வேறொரு நல்ல 'வடிகாலை' தேடிப்போனால் அதை அந்தக் கணவரால் ஏற்றுக்கொள்ள முடியுமா? அந்தப் பெண்ணின் எதிர்பார்ப்பும் இயற்கையானது தானே?
இந்தக் கேள்வி நிச்சயம் கொச்சையான ஒன்றுதான் என்று அறிவேன். ஆனால் விஷயத்தின் தீவிரம் கருதி இதை சகித்துக்கொள்ள வேண்டுகிறேன். இது வாசிக்கும் மற்ற சில வாசகர் மனதையும் புண்படுத்துமானால், என்னை மன்னிக்கவும்.
எனது விளக்கங்களை பொறுமையாக படித்து தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட இனிய நண்பர்களுக்கு முதற்கண் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.
நண்பர் அர்விந்த் அவர்கள் "திருமணத்திற்குப்பின் வேறொரு ஆடவனுடன் பாலுறவு கொள்வது தவறு என நான் கூறியது தன்பாலீர்ப்பு தவறு என்ற அர்த்தத்தில் அல்ல. அதனால் ஒரு பெண்ணின் வாழ்வை, நிம்மதியை சீரழிப்பது எப்படி சரியாகும்? அவர் செய்த தவறு என்ன? அவர் எதற்காக பாதிக்கப்படுகிறார்?" - என்று கேட்டிருக்கிறார்.
எனது பதிலை நீங்கள் சரியாகப் படிக்கவில்லையோ என்று தோன்றுகிறது.
உங்கள் பார்வைக்காக நான் மறுபடி அந்த வரிகளை கீழே தருகிறேன்.:
ஒருவனுக்கு ஒருத்தி - அல்லது ஒருவனுக்கு ஒருவன் - என்பது பொதுவான தர்மம். அந்த தர்மத்தை - கட்டாயம் நாம் அனுசரிக்க வேண்டியது தான். மீறுவது எந்த வகையிலும் மன்னிக்கவே முடியாதது.
அதே நேரம் - தற்போதைய சமூகச் சூழலில் விதி மீறல்கள் என்பது எல்லா இடங்களிலும் மலிந்தே விட்டிருக்கிறது.
போக்குவரத்து விதிகளை சகஜமாக மீறுவது போலவே - பெரும்பாலோர் மீறிக்கொண்டிருக்கின்றனர் . இப்படிப்பட்ட சூழலில் எதையும் சுலபமாக எடுத்துக்கொள்ளப் பழகியவர்கள் தான் மனதுக்கு சங்கடம் இல்லாமல் வாழ முடிகிறது.
இதை நாம் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இன்றைய சூழலில் இது ஒரு கசப்பான உண்மை என்பதை நாம் புரிந்துகொண்டாகவேண்டும்.
அப்படிப்பட்ட மனிதர்களின் பிரதிநிதிகளாக ராம்சந்தர்- லாரன்ஸ் ஆகிய கதாபாத்திரங்கள் படைக்கப் பட்டிருக்கின்றனர்." -
அடுத்து "மீண்டும் மீண்டும் 'கே' அடையாளம் என்பதை வெறுமனே பாலுறவைத் தேடி அலையும் காம உந்துதலாக மட்டுமே அடையாளப்படுத்த வேண்டாம் என்று மட்டும் கேட்டுக்கொள்கிறேன்" என்று சொல்லி இருக்கிறீர்கள்.
கே என்பது ஒரு அடையாளம் மட்டும் அல்ல. அதுவும் தவிர அதை பாலுறவைத் தேடி அடையும் காம உந்துதலாக நான் நினைக்கவே இல்லை. அதற்காக பாலுறவைத் தவிர்த்து கே என்ற இனத்தை நாம் குறிப்பிடவே முடியாது. அது இல்லை என்றால் உயிர் நண்பர்கள் என்ற அளவிலேயே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு சமூகத்தால் அங்கீகரிக்கவும் பட்டுவிடுவார்களே. ஆனால் அது "வெறுமனே" பாலுறவைத் தேடி அலையும் காம உந்துதல் அல்ல. இரு நண்பர்கள் மனம் கலந்த காதலால் கருத்தும் ஒருமித்து கலக்கும் ஒரு உன்னதமான நிலை. ஆகவே ஒருபாலீர்ப்பு என்பதில் காமமும் கலந்தே இருக்கிறது. அப்படி ஒரே ஒரு நண்பருடன் மட்டும் தான் உறவில் ஈடுபடமுடியும் என்றால் அவரவருக்கு அப்படிப்பட்ட டியரஸ்ட் ப்ரெண்ட் ஒருவன் கிடைத்தாலே போதும். இப்படிப்பட்ட ஒருபாலீர்ப்பு நண்பர்களை அறிமுகப்படுத்தும் இணையதளங்களுக்கு பயனர்களாக இருக்கவே மாட்டார்கள்.
ஆகவே - காதலும் காமமும் கலந்தே இங்கு நண்பர்களை ஒன்று சேர்க்கின்றன.
அரசர்கள் வெளிப்படையாக காமக்கிழத்திகளை வைத்துக்கொண்டார்கள் என்றால் அந்தத் தவறு அப்போது மட்டும் சரியாகிவிடுமா என்ன? அவர்களை அன்றைய சூழலில் மனைவியர் சகித்துக்கொண்டு வாழ்ந்தார்கள்.
நான் சொல்ல வந்ததே வேறு. அதை நியாயப் படுத்த நான் குறிப்பிடவில்லை. அப்படி மன்னர்கள் காமக்கிழத்திகளை வைத்துக்கொண்டார்கள் என்பதற்காக நாம் அவர்களுடைய பெருமைகளை ஒதுக்கிவிடவில்லை. மனிதர்களிடம் பலம், பலவீனம் இரண்டுமே இருக்கிறது. பலவீனத்தை பொருட்படுத்தாமல் அவர்களால் சமூகம் கண்ட நன்மைகளை மட்டுமே நாம் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். ஏனென்றால் பலவீனம் இல்லாத மனிதனே இல்லை. அது ஒருவருக்கு ஒருவர் அளவில் மாறுபடுமே தவிர யாருமே இங்கு ராமன் இல்லை என்பது நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டிய கசப்பான உண்மை. மறுபடி சொல்கிறேன் "கசப்பான"உண்மை.
அப்படிப்பட்ட இனத்தின் பிரதிபலிப்பாக ராம்-லாரன்ஸ் தம்பதியினரை நான் அறிமுகப் படுத்தி இருக்கிறேன். அந்த கதாபாத்திரம் வாயிலாக சொல்லப்படும் கருத்துக்களை அனைவரும் 100/100 ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. அவர்களைப் பொருத்தவரை இந்த சமுதாயத்தில் ஓரினத் தம்பதியினராக அவர்களை பகிரங்கப் படுத்திக்கொள்வதே பெரிய விஷயம்.
அப்புறம் அது என்ன சார்.? "இன்னும் ஊடே சில இடங்களில் மிக மிக அற்புதமான சில சிந்தனைகளை உதிர்த்து இருக்கிறீர்கள். " - இதனைப் பாராட்டு என்று எடுத்துக்கொள்வதா இல்லை..தாக்குதல் என்று கொள்வதா .. ? இன்னும் சொல்கிறேன்.. நான் அற்புதமான சிந்தனையாளன் என்று நினைக்கவே இல்லை. கே சமூகம் பற்றி கரைத்துக்குடித்தவனும் இல்லை. ஆராய்ச்சியாளனும் இல்லை. கதையின் போக்குக்கு ஏற்ப அவ்வப்போது ஏற்படும் எண்ணச் சிதறல்களை எழுத்தில் வடிக்கிறேன். அவை அற்புதமானவையாக அமைவதோ இல்லை அபத்தமாக தோன்றுவதோ உங்களைப் போன்ற வாசகர்களின் கைகளில் தான் இருக்கிறது.
நீங்கள் அற்புதமாக கருதினால் என் மனம் நிறைந்த நன்றிகள். அபத்தம் என்று கருதினால் அதற்காக மனம் வருந்தும் முதல் நபர் நானாகத் தான் இருப்பேன்.
நண்பர் திரு ராஜ்குட்டி அவர்களின் சமூகச் சிந்தனைக்கு என் மனம் நிறைந்த நன்றி.
"கதையைக் கதையாக பார்க்காமல் அதனை ஒரு வாழ்வாக பார்க்கும் வாசகர்களுக்கு இது போன்ற விஷயங்கள் முன்னுதாரணமாக ஆகிவிடக்கூடாது என்பதுதான் எமது ஆதங்கம்" - என்று அவரது உண்மையான ஆதங்கத்தை அவர் வெளிபடுத்தி இருக்கிறார்.
நண்பரே.. எனக்கும் அந்த சமூகப் பிரக்ஞை உண்டு. அதே சமயம் ஒரு விஷயத்தை பற்றி சொல்லும் போது அதில் உள்ள பிளஸ் மைனஸ் ஆகிய இரண்டு பக்கங்களையும் நாம் சொல்லியாக வேண்டும். இப்படிப்பட்ட ஆபத்துக்களும் அதில் இருக்கின்றன என்று தெரியப் படுத்த நாம் அப்படிப்பட்ட விஷயங்களையும் சொல்லியே ஆகவேண்டும். கதையை மேலே தொடரும்போது அவற்றில் உள்ள ஆபத்துக்களை வெளிப்படுத்தும் போது வாசகர்கள் கண்டிப்பாக புரிந்து கொள்வார்கள்.
உங்கள் வயதைக் குறிப்பிட்டது "உங்களுக்கு அனுபவம் பத்தாது" என்பதற்காக இல்லை நண்பா.. அதை அடுத்து நான் குறிப்பிட்ட வரிகளை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். "உங்களை போன்ற இளைய தலைமுறைக்கு தகுந்த நண்பன் (நண்பர்கள்) தேர்ந்தெடுத்துக்கொண்டு மனரீதியாக அவர்களுடன் நெருங்கவும், உடல் ரீதியாக அந்த நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கிக்கொள்ளவும் வாய்ப்புகள் அதிகம்." என்று சுட்டிக்காட்டவே உங்கள் வயதைக் குறிப்பிட்டேன்.
நண்பரே.. உங்கள் கேள்விக்கு நான் பதில் சொல்லாதது வேடிக்கை என்று சொல்லி இருக்கிறீர்கள்.
ஒருவனுக்கு ஒருத்தி என்பது ஆண் -பெண் உறவுக்குமட்டும் தானா? ஆண்-ஆண் உறவுக்கு கிடையாதா என்று கேட்டிருக்கிறீர்கள்.
கதையை மேலே நகர்த்தும் போது இந்தச் சந்தேகங்களுக்கு எனது கதாபாத்திரங்கள் மூலமாகவே விளக்கம் தர முயற்சிக்கிறேன்.
இப்படி விளக்கத்துக்கு விளக்கம் - அந்த விளக்கத்துக்கு மறுபடி விளக்கம் என்று போய்க்கொண்டே இருக்குமானால் மேலே கதையைத் தொடர முடியாது.
ஆகவே உங்கள் சந்தேகங்களை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். கதையை முடிக்கும் வரை சற்றுப் பொறுமை காத்திருங்கள். முடிந்ததும் உங்கள் கேள்விகளை கேளுங்கள். உங்களுடன் ஒருவனாக நானுமே கலந்துகொள்கிறேன். ஏற்க முடிந்தவற்றை ஏற்றுக்கொள்வோம். நிராகரிக்க வேண்டியதை கண்டிப்பாக நிராகரித்துவிடுவோம். சரிதானே?
ஒன்று மட்டும் எனக்கு தெளிவாக புரிகிறது. பெருமிதப் படவும் வைக்கிறது. இளைய தலைமுறையோ, முந்தைய தலைமுறையோ யாராக இருந்தாலும் OUR PEOPLE ARE NOT AGAINST SEX. BUT AGAINST IMMORALITY.
என்பதுதான் அது.
அந்தப் பெருமிதத்தை உணரும் நான் கண்டிப்பாக அந்த உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலேயே கதையை நகர்த்துவேன் என்பதை உறுதிபடக் கூறிக்கொள்கிறேன்.
"என்றும் தங்களது கதைகளை வாசித்து கொண்டுதான் இருப்பேன்." - என்று முடித்திருக்கிறீர்கள். மிக்க நன்றிகள்.
அன்புடனும், பாசத்துடனும் - என்றும் உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் நாடும் - உங்கள் மனதுக்கினிய நண்பன்
உங்கள் கதாபாத்திரங்கள் மூலமாக நீங்கள் முன்வைத்த கருத்துக்கள், சிந்தனைகள் ஏற்புக்குரியவை அல்ல என்று தாங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று எண்ணுகிறேன். தவறான எண்ணப்போக்கு உடைய மனிதர்களின் பிரதிநிதியாக அவர்களைப் படைத்திருப்பது எல்லாம் சரிதான். ஆனால் தவறான ஒன்றை, தவறுதான் என்று தாங்களே ஒப்புக்கொள்ளும் விஷயங்களை, உதாரண புருஷர்களின் ஆலோசனை போலப் படைத்திருந்ததாலேயே நான் அவ்வாறு கருத்திட நேர்ந்தது. ஒரு கதையை எழுதும்போது நல்லது, கெட்டது இரண்டையும் சொல்ல வேண்டிவரும் என்பதை நானும் அறிவேன். ஆனால் அதைப் பகுத்துப் பிரித்துக் காட்ட வேண்டியதும் ஆசிரியரின் கடமை என்பது என் கருத்து.
உங்கள் கதையின் போக்கில் இவ்வாறான ஒரு சம்பவம் தேவைப்பட்டதால் இவ்விதம் படைத்தீர்கள் என்று நம்பினேன். எனவேதான் தவறை சுட்டிக்காட்டிய பின்னும், உங்கள் கதைப்போக்கின் தேவை கருதி நீங்கள் அவ்விதம் படைத்திருப்பீர்கள் என்றும் கூறியிருந்தேன். அப்படியானால், நீங்கள் கதையை மேற்கொண்டு படிக்கும்போது புரியும் என்றோ, அல்லது இவ்விடம் இப்படி எழுதுவது பின்வரும் சம்பவங்களுக்கு அவசியமானது என்றோ உங்கள் முதல் விளக்கத்தில் குறிப்பிட்டு முடித்திருக்கலாம். ஆனால் நீங்கள் அவ்வாறு செய்யவில்லை.
உங்கள் கதாபாத்திரத்தின் கருத்துக்களை நீங்கள் நியாயப்படுத்த முயற்சி செய்ததாலேயே அதை மீண்டும் மறுத்து வாதம் செய்ய வேண்டியதாயிற்று. ஆனால் உங்கள் வாதங்களில் நீங்கள் பிடிவாதமாக இருக்கிறீர்கள். மீண்டும் மீண்டும் சமூக வலைதளங்களில் வேட்டை நடத்துபவர்களை உதாரணப்படுத்தி நீங்கள் எதை விளக்க முற்படுகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.
இதற்கு மேல் இந்த விஷயத்தைப் பொது வெளியில் கொண்டுசெல்ல தாங்கள் விரும்பவில்லை என்று தெரிகிறது. நானும் இதற்கு மேல் இதைப்பற்றிப் பேசவேண்டாம் என்று எண்ணுகிறேன். சக நண்பர்கள் மேற்கொண்டிருக்கும் கனத்த மௌனம், அவர்களும் உங்கள் கருத்தை வழிமொழிவதாகத் தெரிவிக்கிறது. எல்லோருக்கும் ஏற்புடையபட்சத்தில் நான் கூற இனி ஏதுமில்லை.
தாங்கள் சொன்னபடி, கதை நிறைவுறும்வரை காத்திருக்கிறேன். இறுதியில் விளக்கங்களுக்கும் வாதங்களுக்கும் அவசியமிருக்காது என்று நம்புகிறேன்.