@shyam, just for fun, cutenellaimdu
மிக்க நன்றி நண்பர்களே..
@msvijay, rotheiss, prabhujp, anbaithedi
கதையின் அந்தப் பாகத்துல கிட்டத்தட்ட 130 வரி, 840 வார்த்தை இருக்கு. ஆனா உங்கள் எல்லாருக்கும் அந்த பாம்பு மேல மட்டும் அப்படி என்ன ஈர்ப்புன்னு எனக்குப் புரியல..
இருந்தாலும், வாசகர் விருப்பத்துக்கு ஏற்ப குலுக்கல் பரிசின் முடிவுகள் கீழே..
வேறு போட்டியாளர்கள் இல்லாத்தால் அன்-அப்போஸ்டாக ஆப்பிரிக்கக் காடுகளுக்குச் செல்லும் வாய்ப்பைப் பெற்ற அந்த அதிர்ஷ்டசாலி வாசகர்கள், ஏற்கனவே பல பாம்புகளைப் பார்த்த பாம்பு நிபுணர்களான விஜய் மற்றும் ரோதீஸ். இவர்கள் இருவரும் அவரவர் சொந்தப் பணத்தில் ஆப்பிர்க்காவுக்கு அனுப்பப்படுவர். அவர்கள் அங்கு சென்று இன்னும் பல பல எட்டு இஞ்ச், சாரி எனக்கும் நாக்கு ஸ்லிப் ஆகிடுச்சு, எட்டு அடிப் பாம்புகளையும் இன்னும் பல பெரிய பாம்புகளையும் பார்த்துவிட்டு, அந்த அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்வார்கள்.
படமெடுத்து நின்ற பாம்பைக் கண்டதும் திவ்யாங்கன் உறைந்து நின்றான். அவன் பின்னே வந்துகொண்டிருந்த அமரகீர்த்தி, இதைக் கண்டதும் திவ்யாங்கனைப் பின்னால் இழுக்க, வேகமாக ஏதோ அசைவதைக் கண்ட பாம்பு, திவ்யாங்கனைச் சீண்டப் பாய்ந்தது. ஆனால், கணப்பொழுதில், திவ்யாங்கன் விலகிட, தீண்டப்படாமல் தப்பினான். பின், அமரகீர்த்தியின் தோள்களை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு, “அசையாதே, அமைதியாய் இரு” என்றான். ஓரிரு நிமிடங்களில் அந்தப் பாம்பு ஊர்ந்து மறைந்தது. அது மறைந்ததும், அமரகீர்த்தி பதற்றத்துடன், “திவ்யாங்கா! உனக்கு ஒன்றும் இல்லையே.. அந்தப் பாம்பு ஏதும் தீண்டிவிட்டதா?” என்று கேட்டான். கேட்டவன், அவன் பதிலுக்குக் காத்திராமல், அவனைக் கீழே அமரச் செய்து, அவன் கால்களில் ஏதும் காயம் இருக்கிறதா என்று சோதித்தான்.
“அமரகீர்த்தி.. எனக்கு ஒன்றும் ஆகவில்லை.. விடு” என்று திவ்யாங்கன் சொன்னதைக் கூட கேட்காமல், தானே பரிசோதித்துப் பார்த்துவிட்டு, “நல்லவேளை.. தீண்டிய காயம் ஏதும் இல்லை” என்றான் அமரகீர்த்தி.
“அதைத்தானே நானும் சொன்னேன்” என்றான் திவ்யாங்கன்.
“இதென்ன? இப்படிப் பாம்பு எல்லாம் சுற்றிக்கொண்டிருக்கிறதே? இதையும் கருவூலத்தில் வைத்துப் பாதுக்காக்கிறீர்களா?”
“எதற்காக அந்தப் பெண்ணைப் பற்றி இவ்வளவு சிரத்தையாய்க் கேட்கிறாய்?” என்று மங்கிய குரலில் கேட்டான்.
“முதலில் நீ அவள் யாரென்று சொல். பிறகு காரணம் சொல்கிறேன்”
“இந்நாட்டு இளவரசியைத்தான் சொன்னேன். இப்போது சொல். ஏன் இவ்வளவு பிடிவாதமாய்க் கேட்கிறாய்?”
“அவளிடம் சென்று ‘நான் ஏற்கனவே ஒரு இளவரசனைக் காதலிக்கிறேன். அதனால் நீங்கள் என்னை மறந்துவிடுங்கள்’ என்று சொல்லத்தான்” என்று சொல்லி, ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்துவிட்டுச் சென்றான் திவ்யாங்கன்.
இவர்கள் இருவரும் இங்கு காதல் வளர்த்துக்கொண்டிருக்க, இவர்கள் தந்தைமார் இருவரும் அந்தக் காதலுக்கு வினையை வளர்த்துக்கொண்டிருந்தனர்.
இரண்டு கம்பீரமான, அழகிய வேலைப்பாடுடைய ஆசனங்கள் எதிரெதிரே போடப்பட்டிருக்க, அவற்றின் மத்தியில் ஒரு சிறிய வட்ட வடிவ மேசையில் மலர்க்கொத்தும் பழங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஒரு ஆசனத்தில் விதுரசேனர் அமர்ந்திருக்க, அவருக்கு எதிரே இருந்த மற்றொரு ஆசனத்தில் துர்காபுரியின் முதன்மை மந்திரி ஆதித்ய விக்ரமன் அமர்ந்திருந்தார். கொஞ்சம் பருத்த உடல், பகட்டான ஆடை, ஆபரணங்கள், புன்னகை தவழும் அந்த முகத்தில் அறிவாற்றலும், தந்திரமும் மறைந்திருந்தன. இருவரும் ஏதோ ஒன்றை மிகத் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருந்தனர்.
“இளஞ்சாமை விலையேற்றம் குறித்த உங்கள் கவலை எனக்குப் புரிகிறது மந்திரியாரே.. ஆனால் எங்கள் நாட்டின் பொருளாதாரம் இருக்கும் சூழலில், விலையேற்றம் தவிர்க்க முடியாததாகி விட்டது. நாட்டின் ஒரு பாகத்தில் வறட்சியும் பஞ்சமும் ஏற்பட்டு தானிய உற்பத்தி குறைந்ததால் உள்நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்ய ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த வேண்டியதாயிற்று”
“தாங்கள் கூறுவது புரிகிறது வேந்தே.. ஆனால், ஒரேயடியாக இரண்டு மடங்கு விலை உயர்த்தப்படும்போது, அது துர்காபுரியினை வெகுவாக பாதிக்கும். சுபர்ணராஷ்டிரத்துடன் நீண்ட காலம் நட்பு நாடாக இருக்கும் எங்களுக்கு ஏற்றுமதி வரியில் விலக்கு அளித்தால் நன்றாயிருக்கும்”
“சுபர்ணராஷ்டிரம் அதன் எல்லா அண்டை நாடுகளுடனும் நல்ல நட்பையே விரும்புகிறது. நட்புறவைப் பேணி வருகிறது. இப்போது உங்களுக்கு மட்டும் வரிச்சலுகைகள் அளித்தால், மற்ற நாடுகளின் பகையை சம்பாதிக்க வேண்டி வரும். அவர்களும் வரிச்சலுகைகளை எதிர்பார்ப்பார்கள். அதுபோக, நாடு இருக்கும் பொருளாதாரச் சூழலில், இவ்வாறு வரிவிலக்கு அளிப்பது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தும். நட்பு நாடு என்ற அடிப்படையில் மட்டும் உங்களுக்கு சிறப்புச் சலுகைகளை அளிக்க முடியாது அல்லவா? அதற்கு ஏதேனும் விசேஷித்த உறவு இருக்க வேண்டும்”
“விசேஷித்த உறவு என்று வேந்தர் எதைக் குறிப்பிடுகிறீர்கள்? எனக்குப் புரியவில்லையே?”
“ஒரு திருமண பந்தம். உங்கள் இளவரசியை எங்கள் மருமகளாக ஆக்கிக்கொண்டால், இரண்டு நாடுகளின் பந்தம் இன்னும் உறுதியாகும். இரண்டு நாடுகளும் இணையும்போது எல்லாப் பிரச்சினைகளும் தீருமல்லவா?”
மகா மந்திரியாரின் முகம் ஒரு கணம் சுருங்கியது. ஒரு மிகச்சிறிய கணம். மீண்டும் அதில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு, “அதைப்பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லையே வேந்தே” என்றார்.
“துர்காபுரி மன்னரின் மறைவுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பை நீங்கள்தானே ஏற்று நடத்துகிறீர்கள்? எல்லா அரச அதிகாரங்களும் உங்கள் வசம் தானே இருக்கிறது மந்திரியாரே? உங்களுக்கு இல்லாத அதிகாரமா?”
“ஆனால் ஒரு பெண் இன்னாரைத் தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் அதிகாரம் காலஞ்சென்ற வேந்தருக்குக்கூட இல்லை அரசே. இதுகுறித்து இளவரசியாரும் மகாராணியும்தான் முடிவெடுக்க வேண்டும்”
“அதுவும் சரிதான் மந்திரியாரே. அப்படியானால் நேரடியாக நானே அவர்களிடம் இதுகுறித்துப் பேசுகிறேன்”
“நல்லது வேந்தே.. தாங்கள் இதுகுறித்து மகாராணியாரைச் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்கிறேன். இப்போது தாங்கள் விடைகொடுத்தால், நான் கிளம்புகிறேன்”
வரும்பொழுது பால்வடிந்த மகா மந்திரி ஆதித்ய விக்ரமரின் முகம் வெளியேறும்போது நஞ்சைக் கக்கிக்கொண்டிருந்தது. அந்த நஞ்சு காவு வாங்கப் போகும் உயிர்கள் எத்தனை என்பதைக் காலம்தான் அறியும்.
பத்மாப்பூரின் வானம் நீலத்திலிருந்து கருமைக்கு நிறம் மாறிக்கொண்டிருந்த அந்தி வேளை. விதுரசேனரின் மனம் தெளிவின் பிரகாசத்திலிருந்து குழப்பத்தின் அந்தகாரத்திற்குள் விழுந்த்கொண்டிருந்தது. மனதின் எண்ணத்தை முகத்தின் பாவத்தால் அறிந்த்கொள்ளும் மதியூகம் உள்ள அவரால், ஆதித்ய விக்ரமரின் மனதிலிருப்பவற்றைப் படிக்க முடியவில்லை. உரையாடலின் போது எதிராள் எதிர்பாராத நேரத்தில் முக்கிய முடிவுகளைக் கூறி, அவர்களின் மன ஓட்டத்தை கணிப்பது அவரின் வழக்கம். ஆனால் அதித்ய விக்ரமனிடம் இந்த வேலை செல்லுபடியாகவில்லை. அவர் உணர்ச்சிகளுக்கு மூடிபோட்டு மூடியிருப்பது நன்றாகத் தெரிந்தது. ஆனால் திருமணக் கோரிக்கை உட்பட முக்கியக் காரணிகள் குறித்த மந்திரியாரின் எண்ணத்தை அவர் அறிய முடியவில்லை. குறைந்தபட்சம் அவர் இவற்றை ஒப்புக்கொள்வார அல்லது முட்டுக்கட்டை போடுவாரா என்பதே மர்மமாயிருந்தது.
இவ்வாறு அவர் வாடிய முகத்துடன் அமர்ந்திருந்தபோது, வாட்டத்துடன் சென்ற தன் மகன் மிகுந்த குதூகலத்துடன் உள்ளே நுழைந்ததைக் கவனித்தார் விதுரசேனர். இந்த அளவுக்கு அவன் உற்சாகமடையும்படி என்ன நடந்திருக்கும் என்ற குழப்பமும் அவரின் குழப்பப் பட்டியலில் சேர்ந்துகொண்டது. தன்னை நோக்கித் துள்ளலுடன் வந்த மகனிடம், “என்ன மகனே! இவ்வளவு உற்சாகமாய் இருக்கிறாய்.. என்ன நிகழ்ந்தது?” என்று கேட்டார்.
“அதைப் பின்னர் கூறுகிறேன் தந்தையே… மந்திரியாருடன் நிகழ்ந்த சந்திப்பு எப்படி? சுமூகமாய் முடிந்ததா?”
விதுரசேனர் நிகழ்ந்த உரையாடல் முழுதையும் விரிவாகக் கூற அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தவன், திருமண விஷயம் பற்றிக்கூறியபோது ஆத்திரமடைந்தான்.
“தந்தையே! நான் தங்களின் மேல் மிகுந்த மரியாதை வைத்து இருந்தேன். ஆனல் நீங்கள் இப்படி நடந்துகொண்டீர்களே? என்னை ஒரு வார்த்தை கூட கேட்காமல் என் திருமணம் குறித்து எப்படி நீங்கள் முடிவெடுக்கலாம்? எனக்கு இதில் கொஞ்சம் கூட உடன்பாடில்லை”
“ஒரு தந்தையாக நான் செய்தது தவறுதான் மகனே... ஆனால் ஒரு தேசத்தின் அரசனாக, கூடும்ப நலத்துக்காக தேச நலத்தை விட்டுக்கொடுக்க முடியாது. அது இராஜநீதியாகாது. நாட்டின் நலனுக்காக இந்தத் தியாகத்தை நீ செய்தே ஆக வேண்டியிருக்கிறது”
“உங்களுக்குப் புரியவில்லை அப்பா.. என் இதயம் இப்போது என் வசம் இல்லை. என் காதல் வேறொரு இடத்தில் இருக்கிறது. அப்படியிருக்க, இராஜநீதி என்ற பெயரில் ஒரு பெண்ணுக்குத் துரோகம் இழைக்க என்னால் இயலாது.”
விதுரசேனர், ஆகாயம் நொறுங்கி அவர் தலை மீது விழுந்தது போலவும், தன் காலடியில் தரைபிளந்து பாதாளத்தில் விழுந்தது போலவும் உணர்ந்தார். அவர் திகைத்து நிற்க, அமரகீர்த்தி தொடர்ந்தான்: “ஆமாம் தந்தையே! நான் மகாமந்திரியார் ஆதித்ய விக்ரமரின் புதல்வனும், துர்காபுரியின் தளபதியுமான திவ்யாங்கனைக் காதலிக்கிறேன். வேறு யாரையும் என்னால் மனதால்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. என்னை மன்னித்துவிடுங்கள்” என்று சொல்லிவிட்டு, அந்த அறையை விட்டு வெளியேறினான்.
விதுரசேனர் தான் கண்ட கனவிற்குப் பல இடையூறுகள் நேரும் என்று எதிர்பார்த்திருந்தாலும், இந்த ரூபத்தில் ஒரு பிரச்சினை வரக்கூடும் என்று நினைக்கவில்லை. அவரின் மகாசாம்ராஜ்ஜியக் கனவு பொலபொலவெனத் தகர்ந்து விழுந்தது.
“எத்தனையோ எத்தர்களை சமாளித்த என்னால் இந்த ஒருவனைச் சரிகட்ட முடியாதா? கண்டிப்பாக ஒரு வழி இருக்கும்.” விதுரசேனரின் நரிப்புத்தி சிந்திக்கத் துவங்கியது. அதட்டி, மிரட்டித் தன் மகனை வழிக்குக் கொண்டுவர முடியாது. இது விவேகத்தால் சாதிக்க வேண்டிய காரியம். கார்மேகத்தைப் பிளந்து வரும் மின்னலைப் போல அவர் மனதில் ஒரு தீர்வு தென்பட்டது. சிக்கலான, ஆனால் கண்டிப்பாய் அனுகூலம் தரக்கூடிய ஒரு தீர்வு. அவர் நேரே தன் மகனைத் தேடிச் சென்றார்.
“மகனே! என் மீது கோவமா?”
அமரகீர்த்தி பதில் கூறாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
“உன் மகிழ்ச்சியும் நல்வாழ்வும்தான் எனக்கு முக்கியம் மகனே! உன் காதலுக்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். ஆனால் உன் காதல் வெற்றியடைய வேண்டுமல்லவா?”
அமரகீர்த்தியின் கண்கள் கோவத்தையும் அதேசமயம் குழப்பத்தையும் வெளிப்படுத்தின.
“நீ சுபர்ணராஷ்டிரத்தின் இளவரசன். நம் நாட்டை ஆளப்போகிறவன். உன்னை நம்பித்தான் நம் நாட்டின் எதிர்காலமே இருக்கிறது. இல்லையா?”
“ஆமாம்”
“திவ்யாங்கன் துர்காபுரியின் தளபதி. அவன் உன்னை மணந்து உன்னுடன் – நம்முடன் – வர சம்மதிப்பானா? அவனால் உனக்காகத் தன் நாட்டைத் தியாகம் செய்ய முடியுமா?”
அமரகீர்த்தி ஏதோ சொல்லத்துவங்க, அவனைக் கையமர்த்தி, “எனக்குப் பதிலளிக்கவேண்டி இந்தக் கேள்வியைக் கேட்கவில்லை மகனே! இது உன்னை நீயே கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்வி. உன் காதலனைக் கேட்கவேண்டிய கேள்வி. நன்கு யோசித்து முடிவெடு.”
காரியம் கச்சிதமாய் முடிந்த்தை எண்ணி மகிழ்ந்த்தாய் விதுரசேனர். முடிவு எப்படியாயினும், அது அவருக்கு இலாபமாகவே முடியும். ஒருவேளை திவ்யாங்கன் சம்மதித்துத் தன் மகனுடன் நாட்டை விட்டு வெளியேறினால், துர்காபுரியின் தெய்வீகப் பாதுகாப்பு அழியும். வெளியேற மறுத்தால் அவர்கள் காதல் அழியும். எப்படியாயினும், அவர் விரும்பியது நடந்துவிடும்.
மகன் பரிசாய் அளித்த குழப்பத்திற்கு வட்டி சேர்த்து, அவனிடமே திருப்பித் தந்துவிட்டுப் போனார் விதுரசேனர். அமரகீர்த்திக்கு இன்றும் தூக்கம் முள்படுக்கையின் மீதே விதிக்கப்பட்டிருக்கிறது.
-- Edited by ArvinMackenzie on Tuesday 24th of September 2013 10:59:11 PM
அவன் உன்னை மணந்து உன்னுடன் – நம்முடன் – வர சம்மதிப்பானா? அவனால் உனக்காகத் தன் நாட்டைத் தியாகம் செய்ய முடியுமா?”////
இப்படிப்பட்ட நயவஞ்சக தனத்தினை "நரிப்புத்தி"னு சொல்லாதிங்க, மனித புத்தி தான் இது... பாவம், நரி என்ன செய்தது?.....
தந்தையின் மண் பசிக்கு, மகனின் காதல் இரையாக போகிறதா?னு பார்க்கலாம்.... மேற்கொண்டு சொல்லுங்க.....