ஆகஸ்டு 6 – குரூரத்தின் உச்சத்தை மானுடம் கண்ட நாள். ஹிரோஷிமா நகர் மீது அணுகுண்டு வீசப்பட்ட நாள். அணு ஆயுத எதிர்ப்பின் சின்னமாக விளங்கும் நாள். ஆனால், அத்துடன் இந்த விஷயம் அடங்கி விட்டதா? ஜப்பான் மீது அணு ஆயுதம் பயன்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
மேம்போக்காகக் கூறப்படும் காரணம் ஜப்பானைத் தோற்கடிக்க. ஆனால் வரலாறு அவ்வாறு கூறவில்லை. ஐரோப்பாவில் யுத்தம் எப்ரலிலேயே ஓய்ந்துவிட்டது. ஜப்பானும் ஏற்கனவே தோல்வியின் விளிம்புக்கே சென்றுவிட்டது. பிறகு எதற்காக இந்தப் பேரழிவு?
அமெரிக்காவுக்கு அவர்கள் ஆயுதத்தை, அது ஏற்படுத்தக் கூடிய அழிவின் எல்லையை பரிசோதித்துப் பார்க்க ஒரு களம் தேவைப்பட்டது. அதான் வலிமையை நிலைநாட்ட, எதிரிகளை அச்சுறுத்த ஒரு களம். அது ஜப்பான்.
ஏன் ஜப்பான்? ஏனெனில் அவர்கள்தான் நிராதரவாய், அவர்களுக்குத் உபயோகமற்றவராய் இருந்தனர். நலிந்தவனைத் தாக்கி தன் பலத்தை காட்ட நினைத்த ‘வீரச்செயலே’ அது.
நலிந்தவனை வலியோன் அழிப்பது, பணமும் பலமும் படைத்தவன் அது இல்லாதவனை நசுக்குவது, எண்ணிக்கையில் அதிகம் இருப்பவன் குறைந்தவனை விரட்டுவது எல்லாம் காலம் காலமாக நிகழ்ந்துகொண்டு தான் இருக்கிறது.
சொந்த நாட்டிலேயே வாழ முடியாமல், அவ்வளவு ஏன், நிம்மதியாக சாகக்கூட முடியாமல் வாழும் ஈழ மக்களாகட்டும், சொந்த வீட்டிலேயே வாழ முடியாமல் அகதியாக்கப்படும் மாற்றுப் பாலினத்தவராகட்டும், எங்கேயும் நலிந்தோர் நசுக்கவே படுகின்றனர். ஒரு சாரார், நம்மிடம் ஒற்றுமை எனும் வலிமை இல்லாததால் அழிக்கப்படுகின்றனர் என்றால், மற்றவர், தங்களின் மனவலிமை குன்றுவதால் அழிகின்றனர்.
இந்த நாளை வெறுமனே ஒரு போர்ச்சுவடாகப் பார்க்காமல், நலிந்தோரை அரவணைக்க அறிவுறுத்தும், ஒற்றுமையைப் பேண வழிவக்குக்கும் ஒரு நாளாகப் பார்ப்போம். அகத்தாலும், புறத்தாலும் நம் வலிமையைப் பெருக்கிக் கொள்ள ஒரு நாளாகப் பார்ப்போம்.
[ படத்தில்: ஹிரோஷிமா அமைதிப் பூங்காவின் மத்தியில் இருக்கும் கட்டிடம். இந்த ஒரே ஒரு கட்டிடம் மட்டுமே அந்த அணு ஆயுதத் தாக்குதலில் இடியாமல் நின்றது. அந்தப் பேரழிவின் சின்னமாக அந்நிலையிலேயே பராமரிக்கப்படுகிறது ]
பரிசோதித்துப் பார்க்க ஒரு களம் தேவைப்பட்டது. அதான் வலிமையை நிலைநாட்ட, எதிரிகளை அச்சுறுத்த ஒரு களம்...நானும் இதை படித்தேன் ...அந்தந்த நாட்டு மண்ணில் விளையும் பயிர்கள் முலம் அந்த நாட்டின் அதை உண்ணும் மக்கள் மனம் இருக்கும் என்று புராணங்கள் சொல்வது சில நேரம் உண்மைதான் என்று தோன்றும்...இன்று வரை அவர்கள் மாறவில்லை...