அப்பாடா ஒரு வழியா சில்க் போர்டு வந்து சேர்ந்தாச்சு. இந்த பெங்களூர் ட்ராபிக் ஜாம் இருக்கே. அப்பபப்பா..... கொடுமைலயும் மரண கொடுமை. வெயிட் ஃபீட்ல ரோட்ல இருக்குற எங்க ஆபிஸ்ல இருந்து சில்க ஃபோர்டு வந்து சேரதுக்குள்ள எங்க ஊர்ல இருந்து ஈரோட்டுக்கே போயிடலாம். ஓ.....! எங்க ஊர் என்னனே உங்களுக்கு சொல்லலை இல்லை. எங்க ஊர் பேரு கோயமுத்தூர்....அட்டகாசமான, அழகான ஆர்ப்பாட்டம் இல்லாத ஊர்.... மனசே இலலாம தான் இங்க வந்த வேலை பாத்துக்கிட்டு இருக்கேன்.. என்னாப்பன்றது இங்க வந்து குப்ப கொட்ட வேண்டியதா போச்சு....சேலம் போய் தான் கோயமுத்தூர் போகணும்..
இப்ப கூட சேலம் பஸ் தான் பிடிக்க போறேன். தொடர்ச்சியா நாலு நாளைக்கு லீவு... பெங்களூரே காலியாகப் போகுது.... பஸ்ல எப்படியும் சீட் கிடைக்கறது கஷ்டம் தான். அதான் மெஜெஸ்டிக் போகாம நேரா சில்க் போர்டு வந்துட்டேன். சீக்கிரமா வந்ததால எப்படியும் சீட் கிடைச்சிடும் சில்க் போர்டு ஸ்டாண்ட்ல கொஞ்சம் கஷ்டப்பட்டா நின்னா சீட் பிடிச்சிடலாம்.
சில்க் போர்டு உள்ள நுழைஞ்சதும் முதல்ல ஒரு காபி குடிச்சிடறது நம்ம பழக்கங்க. அதுவும் அந்த கோத்தாஸ் காபிதாங்க நம்ம ஃபேவரைட். அஞ்சு ரூபாய்க்கு இவ்வளவு சூப்பரான காபி நம்ம ஊர்ல கிடைக்காதுங்க. இருங்க ஒரு காபி குடிச்சிட்டு வந்திடறேன்.
காபி வழக்கம் போல சூப்பரா இருந்துச்சுங்க. அதுவும் நமக்கு ஏத்த மாதிரி ஸ்டராங்கா, சக்கரை கொஞ்சம் கம்மியா. சுருக்கமா சொன்னா நம்ம கோயமுத்தூர் அண்ணபூர்ணா காபி மாதிரி. சரி காபி புராணத்த நிறுத்துவோம். நான் அதை பத்தி பேச ஆரம்பிச்சா பேசிட்டே இருப்பேன்.
இவ்வளவு நேரம் பேசிட்டே இருக்கோம். என் பேரை சொல்லல பாருங்க. என் பேரு... ஐயோ அங்க வர பஸ் சேலம் பஸ் மாதிரி தெரியுது. இருங்க முதல்ல பஸ்ல போய் இடம் பிடிப்போம்.
ஆஹா... பஸ்ல ஏறிட்டேன். நல்ல சீட்டு இல்ல...நாலு மணி நேரம் நின்னுட்டு போக முடியாது இல்லையா? இந்த மூணு பேர் உக்கார சீட்ல உக்காரவே எனக்கு பிடிக்காது. இருந்தாலும் வேற வழியில்லாததால உக்கார்ந்துக்கிட்டேங்க. அடுத்து யாராவது வந்தா நடு சீட்ல உக்கார சொல்லனும். ஜன்னல் சீட்ல இருக்கற அந்த ஆளை எப்படியும் நகர சொல்ல முடியாது. நடுல உக்கார்ந்து போறதை விட வேற கொடுமை இல்லை. அதான் இப்படி ஓரமாவே ஒட்டிட்டு உக்கார்ந்து இருக்கேன்.
நான் நல்ல பையங்க. ஆனா அப்பப்ப கொஞ்சம் பொய் மட்டும் சொல்லுவேன். அதுல முக்கியமான ஒண்ணு பஸ்ல போகும் பக்கத்துல இருக்குற யார் கேட்டாலும் வேலை தேடிட்டு இருக்கறனு சொல்றது. கொஞ்சம் நல்லா கல கலனு போகும். நிறைய பேர் அட்வைஸ் கொடுப்பாங்க. அட்டகாசமான டிப்ஸ் எல்லாம் கொடுப்பாங்க. நானும் நல்ல பையனா கேட்டுக்குவேன். ஏன்னா வேலைக்கு போறனு சொன்னா சம்பளத்தை பத்தி தான் அதிகம் பேசுவாங்க. அதான் இப்படி.
இன்னைக்கு யாரும் சிக்க மாட்டாங்க போல. சரி பார்க்கலாம். எப்படியும் பக்கத்துல ஒரு ஆள் வருவான் இல்லை.
ஆஹா... என்னங்க ஒருத்தன் நம்ம பக்கத்துல வந்து நிக்கறான். திரு திருனு முழிச்சிட்டு, சும்மா ஒரு சிரிப்பு சிரிச்சான் பாருங்க எப்பா ..... சான்சே இல்ல..தொத்து பல்லு அழகா அப்படியே கன்னத்துல குழி வேற சொல்லவா வேணும் நாங்க எல்லாம் அப்பவே அப்படி..ஒரு கிறக்கத்தில் பார்த்தேன்...நகுந்து உட்கார்ந்தேன்...
என்னங்க இப்படி அநியாயமா நம்மள நடுசீட்ல உக்கார வெச்சிட்டாங்க. இன்னும் நாலு மணி நேரம் இந்த சீட்ல உக்கார்ந்துட்டு போகனும். அதுவும் அந்த பக்கம் கொஞ்சம் நிறைய இடம் விட்டு. ஏன்னா இந்த காலத்துல பசங்களை எவனும் நம்ப மாட்றானுங்க. அதனால தான். ரொம்ப புழுக்கமா இருக்குற மாதிரி இருக்குது இல்ல. இருங்க வரேன்
"அண்ணே! அந்த ஜன்னலை கொஞ்சம் திறங்களேன். வண்டி புறப்பட்டதுக்கப்பறம் மூடிக்கலாம்"
"நானும் தொறக்க முயற்சி செஞ்சேன்பா. முடியல. நீ வேணா முயற்சி செஞ்சி பாரேன்"
ச் சே!!! இன்னைக்கு நமக்கு நேரமே சரியில்லை. அந்த ஜன்னலை தொறக்க முடியலைங்கறது கூட பிரச்சனையில்லை. என்னால தொறக்க முடியலைனு அவர் சொன்னவுடனே அவன் "களு"க்குனு சிர்ச்சதுதான் அசிங்கமா போயிடுச்சி. இதுக்கு கூடவாங்க சிரிப்பாங்க.
"தம்பி சேலமா?"
"இல்லைங்க. கோயமுத்ததூர். சேலம் போய் மாறி போகனும்"
"இன்னைக்கு பௌர்ணமியாச்சே! பஸ்ல இடம் கிடைக்குமா?"
"மணி இப்ப நாலு தானே ஆகுது. ஒரு ஒன்பது, பத்து மணிக்கெல்லாம் பஸ் சேலம் போயிடும். நிறைய பேரு பதினொரு மணிக்கு மேலதான் வருவாங்க.... அதனால அட்டகாசமா உக்கார்ந்துட்டே போயிடலாங்க"
"அதுவும் சரிதான். தம்பி பெங்களூர்ல என்ன பண்றீங்க?"
ஆஹா... ஆரம்பிச்சிட்டாங்கய்யா. என்ன சொல்லலாம்? இதுக்கு முன்னாடி ஒருத்தர்கிட்ட இப்படி தாங்க யாகூல வேலை செய்யறேனு சொன்னேன். அதுக்கு அவர் அங்க என்ன தம்பி பண்றீங்கனு கேட்டாரு. நானும் என்ன சொல்றதுனு தெரியாம, கம்யூட்டர்ல ஏதாவது தேடறவங்களுக்கு கண்டு பிடிச்சி கொடுக்கறதுனு சொன்னேன். உடனே அவர் பக்கத்துல உக்கார்ந்திருந்த அந்த பாட்டி, "தம்பி! என் சுருக்கு பைய ஒரு வாரமா காணோம். கொஞ்சம் கண்டு பிடிச்சி கொடு"னு கேட்டுட்டாங்க. இந்த தடவை மறுபடியும் நல்லவனா மாறிட வேண்டியது தான்.
"நான் இங்க வேலை தேடிட்டு இருக்கேங்க"
"என்ன படிச்சிருக்கீங்க தம்பி"
"நான் கம்ப்யூட்டர் இஞ்சினியரிங் படிச்சிருக்கேங்க. ஆறு மாசமா வேலை தேடிட்டு இருக்கேன்"
"இங்க தான் அந்த படிப்புக்கு நிறைய வேலை இருக்குனு சொல்றாங்களே?"
"அதெல்லாம் சும்மாங்க. அதுக்கும் நிறைய இருக்கு. முக்கியமா நல்ல காலேஜ்ல படிச்சா கேம்பஸ்லயே வேலைக்கு சேர்ந்திருக்கலாம். நான் சுமாராதான் படிச்சேன். அதான் கொஞ்சம் லேட்டாகுது"
"கவலைப்படாத தம்பி. சீக்கிரமே வேலை கிடைக்கும்"
"சரிங்க. ரொம்ப நன்றி"
என்னங்க. இவர் எதுவும் அதிகமா பேச மாட்றாரு. இதுக்கு முன்னாடி வந்தவங்க நிறைய பேர் அவுங்க சொந்தக்கார பசங்க இங்க வேலை செய்யறதை பத்தி எல்லாம் கதை அளந்து விட்டுட்டு இருப்பாங்க. கம்பெனி பேரு, சம்பளம் இதை எல்லாம் சரியா தெரிஞ்சி வெச்சிருப்பாங்க. ஆனா யாருக்கும் அதுல டேக்ஸ் எவ்வளவு கட்டறாங்கனு தெரியாது.
"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"
என்னங்க அந்தப்பையன் பேச ஆரம்பிச்சிட்டான்... சரி விடுங்க கடலைய ஆரம்பிப்போம்...
ஹி...ஹி..ஹி..
மனதில் தோன்றிய குறள்
கடலைபோட்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
மொக்கைபோட்டு பின் செல்பவர்
"எக்ஸ்க்யூஸ் மீ! நீங்க ஃப்ரெஷ்ஷரா வேலை தேடறீங்களா?"
"கலக்கறீங்க. எப்படிங்க ஒரே சமயத்துல நாலு கம்பெனில வேலை? ஒரு கம்பெனில வேலை கிடைச்சா சேராம திரும்பவும் வேலை தேடுவீங்களா?"
"இல்லைங்க. போன மாசம் இன்ஃபோஸிஸ் அட்டெண்ட் பண்ணேன். இந்த மாசம் அக்சண்சர், ஐபிஎம், கெட்சிஎல் மூணும் அட்டெண்ட் பண்ணேன். எல்லாத்துக்கும் இந்த வாரம் தான் ரிசல்ட் வந்துச்சு. ஃபிரெண்ட்ஸ்க்கு எல்லாம் ட்ரீட் கொடுத்துட்டு இன்னைக்கு தான் ஊருக்கு கிளம்பறேன். அங்க போய் எங்க வீட்ல அப்பா, அண்ணாகிட்ட எல்லாம் பேசி ஏதாவது ஒரு முடிவு செய்யனும்"
"எனக்கும் எதை டிசைட் பண்றதுனு இன்னும் தெரியல. அனேகமா அக்சண்சர் தான் சேருவேனு நினைக்கிறேன்"
"ஆல் தி பெஸ்ட்ங்க"
"தேங்க்ஸ்ங்க. நீங்க வந்து ஆறு மாசமாச்சுனு சொன்னீங்க இன்னும் வேலை கிடைக்கலயா?"
"என்னங்க பண்ண. லக்கே இல்லைங்க"
"லக் எல்லாம் சொல்லாதீங்க. எல்லாத்துக்கும் முயற்சி தாங்க முக்கியம். இதே என்னை எடுத்துக்கோங்க. இன்ஃபோஸிஸ் மட்டும் அட்டெண்ட் பண்ணிட்டு நிறுத்தியிருக்கலாம். விடா முயற்சியால தான் இப்ப கைல நாலு ஆஃபர் வெச்சிருக்கேன்"
"என்னங்க பண்ண. எவனும் கால் லெட்டரே அனுப்ப மாட்றானுங்க. நானும் எவ்வளவோ முயற்சி செஞ்சி தான் பாக்கறேன்"
"நீங்க எப்படி எல்லா கம்பெனிக்கும் அப்ளை பண்றீங்க?"
"நான் ஒவ்வொரு கம்பெனிக்கா ரெஸ்யும் எடுத்துட்டு போய் அந்த கம்பெனி வாட்ச் மேன்கிட்ட கொடுப்பேங்க. அவர் வாங்கி வெச்சிக்குவார்"
"அப்பறமா அதை எல்லாம் எடைக்கு போட்டு சுண்டல் வாங்கி சாப்பிட்டுடுவாரு. என்னங்க இது தமிழ் சினிமா ஹீரோ மாதிரி பண்றீங்க? யாராவது தெரிஞ்சவங்க இருந்தா ரெஃபர் பண்ண சொல்றதை விட்டுட்டு இப்படி பண்ணிட்டு இருக்கீங்க?"
"எனக்கு தெரிஞ்சவங்க யாரும் இங்க இல்லைங்க. நாங்க தான் எங்க காலேஜ்ல முதல் செட்டு. அதனால சீனியர்ஸும் இல்லை. நாங்க நாலு ஃபிரெண்ட்ஸ் வீடு எடுத்து தங்கி வேலை தேடிட்டு இருக்கோம். ஒருத்தவனுக்கும் இன்னும் கால் லெட்டரே வரல"
"இப்படி வேலை தேடினா கால் லெட்டர் வராது. கால் வலி தாங்க வரும். ஆன் லைன்ல ஒழுங்கா அப்ளை பண்ணுங்க. அப்படியே உங்க மெயில் ஐடியும், ஃபோன் நம்பரும் எனக்கு கொடுங்க. எனக்கு ஏதாவது தெரிஞ்சா உங்களுக்கு அனுப்பறேன்"
"சரிங்க"
"உங்களுக்கு என்ன லாங்வேஜ் தெரியும்?"
"தமிழ், இங்கிலிஷ்"
"ஏன் கன்னடம், மலையாளம் எல்லாம் கத்துக்க வேண்டியது தானே? இந்த ஜன்மத்துல உங்களுக்கு வேலையே கிடைக்காதுனு நினைக்கறேன்"
"ஏங்க இப்படி சொல்றீங்க?"
"நான் என்ன ப்ரோகராமிங் லாங்வேஜ் தெரியும்னு கேட்டேன். நீங்க என்னனா கற்றது தமிழ், இங்கிலிஷ்னு கதையை விட்டுட்டு இருக்கீங்க?"
"என்னங்க பண்ண உங்களை மாதிரி நிறைய இண்டர்வியு அட்டெண்ட் பண்ணிருந்தா தெரியும். எனக்கு C கொஞ்சம் கொஞ்சம் தெரியுங்க"
" 'C' யே கொஞ்சம் கொஞ்சம் தான் தெரியுமா? இப்பல்லாம் பொறக்கற குழந்தையே லினக்ஸ், ஜாவானு எல்லாம் தெரிஞ்சிட்டு தான் பொறக்குதுங்க. நீங்க என்னனா 'C' யே கொஞ்சம் தான் தெரியும்னு சொல்றீங்க"
"என்னங்க பண்றது. சட்டில இருக்கறது தான் அகப்பைல வரும்"
இவ்வளவு கேள்விக்கு பேசாம யாகூல வேலை செய்யறனே சொல்லியிருக்கலாம் போல இருக்குங்க. நல்லா கடலை வறுத்திருக்கலாம். இப்ப மொக்கையா போச்சு.
"ஹிம்ம்ம்... ஊருல இருந்து வந்தவுடனே எனக்கு மறக்காம ஃபோன் பண்ணுங்க. என் ஃபிரண்டு ஒருத்தன் 'C'ல பிஸ்து. அவன்கிட்ட உங்களுக்கு இண்ட்ரோ பண்ணிவிடறேன்"
"சரிங்க. கண்டிப்பா. ஆமா நீங்க சேலமேவா?" பேச்சை திசை திருப்பியே ஆகனுங்க.
"இல்லைங்க. நான் நாமக்கல். சேலத்துல இருந்து பஸ் மாறி போகனும்"
"சரிங்க. நீங்க எப்ப மறுபடியும் பெங்களூர் வறீங்க?"
"நான் திங்ககிழமை இங்க இருப்பேன். நீங்க?"
"நான் ஒரு வாரம் கழிச்சி தான். ஜாயினிங் டேட் இன்னும் ரெண்டு வாரம் கழிச்சி தான் இருக்கு. சீக்கிரம் வந்து மட்டும் என்ன செய்ய போறோம் சொல்லுங்க"
"அதுவும் சரிதான்"
"ஒண்ணு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?"
"சொல்லுங்க"
"உங்க பேரு என்னானு சொல்லவேயில்லையே?"
"என் பேரு சரவணா. உங்க பேரு?"
"விஐய்"....
ஒரு வழியாக சேலத்துக்கு வந்துட்டோம். .....அடப்பாவிகளா பஸ்ஸ எதுக்கு இங்க நிறுத்தனானுங்க? அடக்கொடுமையே இங்கயா பிரேக்டவுன் ஆகணும்
அநியாயமா ஒரு கிலோ மீட்டருக்கு முன்னாடியே நிறுத்திடானுங்களே. கடவுளே என்னடா நமக்கு வந்த சோதனை.
"இந்த எலவுடுத்த பஸ்சு, ஒரே ரொதனையா போச்சு...ஓட்ட வண்டியல்லாம் நம்ம தலைல கட்டி விட்டு தாலிய அருக்குறானுக.." என டிரைவர் கத்தக்கொண்டே.... "பஸ் இதுக்குமேல போகது.. பிரக்டவுன் ஆயிடுச்சு.. எல்லாரும் எறங்குங்க.." என அனைவரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்..
"என்னங்க இது பஸ் ஸ்டாண்ட் மாதிரி தெரியலையே?" தூக்க கலக்கத்திலிருந்தான் சரவணா.
"ஆமாங்க. பஸ்சு பிரேக்டவுன் "
"ஆமாம். இப்ப என்ன பண்றது?"
"அப்படியே நடந்து போனா பஸ் ஸ்டேண்ட் வந்துடும் வாங்க"
ரெண்டு பேரும் பேசிக்கிட்டே வந்ததுல ஒரு கிலோ மீட்டர் நடந்ததே தெரியலைங்க. பேசாம பத்து கிலோ மீட்டருக்கு முன்னாடியே வண்டிய நிறுத்தியிருக்கலாம் போல. கவர்மெண்ட் பஸ்சோட மகிமையே தனிதான் போல.
பாருங்க. நம்ம தான் டகால்ட்டினு பார்த்தா இவன் நமக்கு மேல இருக்கான்போல எப்படி தான் இப்படி கூச்சப்படாம பொய் சொல்றாங்களோனு தெரியலைங்க!!!!!!! இப்ப எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க? நான் சும்மா ஒரு பொய் சொன்னேன். அவன் எப்படி தொடர்ந்து கண்டினியுஸா அடிச்சான் பார்த்தீங்க இல்லை. இதுல எனக்கு அட்வைஸ் வேற. யாகூல வேலை செய்யற எனக்கு ஆறு மாசமா வேலை தேடற பையன் அட்வைஸ் பண்றான் பாருங்க. அது தான் கொடுமை...
என்னடா இன்னைக்கு வெள்ளிக்கிழமை இவன் ஊருக்கு போகலைனு பார்க்கறீங்களா? நான் மாசத்துக்கு ஒரு தடவை தான் ஊருக்கு போகறது வழக்கம். போன வாரம் போனதால இந்த வாரம் போகலை. இப்ப என் ரூமுக்கு போயிட்டு இருக்கேன். என் ரூம் கோரமங்கலா பக்கத்துல இருக்குற விவேக் நகர்ல இருக்கு. அதான் இந்த 201 பஸ் பிடிச்சி போயிட்டு இருக்கேன். 141 வர கொஞ்ச நேரமாகும் போல.
இன்னைக்கு என்ன ப்ளானு கேக்கறீங்களா? கழுத கெட்டா கூட்டி சுவருங்கற மாதிரி நாங்க ஃபிரியா இருந்தா Forum. அப்படியே அங்க ஒரு ரெண்டு மூணு மணி நேரம் சுத்திட்டு, கிருஷ்ணா கபேல ஒரு வெட்டு வெட்டிட்டு வந்து பாலாஜில ஒரு படம் பார்த்துட்டு, தூக்கம் வரலைனா சீட்டு விளையாடிட்டு ஒரு நாலு, அஞ்சு மணிக்கா படுப்போம்.
இருங்க ஏதோ போன் வருது யாருனு பார்க்கறேன். எதோ புது நம்பர்ல இருந்து வருது.
"நாங்க விப்ரோல இருந்து கூப்பிடறோம். நீங்க எங்க வாட்ச்மேன்கிட்ட கொடுத்த ரெஸ்யும் கிடைச்சுது. உங்களுக்கு நாளைக்கு இண்டர்வியூ. காலைல அஞ்சு மணிக்கு எலக்ட்ரானிக் சிட்டி ப்ராஞ்ச்க்கு வந்துடுங்க. அங்க நீங்க ரெஸ்யும் கொடுத்த வாட்ச்மேன் இருப்பாரு. அவர்கிட்ட இன்னைக்கு சனிக்கிழமை நாளைக்கு வெள்ளிக்கிழமைங்கற கோட் வேர்ட் சொன்னா அவர் இண்டர்வியூ நடக்கற இடத்துக்கு உங்களை கூப்பிட்டு வருவாரு"
இது அவன் வேலை தாங்க. ஊருல இருந்து வந்துட்டன் போல
"காலைல அஞ்சு மணிக்கா?"
"ஆமாங்க"
"நான் இப்ப ஊருக்கு கிளம்பறேன். திங்க கிழமை காலைல மூணு மணிக்கா அந்த பக்கம் வருவேன். அப்ப வேணா அட்டெண்ட் பண்ணலாமா? நான் வேணா முந்தா நேத்து சனிக்கிழமை நேத்து வெள்ளிக்கிழமைனு கோட் வேர்ட் சொல்றனே"
"இப்படியெல்லாம் பண்றதால தான் உங்களுக்கு வேலையே கிடைக்க மாட்டீங்குது. போன வாரம் தானே ஊருக்கு போனீங்க. அதுக்குள்ள என்ன திரும்ப ஊருக்கு"
"விப்ரோ HRக்கு நான் போன வாரம் ஊருக்கு போனதெல்லாம் கூட தெரியுது. அதனால தாங்க நீங்க இந்தியாவிலயே பெரிய கம்பெனியா இருக்கீங்க"
"ஹலோ நான் சரவணா பேசறேன்"
"எந்த சரவணன்?"
"ஹிம்... புதுக்கோட்டைலயிருந்து சரவணன். உங்க கூட அன்னைக்கு பஸ்ல வந்தனே அந்த சரவணன்"
"அப்பறம் இந்த வாரம் ஏதாவது இண்டர்வியூ அட்டெண்ட் பண்றீங்களா?"
"இல்லைங்களே. ஏன் நீங்க ஏதாவது அட்டெண்ட் பண்றீங்களா?"
"ஆமாம். நாளைக்கு கோரமங்களால XYZ கம்பெனில காலைல 10 மணிக்கு வாக் இன். 70% க்கு மேல இருந்தா அட்டெண்ட் பண்ணலாம். வெறும் C தெரிஞ்சா போதும்னு சொல்றான். சும்மா வந்து அட்டெண்ட் பண்ணி பாக்கறீங்களா?"
ஆஹா... என்னங்க இது வம்பா போச்சு? இப்ப என்ன பண்ணலாம்? இப்போழுதைக்கு உண்மையை சொல்ல வேண்டாம். நாமலும் அவனை கலாய்ப்போம்.
"சரிங்க. வர ட்ரை பண்றேன்"
"என்னது ட்ரையா? உங்களுக்கே ஓவரா தெரியல. ஒழுங்கா நாளைக்கு வந்து சேருங்க"
என்னங்க இப்படி பேசிட்டு இருக்கும் போதே கட் பண்ணிட்டா? ரொம்ப ராங்கி பிடிச்சவணா இருக்கான. நம்ம கைல ராங்கு காட்னா எல்லாம் ராங்கா போயுடும்னு பாட்டு பாடற நமக்கேவாங்க? நாளைக்கு போகாம எஸ்கேப் ஆகிடலாம். அவன் கேட்டா பொய் சொல்றதுக்கு நமக்கு தெரியாதா என்ன?
என்னங்க ஃபோரம்ல சுத்த போறேன், படத்துக்கு போக போறேன், சீட்டு விளையாடப்போறேனு சொல்லிட்டு இப்படி காலங்காத்தால கைல ரெஸ்யூமோட இங்க வந்திருக்கேனு பார்த்தீங்களா? சும்மா விளையாட்டுக்கு தான். அவன் என்னை எப்படி நாலு கம்பெனில வேலை கிடைச்சிருக்குனு ஏமாத்தினானோ, அதை விட நான் அவனுக்கு பல்ப் கொடுக்கனும்னு தான் இந்த ஐடியா. நீங்க என்னை எதுவும் தப்பா நினைக்க மாட்டீங்கனு எனக்கு தெரியும்.
இந்த ரெஸ்யூம்ல என்னோட பேரை தவிர எல்லாமே பொய் தான். இந்த பெங்களூர்ல, இந்த சின்ன கம்பெனில எவனுக்கு என்னை தெரிய போகுது. இருங்க மொபைல் அடிக்குது, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க பேசிட்டு வந்துடறேன்.
"ஹேய் சரவணா. சொல்லுங்க. எங்க இருக்கீங்க?"
"நான் இண்டர்வியூ அண்டெண்ட் பண்ண போறேன். நீங்க வரீங்களா? இல்லையா?"
"நான் இன்னும் சரியா ப்ரிப்பேர் பண்ணல. அடுத்து ஏதாவது பெரிய கம்பெனியா இருந்தா சொல்லுங்க. சின்ன கம்பெனி எல்லாம் வேண்டாம்"
"பில் கேட்ஸ் ரிட்டயர்ட் ஆகறாராம். நீங்க வேணா அந்த வேலைல சேர்ந்துக்கறீங்களா?"
ஏன் இப்ப எல்லாரும் என்னை அப்படி முறைக்கறீங்க? எத்தனை பொய் தான் சொல்வேனு எண்ணிட்டு இருக்கீங்களா? நான் சொன்னது ஒரு தாய் பொய் தான். மீதியெல்லாம் அதோட குட்டி பொய்.
எப்படியும் இன்னைக்கு இவனுங்க இண்டர்வியூல தப்பி தவறிக்கூட செலக்ட் ஆகிடக்கூடாதுங்கறது தாங்க என்னோட வேண்டுதலே. இதோ அந்த வாயாடி படிக்கெட்ல வந்துட்டு இருக்கான் பாருங்க. அன்னைக்கு பார்த்ததை விட இன்னைக்கு இன்னும் கொஞ்சம் அழகா தெரியறான் பாருங்க.
அழகா டிரஸ்ஸ அயர்ன் பண்ணி, மேட்சிங்கா சர்ட்போட்டு சூப்பரா இன் பண்ணி சும்மா கும்முனு யம்மா...அழகா இருக்கான்.. அதோட அந்த தொத்து பல் இன்னும் சூப்பர்.....
விஜய்! ரொம்ப அலையாதனு நீங்க சொல்றது எனக்கு கேக்குது. அதனால இதோட நிப்பாட்டிக்குவோம்.
"அடப்பாவமே. நீங்க இங்க எனக்கு முன்னாடியே வந்துட்டீங்களா? சேர்ந்து சாப்பிடலாம்னு சொன்னவுடனே அதுக்குள்ள வந்துட்டீங்க. நான் இண்டர்வியூ முடிச்சிட்டு தான் வருவேன்"
"ஆமாங்க நீங்க சொல்லி பத்து நிமிஷத்துல நான் ரெஸ்யூம் டை ப் பண்ணி, ப்ரிண்ட் அவுட் எடுத்துட்டு, பறந்து வந்துட்டேன்"
"அப்ப, நான் ஃபோன் பண்ணும் போது நீங்க இங்க தான் இருந்துருக்கீங்க"
"ஆமா. சும்மா ஒரு சர்ப்ரைஸா இருக்கட்டுமேனு தான் நான் சொல்லல"
"இதெல்லாம் ஒரு சர்ப்ரைஸா. நீங்க இந்த இண்டர்வியூ க்ளியர் பண்ணா அது சர்ப்ரைஸ்"
"மணி பனிரெண்டே காலாச்சு.. பக்கத்துல எங்கயாவது நல்ல ஓட்டல் இருக்கா?"
"பக்கத்துல தான் கிருஷ்ணா காபே இருக்கு.. மதியம் சாப்பாடு சூப்பரா இருக்கும்"
"இதெல்லாம் தெரிஞ்சி வெச்சிக்கோங்க. ஆனா இண்டர்வியூல கேக்கற கேள்விக்கு மட்டும் பதில் தெரிஞ்சிக்காதீங்க"
"என்னங்க பண்றது... உங்களை மாதிரி ஆளுங்களுக்கு அதிக மூளையை எடுத்து ஊத்திட்டு எங்களுக்கு குறைச்சிட்டான் போல"
"என்னுமோ பந்தில பாயசம் ஊத்தற மாதிரி சொல்றீங்க. சரி வாங்க சாப்பிட போகலாம்"
கிருஷ்ணா கபேல சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சுங்க. எப்பவும் போல வெளுத்து கட்டியாச்சு. எங்க சரவணாவை காணோம்னு பார்க்கறீங்களா? அவனை பஸ் ஏத்தி அனுப்பிட்டேன். ஃபோரம் போகலாமானு கேக்கலாம்னு யோசிச்சேன். அப்பறம் அது சரியில்லைனு தோணுச்சு. அதான் பஸ்ல ஏத்திவிட்டாச்சு...
சீக்கிரம் உண்மையை சொல்லிடனும்னு தோனுது.. இல்லைனா ஏதாவது பிரச்சனையாக வாய்ப்பிருக்குனு மனசுல படுது. சான்ஸ் கிடைக்கும் போது சொல்லிடுடா விஜய்னு என் மனசும் அடிக்கடி சொல்லுது. பார்க்கலாம்...
என்னடா இப்பவெல்லாம் இவன் ஃபோன்லயே அதிக நேரம் பேசிட்டு இருக்கானு பாக்கறீங்களா? என்னங்க பண்ண? தினமும் அவனுக்கு சும்மா என்ன பண்றனு கேக்கலாம்னு ஃபோன் பண்றேன். அது ரெண்டு மூணு மணி நேரமாகிடுது. இதுல வேற இந்த கம்பெனிகாரனுங்க ஒரு மணி நேரத்துக்கு ஒரு தடவை கட் பண்ணிடறானுங்க. யார் எவ்வளவு நேரம் பேசினா இவுங்களுக்கு என்னங்க வந்துச்சு? பாதி பேசிட்டு இருக்கும் போதே கட் ஆகிடும். அப்பறம் மறுபடியும் பேச வேண்டியதா போயிடுது. அதிலும் எனக்கு அவன்மேலயும் அவனுக்கு என்மேலயும் ஒரு வித பாசம் அன்பு உண்டு.ஒரு நாள் தெரிஞ்சிச்சு அவனும் என்னை மாதிரியே ஒரின நாட்டம் உள்ளவன்னு..
என் மேல சந்தேகமா இருந்தா நீங்களும் கேட்டுப்பாருங்க.
"என்ன பண்ணிட்டு இருக்க?"
"நாங்க இன்னைக்கு நல்லா ஊர் சுத்திட்டு வந்தோம். உனக்கு ஒண்ணு தெரியுமா? எனக்கு ஊர் சுத்தறதுனா ரொம்ப பிடிக்கும்"
"எனக்கும் வண்டில ஊர் சுத்தறதுனா பிடிக்கும். ஐன்ஸ்டீன் கூட சொல்லிருக்காரு 'I love to travel, but hate to arrive'னு "
"ஹே ஹே... இப்படி ஐன்ஸ்டீன் பேர் சொல்லி ஃபிகரை பிக் அப் பண்றதெல்லாம் பழைய காலம். இப்பவெல்லாம் பசங்க ரொம்ப உசாரு.. கெட்டவனா இருந்தா தான் பிடிக்கும்"
"பராவாயில்லை இப்ப எல்லாம் கொஞ்சம் முன்னேறிட்டீங்க போல. முன்னாடியெல்லாம் போக்கிரி ராஜாங்கள தான் பிடிக்கும்னு சொல்லிட்டு இருந்தீங்க. இப்பவெல்லாம் ஒரு படி கீழ இறங்கி போக்கிரிகளையும் பிடிக்கும்னு ஆரம்பிச்சிட்டீங்க"
"ஆமாம். அப்படியே நீங்கம ட்டும் ஒழுங்கு. நார்மலா பேசற பசங்கள விட்டுட்டு மாடர்ன் டைப் பசங்க பின்னாடி தானே சுத்துவீங்க"
சரி இதுக்கு மேலயும் எங்க மொக்கையை கேட்டா நீங்க டென்ஷனாகிடுவீங்க. இந்த வீக் எண்ட் அவன் வீட்டுக்கு என்னை வர சொல்லியிருக்கான். சனிக்கிழமை போகலாம்னு இருக்கேன். அங்க அவன் க்ளாஸ் மேட்ஸ் எல்லாம் இண்ட்ரடியூஸ் பண்ணிவிடறேனு சொல்லியிருக்கான்...
இன்னைக்கு அங்கு வந்து சேர்ந்து படிக்கலாம்னு சொல்லியிருக்கான். வீக் டேஸ்ல நிறைய நாள் வர சொன்னான். நான் வேற ஃபிரெண்ட் வீட்டுக்கு போறேன், அது இதுனு பொய் சொல்லி வெச்சிருக்கேன். இன்னைக்கு எப்படியும் உண்மையை சொல்லிடலாம்னு ப்ளான்.
அவன் ஃபிரெண்ட்ஸ் எல்லாருக்கும் ஒரு டீலிங் இருக்காம். ஒவ்வொருத்தருக்கும் ஏதாவது ஒரு நல்ல கம்பெனில வேலை செய்யறவங்க ஒருத்தராவது தெரிஞ்சிருக்கனும்னு. அப்ப தான் ரெஃபர் பண்றதுக்கும், ஓப்பனிங் இருந்தா சொல்றதுக்கும் வசதியா இருக்கும்னு அப்படி ஒரு திட்டமாம். எனக்கு யாரையும் தெரியாதுனு சொன்னேன். சும்மா அடிச்சி விடு அப்பறமா பார்த்துக்கலாம்னு சொல்லியிருக்கான். ஒரு வழியா BTMலே அவுட்க்கு வந்தாச்சுங்க. இப்ப அவன் ரூமை கண்டுபிடிச்சு போகனும். இன்னைக்கே சொல்லலாமா இல்லை அடுத்த முறை பார்க்கும் போது சொல்லலாமானு இப்ப ஒரே யோசனையா இருக்கு. இருங்க செல்ஃபோன் அடிக்குது சரவணாவத் தான் இருப்பான்.
"நான் BTM வந்துட்டேன். இன்னும் அஞ்சு நிமிஷத்துல உங்க வீட்ல இருப்பேன்"
"சாருக்கு காலைல எழுந்திரிச்சி வரதுக்கு இவ்வளவு நேரமாகிடுச்சா?"
"இல்லை. நான் ஒன்பது மணிக்கு எல்லாம் கிளம்பினேன். இங்க வந்து சேரதுக்கு ரெண்டு மணி நேரமாகிடுச்சு"
"சரி. எங்கயும் வேடிக்கை பார்க்காம வந்து சேரு"
"அதெல்லாம் பத்திரமா வந்துடுவோம். நீ எதுவும் பயப்பட வேண்டாம்"
"ஐயோ. இவர் அப்படியே குழந்தை. இவருக்கு ஏதாவது ஆகிடும்னு பயப்படறோம். பசங்களை பார்த்துட்டு அங்க இங்க நின்னுடாதனு சொன்னேன். இங்க என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க"
"இதோ வந்துட்டேன். நீ கொஞ்சம் வெளிய வந்தா வீடு ஈசியா கண்டுபிடிச்சிடலாம்"
என்ன புறப்படறதுக்கு இவ்வளவு நேரமாகிடுச்சினு பாக்கறீங்களா? என்ன பண்ண? எல்லாரும் இப்ப தான் கிளம்பறாங்க. மதியம் போனவுடனே அவன் ஃபிரெண்ட்ஸ் எல்லாரையும் அறிமுகப்படுத்தி வெச்சான். மூணு பசங்க நாலு பொண்ணுங்க. எல்லாரும் நல்லா பேசனாங்க. அப்பறம் சாப்பிட ஆரம்பிச்சோம். அட்டகாசமா சமைச்சிருந்தாங்க. வெல்லம் போடாத சாம்பார், உருளைக்கிழங்கு வறுவல், மிளகு ரசம், சக்கரை போடாம தயிரை சாப்பாட்ல போட்டு சாப்பிட்டது. எல்லாமே சூப்பரா இருந்தது. சரவணா இவ்வளவு சூப்பரா சமைப்பான்னு நீங்களும்
எதிர்பார்த்திருக்க மாட்டீங்க. நானும் உங்களை மாதிரியே எதிர்பார்க்கலை
அப்பறம் சாப்பிட்டு எல்லாருக்கும் தூக்க கலக்கம். அப்படியே பேசிக்கிட்டே பொழுது ஓடிடுச்சி. ஒரு அஞ்சு மணிக்கா சுரேஷ் தான் எல்லாருக்கும் C சொல்லி தர ஆரம்பிச்சான். பையனுக்கு ஓரளவுக்கு தெரிஞ்சிருந்தது. ஆனா நிறைய விஷயம் மிஸ் பண்ணான். எனக்கு என்ன பண்றதுனே தெரியல. அப்படியே நான் கொஞ்ச கொஞ்சமா கேள்வி கேக்கற மாதிரி கேட்டு, அவன் வாய்லயே சொல்லி கொடுக்க வெச்சேன்.
ரொம்ப கஷ்டமா போயிடுச்சிங்க. ஒரு சில இடத்துல நான் கேள்வி கேட்டும் அவனுக்கு புரியல. அப்பறம் எங்க காலேஜ்ல இப்படி சொல்லி கொடுத்தாங்கனு நான் சொல்லி கொடுக்க ஆரம்பிச்சிட்டேன். சரவணாவுக்கு என் மேல சந்தேகம் வந்திருக்குமானு தெரியல.
கொஞ்ச நேரத்துல அங்க வந்த ஆதி அண்ணா சொல்லி கொடுக்க ஆரம்பிச்சி என்னை காப்பாத்தினாங்க. ஆதி அண்ணா பெங்களூர்ல தான் ஒரு பெரிய சாப்ட்வேர் கம்பெனில வேலை பார்க்கறாங்க. அவுங்க தம்பி
வசந்த் தான் சரவணாடோ காலேஜ் மேட். மூணு பேரும் சேர்ந்து தான் ரூம் எடுத்து தங்கியிருக்காங்க. அவுங்க ஓரளவுக்கு நல்லா சொல்லி தந்தாங்க. அவுங்க பண்ண சின்ன சின்ன தப்பை மட்டும் நான் திருத்தினேன். ஒரு மாதிரி சிரிச்சிக்கிட்டே பார்த்தாங்க. இதை தான் அப்பவே "விஜய்"யை கை மறைப்பார் இல் னு சொன்னாங்க போல.
அப்பறம் எட்டு மணிக்கா சமைக்க ஆரம்பிச்சிட்டாங்க. முடிக்க ஒன்பதரைக்கு மணிக்கு மேல ஆச்சு. அதான் சாப்பிட்டு பஸ் ஏறதுக்குள்ள மணி பத்துக்கு மேல ஆச்சு. இன்னைக்கும் அவன்கிட்ட சொல்ல வாய்ப்பு கிடைக்கல. இதுக்கு மேல சொன்னா ஒரு கும்பல்கிட்டயே தர்ம அடி வாங்க வேண்டியது இருக்கும் போல.
இனிமே நாம சந்திக்க கொஞ்ச நாள் ஆகும் போல.. அது வரைக்கும் என்னை ஞாபகம் வெச்சிக்கோங்க... நான் தான் விஐயசங்கர்...
பாத்து மூணு வாரம் ஆகிடுச்சினு இப்படியா மறந்து போயிடுவீங்க. நான் தாங்க விஜய். மூணு வாரமும் வீக் எண்ட் சரவணா வீட்டுக்கு போனேன். ஊருக்கு கூட போகலை. போன வாரம் என் ரூமேட் அஷோக்கையும் கூப்பிட்டு போயிருந்தேன். அவனும் என்னோட யாகூல தான் வேலை செய்யறான். ஆனா வேலை தேடறானு பொய் சொல்லி தான் கூப்பிட்டு போயிருந்தேன். அவன் எப்ப பார்த்தாலும் பேசிட்டே இருக்கற டைப்பு.
இப்பவெல்லம் ஒரு நாளைக்கு அஞ்சு ஆறு மணி நேரம் ஃபோன்ல பேசிக்கறோம். ஆனா என்ன பேசனோம்னு அடுத்த நாள் ஞாபகமிருக்க மாட்டீங்குது. ஆனா ஜாலியா இருக்குது. இந்த மாதிரி நான் எப்பவுமே சந்தோஷமா இருந்தது இல்லைனு நினைக்கிறேன்.
நமக்கு பிடிச்சி பசங்கக்கிட்ட பேசினாவே இவ்வளவு சந்தோஷமா இருக்கும்னு நான் நினைக்கல. அதுவும் மத்த பசங்கங்க யார்கிட்ட பேசும் போதும் நான் இவ்வளவு சந்தோஷமாவும் இருந்தது இல்லை. இந்த வாரம் ஊருக்கு போகலாம்னு ப்ளான். அவனும் வரதா சொல்லியிருக்கான்.
நாளைக்கு தானே வெள்ளிக்கிழமை. அதான் நாளைக்கு இராத்திரி கிளம்பலாம்னு ப்ளான். அவன் காலைல கிளம்பலாமானு கேட்டான். நான் தான் ஒரு நாள் முழுசா வீணாகிடும். அதனால ஒரு எட்டு ஒன்பது மணிக்கா கிளம்பலாம். அப்ப தான் விடிய காலைல சேலத்துல இருந்து பஸ் கிடைக்கும்னு சொல்லியிருக்கேன். பாக்கலாம்.
இந்த நேரத்துல எங்க கிளம்பி போயிட்டு இருக்கேனு பாக்கறீங்களா? ஏதோ முக்கியமான விஷயம் உடனே கிளம்பி வானு சொல்லி ஃபோன் பண்ணான். அவன் குரல்லயும் ஏதோ பதட்டம் தெரிஞ்சிது. அதான் உடனே கிளம்பிட்டேன். அவன் வீட்டுக்கு போய் சேரதுக்குள்ள எப்படியும் மணி பத்தாகிடும்னு நினைக்கிறேன்.
"என்னாச்சு?"
"ஒன்னும் இல்ல. நீ இன்னைக்கு ராத்திரி இங்க ஸ்டே பண்ண முடியுமா?"
"புரியல"
"கொஞ்சம் பிரச்சனையாகிடுச்சி. இன்னைக்கு ராத்திரி இங்க ஸ்டே பண்ணிட்டு நாளைக்கு காலைல சீக்கிரமா ஆதி அண்ணாவையும், வசந்த்தையும் கூப்பிட்டு போய் அவுங்க வீட்ல விட்டுட்டு நாம அப்படியே நம்ம ஊருக்கு போகலாம்."
உள்ள ஆதி அண்ணாவும், வசந்தும் அழற சத்தம் கேட்குது. கண்டிப்பா ஏதோ சிரியசா நடந்திருக்கு. என்னனு தெரியாம எப்படி உதவறதுனு தெரியல.
"சரி. விஷயம் என்னனு நான் தெரிஞ்சிக்கலாமா? தெரியக்கூடாதுனு நினைச்சா வேண்டாம்"
"இல்லை விஜய். கொஞ்சம் நேரமாகட்டும் சொல்றேன்"
"ஹிம்ம்ம்... சுரேஷ், செந்தில், அருண் எல்லாம் என்ன ஆனாங்க?"
"இந்த நேரம் பார்த்து பசங்க எல்லாம் எங்க காலேஜ் ஈசிஈ பையன் ஒருத்தனுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ்னு நேத்து மெட்ராஸ் கிளம்பி போய்டானுங்க. அதான் உனக்கு போன் பண்ண வேண்டியதா போச்சு"
"நீ என்ன விஷயம்னு சொன்னா என்னால எப்படி உதவ முடியும்னு பார்ப்பேன். இந்த இடத்தை பார்த்தா ஏதோ பெருசா நடந்த மாதிரி இருக்கு"
"ஹிம்ம்ம்ம்.... ஆதி அண்ணா சூசைட் அட்டெம்ப்ட் பண்ணாங்க"
"ஆமா. ஏதோ ஒரு ஃபோன் கால் வந்துச்சு. அழுதுகிட்டே கிச்சனுக்கு போனாங்க. நான் பின்னாலயே போனேன். கத்தி எடுத்து கைல கட் பண்ண போனாங்க. நல்ல வேளை நான் தடுத்துட்டேன். வசந்தும் சரியா வந்துட்டான். அப்ப இருந்து ரெண்டு பேரும் அழுதுகிட்டே இருக்காங்க. எனக்கு பயமா இருந்துச்சு. நீ பக்கத்துல இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும்னு நினைச்சேன். அதான் வர சொன்னேன்"
"ஹும்ம்ம்... உனக்கு ஏதாவது ஐடியா இருக்கா?"
"இல்லை. வசந்துக்கு கூட என்னனு புரியல. அப்ப இருந்து ஏன்னா ஏன்னானு கேட்டு அழுதுட்டு இருக்கான்"
"ஏதாவது லவ் மேட்டரா?"
"தெரியல. ஆனா எனக்கு தெரிஞ்சி அப்படி இருக்காதுனு தான் நினைக்கிறேன்"
"சரி. அண்ணாக்கிட்ட நான் பேசி பாக்கறேன்"
"இப்ப வேண்டாமே"
"இருக்கட்டும். அவுங்க எனக்கும் அண்ணா தான். வா போய் பேசலாம்"
உள்ள ஆதி அண்ணாவும், வசந்தும் அழுது கண்ணு வீங்கியிருந்தது. எப்படி ஆரம்பிக்கறதுனு தெரியல. இருந்தாலும் நம்மலால உதவ முடிஞ்சா கண்டிப்பா உதவி ஆகனும்.
"அண்ணா. ஏன்னா இப்படி பண்ணீங்க? ஏதாவது பிரச்சனைனா, நாங்க எல்லாம் இல்லை?"
"இல்லப்பா. உனக்கு எல்லாம் இது சொன்னா புரியாது...
"அண்ணா. என்னை நீங்க வேற ஆளா தான பாக்கறீங்க? உங்கள நான் என் அண்ணன் மாதிரி தான் பாக்கறேன். என்கிட்ட சொன்னா உங்க பாரம் குறையும்னு நீங்க நினைச்சா சொல்லலாம். இல்லைனா வேணாம். ஆனா எந்த காரணத்துக்காகவும் தப்பா முடிவு எடுக்காதீங்க. வீ ஆர் தேர் ஃபார் யூ"
"ஹிம்ம்ம்"
அரை மணி நேரமா யாரும் பேசாம, ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துட்டு இருந்தோம். ஆதி அணணன் பேச ஆரம்பிக்கறாங்க.
"எனக்கு ஏதாவது ஒண்ணு ஆகிடுச்சினா யாரும் கவலைப்படாதீங்க. எனக்கு உங்ககிட்ட சொல்லறதுக்கு ஒண்ணு தான் இருக்கு. எந்த காரணத்துக்காகவும் ஃபேக் போட்டு வேலைக்கு சேர்ந்துடாதிங்க. அவ்வளவு தான். இதுக்கு மேல என்கிட்ட எதுவும் பேசாதீங்க"
ஏதாவது லவ் மேட்டர்னு நினைச்சேன். பிரச்சனை பெருசா இருக்கும் போல இருக்கு...
என்னங்க ஏதாவது லவ் மேட்டரா இருக்கும் சுலபமா சமாளிச்சி சமாதானம் பண்ணி வெச்சா பின்னாடி நமக்கு இந்த அண்ணனா ஹெல்ப் பண்ணுவாங்கனு பார்த்தேன். பிரச்சனை கொஞ்சம் பெருசா இருக்கும் போல இருக்கு.
மேட்டர் என்னனு ஓரளவுக்கு புரிஞ்சி போச்சி. அண்ணன் ஃபேக் போட்டு சேர்ந்துருப்பாங்க போல. அது எப்படியும் கம்பெனில தெரிஞ்சிருக்கும். வேலையை விட்டு தூக்கறனு சொல்லியிருப்பானுங்க. ஆனா அதுக்கு தற்கொலை பண்ணிக்கனுமா என்ன? இல்லை இவுங்க ஃபேக்னு தெரிஞ்சி கம்பெனி HRஓ, மேனஜரோ இவுங்களை தப்பா பயன்படுத்திக்க பார்த்திருப்பானுங்களோ? இதுக்கான வாய்ப்பு ரொம்ப அதிகமா இருக்கு. இல்லைனா எவனாவது ஃபிரெண்ட்ஸ் டபுல் கேம் ஆடிருப்பானுங்க. பேசுவோம்.
"வசந்த், சரவணா. வீட்ல சாப்பிட ஏதாவது இருக்கா?"
"...... "
"என்ன முழிச்சிட்டு இருக்கீங்க? சாப்பிட ஏதாவது தயார் பண்ணுங்க. இன்னும் ஒரு மணி நேரத்துல எல்லாம் சரியாகிடும்"
"....... "
"போங்க. நான் தான் சொல்றேன் இல்லை"
ரெண்டு பேரும் கிச்சனுக்கு போயிட்டாங்க. அப்பாடா.
"சொல்லுங்ண்ணா, வேலை விட்டு தூக்கிடுவோம்னு ஏதாவது சொன்னாங்களா?"
"இல்லை"
அப்ப முதல் விஷயம் இல்லை. இன்னும் கொஞ்சம் சீரியஸ்ஸான விஷயமாத்தான் படுது.
"சரி என்ன கேட்டானுங்க? ஏதாவது தப்பா நடந்துக்கிட்டாங்களா?"
ஆதி அண்ணா முகம் விரிஞ்சதை பார்க்கும் போது அவுங்களுக்கு ஆச்சர்யமும், பயமும் சேர்ந்தே வந்துருக்கும் போல இருக்கு.
"நீங்க சொல்லும் போதே எனக்கு புரிய ஆரம்பிச்சிடுச்சி. கம்பெனி HRஆ, மேனஜரா இல்லை ஃபிரெண்ட்ஸ்னு கூட சுத்தறது யாராவதா?"
"தெரியல?"
"ஏதாவது டிமேண்ட் பண்ணாங்களா?"
"பணம் தான்"
"நீங்க இன்னும் கொஞ்சம் விவரமா சொன்னா, நாளைக்கு காலைல பிரச்சனை தீர்ந்துடும். பயப்படாம என்கிட்ட சொல்லுங்க"
"நான் MCA முடிக்கும் போது கடைசி செமஸ்டர்ல ஒரு பேப்பர்ல ஊத்திக்கிச்சு. நல்லா தான் எழுதியிருந்தேன். அப்படி இருந்தும் ஃபெயிலாயிட்டேன். ஒரு ஆறு மாசம் வீட்ல இருந்துட்டு பரிட்சை எழுதிட்டு ரிசல்ட் வரும் போது கிட்டதட்ட ஒன்பது மாசமாயிடுச்சி. பெங்களூர் தான் பக்கம்னு இங்க வேலை தேட வந்தேன். எதுவும் கிடைக்கல. அப்பறம் ஒரு கால் சென்டர்ல சேர்ந்து ஒரு பத்து மாசம் வேலை செஞ்சேன். அப்பறம் என் ஃபிரெண்ட்ஸ் எல்லாம் கால் சென்டர்ல இருக்கறது பின்னாடி பிரச்சனையாகும்னு சொல்லி ஒரு ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல ஜாவா படிக்க சொன்னாங்க. நானும் படிச்சேன். அந்த இன்ஸ்டிடியூட்லயே ரெண்டு வருஷம் எக்ஸ்பீரியன்ஸ் சர்டிபிகேட் தந்தாங்க. அதை வெச்சி இந்த கம்பெனில வேலைக்கு சேர்ந்தேன்"
"ஒரு மாசம் கழிச்சி ஒரு ஃபோன் வந்துச்சு. அதுல நான் ஃபேக் போட்டதை பத்தி எங்க ஊர் பத்திரிக்கைல எல்லாம் போட்டு நாறடிச்சிடுவனு சொல்லி பயமுறுத்தி காசு கேட்டாங்க. நானும் பயத்துல காசு கொடுத்தேன். அப்பறம் நான் என் ஃபோன் நம்பரை மாத்திட்டேன். இன்னைக்கு கரெக்டா மறுபடியும் என் புது நம்பருக்கு போன் பண்ணாங்க. நம்பர் மாத்தினா கண்டு பிடிக்க முடியாதானு சொல்லி அசிங்க அசிங்கமா திட்டினாங்க. நாளைக்கு பணம் எடுத்துட்டு வர சொல்லியிருக்காங்க. இல்லைனா நான் ஃபேக் போட்டதையும் அதை மறைக்க காசு கொடுத்ததையும் எங்க ஊர் பத்திரிக்கைல போட்டுடுவேனு மிரட்டறாங்க. எனக்கு பயமா இருக்கு. இவனுங்க என்னை விட்டு வைக்க மாட்டானுங்க போல"
"அழாதீங்க. முதல்ல அழுகையை நிறுத்துங்க. யாரா இருக்கும்னு ஏதாவது யோசிச்சீங்களா?"
"முதல்ல நீங்க பயப்படறதை நிறுத்துங்க. இந்த மாதிரி பெரிய கம்பெனில ஃபேக்ல மக்கள் சேராங்கனு எந்த பத்திரிக்கைலயும் அவ்வளவு சீக்கிரம் போடமாட்டாங்க. ஏன்னா அது அந்த கம்பெனியோட வளர்ச்சியையும் ரெப்புட்டேஷனையும் பாதிக்கும். அதுவும் நீங்க வேலைக்கு சேர்ந்திருக்கற கம்பெனி, இந்தியாவுல தலை சிறந்த சாப்ட்வேர் கம்பெனில ஒண்ணு. அதனால எந்த பத்திரிக்கைலயும் அவுங்க கம்பெனி ஆளுங்களை பத்தி தப்பா போட விட மாட்டாங்க. ஏன்னா அவுங்க இண்டர்வியூ ப்ராசஸ் சரி இல்லைனு மத்தவங்க பேச அது வாய்ப்பளிச்சிடும். அதனால பத்திரிக்கைல போடுவோம்னு அவன் சொன்னதை வெச்சி நீங்க பயப்பட வேண்டாம்"
"நிஜமாவா சொல்ற?"
"ஆமாம். சத்தியமா நீங்க என்னை நம்பலாம். அதுவும் இந்த மாதிரி நம்பகத்தன்மை இல்லாத ஆளுங்ககிட்ட இருந்து வரது எல்லாத்தையும் வெச்சிட்டு இந்த மாதிரி போட மாட்டாங்க. அதனால நீங்க அவனுக்கு பயப்படறதை நிறுத்துங்க. இப்ப நாம இது யாரா இருக்க முடியும்னு யோசிப்போம். அதுக்கு ஏத்த மாதிரி நாம அவுங்களை டீல் பண்ணிக்கலாம்"
"உங்களை இண்டர்வியூ பண்ண HR, உங்க மேனஜர் யாராவது தமிழ் ஆளுங்களா?"
"இல்லை. HR வட இந்தியாக்காரர், மேனஜர் ஆந்திரா"
"ஹும்ம்ம். உங்க டீம்ல எத்தனை பசங்ங்க?"
"மொத்தம் நாலு பசங்க"
"சரி அதுல எத்தனை பேர் அங்க லேட்ரலா சேர்ந்தாங்க?"
"நான் மட்டும் தான். மீதி எல்லாரும் அந்த கம்பெனிலயே ஃபெரஷரா சேர்ந்தவங்க"
"அப்ப இது உங்க மேனஜர் வேலையா இருக்க வாய்ப்பு குறைவு. ஏன்னா அவுங்க பண்றது ஒரு ப்ராஸஸ் மாதிரி இருக்கு. ஒருத்தருக்காக இவ்வளவு ரிஸ்க் எடுக்க மாட்டாங்க. என்னோட கணிப்பு HR இல்லைனா உங்க ப்ரெண்ட்ஸ் யாராவது ஒருத்தவங்க தான்"
"ஆமாம். என் டீம் லீட் அப்டேட் பண்ண சொன்னாரு. அதனால போன வாரம் தான் பண்ணேன்"
"அப்படினா HRக்கு சான்ஸ் அதிகம். அவுங்க கொஞ்ச பேர் சேர்ந்து இந்த மாதிரி சுலபமா பண்ணலாம். வேலைக்கு சேரும் போதே ஃபேக்னு தெரிஞ்சி ஆள் எடுத்து அப்பறமா அவுங்களை பத்தி மத்த விஷயங்களை தெரிஞ்சிட்டு சுலபமா மிரட்டலாம்"
"உங்க டீம்ல தமிழ் பசங்களோ இல்லை பொண்ணுங்களோ யாராவது இருக்காங்களா?"
"ஆமாம். ஒரு பையன், ஒரு பொண்ணு"
"அதுல யார் மேலயாவது சந்தேகம் படற மாதிரி?"
"இல்லை. அவுங்க ரெண்டு பேரும் ட்ரெயினிங்ல இருந்து ஒண்ணா இருக்கறவங்க அண்ட் தே ஆர் இன் லவ் வித் ஈச் அதர்ஸ்"
"அப்ப அவுங்களா இருக்க முடியாதுங்கறீங்க?"
"ஆமாம்"
"ஆஹா... ஒரு முக்கியமானதை விட்டுட்டனே. நீங்க ட்ரெயினிங் போனீங்களே. அவுங்க தானே உங்களுக்கு ஃபேக் எக்ஸ்பீரியன்ஸ் கொடுத்தாங்க?"
"ஆமா"
"ஹவ் டிட் ஐ மிஸ்ட்டு இட்? ஷிட்... கம் ஆன். தேர் இஸ் ய ஹை சான்ஸ் ஆஃப் தெம் பீயிங் தி கல்ப்ரிட்ஸ். ஏன்னா திருடனை உருவாக்கறவனுக்கு திருடன்கிட்ட இருந்து திருடறது சுலபம்"
"விஜய், உன்னால கண்டிப்பா இது ட்ரெயினிங் இன்ஸ்டிடியுட்ல இருக்கவங்க ஒருத்தவங்க வேலைதானு சொல்ல முடியுமா?"
"நிச்சயமா அவுங்க தானு இப்ப இருக்கற நிலைமைல சொல்ல முடியாது. எனக்கு இன்னும் கொஞ்சம் இன்ஃபர்மேஷன் வேணும்"
"ஹிம்ம்ம்"
"உங்ககிட்ட முதல் தடவை காசு கேக்கும் போது நீங்க காசை அவுங்க அக்கவுண்ட்ல போடறேனு சொன்னீங்களா?"
"நான் சொன்னேன். அவுங்க ஒத்துக்கல"
"அப்பறம்?"
"என்னை நேரா பரிஸ்டா காபி சென்டருக்கு வர சொன்னாங்க. அங்க ஒருத்தர் நீல சட்டையும், கருப்பு பேண்டும் போட்டு தனியா காபி குடிச்சிட்டு இருப்பாரு. நானும் காபி வாங்கிட்டு அவர் எதிர்ல போய் உக்காரணும்னு சொன்னாங்க"
"அப்பறம்?"
"பாதி குடிச்சி முடிச்சவுடனே என் ஹேண்ட் பேக்ல இருந்து பணத்தை எடுத்து கொடுக்கணும்னு சொன்னாங்க"
"ஹிம்ம்ம்"
"அப்பறம் காபி குடிச்சி முடிச்சவுடனே அவர் கூடவே வெளிய வந்து அவர் போற டைரக்ஷனுக்கு ஆப்போசிட்டா போகனும்னு சொன்னாங்க"
பணத்தை அக்கவுண்ட்ல வேண்டாம்னு சொன்னது சரி. ஆனா மக்கள் வர இடத்துல வந்து அவனுக்கு எதிர்ல உக்கார்ந்து ஏன் காபி குடிக்க சொன்னானுங்க? அப்பறம் ஏன் அவன் எழுந்திரிக்கும் போது கூடவே எழுந்து வெளிய வர சொன்னானுங்க?
சம் திங் ஃபிஷ்ஷி. இல்லைங்களா? பொதுவா இந்த மாதிரி பிரச்சனை பண்றவனுங்க முகத்தையே காட்ட மாட்டாங்களே.
"பணத்தை ஏதாவது கவர்ல வெச்சி கொடுத்தீங்களா?"
"இல்லைப்பா. பணத்தை எந்த கவர்லயும் வைக்காம கொடுக்கனும்னு சொன்னாங்க. எல்லாமே முன்னாடியே தெளிவா சொல்லிட்டாங்க"
"ஹிம்ம்ம்"
இது கொஞ்சம் கஷ்டமான விஷயமா தான் இருக்கும் போல. நம்ம தமிழ் படத்துல எல்லாம் ஒரு பாலிதின் பைல சுத்தி துணி பைல வெச்சி கொடுக்க சொல்லுவாங்க. இவனுங்க ஏன் பணத்தை எதுலயும் போடாம அவன் கைல தர சொல்லியிருக்காங்க. பணத்தை கைல கொடுத்துட்டு சேர்ந்து வெளிய வரணும். இதுல ஏதோ சீரியஸா இருக்கு போல இருக்குங்க. உங்களுக்கு தோணல?
"கிழிஞ்சிது. உங்ககிட்ட மட்டும் உண்மையை சொல்றேன். சரவணாக்கிட்ட சொல்லாதீங்க"
நான் உண்மையை சொல்லி முடிச்சவுடனே ஆதி அண்ணா முகத்துல பெரிய ஆச்சரியம். என்னால இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும்னு அவுங்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கை வந்துடுச்சிங்க. அவுங்களே சாப்பிட ஓ.கே சொல்லிட்டாங்கனா பாருங்களேன். இருங்க சாப்பிட்டு வந்துடறேன்.
இந்த வீட்ல எனக்கு தெரிஞ்சி யாருமே பேசாம சாப்பிடறது இது தான் முதல் தடவை. சரவணா லூசுக்கூட பேசலை. நானும் எவ்வளவோ டாபிக் ஆரம்பிச்சேன் எதுவும் வொர்க் அவுட் ஆகலைங்க. சரி விடுங்க. நம்ம இப்ப பிரச்சனையை பத்தி யோசிப்போம். வேற எதையும் யோசிக்காம இந்த சினாரியோல மட்டும் கான்சன்ட்ரேஷன் செய்வோம். ஒவ்வொரு ஃபிரேமா பார்க்கலாம்.
பரிஸ்டா காபி ஷாப் அவுட் டோர்ல சேர் போட்டிருப்பாங்க. குடை குடையா இருக்கும். ஒரு குடைக்கு கீழ ஒரு அஞ்சு ஆறு பேர் சேர்ல உக்கார்ந்து காபி குடிக்கலாம். இப்படி இருக்கும் போது அங்க ஒருத்தவன் மட்டும் ஒரு குடைக்கு கீழ காபி குடிக்கறான். அங்க நம்ம ஆதி அண்ணன் காபி வாங்கிட்டு போறாங்க. இப்ப அவனுக்கு எதிர்ல நம்ம அண்ணன் உக்காராங்க. பாதி காபியை குடிச்சதுக்கு அப்பறம் காசு எடுத்து கொடுக்கறாங்க. அந்த பணம் இப்ப நம்ம கண்ணுக்கு தெரியுது. அது எந்த கவர்லயும் இல்லை. இப்ப காபி குடிச்சி முடிக்கறாங்க. ரெண்டு பேரும் ஒட்டுகா எழுந்து வெளிய MG ரோட்டுக்கு வராங்க. ரெண்டு பேரும் வெவ்வேற திசைல போறாங்க.
இது தான் எனக்கு கொஞ்சம் ட்ரிக்கியா இருக்கு. இந்த மாதிரி பொது இடத்துக்கு வர சொல்றவன் ஒண்ணு புத்தியில்லாம சொல்லலாம். இல்லை ரொம்ப புத்திசாலியா இருந்தா சொல்லலாம். நம்ம மாட்டிட்டு இருக்கறது ரெண்டாவது வகையா தான் எனக்கு படுது. முதல் வகைல இருக்கறவன் நம்பர் மாத்தனதுக்கு அப்பறமும் கண்டுபிடிச்சிருக்க மாட்டான். அப்ப அதி புத்திசாலியா இருக்கவன் இந்த மாதிரி செஞ்சா என்ன காரணம் இருக்கலாம்? பணம் மட்டுமே நோக்கமா இருக்காதுனு என் மனசுக்கு படுது.
HR இதை பண்ணலாம். இவுங்களை கண்டுபிடிக்கறது சுலபம். இவுங்க ஃபேக்னு சொல்லி அந்த இண்ஸ்டிடியூட்ல இருந்து பண்ற மாதிரி HRக்கு போன் பண்ணாலாம். அவன் இந்த அண்ணாவை கூப்பிட்டு விசாரிச்சா நல்லவன். இல்லைனா தப்பு அங்க இருக்கலாம். ஆனா அப்படி பண்ணா இந்த அண்ணா வேலை போயிடும். அதனால அந்த ஐடியா கடைசியா வைக்கலாம்.
அடுத்து ட்ரெயினிங் இண்ஸ்டிடியூட். இவனுங்களும் இதே மாதிரி பசங்களை தப்பா பயன்படுத்தலாம். இதை கண்டுபிடிக்கவும் வழி இருக்கனும்.
Java is an object oriented programming language. I beleive you people will have some knowledge on programming languages like C, C++
என்னடா இவன் இங்க உக்கார்ந்திருக்கறானு பாக்கறீங்களா? சரி என்ன பிரச்சனைனு இறங்கி பார்த்துடலாம்னு இந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட்ல சேர்ந்துட்டோம். அது என்ன "டோம்"னு சொல்றானு பாக்கறீங்களா? நானும் சரவணாவும் தான் சேர்ந்திருக்கோம். அவனை சேர வேண்டாம்னு நான் எவ்வளவோ சொன்னேன். அவன் தான் நானும் சேருவேண்ணு ஒரே அடம். அதனால ரெண்டு பேருமே சேர்ந்து கண்டு பிடிக்கலாம்னு ப்ளான்.
அப்பறம் ஆதி அண்ணா அன்னைக்கு ஆபிஸ் போகல. அவனுக்கு காசும் கொடுக்கல. அதே மாதிரி அவுங்க ஊர்ல எந்த பத்திரிக்கைலயும் எதுவும் தப்பா வரல. செல் ஃபோனை ஆஃப் பண்ணி வெச்சிட்டு மூணு நாளா எங்கயும் போகாம உக்கார்ந்திருக்காங்க. இன்னும் பயம் இருக்கு.
நான் தினமும் காலைல ஏழு மணிக்கு ஆபிஸ் போயிட்டு மதியம் மூணு மணிக்கு வரேன். அப்பறம் நாலு மணிக்கு இந்த ட்ரெயிங் இண்ஸ்டிடியூட். நாலு மணில இருந்து அஞ்சு மணி வரைக்கும் க்ளாஸ். அப்பறம் லேப் அவர்ஸ்.வேற ஸ்லாட் கிடைக்கல. ரொம்ப கொடுமையா இருக்கு. எப்படியும் இன்னும் ரெண்டு வாரத்துக்குள்ள ஏதாவது க்ளூ கிடைக்காமலா போகும்? அப்படி ஏதாவது கிடைச்சா இந்த கொடுமைல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.
எனக்கு சேரும் போதே கொஞ்சம் சந்தேகம் வர மாதிரி தான் இருக்குது. அப்ளிகேஷன்ல நிறைய ஃபில் பண்ண சொல்றாங்க. அப்பா, அம்மா, கூட பிறந்தவங்களை பத்தின விவரம் எல்லாம் கேட்டிருக்கு. ரெண்டு பேரும் எல்லாத்தையும் மாத்தி தான் கொடுத்திருக்கோம்.
இந்த ரெண்டு நாள்ல இங்க இருக்கறவங்களை நோட் பண்ணது இதுதான்.
ரிஸப்ஷனிஸ்ட் ரூபா அழகா இருக்காங்க. தெளிவா பேசறாங்க. இங்க சும்மா விசாரிக்க வந்தவங்க எல்லாம் இந்த இன்ஸ்டிடியூட்ல சேரதுக்கு பாதி காரணம் இவுங்களா தான் இருப்பாங்க...
அஸிஸ்டெண்ட் வெற்றி அண்ணா ரொம்ப நல்லவரா தெரியறாரு. பசங்களுக்கு எல்லாம் நல்லா ஹெல்ப் பண்றாரு. நிறைய ஸ்டெடி மெட்டிரியல்ஸ் எல்லாம் பசங்களுக்கு சைக்லோஸ்டைல் பண்ணி கொடுக்கறாரு. நேத்து கூட ஜாவா படிக்கிற பசங்களுக்கு ஆரக்கிள் மெட்டிரியல் எல்லாம் சைக்லோஸ்டைல் பண்ணி கொடுத்தாரு. அதுக்கு காசும் வாங்கறதில்லை போல. இவரை வெச்சி ஏதாவது கண்டுபிடிக்க ட்ரை பண்ணலாம். பார்க்கலாம்.
ட்ரெயினர்ஸ் பத்தி எதுவும் அதிகமா தெரியல. எல்லாரும் படிச்சி முடிச்சிட்டு வேலை தேடற கூட்டம் மாதிரி தெரியுது. ஒரு சிலர் வேலையும் பார்த்துட்டு இங்க பார்ட் டைமாவும் வேலை செய்வாங்க போல தெரியுது. எங்களுக்கு ஜாவா எடுக்கறது சுகுமாரன். இங்க நிறைய தமிழ் ஆளுங்க தான். இதுக்கு முந்தின பேட்ச்க்கு ஜாவா எடுக்கறவர் கூட தமிழ் தான். ஆரக்கிள் எடுக்கறது, C, யுனிக்ஸ், டாட் நெட் எல்லாத்துக்கும் பாடம் எடுக்கறதுலயும் தமிழ் ஆளுங்க இருக்காங்க.
இப்ப என்னுடைய ப்ளான் ஆராக்கிள் கிளாஸ்க்கு என்னோட ஃபிரெண்ட் அசோக்கை சேர வைக்கறது தான். அது ஏன் ஆராக்கிள் க்ளாஸ்னு யோசிக்கறீங்களா? அதுக்கு காரணம் இருக்கு. உங்களுக்கே போக போக புரியும்.
அவனுக்கு இந்த பிரச்சனை எல்லாம் தெரியும். அவனும் எனக்கு கண்டிப்பா உதவறனு சொல்லியிருக்கான். அடுத்த திங்க கிழமைல இருந்து அவனுக்கு க்ளாஸ். ஏழு மணி பேட்ச்.
---------
இந்த ஒரு வாரத்துல எதுவும் பெருசா எதுவும் நடக்கல. அந்த சுகுமாரனுக்கு ஜாவா ஓரளவுக்கு தான் தெரிஞ்சிருக்குது. நான் கொஞ்சம் கஷ்டமா கேள்வி கேட்டா, நான் அடுத்த க்ளாஸ்ல சொல்றனு சொல்றாரு. அப்பறம் நாங்க லேப்ல இருக்கும் போது தினேஷ் சாரை கூப்பிட்டு வராரு. தினேஷ் அந்த கேள்விக்கு எல்லாம் சாதாரணமா சொல்றாரு. இந்த அளவு கூட ஜாவா தெரியாம சுகுமாரன் எப்படி இங்க காலத்தை ஓட்றாரு. சுகுமாரனும் அந்த ஆரக்கிள் எடுக்கற ப்ரேமும் ரொம்ப க்ளோஸ் போல. ப்ரேம் ரொம்ப கடலை போடறாரு.
நான் கேள்வி கேக்கறதை பார்த்து சரவணாக்கு ரொம்ப சந்தோஷம். அதே மாதிரி லேப்ல ரெண்டு பேரும் ஒரே சிஸ்டம் தான். அவனும் இப்ப தான் ஜாவா கத்துட்டு இருக்கான். அவன்க்கிட்ட சுகுமாரன் ரொம்பவே வழியறாரு. அவருக்கு எப்படியும் ஆப்பு இருக்கும்னு நினைக்கிறேன். வெற்றி அண்ணனையும் இவரு ஓவரா விரட்டிட்டு இருக்காரு. அதனால அந்த அண்ணனை கைல போட்டா வேலை சீக்கிரம் நடக்கும். ஆனா அவர் இப்படி ஓடி ஓடி வேலை செஞ்சிட்டு இருக்காரே. எப்படி இவரை நம்ம மடக்கலாம்னு யோசிக்கனும்
எப்படியும் அசோக் ஒரு ரெண்டு மூணு நாள்ல அந்த அண்ணனை மடக்கி போட்டுடுவான். அப்ப தான் அடுத்த வேலையை ஆரம்பிக்க முடியும். இன்னைக்கு தான் அவன் சேர்ந்துட்டானே. அடுத்த வாரத்துல எப்படியும் கண்டுபிடிச்சிடலாம்.
---------
அசோக் சேர்ந்து இன்னையோட ஒரு வாரமாச்சு. எதுவும் பெருசா பண்ணாம இருக்கான். அவனுக்கு ஒரு வேலை கொடுத்துருக்கேன். அதை மட்டும் அவன் பண்ணிட்டானா, நாங்க அடுத்த வாரம் கோர்ஸ் போகனுமா இல்லை வேண்டாமானு முடிவு எடுத்துடலாம். மணி பன்னெண்டு ஆச்சு. இன்னும் அவன் ஆளை வேற காணோம். போன் வேற ஸ்விட்ச் ஆஃப் ஆகிருக்கு. ஒன்னுமே புரியலையே. ஏதாவது பிரச்சனையாகிருக்குமா?
என்னங்க மணி பனிரெண்டு ஆச்சு இன்னும் அசோக்கை காணோம். எனக்கு வேற கொஞ்சம் பயமா இருக்கு. ஏதாவது பிரச்சனைல மாட்டியிருப்பானா? இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம் அப்பறமும் அவன் வரலனா நானே இன்ஸ்டிடியூட் கிளம்பி போக வேண்டியது தான். இருங்க வண்டி சத்தம் கேக்குது. அசோக்னு நினைக்கிறேன்.
"டேய் மச்சான். Finally, I got it"
அசோக் கைல அந்த சிடி தெரியுது. ஒரு வழியா சாதிச்சிட்டானு நினைக்கிறேன்.
"எப்படிடா மச்சான்?"
"எல்லாம் நம்ம வெற்றி அண்ணனை வெச்சி தான். கரெக்டா வெற்றி அண்ணனையும் ப்ரேமையும் வெச்சிக்கிட்டு ஒரு கேம் ப்ளே பண்ணேன் வொர்க் அவுட் ஆகிடுச்சு"
"எக்ஸலண்ட். நீ இந்த சீடி எடுத்தது அவங்களுக்கு தெரியாது தானே"
"ஆமாம். ரொம்ப நேரம் லேப்ல இருக்கேனு ப்ரேம் என்ன விஷயம்னு கேட்டாரு. நானே சொந்தமா ஒரு ப்ராஜக்ட் ட்ரை பண்றேன். வீட்ல ஆரக்கிள் இல்லாததால லேப்லயே பண்றேனு சொன்னேன். ப்ரேம் ஃபீல் ஆகி வெற்றியை கூப்பிட்டு யாருக்கும் தெரியாம ஆரக்கிள் சீடி எடுத்து தர சொன்னாரு."
" வெற்றி அந்த ரூமுக்கு கூப்பிட்டு போய் இருந்த சீடி எல்லாம் எடுத்து தேடிட்டு இருந்தாரு. நானும் உள்ள போய் ஒவ்வொரு சீடியா பார்த்துட்டு இருந்தேன். நானும் ஆரக்கிள் சீடி தேடறேனு நினைச்சிட்டு விட்டாரு. இன்ஸ்டிடியூட்டோட மண்த்லி பேக் அப் சீடியை ஒரு வழியா கண்டுபிடிச்சி வெற்றிக்கு தெரியாம சுட்டுட்டேன். ஆனா இது நாலு மாசத்துக்கு முன்னாடி எடுத்தது போல. புதுசு கண்ணுல படல"
"பரவால. எக்ஸலண்ட் வொர்க். சரி நம்ம டேட்டா பேஸ்ல இம்போர்ட் பண்ணுவோம். அப்பறம் உன் போன் என்னாச்சு? நான் ரொம்ப நேரம் ட்ரை பண்ணேன்"
"அது சார்ஜ் போட மறந்துட்டேன். இப்ப போடனும்"
ஒரு வழியா முதல் படியை தாண்டியாச்சுங்க. இதை வெச்சி தான் பிரச்சனை இந்த இன்ஸ்டிடியூட்லயா இல்லை வெளியவானு கண்டு பிடிக்க முடியும். இந்த இன்ஸ்டிடியூட்ல இல்லைனா அடுத்து HR தான். நாளைக்குள்ள இந்த இன்ஸ்டிடியூட்டானு தெரிஞ்சிடும். அப்படி அந்த சீடில என்ன இருக்குனு யோசிக்கறீங்களா?
அதுதான் அந்த இன்ஸ்டிடியூடோட அஃபிஷியல் இன்ஃபர்மேஷன் இருக்கற டேட்டாபேஸோட, பேக் அப் பைல் இருக்கற CD. பெரிய பெரிய கம்பெனி எல்லாம் இன்க்ரிமெண்டல் பேக் அப் தான் எடுப்பாங்க. இந்த மாதிரி சின்ன இன்ஸ்டிடியூட் எல்லாம் டோட்டல் பேக் அப் எடுப்பாங்க. பெரிய கம்பெனி எல்லாம் டெய்லி, வீக்லி, மண்த்லி எடுப்பாங்க. இங்க மாசம் மாசம் எடுக்கறாங்க. இப்ப நம்ம கைல இருக்கற சீடில நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் படிச்சவங்களோட இன்ஃபர்மேஷன் இருக்கும். அதை வெச்சி நாளைக்கு நம்ம விளையாட்டை ஆரம்பிக்கலாம்.
இன்னைக்கு காலைல இருந்து நானும் அசோக்கும் சரவணா வீட்ல தான் இருந்தோம். என்ன பேசனும் எப்படி பேசனும்னு ஆதி அண்ணாக்கிட்ட விசாரிச்சிட்டேன். ரொம்ப நேரம் ப்ராக்டிஸ் பண்ணோம். எங்க வீட்டு பக்கத்துல இருக்கற பூத்ல இருந்து பண்ணா தான் சேஃப்டி. நாளைக்கு யாராவது விசாரிச்சாக்கூட அந்த அண்ணன் நம்மல காட்டி கொடுக்க மாட்டாரு. அதான் ரிட்டர்ன் வந்துட்டு இருக்கோம்.
என்னங்க அந்த டேட்டா பேஸ்ல இருந்து எடுத்த போன் நம்பர்ல இருபது பேருக்கு பண்ணிட்டேன் ரியாக்ஷ்னே சரியில்லை. பசங்க ஒரு சிலர் நம்ம மிரட்டினா பதிலுக்கு நம்மல மிரட்டறானுங்க. ஒரு சில பேர் நம்பர் Does Not Existனு வருது... ஒரு சிலர் மெரள்றானுங்க. எவனுமே இதுக்கு முன்னாடி இந்த மாதிரி கால் வந்த மாதிரியே ரியாக்ட் பண்ண மாட்றானுங்களே..
என்னங்க பொண்ணுங்க பாதி பேர் நம்பர் Does Not Existனு வருது மீதி பேர் பயப்படறாங்களே தவிர இதுக்கு முன்னாடி கால் வந்த மாதிரி ரியாக்ட் பண்ணவே மாட்றாங்க. ஒரு வேளை இந்த இன்ஸ்டிடியூட்ல பிரச்சனையில்லையோ? தேவையில்லாம சந்தேகப்பட்டுடமோ? சரி நேரமாச்சு. நாப்பது போன் காலுமாச்சு. இப்ப அடுத்த ஆப்ஷன் HR தான்.
இவ்வளவு கஷ்டப்பட்டு அந்த ட்ரெயினிங் இன்ஸ்டிடியூட் எல்லாம் சேர்ந்து CDயை சுட்டு கடைசியா அங்க எதுவும் பிரச்சனையில்லைங்கற மாதிரி தெரியுது. அதுவும் ஒரு வகைல நல்லது தான் இனிமே கோர்ஸ் போக தேவையில்லை. சரவணா படிக்கனும்னு ஆசைப்பட்டா போகலாம்னு நினைக்கிறேன். ரெண்டு வாரமா தினமும் அவன்க்கூட பேசி பழக்கமாயிடுச்சு. அதனால அவன்க்கூட பேசறதுக்காக போகலாம். என்ன சொல்றீங்க?