சிறுவயதில் மாலை 6 மணி ஆனால் நானும் சில நண்பர்களும் அவரின் வீட்டிற்கு போவோம்.என் வீட்டில் இருந்து பத்து வீடு தள்ளி அவரின் வீடு இருந்தது .அவர் வீட்டில் நிறைய புறாக்கள் இருந்தது .அதை ஒரு மரப்பெட்டியில் அடைத்து வைத்து இருப்பார் மாலையில் உணவிற்காக புறாக்களை திறந்து விடுவார்.நானும் நண்பர்களும் புறாக்களை பார்க்க செல்வோம்.வெள்ளை நிறத்தில் ஒரு புறா இருந்தது. அந்தப் புறாவின் மீது எனக்கு ரம்பப் பிரியம் . ஒரு மத்தியான பொழுதில் அவரின் வீட்டிற்கு சென்றேன். வீடு பூட்டியிருந்தது .புறாவை அடைத்து வைத்திருக்கும் பெட்டி வெளியில் இருந்தது. அந்தப் பெட்டியும் பூட்டப்படாமல் இருந்தது . பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா என்று நான் கவனிக்கவில்லை.மரப்பெட்டியை திறந்து அந்த வெள்ளைப் புறாவை எடுத்துக்கொண்டு ஒரே ஓட்டத்தில் வீட்டிற்கு வந்துவிட்டேன்.யாராவது பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அம்மா பாட்டி வீட்டிற்கு போயிருந்தாள் .புறாவை கையிலே பிடித்து இருந்தேன் .கிழே விடவே இல்லை.புறாவுடன் பேசிக்கொண்டு இருந்தேன். அம்மா வந்தாள் .புறா யாரோடது என்று கேட்டாள் .நான் நடந்ததை சொன்னேன். புறாவை திருப்பி கொண்டு போய் வைத்திடு என்று அவள் சொல்லவில்லை.புறாவை கையிலே இந்த மாதிரி அமுக்கி பிடித்து இருந்தாள் அதுக்கு உன்னை பிடிக்காமல் போய்விடும் .உன்னை புறாவுக்கு பிடிக்கனுமா ? வேண்டாமா ? என்று கேட்டாள் .நான் என்னை புறாவுக்கு ரம்ப பிடிக்கணும் என்றேன் . அப்படினா நான் சொல்றதை கேளு என்றாள். புறாவை பறக்க விட்டுவிடு என்றாள் .மனதுக்குள் அழுதுகொண்டே புறாவை வானை நோக்கி பறக்கவிட்டேன்.புறா என் கையிலிருந்து பிரிந்த தருணம் காதலை போல வேதனையும் ,மகிழ்ச்சியும் கலந்த அற்புதமான ஒன்று.இதற்கு பிறகு நடந்ததை இறுதியில் சொல்கிறேன்.புறாவை சுதந்திரமாக பறக்கவிட்ட இடத்தில் இருந்து தான் அமூர் படத்தை நான் பார்க்கிறேன் . மீண்டும் ஒருமுறை இப்படத்தை கோணங்கள் திரையிடலில் நண்பர் பிரசாத்துடன் நேற்று மாலையில் பார்த்தேன். ஒரு பெண்ணுக்கோ,ஆணுக்கோ காதல் எந்த வயதில் மிக அவசியமான முக்கியமான ஒன்றாக இருக்கிறது ? அழகும்,துடிப்பும் நிறைந்த ஆரோக்யமான இளமை பருவத்திலா ? இல்லை உடலும் மனமும் நலிவடைந்து சதைகள் எல்லாம் சுருங்கி போய் பேரழகு எல்லாம் காலாவதி ஆகிப்போகும் வயது முதிர்ந்த வயதிலா ? எண்பது வயதான தம்பதியினர் ஒரு வீட்டில் வசிக்கின்றனர் .இருவரும் இசையை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள்.திருமணமான ஒரு மகள் இருக்கிறாள். அவளும் அருகில் இருப்பதில்லை. எப்போதாவது அப்பா அம்மாவை பார்க்க வருவாள் . வயதான கணவனும் மனைவியும் மிகுந்த காதலுடனும் ,மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் . மனைவிக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் பக்கவாதம் ஏற்படுகிறது .கணவனின் காதலை சோதனை செய்வதாக இந்நிகழ்வு அமைகிறது ..வயதான காதலன் சோதனையில் வெற்றி பெற்றானா ?இல்லை மனைவியை கைவிட்டுவிட்டானா ? என்பதை பார்க்கலாம் மனைவி மருத்துவரிடம் செல்லப் பயப்படுகிறாள். எப்படியோ சமாளித்து அவளை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறான் வயது முதிர்ந்த காதலன்...சிகிச்சை பலனளிக்க வில்லை.மனைவியின் வலதுபுற உறுப்புகள் செயலிழந்து விடுகிறது .சரியாக பேசமுடிவதில்லை காதலன் தன் காதலியின் வலது கையாக,வலது காலாக ,நாவாக மாறுகிறான். இருவரும் ஒருவராகிவிடுகிறார்கள் . நாட்கள் ஊர்ந்து மெதுவாக நகர்கிறது .காதலியின் நிலை நாளுக்கு நாள் மோசமாகிறது . தன் கதைகளையும் ,நினைவுகளையும் கொண்டு காதலியை மீட்டெடுத்து விடலாம் என்று காதலன் நினைக்கிறான் .. வயது முதிர்வும் உடல் உபாதைகளும் காதலியை வலியின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது ,இதை காணும் காதலனால் தாங்க முடிவதில்லை . காதலியை தலையணையை கொண்டு அமுக்கி கொன்றுவிடுகிறான்.
இது கொலையா ? இல்லை காதலின் உச்சமா ?
காதலி இறந்த பின் காதலனின் நினைவுகளும் நிஜங்களும் காதலியை தான் தேடுகிறது ,உரையாடுகிறது . அவர் கொலை செய்யவில்லை.காதலியின் தீராத வழியிலிருந்தும் ,துயரிலிருந்தும் ,உடல் உபாதையிலிருந்தும் விடுதலை அளித்திருக்கிறார் . இதை மெய்பிக்க காதலன் தனிமையில் இருக்கும் போது ஒரு புறா வீட்டிற்குள் வரும். அதை எப்படியோ பிடித்து விடுவார் .அதன் மேலே ஒரு துணியை போர்த்தி கைக்குள் அடக்கி பிடிப்பார். அவருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை புறாவை பறக்க விட்டுவிடுவார்.இந்நிகழ்வை துயரின் பிடியில் இருந்து மனைவியை புறாவை போல பறக்கவிட்டு இருக்கிறார் என்றே நான் உணர்கிறேன் .
அன்றைய இரவு முழுவதும் வெள்ளை புறாவை பற்றியே நினைத்து கொண்டுஇருந்தென் . அடுத்த நாள் நண்பர்கள் புறாவை பார்க்க சென்றனர். என்னையும் அழைத்தனர்.எனக்கு பயமாக இருந்ததால் போகவில்லை .ரண்டு மூணு நாள் கழித்து அவரை வழியில் பார்த்தேன் .ஏன் புறாவை பார்க்க வரல என்று கேட்டார்.வெள்ளை புறாவை பற்றி எதாவது கேட்டுவிடுவாரா என்று நடுங்கினேன். இன்னைக்கு சாயங்காலம் புறாக்களை பார்க்க வா என்றார். நான் மறுபடியும் நண்பர்களுடன் அவரின் வீட்டிற்கு போனேன். வெள்ளை புறா அங்கேயே தான் இருந்தது .. என் அம்மாவிற்கு நான் காண்பிக்க விரும்பும் படங்களில் அமூரும் ஒன்று. இந்தப் படத்தை அம்மாவிற்கு போட்டு காட்டுவதில் சின்ன சிக்கல்.இந்தப் படம் ஆஸ்கர்,கான் விருது வாங்கியிருக்கிறது .படத்தை இயக்கி இருப்பவர் கெனக்கே என்றெல்லாம் சொன்னால் என்னவென்று கேட்பாள். ஒருவேளை படத்தின் கதையை சொன்னால் இந்த மாதிரி ஆயிரம் கதையை எனக்கு சொல்ல ஆரம்பித்து விடுவாள். அப்பிச்சி ,அம்மச்சி விடவா நீ சொல்ற கதையில் வருபவர்கள் என்று கேட்பாள் ?.நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி ராசாத்தி பாட்டி செத்து போன அடுத்த நாளே ஆறுமுக தாத்தா செத்து போனாரே நாபகம் இருக்கா ? என்று கேட்பாள் ? ராஜா அண்ணாவுக்கு கேன்சர் வந்து குடல் எல்லாம் வேலை செய்யாம போன போது வயுத்துல ஓட்டை போட்டு டூப் வழியா சாப்பிட்டது எல்லாம் வந்த போது அதையெல்லாம் ஏத்துகிட்டு அந்த நாத்தத்தை எல்லாம் பொறுத்துகிட்டு ராஜா சாகிற வரைக்கும் வெளிக்கியை வலிச்சுகிட்டு இருந்த ருக்மணி அக்கா பற்றி சொல்வாள் ? என்னிடம் பதில் இருக்காது.