நின்றால் பார்ட்டி, நடந்தால் பார்ட்டி என்று அலைபவன் அவன்.
கல்லூரியில் படிப்பை ரொம்ப கஷ்டப்பட்டு (?!) படித்து முடித்துவிட்டு அப்பாவின் தயவில் சொந்த பிசினஸ் ஆரம்பிக்கிறேன் பேர்வழி என்று ஒரு ஆபீஸ் என்று ஒன்றை வைத்துக்கொண்டு எப்போதும் அவனுக்கென்று இருக்கும் சில தொண்டரடிப்பொடிகளோடு அப்பன் சேர்க்கும் காசைக் கரைத்துக்கொண்டிருந்தான்.
அன்றும் அப்படித்தான்.. அவனது கூட்டத்தில் இருக்கும் ஒரு நண்பனுக்கு சினிமாவில் அதுவும் தமிழில் பிரபலமான இயக்குனரின் படத்தில் இரண்டொரு காட்சியில் கதாநாயகனின் நண்பர் கூட்டத்தில் ஒருவனாக தலை காட்டும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. (அதுவும் கூட லாங் ஷாட்டில்தான்).
அதனை தன் செலவில் கொண்டாட விரும்பினான் ராஜேந்திரன்.
"மச்சி.. சும்மா இல்லேடா. ..................எவ்வளவு பெரிய டைரக்டர் தெரியுமா. அவர் படத்துலே நீ வரதுன்னா அதுவே பெரிய விஷயம். நம்ம சூப்பர் ஸ்டார் கூட இப்படி ஒரு துண்டு துக்கடா வேசத்துலே தான் முதல்லே நடிக்க வந்தாரு. அவர் மாதிரி நீயும் வருவேடா." - என்று சொன்னவன்..
அதே வேகத்தோடு, "பிரெண்ட்ஸ் நம்ம நாகுவுக்கு கிடைச்சு இருக்கற வாய்ப்பை கொண்டாட இன்னிக்கு பார்ட்டி என் செலவுலே தான்.. ஓக்கேவா?" என்று கேட்டான் அவன்.
ஊரான் காசில் தண்ணி அடிக்க கசக்குமா என்ன?
சம்மதம் என்று வந்த நண்பர்கள் - சும்மா வரவில்லை.
ராஜேந்திரன் சொன்னான்.
"டேய். பசங்களா. எப்பவும் போல தண்ணி அடிக்கறது, தீனி தின்னுறதுன்னு பார்ட்டி அலுத்து போயிருச்சு மச்சிங்களா. இந்த தடவ கூடவே அடிஷனலா ஒன்னும் இருக்கு. " என்று கண்சிமிட்டினான் அவன்.
நம்ம பார்ட்டியிலே சிக்குன்னு ஒரு பிகர் வந்து டான்ஸ் ஆடிச்சுன்னா.. அதுவும் நமக்கும் மட்டுமே வந்து ஆடினா செமையா இருக்கும் இல்லே. " என்றான் அவன்.
"வெறும் ஆட்டம் மட்டும்தானா மாப்ளே." என்றான் ஒருவன்.
"எவண்டா இவன்? ஆரம்பத்துலே அவளை ஆடவைப்போம். அப்புறம் நாம எல்லாரும் ஆடிருவோம்.."- என்று சிரித்தான் அவன். அவர்களும் அந்த சிரிப்பில் கலந்து கொண்டார்கள்.
எங்கே பிடித்தானோ .. அவன்.. ஒரு இரண்டாந்தர க்ரூப் டான்சர் பெண் ஒருத்தி அன்று அவனிடம் சிக்கினாள்.
அவளை தங்கள் ரூமில் காபரே ஆடவைப்பது என்று முடிவானது.
அதற்காக அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு சூட் ஒன்றையே புக் செய்தான் அவன்.
அவன் வருகிறான் என்றாலே அனைவருக்கும் வயிற்றில் புளியைக் கரைக்கும்.
தவிர்க்கவும் முடியாது? என்ன ஆனாலும் அமைச்சரின் மகன் அல்லவா?
அன்று அவன் ஆட்டம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
"ஓ***** யாருடா இங்கே கஸ்டமர் சர்வீஸ்.? சூட்டாடா இது? என்னடா சூட் அலாட் பண்ணி இருக்கீங்க. மவனே.. வாங்கடா. " என்று அதிகாரம் விண்ணை முட்டியது.
கதிரவனுக்கு இது புதிசாக இருந்தது.
"என்ன ஸ்ரீதர் இது? இப்படி ஆடுறானே யாருங்க இவன்?" என்று கேட்டான்.
"சார் அவன் இவன்னு பேசாதீங்க சார். காதுலே விழுந்தா வம்பாயிரும். இவன் .......... மந்திரி மகன் சார். நாம தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும்."- என்று கிசுகிசுத்தான் ஸ்ரீதர்.
"சார். நீங்க ஹான்டில் பண்ணப்போற முதல் பார்ட்டி சார். கவனமா இருந்துக்குங்க சார். இவனுங்களைப் பொறுத்த வரைக்கும் நாம அவங்க கண்ணு முன்னாடியே இருக்கணும். எப்போ எதுக்கு சத்தம் போடுவாங்கன்னு தெரியாது.." என்று ஸ்ரீதர் சொல்ல,
மேஜை மீது மதுக்கோப்பைகள். கையில் கொண்டு வந்த டேப் ரெக்கார்டரில் மூன்றாம் தர குத்தாட்டப் பாட்டு..
பாடலுக்கேற்ப வந்த பெண் குறைந்த உடையில் இடுப்பை வளைத்து வெட்டி வெட்டி ஆடத் தொடங்கினாள்.
கோப்பைகள் காலியாக ஆக, அதை பார்த்து பார்த்து நிரப்ப சிப்பந்திகளை ஏற்பாடு செய்து இருந்த கதிரவனுக்கு அந்த சூழல் புதிதாக இருந்தது.
"பாவம் இந்தப் பொண்ணு. இந்த சின்ன வயசுலே வயத்துப் பொழைப்புக்காக இப்படி எல்லாம் ஆட வேண்டியதா இருக்கு? ஹ்ம்ம்.. இவங்க அம்மா யாரோ.. வீட்டுலே என்ன கஷ்டமோ?" என்று தான் அவனால் நினைக்க முடிந்தது.
மதுவின் போதை ராஜேந்திரனுக்கு மெல்ல மெல்ல தலைக்கேறத் தொடங்கியது.
அவன் குழுவில் இருந்த அந்த சினிமா வாய்ப்பு பெற்ற நண்பனும் சேர்ந்து சட்டைக் காலரைப் பின்னுக்கு தள்ளிக்கொண்டு ஆட்டம் போட.. கைதட்டலும் விசில் சப்தமும் அந்த இடத்தை நிறைத்தது.
அப்போதுதான் அந்த சம்பவம் நிகழ்ந்தது.
ஆடிக்கொண்டு இருந்த பெண்ணின் திரும்பி ஆடியபொழுது அவளது மார்புக் கச்சையின் முடிச்சை ராஜேந்திரன் உருவ..
அதை சற்றும் எதிர்பார்க்காத அந்தப்பெண் அதிர்ந்து போனாள்.
சட்டென்று ஆட்டத்தை நிறுத்திவிட்டு, "என்னங்க இது?" என்று ராஜேந்திரனை முறைத்தாள் அவள்.
"என்னடீ.. பெரிய பத்தினியாட்டமா மொறைக்கறே.? சரிதான் ஆடுடீ. " என்றான் அவன் அலட்சியமாக.
"நீங்க வரம்பு மீறுறீங்க. வெறுமே டான்ஸ் ஆடமட்டும் தான் நான் காசு வாங்கி இருக்கேன். நீங்க என்னடான்னா என் சட்டைய கழட்டுரீங்களே. வேணாங்க. என்னை விட்டுடுங்க. " என்று அவள் கெஞ்சும் குரலில் கேட்க.
"ஏண்டீ.. உன்னை சும்மா ஆடவிட்டு பாக்க நாங்க என்ன கேணையனுங்களா. வாடி.. தே.........." என்று அவளை இழுத்தான் ராஜேந்திரன்.
பார்த்துக்கொண்டே இருந்த கதிரவனுக்கு ரத்தம் கொதித்தது.
"பாஸ்டர்ட்." என்று பாய்ந்து ராஜேந்திரனின் கன்னத்தில் பளாரென்று ஒரு அறை விட்டான் அவன்.