ஒரு முறை அமெரிகாவில் இருக்கும் என் நண்பனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, " அமெரிக்காவில் ஆண் - பெண் சேர்ந்து சுதந்திரமாக சுற்றும் அளவிற்கு ஆண் - ஆண், பெண் - பெண் சுற்றுவதில் இல்லை" என்றான். எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்தியாவை தவிர எந்த நாட்டையும் பார்க்காத எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். அதற்கு அவன் சொன்ன காரணம், " ஒரு ஆண் - ஆண் நெருக்கமாக பழகினால், அவர்கள் 'கே' என்று சந்தேகப்படுவார்கள்". இரண்டு பெண்கள் ஒரு வீட்டில் தங்கியிருந்தால் அவர்களுக்குள் 'உறவு' இருப்பதாக நினைப்பார்களாம். கே, லெஸ்பியன் ஜோடிகள் அமெரிக்காவில் பரவலாக வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் ஓரின சேர்க்கை வளர தொடங்கினால் உண்மையாக நண்பர்களாக பலகும் ஆண் - ஆண், பெண் - பெண் உறவுகள் கூட பெற்றோர், சுற்றத்தின் கண்களுக்கு சந்தேக பார்வையில் தெரிவார்கள்.
குடும்ப நிகழ்ச்சியில் ஒரு பெண் கலந்து கொண்டால், ' உங்க புருஷன் வரலையா ' என்று கேட்பார்கள். கணவன் வந்தால், ' பொண்டாட்டி வரலையா ' என்று விசாரிப்பார்கள். ஓரின சேர்க்கை வளர தொடங்கினால், ' புருஷன் வரலையா ' என்பதற்கு பதிலாக ' இவங்க புருஷன் ஆணா ? பெண்ணா ?' என்ற கேள்வி வரும். இரண்டு பேரில் 'யார் ஆண் மாதிரி இருப்பீங்க ?' போன்ற கேள்விகள் எதிர்காலத்தில் எழும் அபாயம் உள்ளது.
ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கிகாரமே கிடைத்தாலும், சமூக அங்கிகாரம் கிடைப்பது மிகவும் கடினம். மற்ற திருமணம் போல் ஓரின சேர்க்கை திருமணத்தை பார்க்க மாட்டார்கள். அவர்கள் தத்தெடுக்கும் குழந்தையின் எதிர்காலம் அதே நிலைமை தான். பெற்றோர்கள் பெயர் தெரியாமல் இருப்பதை விட ஒரு பால் இனத்தினரை விண்ணப்ப படிவத்தில் அம்மா, அப்பா நிரப்புவதற்கு சங்கடமாக இருக்கும். அந்த குழந்தையும் தன்னை தத்தெடுத்த பெற்றோர்களை புரிந்துக் கொள்வதில் சிரமம் இருக்கும். வெளியே சொல்லுவதற்கு தயங்கலாம்.
ஆண் - ஆண், பெண் - பெண் உடலுறவு வைத்துக் கொள்ளுவதில் மருத்துவ ரீதியாக உடல் தொல்லைகள் ஏற்ப்படும். ஒரு சில மருத்துவர்கள் இதை மறுத்தாலும், பலர் உடல் தொல்லை வரும் என்று நம்புகிறார்கள். ஓரின சேர்ர்கையாளர்களை மனநோயாளிகளாக பார்க்கும் பார்வையும் இன்னொரு காரணம்.
ஓரின சேர்க்கையாளர்கள் திருமணமே செய்துக் கொண்டாலும் சட்டப்படி அவர்கள் உறவுக்கு அங்கிகாரம் இல்லை. எதிர்காலத்தில் ஒருவருக்கு ஏதாவது நடந்தாலோ மற்றவர் அவரின் சொத்துக்களையோ, பணத்தையோ உரிமை கேட்க முடியாது.
ஓரின சேர்க்கை ஆதரிக்க தொடங்கினால், தங்கள் வம்சம் அந்த தலைமுறையோடு நினறுவிடும் என்ற பெற்றோர்களின் பயப்படுகிறார்கள். அதனால், தங்கள் மகள்/ மகன் பற்றி உண்மை தெரிந்ததும் அவர்களை அடித்தோ அல்லது மிரட்டியோ திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்ற பெற்றோர்களின் நிலைமை இன்னும் மோசம். ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர் என்று தெரிந்தால் மற்றவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.
பல வருடங்களாக வாழும் கணவன், மனைவிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு பிரியும் போது எந்த அங்கிகாரம் இல்லாமல் ஒன்றாக வாழும் ஆண் - ஆண், பெண் - பெண் மட்டும் எவ்வளவு நாள் ஒத்த கருத்தோடு வாழ முடியும். ஒரு சிலர் ஆரம்பத்தில் இருக்கும் தைரியம் வாழும் போது இருப்பதில்லை. இருவரில் யாரோ ஒருவர் மனம் மாறி எதிர்பால்வினரை திருமணம் செய்து கொண்டு இயல்பாக வாழ நினைத்தால், மற்றவர் வாழ்க்கை பாதிக்கப்படும். ஓரின சேர்கையாளர்கள் நீண்ட நாள் ஒன்றாக வாழ்வதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.
இந்தியாவில், 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற பண்பாட்டில் வாழ்பவர்கள். நடைமுறையில், பல பெண்களுடன் ஒரு ஆண் உறவு வைத்துக் கொண்டாலும், ஒரு பெண் கணவனுக்கு தெரியாமல் கள்ளகாதல் இருந்தாலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற வாசகம் நம் எல்லோர் மனதில் பதிந்து ஒன்று. 'ஒருவனுக்கு ஒருவன்', 'ஒருத்திக்கு ஒருத்தி' என்ற வாசகம் மாற்றி பேச யாருக்கும் மனவராது.
ஆதரவான வாதங்களையும், எதிரான வாதங்களையும் இரண்டு பக்கம் ஆராய்ந்தால் ஒரு விஷயம் மிக தெளிவாக தெரிகிறது.
ஓரின சேர்க்கை எதிர்ப்பவர்கள் ' உடல்' சம்பந்தப்பட்ட உறவாக பார்க்கிறார்கள்.
ஓரின சேர்க்கை ஆதரிப்பவர்கள் 'உணர்வு' ரீதியாக பார்க்கிறார்கள்.