ஒரு மாங்காய்க் கிழவி; கிராமத்து வேப்ப மரத்தடியில் சந்தித்தேன்.
அவளை வெளுத்துப் பிழிந்து காயப்போட்ட காலம் இஸ்திரி போட மறந்து விட்டது; தோல் சுருங்கிக் கிடந்தாள். தான் கூறுகட்டி வைத்திருந்த மாங்காய் மீது ஈ எறும்பு அண்டாமல் வேப்பிலை கொண்டு விசிறிக் கொண்டிருந்தாள். அந்த 'இத்த' சாக்கின் எதிரே குத்தவைத்து உட்கார்ந்து மெல்லப் பேச்சுக் கொடுத்தேன். முப்பது ரூபாய் அவளின் முதலீடு. ஒரு சாக்கு வடுமாங்காய் வாங்கி ஐம்பது கூறு போட்டால் கிழவிக்கு அது 'பெருங்கொண்ட' வியாபாரம்.
முதல் பதினாறு கூறு கொஞ்சம் வேகமாய்ப் போகுமாம். ஒரு கூறு இரண்டு ரூபாய். வெயில் ஏற ஏற வியாபாரமும் மாங்காயும் வெம்புமாம். அடுத்த பத்துக்கூறு ஒண்ணரை ரூபாயாகக் குறைந்து விடும்; அதை அடுத்த பத்துக்கூறு ஒரு ரூபாய்க்கு இறங்கி விடும். குத்தலும் சொத்தையுமாயா மிச்சமுள்ள நான்கு கூறுகளும் கட்டிக் கொடுக்க முடியாத மகள்களாய் அவளிடமே தங்கிவிடும். அதிகாலை ஆறு மணிக்குக் கடைவிரித்தவள் மாலை ஆறு மணிக்குக் கடை கட்டும்போது முப்பது ரூபாய் முதலீட்டில் முப்பத்திரண்டு ரூபாய் லாபம் ஈட்டியிருப்பாள்.
50 வயதிலேயே சாய்வு நாற்காலி தேடும் உலகத்தில், 80 வயதில் உழைத்து உண்ணுகிறாள் கிழவி. அந்த 'இத்த' சாக்கின் மாங்காய்களிலும் கிழவியின் 'இத்துப்போகாத' நம்பிக்கையிலும் தொடங்குகிறது இந்தியப் பொருளாதாரம்.
கட்டியவன் வெட்டிய வேர் - பெற்றவனோ மண் தொடா விழுது காலனோ கையாலாகதவன்..!
பார்வையும் போனது முதுகும் கூனானது செவியும் செவிடாகி - உடல் குருதியும் குறைந்து நடை தளர்ந்த கிழவியின் - பாழும் வயிற்றில் தொடக்கம் இந்தியப் பொருளாதாரம்..!!!
அருமையான பதிப்பு.. அதற்கு மிக அருமையான கருத்து சேர்த்தார்கள் நண்பர்கள்..!! நன்றி Mr. ramnav..!!