தீபக் இனி என்ன செய்வதென்றே தெரியாமல், வாழ்க்கையே வெறுத்தார் போல் நடந்து வந்து கொண்டிருந்தான். காலேஜ் பைக் ஸ்டாண்டில் தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு வெளியில் வந்தான் தீபக். வந்து கொண்டிருந்த தீபக்கை கை நீட்டி மரித்தான் ஜான். ஜானை பார்த்து தீபக் என்ன சொல்லு என்றான், என்னை நீங்கள் போகும் வழியில் எறக்கி விட்டு செல்ல முடியுமா என்றான். தீபக்கும் சரி வா என்றான். ஜான் தீபக் வண்டியில் ஏறி அமர்ந்தான்.பைக் போய்க்கொண்டிருக்கும் போதே ஜான் தன் பேச்சை ஆரம்பித்தான். தீபக் , சந்துருவை நினைத்தால் எனக்கே பாவமாக இருக்கிறது,என்றான் ஜான். வண்டி ஓட்டிக்கொண்டே ஜான் இப்படி சொன்னதும் , ஜானை திரும்பி பார்த்தான். ஜான் நிறுத்தாமல் பேசினான், சந்துரு உங்க வீட்டுக்கு வந்த போது நீயும் அடித்தாய், இன்று உங்கள் அம்மா காலேஜிலேயே வந்து சக மாணவர்கள் முன்னாடியே அடிக்கிறாங்க, இது நியாயமா என்றான்.இதற்கு எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தான் தீபக்.சரி நீயும், சந்துருவும் பேசுவது உன் அம்மாவிற்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை , இதை பற்றி நீ என்ன முடிவு செய்திருக்கிறாய் என்றான் ஜான் தீபக்கிடம் .தீபக் சற்று நேரம் அமைதியாக இருந்துவிட்டு , கனத்த குரலில் நானும் சந்துருவும் பிரிந்துவிடலாம் என்று முடிவு செய்துவிட்டோம் என்றான் தீபக். சந்துருவை பிரியும் வலி தீபக்கின் கனத்த குரலில் தெரிந்தது. தீபக்கின் வாயிலிருந்து பிரிந்துவிட்டோம் என்ற செய்தியை கேட்டதும் ஜானிற்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. ஜானோ தான் ஒரு சொர்க்க லோகத்தை அடைந்தது போலவும் , தேனிலே நீந்தி , பாலிலே குளித்து , பன்னீரை அருந்துவது போல் பொய்யான ஒரு மாயா உலகத்தில் நீந்திக்கொண்டிருந்தான். இப்போது ஜான் , முன்னாள் பைக் ஓட்டிச் சென்று கொண்டிருக்கும் தீபக்கை நெருங்கி அமர்ந்தான், தோளில் கை வைத்தான். ஜான் இப்போது செய்யும் ஒவ்வொன்றும் தீபக்கிற்கு தெளிவாக புரிகிறது, ஆனால் தீபக் எதுவும் பேசாமல், ஜான் இறங்க வேண்டிய இடத்தில் இறக்கி விட்டு தீபக் சென்றுவிட்டான். ஜானுக்கு மனதுக்குள் சந்தோசம் , தீபக் தன் வலையில் வீழ்ந்து விடுவான் என்று அவன் நினைத்தான். தீபக் வீட்டிற்கு சென்றான், அங்கு தீபக்கின் அம்மாவோ எப்போதும் போலவே நடந்து கொண்டார். தீபக்கோ அம்மா எதாவது கேட்பார் என்று நினைத்தான், ஆனால் தீபக்கின் அம்மா அவனை எதுவுமே கேட்கவும் இல்லை, அதே போல் எதுவும் சொல்லவும் இல்லை, அமைதியாக இருவரும் சாப்பிட்டனர், அப்படியே தூங்கவும் சென்றனர். அடுத்தநாள் தீபக் காலேஜிக்கு கிளம்பினான் , வண்டியை எடுக்க தீபக் செல்லும் போது தீபக்கின் அம்மா , ஆண்டனி(தீபக்) என்றார், அவனும் என்னம்மா என்றான். காலேஜ் முடிஞ்சதும் சீக்கிரமா வீட்டுக்கு வாப்பா என்றார். தீபக்கிற்கு தன் அம்மா எதை மனதில் வைத்து இதை சொல்கிறார் என்று அவனுக்கு புரிந்தது , சரி என்று தலை ஆட்டினானே தவிர வேறெதுவும் பேசவில்லை. தீபக் பைக்கை ஸ்டார்ட் செய்த பிறகும் தீபக்கின் அம்மா ஆண்டனி(தீபக்) என்று அழைத்தார், தீபக்கும் திரும்பி பார்த்தான், ஆண்டனி ""உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கும், உன்னை நம்பியே ஒரு ஜீவன், உன் அம்மா நான் இருக்கிறேன் என்பதை மட்டும் எந்த நிலையிலும் மறந்துவிடாதே" என்று தீபக்கின் அம்மா சொல்லும் போது அவரின் கண்ணில் கண்ணீர் முட்டிக்கொண்டு இருந்தது. தீபக்கோ அந்த நிமிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருந்தான். தீபக்கின் அம்மாவே காலேஜ்க்கு டைம் ஆகுது நீ கேளம்புப்பா என்றார். தீபக்கும் கேளம்பினான்.தீபக் காலேஜ் கேம்பஸில் வந்து கொண்டிருந்தான் எதிரில் சந்துருவும் வந்து கொண்டிருந்தான் . தூரத்தில் வரும் போதே இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். இருவர் மனதும் பேசவேண்டும் என்று துடித்தாலும், ஏதோ ஒன்று தடுத்தது, இருவரும் நெருங்கும் போது வேறுவேறு திசையை நோக்கியே சென்றனர்.தீபக் சந்துரு இருவருக்குள்ளும் பேசவில்லை என்றாலும் இப்படி விலகியே பார்த்துக்கொண்டிருக்கலாம் என்று தோன்றியது. இருவருமே இப்போது எதிரில் சந்துரு வருவானா என்று தீபக்கும், தீபக் வருவானா என்று சந்துருவும் எதிர் பார்த்தே நடக்க தொடங்கினர். ஒரு நாள் தீபக்கிடம் ஜான் கை குலுக்கி பேசிக்கொண்டிருந்தான், இதை தூரத்தில் இருந்து சந்துரு பார்த்துவிட்டான். சந்துருவால் இதை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தூரத்தில் இருந்து கொண்டே சந்துரு தீபக்கை முறைத்து பார்த்தான், தீபக்கும் சந்துரு தூரத்தில் இருந்து தன்னை முறைப்பதையும், அந்த பார்வையில் தன்னை எரிப்பது போல பார்ப்பதையும் பார்த்து சிரித்துவிட்டான். தீபக் சிரித்ததும், சந்துரு தனக்கு வந்த சிரிப்பையும் அடக்கிக் கொண்டு சென்றுவிட்டான். தீபக் தன்னுடன் பேசிக்கொண்டிருந்த ஜானை அனுப்பிவிட்டு, இப்போது நடந்ததை பற்றி யோசித்தான். சந்துரு நம்மை முறைக்கிறான் என்றால், அவனால் எதையுமே மறக்கவில்லை, எப்படி மறப்பான், எப்படி அவனால் மறக்க முடியும். நான் ஜானுடன் பேசிக்கொண்டிருப்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியாமல் முறைக்கிறான், இதிலிருந்து அவனுடைய பசுமையான காதல் , என் மீது கொண்டுள்ள அன்பு இவற்றின் வெளிப்பாடு, அவனால் , நான் ஜானுடன் பேசிக்கொண்டிருக்கும் போதே அடக்க முடியவில்லை, அவனால் மறைக்கவும் முடியவில்லை. ஆனால் நான் இன்னும் ஒரு வாரத்தில் ஒரு பெண்ணுக்கு பெரியோர் முன்னிலையில், என் அம்மாவின் ஆசியோடு சொந்தமாகப்போகிறேன் என்பதை எப்படி என் சந்துரு தாங்கிக்கொள்வான் என்று நினைத்துக்கொண்டே, காலையில் தன் அம்மா சொன்னதையும் நினைத்துக்கொண்டே என்ன செய்வதென்று புரியாமல் தன் வகுப்பறை நோக்கி நடந்தான் தீபக் .தீபக்கின் வகுப்பறை நோக்கி சந்துரு, ஜான் அவர்களுடன் மூன்று மாணவர்கள் மூன்றாமாண்டு வகுப்பறைக்கு வந்தனர். திடிரென்று தன் வகுப்பறைக்கு வந்த சந்த்ருவையே தீபக் பார்த்துக்கொண்டிருந்தான். ஜான் பேச ஆரம்பித்தான், ஹாய்!!!!!! சீனியர்ஸ் உங்களுக்கு , நாளைக்கு "farewell party " மாலை 5 மணி அளவில் கொண்டாடலாம்னு பேராசிரியர்கள், உங்கள் ஜூனியர் நாங்கள் ஏற்ப்பாடு செய்திருக்கிறோம் , அதனால் கண்டிப்பாக வந்து விட வேண்டும் என்று சொல்லி விட்டு அனைவரும் கிளம்பினர். அடுத்த நாள் மாலை 5 மணிக்கு தான் காலேஜ் போக வேண்டும், தீபக் அந்த 5 மணி எப்போது வரும் என்று எதிர் பார்த்திருந்தான். காரணம் சந்துருவை பார்ப்போம் என்ற காரணம் மட்டும் அல்ல , அந்த கலை நிகழ்ச்சியில் எப்படியும் சந்துரு டான்ஸ் ஆடுவான் அதை பார்க்க வேண்டும் என்பதற்காக, தீபக்கின் அம்மா தீபக்கிடம் வந்து, என்ன ஆண்டனி(தீபக்) காலேஜ் போகவில்லையா என்றார். தீபக் சொன்னான் அம்மா இன்று எங்க காலேஜில் "farewell party " மாலை 5 மணிக்கு அதனால் மாலை காலேஜ் போனால் போதும் என்றான்.கொஞ்சம் கனத்த குரலில் சத்தமாக இன்று மாலை பொண்ணு வீட்டில் இருந்து நம் வீட்டிற்கு வருகிறார்கள் , அவர்களை அழைத்துக்கொண்டு நான் நீ எல்லோரும் தேவாலயம் செல்ல வேண்டும் நீ கண்டிப்பா இருந்தே ஆகணும் நீ எங்கேயும் போக வேண்டாம் என்று உறுதியாகவே சொன்னார் தீபக்கின் அம்மா.தீபக் தன் அம்மா சொல்வதை கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் அப்படியே சிலை போல் நின்றான்.இதை கேட்டுக்கொண்டிருக்கும் செழியன் கொஞ்சம் சிரிப்புடனேயே , என்னங்க தீபக், சந்துரு உங்கள் கதையில் இப்படியெல்லமா twist வரும் ரொம்ப பாவம் நீங்க ரெண்டு பேரும், ஓகே சந்துரு நீங்க அன்னைக்கு டான்ஸ் ஆடுனின்களா, தீபக் அதை வந்து பார்த்தாரா இல்லையா , என்ன நடந்தது சொல்லுங்கள் என்று ஆவலாக கேட்டான் செழியன் தன் வாழ்கையின் சோகங்களை எல்லாம் மறந்து. மணியும், தீபக் அன்று என்ன தான் நடந்தது என்று கேட்டான். தீபக் சந்துருவை பார்த்தவாறு, அன்று நான் பின்விளைவுகளை யோசிக்காமல் பேசிய , செய்த காரியங்கள் தான் இன்று வரை என் மனதை அரித்துக்கொண்டு இருக்கிறது என்றான் சோகத்தோடு.