Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: திருநங்கைகள் சகபாலர்களே!
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
திருநங்கைகள் சகபாலர்களே!
Permalink   
 


சமீப காலமாக மனித உரிமைகள் குறித்த கருத்துப் பரவலாக்கம் பல்வேறு தரப்பினர்களிடையே முன்னிலும் வேகமாய் முன்னெடுத்து செல்லப்படுகிறது. ஆனால் அதேவேளையில் ஒரு சராசரி மனிதருக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சமூக அங்கீகாரம், பாலின அடையாளத்தின் அடிப்படையில், சமூகத்தின் அனைத்து தளங்களிலும் திருநங்கைகளுக்கு தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

அலி, ஒம்போது, பொட்டை, அஜக்கு, பொண்டுகன், பேடி, கீரவடை, ரெண்டுங்கெட்டான் என்பது போன்ற பல்வேறு பெயர்களில் திருநங்கைகள் கேலி செய்யபடுவதும், சுட்டிக்காட்டப்படுவதுமான அவல நிலை தான் நீடித்துவருகிறது. இதிலிருந்தே சமூகத்தில் அவர்களது நிலை என்ன என்பது தெளிவாகிறது. திருநங்கைகள் குறித்த தவறான கற்பிதங்களை, கருத்தியல்களை சமூகம் உருவாக்கி வைத்திருக்கிறது. திருநங்கைகளைக் கண்டாலே அச்சம்கொள்வதும், அருவறுப்பு அடைவதும், முகம் சுளித்து ஒதுங்குவதும், அசிங்கமாக கீழ்த்தரமாக திட்டுவதும், சீண்டுவதும் போன்ற நிகழ்வுகளுக்கு அன்றாடம் செய்கின்றனர்.

செய்தி ஊடகங்களான திரைப்படங்கள், தொலைக்கட்சி ஒளிபரப்புகளும், காட்சி வடிவமைப்புகளும் திருநங்கைகளை பெரும்பாலும் இழிபிறவிகளாகவே காட்டி வருகின்றன. ஊடகங்களால் பரப்படும் கேவலமான கருத்தியல்களின் விளைவாக திருநங்கைகள் மேலும் மேலும் இழிவான பார்வைக்குத் தள்ளப்படுகின்றனர். சமூகத்தின் பொதுத்தளங்கள் யாவும் திருநங்கைகளை அருவெறுப்பான மக்கள் பிரிவாகவே புரிந்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாக சுயமரியாதை, சக மனிதர்களின் அங்கீகாரம் முதலானவைகளை எதிர்பார்த்து இறப்பு வரையிலும் வெறும் ஏக்கத்துடனேயே திருநங்கைகளில் பெரும்பாலானோர் தங்கள் வாழ்நாட்களை கழித்து வருகின்றனர்.

1970ம் ஆண்டிலேயே கனடா நாட்டிலும், அதனைத் தொடர்ந்து ஜப்பான், டென்மார்க், ஹாலந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து, தாய்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி போன்ற நாடுகளிலும் திருநங்கைகள் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு அரசே உதவி செய்கிறது. ஆஸ்திரேலியாவில் ஒருவர் பாலினமாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர் அவர் எந்த பாலினமாக மாறியுள்ளாரோ அந்த பாலினமாகவே அடையாளம் காணப்படவும் அங்கீகரிக்கப்படவும் செய்கிறார். நார்வே நாட்டில் சராசரி பெண், ஆண் போன்று அனைத்து நிகழ்வுகளிலும், திருநங்கைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பாலின மாற்று அறுவை சிகிச்சைக்குப்பின் திருநங்கைகளுக்கு பெண்/ஆண் என்ற அடையாளத்துடன் மருத்துவ சான்றிதழும் வழங்கப்படுகிறது.

பாலின மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக இந்தியாவில் குறிப்பான சட்டங்கள் எதுவும் இல்லை. ஆனால், குற்றவியல் தொடர்பான பொதுவான சட்டமான இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 88, “ஒருவருக்கு அவருடைய இசைவுடன் அவருடைய நலம் கருதி நல்லெண்ணத்துடன் செய்யப்படும் காரியத்தால் துன்பம் ஏற்படுகின்றது. அவர் தமது இசைவினை வெளிப்படையாகவோ அல்லது வேறு விதமாகவோ வெளிப்படுத்தியிருக்கலாம். ஆனால் அத்தகைய காரியத்தைச் செய்வோருக்கு தாம் உண்டாக்கும் அல்லது உண்டாக்க நினைக்கும் அல்லது உண்டாகும் என்று நினைக்கும் துன்பத்தால் மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்து இருக்கக் கூடாது. அப்போது அவர் செயல் குற்றமாகாது” என்று கூறுகிறது. ஆனால் இதே சட்டத்தின் பிரிவு, 320ஆனது, ஒருவரது ஆண்மையை இழக்கச் செய்தல், உடல் உறுப்புகளில் ஒன்றை அல்லது இணைப்புகளில் ஒன்றை செயல் புரிய விடாமல் தடுத்தல், நிரந்தரமாக செயல் இழக்கும்படி செய்தல், “கொடுங்காயம்” விளைவித்தலாகும் என்று கூறுகிறது. அதே போல பிரிவு, 322 ஆனது, கொடுங்காயம் ஏற்படும் என்ற தெளிவுடன் தன்னிச்சையாக காயப்படுத்தும் செயல் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் கூறுகிறது.

மத்திய பிரதேச மாநிலம் 'கத்னி' மாநகராட்சியானது 1999ம் ஆண்டு பெண்களுக்காக ஒதுக்கபட்ட தனித் தொகுதியாகும். அதில் 'கமலா ஜான்' என்பவர் நவம்பர் 2009ம் ஆண்டு போட்டியிட்டு மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பிறப்பின் அடிப்படையில் பெண்ணல்ல என்று கூறி அவரது வெற்றியை செல்லாது என மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கடந்த 2011ம் ஆண்டு அறிவித்தது. அதேபோல உத்திர பிரதேசம் மாநில கோரக்பூர் நீதிமன்றம், மேயர் பதவிக்கு 2000த்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆஷா தேவி எனும் திருநங்கை பெண்ணல்ல, எனவே பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட கோரக்பூர் மேயர் பதவிக்கு அவர் தகுதியற்றவர் என்று 2003ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. இப்படியாக தேர்தல் விண்ணப்ப படிவத்தில், தாங்கள் பெண்கள் என்றே நிரப்பிக் கொடுத்துள்ள நிலையிலும், திருநங்கைகளை பெண்களாக ஒத்துக்கொள்ள நீதிமன்றங்கள் மறுத்துள்ளன.

கடந்த 2006 ம் ஆண்டில், தோகா ஆசிய விளையாட்டு போட்டிகளில், தமிழ்நாட்டைச் சேர்ந்த சாந்தி சௌந்தராஜன் என்பவர் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கம் பெற்றார். அதன்பிறகு நடந்த பாலின சோதனையில் அவர் பெண் அல்ல, பெண்ணாக மாறிய ஆண் என்று கூறி, அவரது பதக்கம் அவ்வருடமே திரும்பப் பெறப்பட்டது.

சுதந்திரத்துக்கு முன் 1871ம் ஆண்டு இயற்றப்பட்ட 'குற்ற பரம்பரையினர்' சட்டத்தில், 1897ம் ஆண்டு இந்த சட்டத்தின் துணைத் தலைப்பாக, 'குற்ற பரம்பரையினர் மற்றும் அரவாணிகள் குறித்த பதிவுக்காக' என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் இச்சட்டம், பிடியாணை எதுவுமின்றி திருநங்கைகளை கைது செய்வதுடன், அவர்களைக் குறித்து செய்திகள் வெளியிடுதல் மற்றும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை அளித்தல், அபராதம் விதித்தல் போன்ற செயல்களை செய்ய சட்டப்பூர்வமாக வழிவகுத்தது. பின்னர் இந்த சட்டமானது ரத்து செய்யப்பட்டு, அதற்குப் பதிலாக, வழக்கமான குற்றவாளிகள் சட்டம் (Habitual Offenders Act) என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது.

விபச்சார தடுப்புச் சட்டம் என அழைக்கப்படும் Immoral Trafficking Prevention Act, 1956ன் படி விபச்சாரம் செய்தல், அதற்காக ஆள் அழைத்து வருதல் போன்றவை குற்றங்களாகும். துவக்கக் காலத்தில் பெண்களை மட்டுமே தண்டிக்கும் வகையிலான இந்த சட்டத்தில், 1986ல் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின் படி, இரு பாலினத்தைச் சேர்ந்தவர்களையும் தண்டிக்கலாம் என்ற விதி இணைக்கப்பட்டது. இந்த திருத்தத்தின் படி, கைது செய்யப்படுபவர்கள் பெரும்பாலும் திருநங்கைகளாகவே இருக்கிறார்கள்.

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 'இயற்கைக்கு முரணான குற்றம்' குறித்து கூறுகிறது. பெரும்பாலும் திருநங்கைகளே இப்பிரிவின் கீழ் தண்டனைக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். 1990ம் ஆண்டில் குஜராத் மாநிலத்தில், தாருலதா என்பவர் பாலின அறுவை சிகிச்சை மூலமாக ஆணாக மாறி தருண்குமார் என்ற பெயரில், லீலா சௌடா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டது தொடர்பான வழக்கு நடைபெற்றது. இது சட்டப்படி இயற்கைக்கு முரணான குற்றம்; எனவே அந்தத் திருமணம் சட்டப்படியான திருமணம் அல்ல என்பதால் இதனை சட்டத் தகுதியுடைய திருமணமாகக் கருத முடியாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த 2009ம் ஆண்டு 'நாஷ் பௌண்டேசன்' எனும் வழக்கில், டெல்லி உயர்நீதிமன்றம் இந்தப் பிரிவினை, சட்ட புறம்பானதென்று அறிவித்தது. இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு, டெல்லி உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு சாதகமான நிலைபாட்டையே எடுத்துள்ளது என்பது வரவேற்கத்தக்கது.

திருநங்கைகளைப் பொருத்த வரையில், விதிவிலக்காக தமிழ்நாட்டில் சற்று மேம்பாடான சூழலே நிலவுகிறது. முந்தைய தி.மு.க ஆட்சியின்போது குடும்ப அட்டைகளில் ஆண், பெண் என்பதைத் தொடர்ந்து திருநங்கை என்றும் சேர்க்கப்பட்டது. கடந்த 2008ம் ஆண்டில் 'தமிழ்நாட்டில் அரவாணிகள் நல வாரியம்' உருவாக்கப்பட்டது. மேலும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை திருநங்கைகளுக்கான குறைதீர் கூட்டங்களை மாவட்ட ஆட்சியாளர்கள் நடத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல கடவுச்சீட்டு விண்ணப்பங்களிலும் பாலினம் என்ற பகுதியில் திருநங்கைகள் என்று இணைக்கப்பட்டுள்ளது.

திருநங்கைகள், அவர்களது உரிமைகள் மற்றும் கடமைகள் தொடர்பான பிரிவுகள் இடம்பெறும் வகையிலான திருத்தங்கள் திருமணச் சட்டங்களில் மேற்கொள்ளப்பட, பாலின மாற்றம் தொடர்பாக தேசிய அளவிலான தனிச் சட்டம் விரைவில் இயற்றப்பட்டு, அதன் மூலமாக பாலின அறுவைச் சிகிச்சைகளும், பாலின உறுப்பு மாற்றங்களும் கண்காணிக்கப்படுவதுடன், ஒழுங்கு படுத்தப்படவும் வேண்டும். ஒருவர் அறுவைச் சிகிச்சையின் மூலமாக விரும்பி தேர்வுசெய்த பாலினத்தின் அடிப்படையில் அவர் அடையாளம் காணப்படும் வகையிலான விதிகள் இடம்பெறுதல், அனைத்து மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளிலும் திருநங்கைகளுக்கென தனி சிகிச்சை அறைகள் உருவாக்கப்படுதல் வேண்டும். பள்ளி, கல்லூரி பாடத் திட்டங்களில் திருநங்கைகளைக் குறித்து நல்ல விதமான பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட வேண்டும். நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் ஆங்கிலோ இந்தியர்களைப்போல, சிறப்பு நியமன உறுப்பினர்களாக திருநங்கைகள் நியமிக்கப்படுதல் வேண்டும். இது போன்ற செயல்பாடுகள் மூலமாக திருநங்கைகளும் நம் சகபாலர்களே என்ற நம்பிக்கை சமூகத்தில் வளர்ச்சி பெறும்.

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

திருநங்கைகளும், திருனம்பிகளும் நிச்சயம் உரிமைகள் பெறவேண்டிய மக்கள்தான்.... ஆனால், ஒருபால் ஈர்ப்பு நபர்களோடு திருநர்களை இணைக்க கூடாது..... திருநர்கள் தங்களை உடல் ரீதியாகவே எதிர்பாலினத்தவராக உணர்ந்து, தங்கள் பாலினத்தையே மாற்றிக்கொள்வார்கள்.... ஆனால், ஒருபால் ஈர்ப்பு கொண்டவர்கள் இந்த பாலின ஈர்ப்பு விஷயத்தில் மட்டுமே தன் பாலின நபர்களிடம் ஈர்ப்பு கொள்வார்கள்... சமூகத்தில் பொதுமக்களைவிட ஒருபால் ஈர்ப்பு மீது அதிக வெறுப்புணர்வு கொண்டவர்கள் திருநர்கள் என்று சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா?... உண்மை அதுதான்...
பிறப்பால் ஆணாக இருந்து பெண்ணாக மாறும் ஒரு திருநங்கை, தன்னை பெண்ணாகவே நினைத்துக்கொள்வாள்..... அதனால் மட்டுமே அவள் மற்றொரு ஆணுடன் ஈர்ப்பு கொள்கிறாள்.... திருநங்கை சமூகத்தில் ஒரு பெண்ணின் மீது ஈர்ப்புகொள்ளும் திருநங்கைகளை, லெஸ்பியன் என கருதி ஒதுக்கி வைப்பார்கள்.... சில கொலைகளும் இதனால் நடந்திருக்கிறது...... நான் அவர்களை குறைசொல்லவில்லை..... இந்த நேரத்தில் இதை நம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்றுதான் சொல்கிறேன்....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 

Page 1 of 1  sorted by
 Add/remove tags to this thread
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard