Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: எழுத்தாளர் ஜெயமோகனின் “அணையா விளக்கு”


conciliator

Status: Offline
Posts: 1073
Date:
எழுத்தாளர் ஜெயமோகனின் “அணையா விளக்கு”
Permalink   
 


 

அணையாவிளக்கு

சமீபத்தில் ஒரு சிறிய நண்பர் குழாமில் பேசிக்கொண்டிருந்தோம். அவர்கள் எல்லாம் அதிகம் வாசிக்கும் பழக்கமற்ற நண்பர்கள், ஆனால் உண்மையாகவும் தீவிரமாகவும் சமூகக் களப்பணியாற்றக்கூடியவர்கள். ஊடகம் பற்றி பேச்சுவந்தது. நான் இந்தியச்சூழலில் எந்த ஒரு ஊடகமும் உண்மையான சுதந்திரத்துடன் செயல்பட முடியாதென்றும், ஊடகவியலாளர்களுக்கு இருப்பதாக அவர்கள் நம்பும் சுதந்திரம் என்பது ஒரு மாயையே என்றும் சொன்னேன்.

உதாரணமாக எந்த ஊடகவியலாளரும் மதுரை தினகரன் அலுவலகத்தில் நிகழ்ந்த கொலையைப்பற்றி இன்று எழுதிவிடமுடியாது. அடித்தால் அலறுவது எந்த உயிருக்கும் உள்ள உரிமை. அடையாளமில்லாமல் அலையும் ஒரு நாடோடி மனிதனைக்கூட இன்று எளிதாக தாக்கமுடியாது, அவர்கள் கத்தி ஆர்ப்பாட்டம் செய்து ஊரைக்கூட்டுவார்கள். அந்த உரிமைகூட இல்லாதவர்கள் நம் ஊடகவியலாளர்கள். அந்தக்கூட்டமா இந்தியாவைக் காப்பாற்றும் என நாம் நம்புகிறோம் என்றேன்.

ஊடக முதலாளிகளுக்கும் அந்த சுதந்திரம் இல்லை. அவற்றுக்கான முதலீட்டை பெருந்தொழிலதிபர்கள் மட்டுமே செய்ய முடியும். அவர்களின் தொழில்கள் மீது இந்திய அரசுக்கு இருக்கும் முழுமையான அதிகாரம் அவர்களை முழுமையாகவே கட்டுப்படுத்தும், அவர்கள் அனுமதிக்கப்பட்ட எல்லைக்கு அப்பால் செல்ல முடியாது என்றேன்.

அப்படியென்றால் இணையம் ஒரு நல்ல ஊடகம் அல்லவா என்று என்னிடம் கேட்டார்கள். நான் அது உண்மை என்றேன். இன்றிருக்கும் நிலையில் இணையம் சுதந்திரமான ஊடகம். அது நேரடியான கட்டுப்பாடு ஏதும் இல்லாதது. செலவு இல்லாதது. ஆகவே அதை சுதந்திரமாக செயல்படச்செய்ய முடியும். பலநாடுகளில் இணையம் சுதந்திர ஊடகமாக பெரும்பணிகளை ஆற்றியிருக்கிறது. ஆனால் – என்றேன்.

நண்பர்கள் ‘எதற்கும் ஒரு ஆனாலை சொல்லி விடுகிறீர்கள்’ என்றார்கள். ‘…இந்த ஆனால் மிக அடிப்படையான ஒரு நடைமுறைச்சிக்கல்’ என்றேன். ‘இணையத்தை பயன்படுத்துபவர்களில் பெரும்பாலும் அனைவருமே படித்தவர்கள். அதுவே அதன் பிரச்சினை.’

நண்பர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்றே புரியவில்லை. ‘படித்தவர்கள் இணையத்தில் இருக்கிறார்கள் என்றால் அது நல்லதுதானே?’ என்று ஒருவர் கேட்டார். அவர் ஒரு கிறித்தவ போதகர். நான் பார்த்ததிலேயே எளிய மனிதர். அவருக்கு அப்படித்தான் கேட்கவரும். ’நீங்கள் ஒரு மாதம் நம் இணையச்சூழலில் உலவுங்கள். நமது படித்த வர்க்கம் எப்படிப்பட்டது என்று தெரியவரும்’ என்று சொன்னேன். ’ஆனால் அதைத் தவிர்ப்பதே நல்லது. அதன்பின் நீங்கள் கிறிஸ்துவை அணுகமுடியாது.’

நாம் படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய இந்த மக்கள்திரள் எப்படிப்பட்டது? நாம் அதை ஒட்டுமொத்தமாக, புறவயமாக அணுகக்கூடிய ஒரு வாய்ப்பை இணையம் நமக்கு உருவாக்கியளிக்கிறது. அதிலிருந்து வரும் நமது மனப்பிம்பம் என்ன? இங்கே இணையத்தில் உலவக்கூடிய பலர் இருக்கிறீர்கள். கடந்த பத்தாண்டுகளில் நான் வந்தடைந்துள்ள மனச்சித்திரத்துக்கு மாறான சித்திரமுள்ள எவரேனும் இங்கே இருக்கிறீர்களா?

நமக்கு இணையம் ஒரு சுதந்திரவெளியை அளிக்கிறது. அந்தவெளியில் நாம் ரகசியமாகச் செயல்படும் வாய்ப்பையும் அளிக்கிறது. இவ்விரண்டையும் நம்முடைய படித்த இளையதலைமுறை எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறது?

தமிழில் ஓரளவேனும் தீவிரமான விஷயங்களை வெளியிடும் இணையதளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவற்றை வாசிப்பவர்கள் மிகச்சிறுபான்மையினர். மிகப்பெரும்பாலான இணையவாசகர்கள் வாசிக்கும் இணையதளங்கள் சினிமா அரட்டைகள், கிசுகிசுக்கள், வம்புச்சண்டைகள் மட்டுமே நிரம்பியவை.

நண்பர்களே, முன்பு ஒரு பேச்சு இருந்தது. குமுதமும் விகடனும் எல்லாம் மக்களின் ரசனையை சீரழிக்கின்றன என்று. இன்று நம் மக்களுக்கு அவர்களே தங்கள் இதழ்களை உருவாக்கிக் கொள்ள வாய்ப்பளிக்கையில் குமுதத்தையும் விகடனையும் விட பலமடங்கு கீழ்த்தரமான இணைய தளங்களைத்தான் உருவாக்கி வாசிக்கிறார்கள். நம்மை குமுதமும் விகடனும் கெடுக்கவில்லை, நாம்தான் அவற்றை கெடுத்து குட்டிச்சுவராக்கினோம். இன்னும் இன்னும் கீழே வா என்று நம் படித்த இளையதலைமுறை நமது ஊடகங்களிடம் சொல்லிக்கொண்டிருக்கிறது.

எனக்கு வரும் எதிர்வினைகளில் இருந்து ஒன்றை கவனிக்கிறேன். மிகப்பெரும்பாலான இணையவாசகர்களால் நாலைந்து பத்திகளுக்கு மேல் வாசிக்க முடியாது. அந்த மொழிநடை அரட்டைபோல இருக்கவேண்டும். மிகச்சாதாரணமாக, துண்டுதுண்டாக சொல்லப்பட்டிருக்கவேண்டும். அதாவது கொஞ்சம் கூட தீவிரமோ கனமோ இருக்கக்கூடாது. அவர்களுக்குத் தெரிந்த, அவர்கள் பேசிக்கொண்டிருக்கும் அரட்டைபோல அது இருக்கவேண்டும்.

எந்த ஒரு கருத்தையும் ஒன்றிரண்டு வரிகளுக்கு மேல் உள்வாங்கிக்கொள்ள இவர்களால் முடியாது. எதை எப்படி விரிவாகச் சொன்னாலும் அதிலிருந்து ஒற்றைவரியை உருவி அதை மட்டும் புரிந்துகொள்வார்கள். எதையும் அதன் சாதகபாதக தளங்களை ஒப்பிட்டு தர்க்கபூர்வமாக புரிந்துகொள்ள இவர்களுக்கு ஆற்றலில்லை. அவர்கள் எழுதும் இணையப்பதிவுகளையும் அவர்கள் அளிக்கும் எதிர்வினைகளையும் பார்க்கையில் அவர்களின் சிந்தனைத்திறன் மீது ஆழமான சந்தேகம் வந்தபடியே இருக்கிறது.

இன்னொரு அம்சம், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையிலும் உண்மையான ஈடுபாடில்லை என்பதுதான். ஈடுபாடில் இருந்துதான் அறிந்துகொள்ளும் ஆர்வம் பிறக்கிறது. அந்த ஆர்வமில்லாத நிலையில் அவர்கள் இணையத்திற்கு வருவது வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமே. வேலையிலும் குடும்பத்திலும் அவர்கள் அடையும் மன அழுத்தங்களுக்கான வடிகால்தான் இது. வெறுமே வேடிக்கை பார்த்து அரட்டையடிப்பவர்கள் கணிசமானவர்கள்.

இன்னொரு சாரார் உக்கிரமாக உள்ளே புகுந்து கண்டபடி வசைபாடி அவதூறுசெய்து தாறுமாறாக நக்கலடித்து உளவியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள். இணையம் இன்று இவர்கள் உலவும் காடு. உங்கள் வீட்டுப்பெண்களையோ குழந்தைகளையோ நீங்கள் இந்தத் தமிழ் இணைய உலகுக்கு அறிமுகம் செய்ய மாட்டீர்கள். இன்று இணையத்தில் பெண்கள் அவர்களின் சுய அடையாளத்துடன் புழங்கவேமுடியாது. எங்கள் நிகழ்ச்சிகள் முடிந்தபின் அவற்றில் பங்குபெற்ற பெண்களின் படங்களை புகைப்படங்களிலிருந்து நீக்கித்தான் வெளியிடுகிறோம். நம் இணையப்புலிகள் சென்ற காலங்களில் செய்த கீழ்த்தரவேலைகளினால் பெண்கள் அந்த அளவுக்கு அஞ்சுகிறார்கள். திருப்பூர் பேருந்து நிலையத்தில் நடு இரவில் பெண்களுக்கிருக்கும் பாதுகாப்புகூட தமிழ் இணையச்சூழலில் கிடையாது.

இவர்களெல்லாம் யார்? நம்மைப்போல சாதாரண மக்கள். குடும்பமும் வேலையும் உடையவர்கள். இணையத்தில் அவர்களின் கௌரவமான சமூக முகத்தை கழட்டிவிட்டு மனநோயாளிகளாக உலவுகிறார்கள். இப்படி இணையத்தில் பெண்களை அவமதித்த மூர்த்தி என்ற ஒருவனை புகாரின் அடிப்படையில் போலீஸார் பிடித்தபோது கதறியழுது தன் வாழ்க்கையை அழித்துவிடவேண்டாம் என்று அவன் கெஞ்சினானாம். அவனைப் போன்றவர்களே இதையெல்லாம் செய்கிறார்கள்.

சமீபத்தில் பிரபலமான பாடகி ஒருவர் இணையதளத்தில் பொதுத்தொடர்புக்கு வந்தபோது இணையத்தின் இந்த முரட்டுமூடர்கள் அந்தப்பெண்ணை வசைபாடி, அவதூறுசெய்து, மிரட்டி சிறுமைசெய்தனர். ஆபாசப்படங்கள் வெளியிடுவதாக மிரட்டினர். அவரது தாயை ஆபாசமாக வசைபாடினர். பொறுமை மிஞ்சிய ஓர் எல்லையில் காவல்துறைக்குச் சென்று அந்தப்பெண் புகார் கொடுக்க நேர்ந்தது. ஆறுபெயர்களையும் சின்மயி குறிப்பிட்டிருக்கிறார். அவர்களை காவலர் கைதுசெய்திருக்கின்றனர்.

இணையத்தில் மலினத்தைக் கொட்டும் பலநூறுபேரில் சிலர் இந்த ஆறுபேரும். இதுவரை இணையம் அளித்த சுதந்திரத்தில் இவர்கள் இப்படி கீழ்மையில் திளைத்தார்கள். ஒரு சாலையிலோ வணிகவளாகத்திலோ இந்த அற்பர்கள் கௌரவமான வேடத்தில்தான் உலவ முடியும். இணையத்தில் அந்த பாவனையே தேவையில்லை. ஆம், இன்றும் இதுதான் நம் இணையச்சூழல். உங்கள் வீட்டுப்பெண்ணின் படம் குமுதத்தில் வரலாம். ஆனால் இணையத்தில் வரமுடியாது. உங்கள் வீட்டுப்பெண் ஒரு பேருந்துநிலையத்தில் நள்ளிரவில் நின்றிருக்க முடியும், இணையத்தில் முடியாது.

பொதுவாக நாம் நம்முடைய சமூகதளத்தில் சில மதிப்பீடுகளை கடைப்பிடிப்போம். ஓர் அன்னியப்பெண்ணிடம் பேசுவதில் நமக்கென ஓர் எல்லையை கொண்டிருப்போம். நம் வீட்டுப்பெண்ணிடம் பிறர் அப்படிப் பேசவேண்டும் என நினைப்போம். ஆணாதிக்க வெறியோ பாலியல்காழ்ப்போ நமக்குள் இருந்தாலும்கூட அதை பொதுமேடையில் காட்டாமலிருக்கும் பாவனையாவது நம்மிடம் இருக்கும். இணையத்தில் இயங்கும் இந்த அற்பர்களுக்கு அந்தத் தடைகள்கூட இல்லை. கிட்டத்தட்ட பண்பாடற்ற மிருகங்களாகவே செயல்படுகிறார்கள்.

இந்த மனச்சிக்கலுக்கு ஏதாவது கொள்கைமுலாம் பூசிக்கொண்டால் அதற்கான கும்பலைச் சேர்த்துவிடலாம் என்பதை இவர்கள் கண்டடைந்திருக்கிறார்கள். குறிப்பாக வசைபாடியான ஈவேராவின் பெயரைச்சொல்லும் ஒருவர் எந்தக்கீழ்மையிலும் துணிந்திறங்கலாம். அவர் எங்கிருந்தாவது ஈவேராவின் வரிகளை தனக்குத் துணையாக இழுத்துக்கொண்டு வந்துவிடமுடியும்.

ஆம், தமிழைப்பொறுத்தவரை இணைய ஊடகமென்பது பிற ஊடகங்களை விட மிகமிக கீழ்த்தரமானதாக இருக்கிறது. இணையவெளி என்பது நம்முடைய சமூகவெளியைவிட பண்பாடற்றதாக உள்ளது. நமக்கு நவீனத் தொழில்நுட்பம் அளித்த மாபெரும் வாய்ப்பை நம்முடைய மனநோய்க்கூறுகளை வெளிப்படுத்தும் ஒரு கழிப்பறையாக நாம் ஆக்கிக்கொண்டுவிட்டோம்.

படித்தவர்கள் என நாம் சொல்லும் இந்த அசட்டுப் பாமரர்களுடன், நாகரீகமில்லா கும்பலுடன் மட்டுமே இணையம் பேசமுடிகிறதென்பதே இணையத்தின் மிகப்பெரிய பலவீனம். அடிப்படையில் அது பயனற்ற ஒன்றாக இன்று இருப்பதன் காரணமும் இதுவே.

இன்றைய தமிழ்ச்சூழலில் ஓர் ஊடகம், எளிய படிக்காத மக்களிடம் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றால் அதனால் பெரிய பயனேதும் இல்லை. ஏனென்றால் தமிழகத்தில் படித்தவர்கள் பெரும்பாலும் சுயநலமும் மனச்சிக்கல்களும் கொண்ட கோழைகளாக மட்டுமே இருக்கிறார்கள். அவர்களிடம் எந்த ஒரு சமூக, அரசியல், அறம்சார் பிரச்சினைகளையும் பேசிவிட முடியாது. அவர்கள் செவிகொடுப்பதில்லை. போலியாக மட்டுமே எதிர்வினையாற்றுவார்கள்.

இங்கே எழக்கூடிய முக்கியமான வினா இதுதான். இப்படி இவர்களை ஆக்கியது எது? திரும்பத்திரும்ப ஒன்றைத்தான் அனைத்து சமூக ஆய்வாளர்களும் சமூகச்செயல்பாட்டாளர்களும் சொல்வார்கள். இங்கே நமக்களிக்கப்படும் கல்வியின் அடிப்படையானது பிரிட்டிஷ் காலத்தில் வரையறை செய்யப்பட்டது. அதை நாம் ‘கருங்காலிக்கல்வி’ என்று சொல்லலாம். சொந்த சமூகத்துக்கும் சொந்த மக்களுக்கும் எதிரான ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கும்நோக்குடன் வடிவமைக்கப்பட்ட கல்வி அது.

அந்தக்கல்வியை பெறும் ஒருமனிதர் முதலில் தன்னை தம்மைச் சார்ந்த பிறரிடமிருந்து வேறுபடுத்திக் கொள்கிறார். தான் அவர்களைவிட மேல் என்றும் அவர்களிடமிருந்து கூடுமானவரை விலகியிருப்பதே தனக்கு கௌரவம் என்றும் நினைக்க ஆரம்பிக்கிறார். ஒரு படித்த மனிதன் எவ்வகையிலும் அவனுடைய சமூகத்தை பிரதிநிதித்துவம் செய்வதில்லை. அதற்காக அவன் அக்கறை காட்டுவதில்லை, போராடுவதில்லை. அதை சுரண்டுவதற்கும் அடக்கியாள்வதற்கும் அவனை பிறர் உரிய கூலிகொடுத்து எளிதில் பயன்படுத்திக்கொள்ளலாம். அவன் படிப்பின்மூலம் துரோகியாக, கருங்காலியாக மட்டுமே உருவாகிறான்.

படித்த பிள்ளைகள் படிக்கவைத்த பெற்றோரை காட்டுமிராண்டிகளாக எண்ண ஆரம்பிக்கின்றன. படிக்கும்தோறும் அந்தப்பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான இடைவெளி அதிகரித்து ஒருகட்டத்தில் அவர்கள் நடுவே ஓர் தொடர்பே நிகழாத நிலை உருவாகிவிடுகிறது. சென்றகாலங்களில் ஆண்களைப்பற்றி இந்தக் குறையை எல்லாரும் சொல்லிவந்தனர் .இப்போது படித்த பெண்களைப்பற்றிய மனவருத்தங்களையே அதிகமாகக் காண்கிறோம்.

ஆங்கிலக்கல்வியை கூர்ந்து அவதானித்த காந்தி பதிவுசெய்யும் முதல் விஷயமே இதுதான். இன்று இக்கணம் வரை நமது கல்விமுறை உருவாக்குவது இந்த மனநிலையைத்தான். இதற்கான மாற்றுக்களை அவர் தொடர்ந்து சிந்தித்திருக்கிறார். காந்தியக் கல்வி என்று சொல்லும் ஒரு வழிமுறையை உருவாக்கும் முன்முயற்சிகளை அவர் கண்டடைந்திருக்கிறார். அதைத்தொடர்ந்து பலர் சிந்தித்திருக்கிறார்கள்.

காந்தி நமக்கு பிரிட்டிஷார் உருவாக்கியளித்த கல்வியை ஒரு வெறும் மூளைப்பயிற்சி என்று நினைக்கிறார். ஒரு நல்ல குமாஸ்தாவாக உருவாவதற்கு அவசியமான மொழித்தேர்ச்சியையும் அடிப்படைத் தகவல்களையும் மூளைக்குள் திணிக்கும் பயிற்சி மட்டுமே. அதை நாம் கல்வி [education] என்று தவறாகச் சொல்கிறோம். அது வெறும் பயிற்சி [Training]தான்.

கல்விக்கும் பயிற்சிக்குமான வேறுபாடு என்ன? பயிற்சி என்பது எப்போதுமே ஏதேனும் ஒரு அம்சத்தில் மட்டுமே அடையப்பெறும் தேர்ச்சிதான். யானையை முக்காலியில் உட்காரவைக்க சர்க்கஸில் அளிக்கப்படுவது பயிற்சி. மனிதனை பதவிகளில் அமரச்செய்யவும் அதுதான் அளிக்கப்படுகிறது.

பயிற்சி என்பது திரும்பத்திரும்பச் செய்யப்படுவதன்மூலம் மனதுக்கோ உடலுக்கோ கைவரும் ஒரு பழக்கம். தட்டச்சுப்பயிற்சி என்கிறோம். வண்டிமாடு நுகத்திற்குப் பழகுவதை பயிற்சி என்கிறோம். நாம் நம் கல்விச்சாலைகளில் அளிப்பதும் இதுவே. கணிப்பொறியாளராக ஆவதற்கான பயிற்சி. பொறியியலின் ஏதேனும் ஒருபகுதியில் பயிற்சி. மருத்துவப்பயிற்சி.

பயிற்சி ஒருபோதும் ஆளுமையுருவாக்கத்தில் பங்கெடுப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட பயிற்சியை அதிதீவிரமாக எடுக்கும்போது உண்மையில் ஆளுமையில் ஒரு கோணல்தான் உருவாகிறது. பிற எதுவுமே தெரியாத ஓர் அசட்டுப்பிறவியாக அது மனிதனை ஆக்கிவிடுகிறது. இன்றைய நம் உயர்கல்விபெற்ற இளைஞர்களில் பெரும்பகுதியினரைப் பார்த்தாலே இது தெரியும். ஓர் அடிப்படை ஆளுமைத்திறன்கூட இல்லாத அற்பர்கள் அல்லது அசடுகள் அவர்கள்.

சுதந்திர இந்தியா தன்னுடைய கல்வியை பொருளியல் வளர்ச்சியை மட்டுமே கருத்தில்கொண்டு வடிவமைத்தது. அதற்கு பழைய பிரிட்டிஷ்பாணி கல்விமுறையில் கூடுமானவரை தொழில்நுட்பப் பயிற்சியை சேர்த்துக்கொண்டால் போதும் என முடிவெடுத்தது. சென்ற ஐம்பதாண்டுக்கால நம் கல்விச் சீர்திருத்தங்களைப் பார்த்தால் ஒருங்கிணைந்த கல்வி, ஆளுமைத்தேர்ச்சி என்றெல்லாம் பேச்சுகள் இருந்தாலும் நடைமுறையில் தொழில்நுட்பம் சார்ந்த தகவலறிவை அதிகரிப்பதன்றி வேறெந்த இலக்கும் அவர்களிடமில்லை என்பதைக் காணலாம்.

விளைவாக தொழில்நுட்பப் பயிற்சி அன்றி எந்தக் கல்வியும் இல்லாத ஒரு தலைமுறையையே உருவாக்கி நம்மைச்சுற்றி நிறைத்துவிட்டிருக்கிறோம். அவர்களைத்தான் நாம் இன்று இணையத்தில் கண்டுகொண்டிருக்கிறோம்.

கல்வி என்பது பயிற்சியில் இருந்து வேறுபடுவது ஒரு அடிப்படை இயல்பால்தான். கல்வி ஒருபோதும் குறைபட்டதாக இருக்கமுடியாது. கல்வி என்பது முழுமையானதாக, ஆளுமையை வளர்ப்பதாக மட்டுமே இருக்கமுடியும். நம்முடைய பல்லாயிரமாண்டுக்கால மரபு சொல்லும் வரையறை இதுவே. சான்றோனை உருவாக்குவதே கல்வி. திறமையுள்ளவனை, தேர்ச்சியுடையவனை உருவாக்குவதல்ல. எது ஒரு மனிதனை முழுமையானவனாக படிப்படியாக மாற்றுகிறதோ அதுவே கல்வி.

பயிற்சிக்கும் கல்விக்குமான அடுத்த வேறுபாடு இங்கேதான் வருகிறது. பயிற்சிக்கு ஓர் எல்லை உண்டு. கல்வி முழுமையை நோக்கிச் செல்வது. முழுமை என்பது முடிவின்மையில் எங்கோ இருக்கும் ஒரு புள்ளி. ஆகவே கல்விக்கு முடிவே இருக்காது. ஓதாமல் ஒருநாளும் இருக்கவேண்டாம் என மரபு அதைச் சொல்கிறது. கடைசிக்கணம் வரை கல்வி நீடித்தாகவேண்டும். கல்விக்காலகட்டம் என ஒன்று இல்லை. கல்வியில் இருந்து வெளியேறும் புள்ளி என எதுவும் உலகியல் வாழ்க்கையில் இல்லை.

இப்படிச் சொல்லலாம். பயிற்சி என்பது செல்பேசி கோபுரங்களை நட்டுவைக்கும் சிமிண்ட் மேடை போன்றது. உறுதியாக ஒருவனை அதில் நட்டு வைக்கிறது. கடைசிவரை அவன் அதுதான். பொறியாளர் பொறியாளர் மட்டுமே. வேறு எவனும் அல்ல. மருத்துவன் எந்நிலையிலும் மருத்துவன் மட்டுமே, நல்ல மனிதனாக ஆவான் என்பதற்குக்கூட ஆதாரமில்லை. ஆனால் கல்வி என்பது ராக்கெட்டின் ஏவுதளம் போல. அது அங்கிருந்து எம்பிப்பறப்பதற்கான ஒரு இடம். தன் மீதமர்ந்தவனை வான் நோக்கி ஏவும் மேடை அது.

கல்வி என்பது உறுதியான திட்டவட்டமான நிராகரிப்பு வழியாக அல்லது தாண்டிச்செல்லல் மூலமாக முன்னகர்கிறது. நான் ஒன்றை அறிந்துகொண்டதும் அதை ஏற்கிறேன் அல்லது நிராகரிக்கிறேன். ஏற்றுக்கொண்ட விஷயத்தை பற்றிக்கொண்டு மேலேறி இன்னும் நுட்பமான இன்னும் தீவிரமான இன்னும் விரிவான விஷயங்களை கற்க ஆரம்பிக்கிறேன். ஏற்றவற்றை கடந்துசெல்கிறேன்.
கல்வி என்பது நம்மை முன்னால் செலுத்திக்கொண்டே இருக்கக்கூடிய எலிவேட்டர் போன்றது. படிகளில் ஏறலாம். சும்மா நின்றாலும் அது மேலேதான் கொண்டுசென்றுகொண்டிருக்கிறது.

நம்முடைய கல்விக்கூடங்களில் கல்வி இல்லை, பயிற்சிதான் உள்ளது. ஆகவேதான் நம் இளைஞர்களால் எதையுமே அறிந்துகொள்ள முடியவில்லை. அவர்களால் மனப்பாடம் செய்ய திரும்பிச்சொல்ல மட்டுமே முடியும். மேற்கோள் காட்டமுடியும். எல்லா தரப்பையும் கருத்தில்கொண்டு சாராம்சத்தை உள்வாங்கி தன்னுடைய முந்தைய அறிதல்களுடன் இணைத்துப் பரிசீலித்து ஓர் ஒட்டுமொத்த அறிதலை உருவாக்கிக் கொள்ள அவர்களால் முடியாது. மிக உயர்ந்த கல்விகற்று மிக முக்கியமான வேலைகளைச் செய்யும் இளைஞர்களிடம் கூட இந்த ஆற்றல் இருப்பதில்லை. ஆகவேதான் நாம் அளிப்பது கல்வியை அல்ல பயிற்சியை மட்டுமே என நான் சொல்கிறேன்.

யோசித்துப்பாருங்கள், நம் பிள்ளைகள் எப்படி வளர்கிறார்கள்? எட்டாம் வகுப்புக்குப் பின் உக்கிரமான வெறிபிடித்ததுபோன்ற மனப்பாடக் கல்வி. டியூஷன் கல்வி. அப்படியே பிளஸ்டூ. அச்சுநகலாக பாடப்புத்தகத்தை திருப்பி எழுதும் பயிற்சி. உயர்கல்வி முடிப்பது வரை இதுதான் நம் கல்வி. இருபத்திரண்டு வயதில் கல்விமுடித்து நேரடியாக வேலை. சம்பளம். ஒரு முழு ஆண்மகனாக ஆகிவிட்டதாக அவனுக்கு நினைப்பு வருகிறது. ஆனால் அவன் மனவளர்ச்சி எட்டாம் வகுப்புடன் நின்றுவிடுகிறது.

நம் இளைஞர்கள் இணையத்தில் எழுதுவதை அவ்வப்போது பார்ப்பேன். அவர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள். ஆனால் உலகத்தை அவர்கள் எழுத்தில் பார்க்கமுடியாது. எட்டாம் வகுப்பு படித்துவிட்டு கொத்தனார் வேலைக்குச் செல்லும் பையன்கள் மாலையில் பார்வதிபுரம் முனையில் நின்று பேசும் அதே விஷயங்களைத்தான் அவர்களும் பேசுவார்கள். அதாவது சினிமா. சரி, சினிமாவைத்தான் எப்படிப் பேசுகிறார்கள் என்று பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. வணிகசினிமாவை அந்த சினிமாவின் தரத்தைவிட கீழே போய் பிய்த்துப்போடுவதுதான் இவர்களால் முடிகிறது.

இந்த இளையதலைமுறைதான் இன்றைய இந்தியாவின் சாபக்கேடு. சமீபத்தில் அண்ணா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டம் வேகம்கொண்டபோது தென்னிந்தியாவில் மட்டும் அது எந்த அலையையும் கிளப்பவில்லை. ஏனென்றால் இங்குள்ள படித்த நடுத்தரவர்க்கம் அப்படி ஒரு தார்மீகமான கோபத்தை புரிந்துகொள்ளும் ஆற்றல் கொண்டதே அல்ல. அவர்களுக்கு அண்ணா ஹசாரே ஒரு’காமெடியனாக’த்தான் தெரிந்தார். அரைலட்சம் சம்பளம் வாங்கி வார இறுதியில் மப்படிக்கும் தங்கள் வாழ்க்கை மிக உயர்வானதாகத் தோன்றியது. கேலிகள் ,கிண்டல்கள்.

அவர்கள் கல்விகற்றவர்கள் அல்ல. பயிற்சி பெற்றவர்கள். ஒரு குறிப்பிட்ட வேலைக்காக பயிற்றுவிக்கப்பட்டு வெளியே அனுப்பப்படும் உயிர்கள். ஒரு திரைப்படத்தில் சர்க்கஸ்புலிகள் இரண்டை அதன் உரிமையாளன் காட்டில் கொண்டுசென்று விட்டுவிடுவான். அவை வளையம் வழியாக பாய மட்டுமே கற்றவை. அது பயிற்சி, கல்வி அல்ல. ஆனால் காட்டுப்புலி தன் குழந்தைக்கு முழுமையான காட்டையே சொல்லித்தந்துவிடுகிறது. காட்டுப்புலிக்குள் இருப்பது காடு. சர்க்கஸ் புலிக்குள் இருப்பது வளையமும் சாட்டையும் மட்டுமே. நம் பிள்ளைகள் சர்க்கஸ்புலிகள்.

அந்த சினிமாவில் சர்க்கஸ்புலிகள் காட்டுக்குள் வாழத்தெரியாமல் ஊர் அருகே ஒண்டிக்கொள்கின்றன. ஊர்மக்களை வேட்டையாட ஆரம்பிக்கின்றன. அவற்றை கடைசியில் வேட்டைக்காரர்கள் சுட்டுத்தள்ளுகிறார்கள். இங்கே நம் சர்க்கஸ்புலிகளும் உண்மையான வாழ்க்கையை அதன் விரிவுடனும் வீச்சுடனும் எதிர்கொள்ளத்தெரியாமல் ஒரு சிறு வட்டத்துக்குள் ஒண்டிக்கொள்கின்றன. அதுதான் இணையவெளி. அங்கே நக்கல்கள் கொக்கரிப்புகள். பாவம், அய்யோ பாவம் என பரிதாபம் நெஞ்சை அடைக்க நினைத்துக்கொள்கிறேன்.

அந்த சினிமாவில் அந்த சர்க்கஸ் புலி குட்டிபோடும் இடம் ஒன்று உண்டு. சர்க்கஸ்புலியை கொல்ல வரும் வேட்டைக்காரன் அது குட்டிபோடுவதைக் கண்டு திரும்பிவிடுவான். அந்தக் குட்டி சர்க்கஸ்புலி அல்ல. அது காட்டுப்புலி. அபாரமான அர்த்தம் அளித்த காட்சி அது. எல்லா குட்டிக்குள்ளும் காடு இருக்கிறது. வளையத்தையும் சாட்டையையும் காட்டி நாம் அதை அழிக்கிறோம்,

மசானபு ஃபுகோகா இயற்கை வேளாண்மையின் தந்தை. அவரது புகழ்பெற்ற ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற நூல் இயற்கையின் விதிகளை மீறாமல் வேளாண்மை செய்வதைப்பற்றி சொல்லக்கூடியது. ஆனால் அந்நூலை வாசிக்கும் ஒரு பாடப்புத்தக வாசகன் ஆச்சரியமடைவான். அந்நூலில் வேளாண்மையைப்பற்றி மட்டும் பேசப்படவில்லை. வேளாண்மையில் தொடங்கி படிப்படியாக ஒரு மேலான வாழ்க்கை பற்றி அது பேசுகிறது. பிரபஞ்சவியலை பேசுகிறது. ஆன்மீகமான உச்சநிலை நோக்கி அந்த உரையாடலை அது கொண்டுசெல்கிறது.

ஒரு மேலைநாட்டு வேளாண்மை நூலில் நீங்கள் இதை எதிர்பார்க்கமுடியாது. அந்நூலை ஒரு ஐரோப்பிய நூல்தொகுப்பாளர் செப்பனிட்டிருந்தால் அந்நூலின் கால்பகுதி அது பேசும் பொருளைவிட்டு வெளியே செல்கிறது என்று சொல்லியிருப்பார். வேளாண்மை விஞ்ஞானிக்கு பிரபஞ்சவியல் பற்றிப் பேச அடிப்படை இல்லை என்று சொல்லியிருப்பார். ஆனால் அதுதான் கீழைமரபு.

நான் ஃபுகோகாவின் நூலை வாசித்த அதேவருடம் ஒரு நூலை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தேன். இயற்கைஉணவு விஞ்ஞானியாக இருந்த சிவசைலம் நல்வாழ்வு ஆசிரம நிறுவனர் ராமகிருஷ்ணன் அவர்களின் ‘நோயின்றி வாழமுடியாதா?’ என்ற நூலை. அதில் சமைக்காத உணவே உடலுக்கான இயல்பான உணவாகும் என வாதிடுகிறார் ஆசிரியர். ஆனால் அவரது பார்வை கலை இலக்கியம் தத்துவம் சிந்தனை எல்லாவற்றையும் தொட்டு ஆன்மீகமான ஒரு முழுமைநோக்கை முன்வைக்கிறது.

ஆம், நம் மரபு அதுதான். எந்தக் கல்வியானாலும் அது தனக்கான முழுமை நோக்கைக் கொண்டிருக்கவேண்டும். இளவயதில் நான் எங்களூரின் வர்மக்கலை நிபுணர்களின், சிலம்பக்கலை ஆசான்களின் கல்விக்கூடங்களை கவனித்திருக்கிறேன். அவர்கள் வர்மம் அல்லது சிலம்புசுற்றுதல் என்னும் ஒரு கலையை மட்டும் கற்பித்தவர்கள் அல்ல. அதன் வழியாக வாழ்க்கை பற்றிய ஒரு முழுமை நோக்கை அளித்தவர்கள்.

நம்முடைய மரபில் எந்த ஒரு கலையை கற்கச்சென்றாலும் அது கடைசியில் ஆன்மீகக் கல்வியை நோக்கிச் செல்வதைக் காணலாம். சிற்பமானாலும் மருத்துவமானாலும். பிறநூல்களில் உள்ள அதே ஆன்மஞானம் அந்தத் தொழில்நுட்ப நூல்களிலும் உள்ளது. ஏனென்றால் கல்வி என்பது ஞானத்துக்கான பாதை. ஆம், மெய்ஞானத்தை நோக்கி கொண்டுசெல்லும் திராணி அற்றது கல்வியே அல்ல.

பயிற்சி தெரிந்துகொள்ளுதலை அளிக்கிறது. கல்வி அறிவை அளிக்கிறது. பயிற்சி தேர்ச்சியை அளிக்கிறது. கல்வி ஆளுமை வளர்ச்சியை அளிக்கிறது. தெரிந்துகொள்ளுதல் அரைகுறையானது. அறிவு முழுமையும் சமநிலையும் கொண்டது.

ஞானம் என்ற ஒன்றை அதன் அடுத்தபடியாக முன்வைத்தார்கள் நம் முன்னோர். ஞானம் என்பது அறிவுதான். ஆனால் அறிதல் அல்ல. நாராயணகுரு அதை அறிவிலமர்தல் என்று சொல்கிறார். அறிதலும் அறிபடுபொருளும் அறிபவனும் ஒன்றாலும் நிலை. அதுவாதல். எதை அறிகிறோமோ அதுவேயாகும் நிலை. அதுவே அறிவின் முழுமை.

நாம் அறிவது மண் துளியாக இருக்கலாம், இலைநுனியாக இருக்கலாம், புழுவாக இருக்கலாம். அந்த அறிதல் ஏதோ ஒரு கட்டத்தில் நம்மை முழுமையறிதலை நோக்கிக் கொண்டு செல்லமுடிந்தால் அதுவே உண்மையான கல்வி.

நமக்கும் இப்பிரபஞ்சத்துக்கும் இடையே ஒரு பிரம்மாண்டமான திரை உள்ளது. நம் அறியாமையின் திரை இது. மிக விசித்திரமான திரை. இந்தத் திரை நம் அகங்காரத்தாலும் ஆசைகளாலும் ஊடுபாவாக நெய்யப்பட்டுள்ளது. நாம் நமக்குத் தேவையானதை, நாம் விரும்புவதை மட்டுமே அறிகிறோம். நாம் அறிந்ததை வைத்து மேலே அறியவேண்டியதை தடுத்துவிடுகிறோம்.

இளமையில் குழந்தை கல்விக்கான பேராசையுடன் இருக்கிறது. எதை புதியதாகச் சொன்னாலும் குழந்தை கவனிக்கும். ஆனால் வளர்ந்ததும் ஒரு கட்டத்தில் எந்தப் புதிய விஷயத்தையும் நாம் உள்வாங்காதவர்களாகிறோம். ஆசையாலும் அகங்காரத்தாலும் அறிதல் நிலைத்து நின்றுவிடுகிறது. அந்த அகங்காரத்தையும் ஆசையையும் கடந்துதான் அறியாமைத்திரையைக் கிழித்து முழுமையறிவை அடையமுடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. அதுவே ஞானத்தின் பாதை.

ஒருமனிதன் தன் வாழ்நாள் முழுக்க கடைப்பிடிக்கவேண்டிய தேடலையே கல்வி என நாம் சொல்கிறோம். கல்விக்கூடங்கள் மிகமிக ஆரம்ப நிலையில் உள்ளவை. ஒருவன் மிக அதிகமாக கற்றால்கூட இருபத்தைந்து வயதில் அக்கல்வி முடிந்துவிடுகிறது. அதன்பின்னர் ஆரம்பிப்பதே உண்மையான கல்வி. ஞானமளிக்கும் கல்வி.

நாம் கற்றிருப்பது கல்வியல்ல, பயிற்சி என அறிபவன் கல்வியை அடையாளம் காணமுடியும். கல்வி அவனுக்கு ஞானத்தை சுட்டிக்காட்டும்.

ஒரு விழியிழந்த மனிதர் ஞானியின் வீட்டைவிட்டுக் கிளம்பும்போது இரவாகி விட்டது. அவர் தனக்கு ஒரு கைவிளக்கு கேட்டார். ’பார்வையற்ற உனக்கு ஏன் விளக்கு?’ என்றார் ஞானி ‘விளக்கொளியில் என்னை மற்றவர்கள் பார்ப்பார்களே, அவர்கள் என் மேல் மோதாமலிருப்பார்கள் அல்லவா?’ என்றார் பார்வையற்றவர்.

வழியில் ஒருவர் பார்வையற்றவர் மேல் மோதிக்கொண்டார் ‘மூடா, நீ விளக்கைப் பார்க்கவில்லையா?’ என்றார் பார்வையற்றவர் கோபமாக. அவர் சொன்னார், ‘சகோதரா விளக்கு ஏற்கனவே அணைந்துவிட்டிருக்கிறது.’

பார்வையற்றவர் விளக்கின் எல்லையை அப்போதுதான் உணர்ந்தார். ஞானியிடம் திரும்பிவந்தபோது அணையாத ஒரு விளக்கை அவர் அவருக்குச் சுட்டிக்காட்டினார்.

இந்த விஜயதசமி நாளில் அந்த அணையாவிளக்கை நாம் உணர்ந்துகொள்வோம்.

நன்றி.

(24.10.2012 அன்று திருப்பூர் ‘அறம் அறக்கட்டளை’ சார்பில் ஆற்றிய உரை)

 

இவரின் Copyright Notice கீழ்க்கண்டவாறு கூறுகிறது..

Copyright

© 2012 எழுத்தாளர் ஜெயமோகன்.

"Copyright related: Articles published in this website can be shared freely on the Internet. But in order to publish the articles - in part or in full - on other mediums and formats such as print, television, or e-book, prior permission needs to be obtained from the author".

 



__________________
Sat


செயல் உறுப்பினர

Status: Offline
Posts: 298
Date:
Permalink   
 

Good information for the society......

__________________


எழுத்தாளர்

Status: Offline
Posts: 492
Date:
Permalink   
 

நல்ல தகவல்கள்.... இடையிடையே அவரின் "அவா" பாசம் கொஞ்சம் தெரியுது.... இது வழக்கமான ஜெயமோகன் பழக்கம்தான்.....
நம் கல்வி முறையை மிக அப்பட்டமாக தோல் உரித்து காட்டியிருக்கிறார்.... "படித்த மமதை" பற்றியும் ரொம்ப அழகா சொல்லிருக்கார்......
எனக்கும் பல நேரங்களில் இருக்கும் கோபங்களை அவர் எழுத்து காட்டியுள்ளது......

படித்த இளைஞர்கள் அதிகம் பேசுவது "சினிமா" பற்றித்தான்..... இதற்கு படிக்கணும்னு அவசியம் இல்லை.... படித்த படிப்புக்கான அம்சங்கள் அவர்கள் பேச்சுக்களில் இல்லை....

__________________

"அது உனக்கு புரியாது....!" - குட்டிக்கதை....

http://envijay.blogspot.in/2013/12/blog-post.html

 



முன்னணி உறுப்பினர்

Status: Offline
Posts: 588
Date:
Permalink   
 

nice info

__________________

praveen

Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.

Tweet this page Post to Digg Post to Del.icio.us


Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard