எம்டன்...எம்டன்னு அடிக்கடி நம்ம ஆளுங்க சொல்றாங்களே, அது என்னனு தெரியுமா, அப்போ கொஞ்சம் கீழே உள்ள வெவரத்தை படியுங்க தெரியும்....
சென்னையை குண்டுவீசி தாக்கிய எம்டன் :
1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போரால் உலகெங்கும் அல்லோகலபட்டுக்கொண்டிருந்த நேரம் நவராத்திரி கொண்டாட்டங்களில் மூழ்கிக்கிடந்த சென்னைவாசிகளை அச்சத்தில் உறைய வைத்தது அந்த காட்சி...
1914 செப்டம்பர் 22 இரவு 9 . 30 மணி.சென்னை துறைமுகத்துக்கு மிக அருகில் திடீரென காட்சி கொடுத்தது ஜெர்மானிய போர்க்கப்பலான எம்டன்.பிரிட்டிஷ் கடற்ப்படையின் கண்களில் மண்ணை தூவிவிட்டு துறைமுகத்தை நெருங்கிய அந்த கப்பல் சென்னை மாநகரை நோக்கி குண்டுமழை பொழியத் தொடங்கியது துறைமுகத்தில் இருந்த பர்மா ஆயில் கம்பெனி எண்ணெய் கிடங்குகள் கொழுந்து விட்டு எரிந்தன.
எண்ணெய் டாங்குகளை கபளீகரம் செய்த எம்டன் அடுத்தபடியாக துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிய வணிகக்கப்பலை சுட்டு வீழ்த்தியது. கப்பலில் இருந்த 3 பணியாளர்கள் உயிரிழந்தனர். 20 க்கும் மேற்ப்பட்டவர்கள் காயமடைந்தனர்,பிரிட்டன் படைகள் சுதாரித்து எழுந்து எதிர் தாக்குதல் நடத்த அரை மணி நேரம் ஆகிவிட்டது.அதற்குள் மேலும் சில குண்டுகளை சென்னைக்கு பரிசளித்துவிட்டு பத்திரமாக வங்ககடலில் விரைந்து மறைந்தது எம்டன்.
அடுத்த நாள் காலை சென்னையில் காட்சிகள் வேகமாக மாறின எம்டன் வீசிச் சென்ற குண்டுகள், உயர்நீதி மன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, சூலை, நுங்கம்பாக்கம் என பல கிலோமீட்டர் தூரம் சிதறிக்கிடந்தன, மக்கள் இதை பீதியுடன் பார்த்தனர், எம்டன் பற்றிய செய்தி காட்டுத் தீயை பரவியது. மீண்டும் எம்டன் தாக்கலாம் என்ற வதந்தி இறக்கை கட்டிப் பறந்தது, அச்சத்தில் உறைந்த மக்கள் அவசர அவசரமாக நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர்.தினமும் சுமார் 20 ஆயிரம் பேர் நகரை காலி செய்து விட்டு கிளம்பியதாக அன்றைய செய்தித் தாள்கள் தெரிவிக்கின்றன.இரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இரயில்களில் இடம் கிடைக்காதோர் சாலை மார்க்கமாக பயணிக்க தொடங்கினர், எங்கு பார்த்தாலும் சாலைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக மூட்டை முடிச்சுகளுடன் சென்று கொண்டிருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டன, திறந்திருந்த ஒன்றிரண்டு கடைகளில் விலைகள் விண்ணை தொட்டன, அடுத்து என்ன என்று ஏதும் தெரியாத குழப்ப மேகம் நகரை சூழ்ந்திருந்தது, வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்தும் எந்த பயனும் இல்லை.வதந்திகள் பரவிக்கொண்டே இருந்தன, மக்கள் வெளியேறிக்கொண்டே இருந்தனர்.
அப்போதைய மெட்ராஸ் ஆளுநரான " யார்ட் பெண்ட்வான்ட்" எம்டன் தாக்குதல் நடத்தியபோது ஊட்டியில் இருந்தார், தகவல் கிடைத்த பின்பும் அவர் உடனே சென்னைக்கு வரவில்லை. பொறுமையாக செப்டம்பர் 25 ஆம் தேதி வந்து தாக்குதல் நடந்த இடங்களை பார்வையிட்டார். எம்டன் திரும்பி வராது பயப்படாதிருங்கள் என்று நம்பிக்கை அளித்துவிட்டு மீண்டும் ஊட்டிக்கு சென்றுவிட்டார்.
எம்டன் வராது என்றால் ஆளுநர் இங்கேயே இருக்க வேண்டியது தானே? ஏன் நகரில் இருப்பதை தவிர்க்கிறார்? என்று பொதுமக்கள் கேட்டார்கள், ஆனால் பதில் சொல்லத் தான் ஆளில்லை.அந்த காலத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் மகுடமாகக் கருதப்பட்ட இந்தியாவில், அதுவும் அவர்கள் முதல் முதலாக காலடி எடுத்து வைத்த சென்னைக்கே ஒரு எதிரி வந்து தாக்கிவிட்டு பத்திரமாக திரும்பியது மிகப்பெரிய அவமானமாகக் கருதப்பட்டது. இந்த ஒரு காரணத்துக்காக இந்திய மக்கள் எம்டனை ஹீரோவாக போற்றினார்கள். அதன் பிறகு அசகாய சூரன் "எம்டன்" என்று தமிழக மக்கள் அழைக்க தொடங்கினார்கள்.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த எம்டன், தனது பனிக்காலத்தில் 31 கப்பல்களை மூழ்கடித்திருக்கிறது. தனது வசீகர தோற்றத்தால் கிழக்கின் "அன்னபறவை" என இதர எதிரிப்படைகளாலும் வருணிக்கப்பட்ட பெருமை எம்டனுக்கு உண்டு. ஜெர்மானியக் கப்பர்ப்படையில் முக்கிய அங்கம் வகித்த இந்த கப்பலுக்கு 1913 ஆம் ஆண்டு வான் முல்லர் பொறுப்பேற்றார்.
அந்த காலத்தில் இந்துமகா சமுத்திரம் முழுதும் பிரிட்டீஷ் கப்பல்கள் நிறைந்திருக்கும், ஒட்டு மொத்த சமுத்திரத்திலும் தாங்களே ஆக்கிரமித்திருந்ததால் இந்துமகா சமுத்திரத்தை "பிரிட்டன் ஏரி" என்று ஆங்கிலேயர்கள் கெர்வத்துடன் அழைத்துக் கொண்டிருந்தனர், இந்த கேர்வத்திர்க்கு தான் மரண அடி கொடுத்தார் முல்லர்.
எம்டன் கப்பலிலிருந்த செண்பகராமன் என்ற விடுதலைப் போராட்ட வீரரின் கோரிக்கையை எற்றே, சென்னை மீது முல்லர் தாக்குதல் நடத்தியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இது பற்றிய உறுதியான ஆவணங்கள் ஏதும் இல்லை.
எம்டனை வீழ்த்த பல நாட்டு கப்பல்கள் எவ்வளவோ முயர்ச்சித்தன, ஆனால் முடியவில்லை. ஆனால் இறுதியில் வல்லவனுக்கு வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதனை நிரூபிக்கும் வகையில் எம்டனுக்கு போட்டியாக ஒரு கப்பல் களம் இறங்கியது, முதல் உலகப்போர் உச்சத்தில் இருந்த போது, ஆஸ்திரேலியாவின் "சிட்னி" என்ற நவீனக் போர்க் கப்பலுடன் எம்டன் மோதியது, கடுமையான சண்டைக்குப்பிறகு ""எம்டன்"" சுட்டு வீழ்த்தப்பட்டது, கேப்டன் முல்லர் உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டனர். கடலில் பல வெற்றிகளை நிலைநாட்டிய எம்டன் அதே கடலில் அமைதியாக ஜலசாமாதியானது...
இப்போ தெரியுதா ஏன் நம்ம கொஞ்சம் வில்லங்கமான ஆளுங்கள எம்டன்னு சொல்றாங்கன்னு???